WFTW Body: 

எபிரெயர் 4:13-ம் வசனத்தில் "அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை! சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயும் இருக்கிறது! அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்” என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த வசனம் மிக அருமையானதாகும்: “அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்” இதன் பொருள் என்னவெனில், மனுஷர்களாகிய நாம், இந்த அண்டசராசரத்திலும் நாம் யாரிடத்தில் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்? இந்த வசனத்தின்படி, “தேவனுக்கு மாத்திரமே” நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்! இதை உணர்ந்து நீங்கள் வாழ்ந்தால், நீங்கள் அதிக அதிகமாய் தேவபக்தியுள்ளவர்களாய் மாறுவீர்கள். நீங்கள் பிறருடைய அபிப்பிராயங்ளை மாத்திரமே எப்போதும் சிந்திப்பவர்களாயிருந்தால், நீங்கள் அவர்களின் அடிமையாய் மாறி விடுவீர்கள்!

நீங்கள் தேவனுடைய ஊழியக்காரனாய் இருந்திட விரும்பினால் “நீங்கள் தேவனுக்கு மாத்திரமே கணக்கு ஒப்புவிக்கவேண்டும்!" என்பதை எக்காலத்தும் நினைவிற்கொள்ளுங்கள்! பத்தாயிரம் பேர் உங்களை 'ஒரு தேவ மனிதன்' என அழைப்பதினிமித்தம், உங்களை தேவ மனிதனாய் மாற்றிட இயலாது. அதுபோலவே, பத்தாயிரம் ஜனங்கள் உங்களை 'அவபக்தியான மனுஷன்' என அழைத்ததினிமித்தம், அது உங்களை அவபக்தியான மனுஷனாய் மாற்றிட இயலாது!

மனுஷனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் எந்த ஒரு சான்றிதழும் மதிப்பற்றவைகள்! ஆகவே, அவை அனைத்தையும், குப்பைத் தொட்டியில் போட்டு விடுங்கள். மற்ற ஜனங்கள் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை கொஞ்சம்தான் அறிந்து வைத்திருப்பார்கள். உங்கள் சிந்தைகள், உங்கள் பொருளாதார பரிவர்த்தனைகள் போன்ற அனைத்தும், உங்கள் வாழ்க்கையில், அவர்கள் அறிந்திருப்பதெல்லாம் 1% மாத்திரமே! ஆகவே, உங்களைக் குறித்த அபிப்பிராயங்கள் அந்த 1% அவர்கள் அறிந்த அறிவை ஆதாரமாகக் கொண்டதேயாகும். ஆகவேதான், அது நன்மையானதோ அல்லது மோசமானதோ, அவர்களின் அபிப்பிராயங்கள் மதிப்பற்றவைகள்! எனவேதான், அவர்களின் நன்மையான அபிப்பிராயங்களோ அல்லது மோசமான அபிப்பிராயங்களோ ஆகிய இந்த இரண்டுமே குப்பைத் தொட்டிக்கே உரியதாகும். 'பிறரின் அபிப்பிராயங்களை' குப்பைத் தொட்டியில் வீசி எறியுங்கள். இதைத்தான், நான் பல வருடங்களாய் செய்து வருகிறேன். ஆகவேதான், நான் மிகுந்த விடுதலையோடு தேவனுக்கு ஊழியம் செய்து வருகிறேன்!

நீங்கள் தேவனுக்கு விடுதலையோடு ஊழியம் செய்ய விரும்பினால் “ஆண்டவரே, உமக்கே நான் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்! ஒவ்வொரு நாளும், நான் உமக்கு முன்பாகவே நிற்க விரும்புகிறேன்! உமது கண்களுக்கு மறைவாக எதுவுமில்லை. என் ஜீவியத்தின் அனைத்தும், உமக்கு முன்பாக முற்றிலும் வெளியரங்கமாய் இருக்கிறது! 'என்னை ‘ஆவிக்குரியவனாக’ காட்டி' பிறரை ஏமாற்ற முடியும்! ஆனால், உம்மை ஏமாற்ற முடியாதல்லவோ?" இவ்வாறு நீங்கள் ஜீவித்தால், உங்கள் ஜீவியத்தில் நலமான மாற்றம் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்! மெய்யாகவே, இதுதான் புதிய உடன்படிக்கைக்குள் நீங்கள் அடியெடுத்து வைத்திடும் வாழ்க்கை!