எழுதியவர் :   சகரியா பூணன்
WFTW Body: 

தேவத்துவத்திலுள்ள ஊழியங்களில் பரிசுத்த ஆவியானவருடைய ஊழியம், ஒருவரும் காணக்கூடாத “மறைவான” ஊழியமாயிருக்கிறது. அவர் நமக்கு உற்சாகமளித்து, ஏற்ற சமயத்தில் உதவிசெய்திடும் ஊழியங்களை மௌனமாயும், காட்சியில் தோன்றாதவராயுமிருந்தே செய்து முடிக்கிறார்! அவர் தன்னுடைய சீரிய பணிக்காக எந்தவொரு அங்கீகாரத்தையும், லாபத்தையும் தேடுவதேயில்லை! ஜனங்கள், பிதாவையும் இயேசுவையும் மாத்திரமே புகழ்வதில் பூரண திருப்தி கொண்டிருக்கிறார்!! இந்த புகழாரத்தில், தான் இடம் பெறாதது குறித்து யாதொரு சலனமும் அவருக்கு இல்லை! ஆ இதுவன்றோ சம்பூரண அழகு பரிமளிக்கும் ஊழியம்!!

இப்போது இத்தகைய ஆவியில் நாம் நிரப்பப்படுவதின் பொருள் என்ன? ஆம், நாம் அவரைப்போலவே மௌனமும், காட்சியில் தோன்றாமலும், யாதொரு பிரதிபலன் பெறாமலும் செய்யக்கூடிய ஊழியத்தில் பூரண திருப்தி காண்போமாக! மேலும், ஊழியத்தின் புகழ் மற்றவர்களுக்குப் போவதில் "சலனம்" ஏதும் ஏற்படாத திருப்தியும் கொண்டிருப்போம்!! இக்குணாதிசயமே பரிசுத்தாவியினால் நிரப்பப்படுவதின் பொருளாகும். இந்த ஒப்பற்ற ஆவியினால் நீங்கள் நிரப்பப்பட்டிருக்கிறீர்களா?

இன்று "பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறோம்" எனக் கூறுபவர்கள், கிறிஸ்தவ பிரசங்கமேடைகளில் தங்கள் வரங்களின் மூலமாய்த் தங்களுக்கு முதன்மையை நாடுவதும், தங்களை உயர்த்திக் கொள்வதும், தங்களுக்காக பணங்களைச் சேர்த்துக் குவிப்பதற்கு நாடுவதையுமே நாம் காண்கிறோம். இவைகள் எல்லாம் பரிசுத்த ஆவியின் கிரியைகள் அல்லவே அல்ல. இவையாவும் பரிசுத்த ஆவியின் கிரியைக்குப் போலியான வேறொரு ஆவியின் கிரியைகளேயாகும்! இதுபோன்ற போலிகளையும், வஞ்சகங்களையும் ஜீவனுள்ள தேவனுடைய சபையில் வெளியரங்கப்படுத்த வேண்டிய
தும் சபையில் நம்முடைய பிரதானமான கடமையாய் இருக்கிறது.

பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றதை நறுக்கென்று தெரியப்படுத்தும் அடையாளம் எது? அது வல்லமை தான் என இயேசு அப்போஸ்தலர் 1:8-ல் பளிங்கைப் போல் பளிச்சென்று தெளிவுபடுத்திவிட்டார். பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றுக் கொண்டதற்குப் பாஷைதான் ஒர் ஆதாரம் என்று இயேசு ஒருகாலமும் சொல்லவில்லை. அவருடைய அப்போஸ்தலர்களும் இதைக்குறித்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. காத்திருந்த அந்தச் சீஷர்களிடம் நீங்கள் சென்று, "நீங்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதை எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்?" என்று கேட்டிருந்தால், அவர்கள், "நாங்கள் அந்நிய பாஷையில் பேசுகிறோம்" என்பதைப் பதிலாகச் சொல்லியிருந்திருக்க மாட்டார்கள். தாங்கள் வல்லமையைப் பெற்றுக் கொள்வோம் என்று இயேசு சொன்னார் என்பதைத்தான் சொல்லியிருந்திருப்பார்கள். ஒருவேளை நீங்கள், "நான் அந்த வல்லமையைப் பெற்றுள்ளேன் என்பதை எங்ஙனம் அறிந்து கொள்வது?" எனக் கேட்கலாம். நாம் பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொண்டதை தேவன் நமக்கு எப்படி உறுதிப்படுத்தினாரோ, அது போலவே இதையும் உறுதிப்படுத்துவார். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று நம்முடைய ஆவியில் சாட்சி பகருகின்ற அதே பரிசுத்த ஆவியானவர், நாம் வல்லமையைப் பெற்றிருக்கிறோம் என்பதற்கும் சாட்சி பகருவார். இவ்விரு முக்கிய விஷயங்களையும் உங்களுக்கு உறுதிப்படுத்தித் தரும்படி தேவனிடம் கேளுங்கள். எனவே அவர்கள் வல்லமையைப் பெறும்படிக்குக் காத்திருந்தனர். அவர்கள் வல்லமையைப் பெற்றுக் கொண்டவுடன், அவர்கள் அறியாத பாஷைகளில் (அந்நியபாஷை) பேசும் வரத்தையும் பெற்றுக்கொண்டனர் .

ஒவ்வொரு கிறிஸ்தவனும் வல்லமை பெற்றிருக்க வேண்டும் என்பதே தேவனுடைய உறுதியான சித்தம். வல்லமையைக் கொண்டிருப்பதனால் நீங்கள் ஒரு அனல் கொண்ட சுவிசேஷகனாக மாறுவீர்கள் என்று அர்த்தமல்ல. கிறிஸ்துவின் சரீரத்தில் உங்கள் சொந்த ஊழியத்தை நிறைவேற்றுவதற்கான வல்லமை உங்களுக்கு இருக்கும். மனித உடலைக் கவனியுங்கள். நமது மனித உடலில் உறுப்பாக இருக்க வேண்டுமெனில், அந்த உறுப்பின் வழியாக இரத்தம் பாய்ந்தோட வேண்டும். ஒரு செயற்கை கை உடலின் ஒரு பகுதியாக இருக்க முடியாது, ஏனெனில் இரத்தமானது அதன் வழியாக கடந்து செல்ல இயலாது. இவ்விதமாகவே, ஒருவன் கிறிஸ்துவின் இரத்தத்தினால் சுத்திகரிப்படுதலின் முலமாக மட்டுமே, அந்நபர் கிறிஸ்துவின் உடலின் ஒரு அங்கமாக இருக்க முடியும். ஆனால் இரத்த ஓட்டம் மேற்கையில் சீராக பாய்ந்தாலும், கீழ்கை இன்னும் செயல்படாமலேயே இருக்கிறது - ஆகையால் அது பயனற்ற அங்கமாய் இருக்கிறது. பக்கவாதத்திலிருந்து குணமடைந்து, கைக்கு பெலன் கிடைத்தால், அது ஒரு நாவாக மாறுமோ? இல்லை! அது ஒரு பலமுள்ள கையாக மாறும். அதைப்போலவே, முடங்கிய நாவுக்கு பெலன் கிடைத்ததும், அது ஒரு கையாக மாறாது. அது ஒரு பலமுள்ள நாவாகவே மாறும். எனவே, தேவன் உங்களை ஒரு தாயாக இருக்க அழைத்திருந்தால், நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது ஒரு சுவிசேஷகராக மாற மாட்டீர்கள்; மாறாக நீங்கள் ஒரு பலமுள்ள, ஆவியில் நிறைந்த தாயாக மாறுவீர்கள்.

"அக்கினிமயமான நாவுகள் அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது" என்று சொல்லப்படுகிறது. இது, புது உடன்படிக்கையின் காலத்தில், நம்முடைய சரீரத்தின் மிக முக்கியமான அவயவயமான நாவைக் கர்த்தர் உபயோகப்படுத்துவார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பரிசுத்த ஆவியானவரால் அக்கினிமயமாக்கப்பட்டும், எல்லா நேரங்களிலும் அவருடைய முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் நாவாகும். அந்நியபாஷை வரத்திற்கு இந்த அக்கினிமயமான நாவுகளும் ஒருவிதத்தில் அடையாளமாகும். நீங்கள் பிரசங்கியாராயிருப்பதினால் மாத்திரமல்ல, உங்களுடைய சாதாரண உரையாடலிலும் பிறரை ஆசீர்வதிக்க உங்கள் நாவை கர்த்தர் ஒவ்வொரு நாளும் உபயோகப்படுத்த விரும்புகிறார். ஆனால் இதற்கு, வாரத்தின் ஏழு நாட்களும், நாளின் 24 மணிநேரமும், பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய வார்த்தைகளை முற்றிலுமாக கட்டுப்படுத்த நீங்கள் அனுமதிக்க வேண்டும்.