எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   தலைவர் ஆடவர்
WFTW Body: 

ஏசாயாவுக்கு சிங்காசனம், பலிபீடம் ஆகிய இரண்டைப் பற்றியுமே தரிசனம் உண்டானதாக ஏசாயா 6-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அதற்குப் பிறகு,"யாரை அனுப்புவேன்; யார் நமது காரியமாய் போவான்?" என்று கர்த்தர் கேட்கிறார். அதற்கு ஏசாயா, "இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்" என்றான்.

நாம் சிங்காசனத்தையும், பலிபீடத்தையும் தொடர்ச்சியாய்ப் பார்க்க வேண்டியது அவசியமாகும். நாம் முதலாவதாக, தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றிய தரிசனத்தைக் கண்டு, தரையிலே வீழ்ந்து மண்ணைக் கவ்வ வேண்டும். அதன் பின்பு பலிபீடத்தின் இரத்தத்தினால் நமது பாவம் கழுவப்பட்டபடியினால், நாம் தூக்கிவிடப்பட வேண்டும். அதன் பிறகுதான் நாம் புறப்பட்டுப் போய் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய முடியும். தேவன் அனுப்பாவிட்டால், நாமாகப் போக முடியாது. தேவன் அனுப்பாமல், நாமாகவேப் போவோமானால், நம்முடையப் பிரயாசமெல்லாம் வீணானதாகத்தான் இருக்கும்.

பெரும்பாலான "கிறிஸ்தவ ஊழியர்கள்" தேவனால் அனுப்பப்பட்டவர்களல்ல. அவர்கள் ஏதோ ஒரு ஸ்தாபனத்தாலோ அல்லது யாரோ ஒரு மனிதனாலோ ஊழியக் களத்திற்கு (mission field) அனுப்பப்பட்டவர்கள்; அல்லது தாங்களாகவே சென்றவர்கள். கிறிஸ்தவ வட்டாரத்தில் மிகப் பெரிய தேவை இருக்கின்ற காரணத்தால், கிறிஸ்தவச் செயல்பாடுகளிலே தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுவது அவர்களுக்கு ஓர் எளிய விஷயமாகும். ஆனால் நம்முடைய பலன் நித்திய காலமாய் நிலைத்திருக்க வேண்டுமாயின், தேவன்தாமே நம்மை அனுப்ப வேண்டியது கட்டாயமாகும். மற்ற தேவ மனிதர்கள் எல்லாம் தேவனிடமிருந்து பெற்ற தங்களது அழைப்பை தேவன்தான் அழைத்தார் என நிச்சயப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் அந்த மனிதர்கள் ஒருபோதும் நம்மை ஊழியத்திற்கு அழைக்க முடியாது.

தேவன் சவுலையும், பர்னபாவையும் தனிப்பட்ட விதமாய் ஊழியத்திற்கென்று அழைத்தார். அவ்வழைப்பின் உறுதிப்பாடானது பின்னாளில் தீர்க்கதரிசிகளால் உறுதி செய்யப்பட்டது (அப் 13:1-4). தேவன் நம்மை அழைக்கும் போது, நாம் எதைப் பிரசங்கிக்க வேண்டும் என்றும் சொல்லுவார். அவர் ஏசாயாவினிடத்திலே, "நீ போய், இந்த ஜனங்களிடத்திலே: நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக் கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்லு" என்றார் (ஏசா 6:9).

தேவன் ஏசாயாவின் காலத்தில் எவ்வண்ணமாய் இருந்தாரோ, அவ்வண்ணமாகவே இன்றும் இருக்கிறார். புதிய உடன்படிக்கையின் நாட்களில், பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயங்களிலே வாசம் பண்ணுகிறபடியால், அன்று ஏசாயா மாம்சக் காதுகளால் தேவனுடைய குரலைக் கேட்டது போலவே, நம்மால் இன்று கேட்க முடிவதில்லை. இன்று நாம் நம்முடைய இருதயங்களில்தான் அவருடைய குரலைக் கேட்கிறோம். ஆனால் அவரது குரலைத் தவறின்றி இனங்கண்டு கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு போதும் கர்த்தருடைய சத்தத்தை என்னுடைய மாம்சக் காதுகளால் கேட்டதும் கிடையாது; அவரையோ அல்லது அவருடைய தூதனையோ மாம்சக் கண்களால் கண்டதும் கிடையாது. ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக என்னுடைய இருதயத்திலே பல தடவை அவரைத் தெளிவாகக் கண்டுமிருக்கிறேன்; கேட்டுமிருக்கிறேன்.

மாம்சக் கண்களால் அவரைக் கண்டு விசுவாசிக்கிறவர்களைக் காட்டிலும், அவரைக் காணாமலேயே விசுவாசிக்கிறவர்கள்தான் மெய்யாகவே பாக்கியவான்கள் என்று இயேசு யோவான் 20:29-ல் சொல்லியிருக்கிறார்.

கர்த்தர் ரொம்பவும் கடினமான பணியைத்தான் ஏசாயாவிடம் செய்யும்படி பணித்தார். "அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி, நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக் கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல். இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப் போடு என்றார்" (ஏசா 6:9,10). இயேசு ஜனங்களோடு உவமைகளைப் பயன்படுத்திப் பேசின போது, அவர் ஏன் உவமைகளினால் பேசுகிறார் என்பதற்கு இந்த வசனத்தைத்தான் மேற்கோள் காட்டினார் (மத் 13:15).

ஆதலால் இதிலிருந்து நாம் என்ன அறிந்து கொள்ளுகிறோம்? தேவனைப் பற்றிய தரிசனம், மன்னிப்பு அருளும் கிருபையைப் பற்றிய தரிசனம், அபிஷேகிக்கப்பட்ட ஊழியத்தைப் பற்றிய தரிசனம், இறுதியாக கனி கிடைக்கிற தரிசனம் (ஏசா 6:13) ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுகிறோம். கறைபட்ட யூத தேசத்திலிருந்து ஒரு பரிசுத்த வித்து முளைத்தெழும்பும். அது போலவே நாமும் தேவனால் அனுப்பப்பட்டுச் செய்யும் நம்முடைய ஊழியத்தின் மூலமாக மீதியானவர்கள் எழும்புவார்கள்.