WFTW Body: 

இயேசு ஒவ்வொரு நாளும் நாமெல்லாரும் சந்திக்கிற அதே சோதனைகளையே சந்தித்தார் (எபிரெயர் 4: 15). நம்முடைய வரம்புகளெல்லாம் அவருக்கும் இருந்தது, ஆனாலும் தாம் சந்தித்த சோதனைகளை அவர் மேற்கொண்டார் - ஏனென்றால் அவர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்து, சோதிக்கப்பட்டபோதெல்லாம் உதவிக்காகப் பிதாவை நோக்கி கண்ணீரோடு விண்ணப்பம்பண்ணினார் (எபிரெயர் 1:9; 5:7). பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனாகப் பூமியிலிருந்த இயேசுவுக்கு எப்படி உதவினாரோ அதே விதமாக உங்களுக்கும் உதவுவார்.

இயேசு ஒரு இளைஞனாக எவ்வாறு சோதனையைச் சந்தித்தார் என்பதை அடிக்கடி சிந்தித்துப் பாருங்கள். எல்லா இளைஞர்களும் சந்திக்கிற அதே சோதனைகளின் இழுப்பைத் தான் அவரும் உணர்ந்தார். சோதனையை மேற்கொள்வது எவ்விதத்திலும் அவருக்கு எளிதானதாக இருந்திருக்காது. உண்மையில், அது அவருக்கு மிகவும் கடினமாக இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவருடைய சுபாவம் முற்றிலும் தூய்மையானதால் சோதனை அவருக்கு மிகவும் வெறுக்கத்தக்கதாயிருந்தது - ஆகவே அதன் இழுப்புதன்மை நமக்கு இருக்கிறதை விட அதிக வலுவாக இருந்திருக்க வேண்டும். ஆகிலும் அவர் சோதனையை மேற்கொண்டார்.

இப்போது சோதனை என்கிற 'கயிறு இழு போட்டியில்' (tug of war), உங்கள் பக்கத்தில் இயேசு இருக்கிறார் - அவர் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறார். எதிரியின் பக்கத்தில் (கயிற்றின் மறு பக்கத்தில்) பெருமை என்று அழைக்கப்படும் மிகவும் அதிகமான எடை கொண்ட பலசாலி இருக்கிறான். அவனுக்கு அடுத்ததாகச் சுயநலம் என்று அழைக்கப்படும் மற்றொரு மிகவும் அதிகமான எடை கொண்ட பலசாலி இருக்கிறான். ஆனால் இவ்விரண்டையும் மற்ற எல்லாப் பாவங்களோடும் சேர்த்து இழுக்கத் தேவன் உங்களுக்கு உதவி செய்வார் - நீங்கள் சோதனையை மேற்கொள்வீர்கள். தேவனுக்கே ஸ்தோத்திரம்!

விசுவாசித்து நீங்கள் பற்றிக்கொள்ளக்கூடிய ஒரு வாக்குத்தத்தம் இதோ: "வழுவாதபடி(தடுமாறாமல்) உங்களை காக்க இயேசு வல்லவர்" (யூதா 24). சரீரப்பிரகாரமாக நாம் எப்படி நடக்கக் கற்றுக்கொள்ளுகிறோமோ அப்படியே விசுவாசித்து நடப்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு குழந்தை ஆரம்பத்தில் பலமுறை கீழே விழுந்தாலும், வளர வளர கீழே விழுவது குறைந்துகொண்டே இருக்கும், இறுதியாகக் கீழே விழுவது அரிதாகிவிடும். "நான் இனி ஒருபோதும் கீழே விழமாட்டேன் " என்று சொல்லும் காலம் ஒரு மிகச் சிறந்த பரிசுத்தவானுக்கும்கூட ஒருபோதும் வராது என்றாலும் அவர் இப்பொழுது கீழே விழுவது அரிதாகிவிட்டது.

நீங்கள் விழும்போது, உங்கள் வீழ்ச்சியை 'பாவம்' என்று அழைக்காமல் வேறு பெயரால் அழைக்க நீங்கள் சோதிக்கப்படலாம். அது ஆபத்தானது. தங்கள் பாவங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் அதனைத் தவிர்ப்பதற்காக, தங்கள் பாவங்களை 'தவறுகள்' என்றும் ‘புத்தியீனமான செயல்கள்’ என்றும் இதுபோன்ற பல்வேறு விதமான பெயர்களைச் சூட்டும் பலர் உள்ளனர். அவர்கள் தங்களுடைய வெளிப்படையான பாவங்களைக் குறித்து, "நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச்செய்கிறது...." என்று ரோமர் 7:17 வசனத்தைத் தவறாக மேற்கோள்காட்டி சாக்குப்போக்கு சொல்லுவார்கள். இது ஒரு ஆபத்தான வழி, இதைத் தவிர்த்துவிடுங்கள் - இல்லையென்றால் மற்றவர்கள் வாழ்கிறதுபோல நீங்களும் சுய-வஞ்சனையிலே வாழுவீர்கள். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:9). ஆனால் நம்முடைய பாவங்களை "தவறுகள்" என்று அழைத்தால் சுத்திகரிக்கப்பட எந்த வாக்குத்தத்தமும் இல்லை. இயேசுவின் இரத்தம் பாவங்களை மட்டுமே சுத்திகரிக்கும். எனவே, நீங்கள் பாவத்தில் விழும்போதெல்லாம் நேர்மையாக இருங்கள். அதை "பாவம்" என்று அழைத்து, அதிலிருந்து மனந்திரும்பி, அதனை வெறுத்து, விட்டுவிட்டு, தேவனிடம் அறிக்கையிடுங்கள் - பின்னர் அது அழிக்கப்பட்டதினால் அதனைக் குறித்து மறந்துவிடுங்கள்.

செய்கையின் பாவங்களை விட மனப்பான்மையின் பாவங்கள் மிகவும் மோசமானவை, ஏனென்றால் அவைகளை எளிதில் கண்டுகொள்ளமுடிவதில்லை. பெருமை, குறைசொல்லும் மனப்பான்மை, கசப்பு, பொறாமை, மற்றவர்களை மனதிற்குள்ளே (தங்கள் கண் கண்டபடியோ அல்லது காது கேட்டபடியோ - ஏசாயா 11:3) நியாயந்தீர்த்தல், உங்களுக்குரியவைகளையே தேடுதல், சுயநலம், பரிசேயத்தனம் போன்றவைகள் - இவையெல்லாம் சில மனப்பான்மையின் பாவங்களாகும்.

பாவத்தின் மீது வெற்றியைப் போதிக்கும் ஒரு விசுவாசி, மற்றவர்களை ஏளனமாய்ப் பார்த்தால், எல்லா பாவத்துக்கும் மேலான பெரிய பாவமான ‘ஆவிக்குரிய பெருமை' என்கிற பாவத்தின் மீது அவன் வெற்றி பெறவில்லை என்பதை உணராதிருக்கிறான். மற்றவர்களை உதாசீனப்படுத்துவது, தொடர்ச்சியாய் விபச்சாரம் செய்வதற்குச் சமம். அத்தகைய விசுவாசி பாவத்தின் மீது வெற்றியைக் குறித்துப் பேசுவது கேலிக்குரியது! நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் எவ்வளவு அதிகமாய் வளர்கிறீர்களோ, அவ்வளவுக்கதிகமாய் பரிசுத்தமாகிறீர்கள், மேலும் எவ்வளவு அதிகமாய் பாவத்தை மேற்கொள்கிறீர்களோ, அவ்வளவுக்கதிகமாய் தாழ்மையுடன் இருப்பீர்கள். இதுவே உண்மையான பரிசுத்தத்தின் முதன்மையான சான்று. ஒரு பழ மரத்தில், அதிக பழங்களைக் கொண்ட கிளைகளே மிக அதிகமாகத் தலைவணங்கும்!

'மனுஷீக சுய-கட்டுப்பாடு' தான் 'திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாதல்' என்பது போல எண்ணி பலர் குழப்புகிறார்கள். 'மனுஷீக சுய-கட்டுப்பாடு’ ஒரு வெளிப்புறமான சீர்திருத்தத்தை உருவாக்க முடியும். ஆனால் அது உள்ளான மனிதனின் மனப்பான்மையைக் கர்வத்தோடும், பெருமையோடும், பரிசேயத்தனத்தோடும் விட்டுவிடும். பாவத்தை மேற்கொள்ளுவதற்கான கிருபையைத் தேவனிடமிருந்து பெற நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் - நாம் இலவசமாய்ப் பெற்றதைக் குறித்து நாம் ஒருபோதும் மேன்மைபாராட்ட முடியாது. நாம் சுயமாக உற்பத்தி செய்ததைக் குறித்தே மேன்மைபாராட்ட முடியும் - நம்முடைய சொந்த முயற்சிகளால் நாம் உற்பத்தி செய்யும் பரிசுத்தம் எப்போதும் போலியான பரிசுத்தமாகவே இருக்கும்.

அன்பு என்கிற திவ்விய சுபாவத்திற்கு பங்குள்ளவர்களாகும்படிக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். தேவன் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார் (மத்தேயு 5:45-48). நீங்களும் இப்படிப்பட்ட உதாரணத்தையே பின்பற்ற வேண்டும். உங்களுடன் உடன்படுகிறார்களோ இல்லையோ அனைவரையும் நேசிக்கவேண்டும். ஒரு கொடிய நோயைத் தவிர்ப்பது போலச் சர்ச்சைக்குரிய அனைத்து விவாதங்களையும் வாதங்களையும் தவிர்த்துவிடுங்கள். உங்களைச் சுற்றியுள்ள மற்ற ஜனங்கள் ஏதாவது ஒன்றைப் பற்றி விவாதிக்க விரும்பினால், சர்ச்சையான எல்லாவற்றையும் தவிர்க்க விரும்புகிறேன் என்று அவர்களிடம் அன்பாகச் சொல்லுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் அன்பிலே பூரணராகும்படி தொடருங்கள்.