WFTW Body: 

"ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்" பிலிப்பியர் 3:7-14.

இது, ஐசுவரியமும் சம்பூரணமுமான ஜீவியத்தைப் பெற்று, தனது இறுதி நாளை நெருங்கி நின்ற ஓர் முதிர்ச்சி அடைந்த கிறிஸ்தவனின் சாட்சியாகும். பவுல் மனந்திரும்பி 30 வருடங்கள் உருண்டோடிவிட்டன. அவ்வருடங்களில், தேவன் அவரைப் பயன்படுத்தி, அநேக சபைகளை ஸ்தாபித்ததோடு, அவருடைய ஊழியத்தைப் பலவிதமான அற்புதங்களாலும், அடையாளங்களாலும் உறுதிப்படுத்தியிருந்தார். பவுலானவர், தொடக்கம் முதலே சுவிசேஷ வேலைக்காகத் தன்னை செலவழிப்பதிலே சற்றேனும் பிசினித்தனம் பண்ணாமல், பலவிதமான இன்னல்களின் மத்தியிலும் தன்னை அர்ப்பணித்தவராய் தொடர்ந்து பயணித்தவராயிருந்தார். அவர் தன்னுடைய ஆண்டவரின் சாயலுக்கு ஒப்பாக வளர்ந்த பிறகுதான், பாவத்தின் மேல் வெற்றி என்ற உண்மையை ருசிக்க ஆரம்பித்தார். ஆவிக்குரிய சத்தியத்தைப் பற்றிய குறிப்பிடத்தக்க வெளிப்பாடுகளைப் பெறுவதற்காக மூன்றாம் வானம் வரை எடுத்துக்கொள்ளப்பட்ட அவருடைய ஒப்பற்ற அனுபவமானது, அவர் பெற்றிருந்த சந்தோஷங்களில் ஒன்றாகும்.

இவை எல்லாவற்றையும் அனுபவமாகப் பெற்ற பிறகும், அவர் தனக்கென்று தேவன் நியமித்த அனைத்தையும், தான் இன்னும் அடையவில்லை என்றே சொல்லுகிறார். காலாகாலமாக வாழ்ந்த உன்னதமான கிறிஸ்தவர்களில் பவுலும் ஒருவராவார். அப்படிப்பட்ட நபர், தான் இன்னும் இலக்கை நோக்கித் தொடருவதாக வாழ்வின் இறுதியிலும் கூறுகின்றார். அந்தோ! பெரும்பாலான விசுவாசிகளைப் பொறுத்தவரை இரட்சிப்பு என்பது, தங்களுடைய மறுபிறப்பிலும், தெய்வீக நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பினோம் என்ற உறுதியிலும் தொடங்கி, அதிலேயே முடிந்துவிடுகிறது. ஆனால் அப்போஸ்தலனுக்கும், அந்த அப்போஸ்தலனைப் போன்றே கிறிஸ்துவின் உண்மை சீஷனாய் இருக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டவர்களுக்கும் காரியங்கள் அவ்வாறு இருப்பதில்லை. கிறிஸ்து தன்னை ஒரு நோக்கத்துக்காகப் பிடித்திருக்கிறார் என்று தன்னுடைய ஆணித்தரமான விசுவாசத்தை இந்த வேத பகுதியிலே பவுல் விளம்புகிறார். பவுலும் அந்த நோக்கத்தைப் பிடித்துக்கொள்வதற்காக, தான் எந்த விலைக் கிரயத்தையும் செலுத்தத் தயார் எனப் பிரதியுத்தரம் சொல்லுகிறார். நம்முடைய மனமாற்றத்தின் போது நம்மைப் பற்றி பிடித்துக்கொண்ட ஆண்டவர், வெறுமனே நம்முடைய ஆத்துமாக்கள் நரக அக்கினியிலிருந்து தப்பி பரலோகத்தைச் சென்றடைய வேண்டும் என்பதையெல்லாம் வெகு அதிகமாய் தாண்டியுள்ள ஒரு மேலான நோக்கத்தோடு நம்மைப் பற்றிப் பிடித்திருக்கிறார். இது ஒரு பிரம்மாண்டமான தனித்தன்மை வாய்ந்த சத்தியமாகும். மிக முதிர்ச்சி அடைந்த அப்போஸ்தலனாகிய பவுலே, தனது தொய்வில்லாத முப்பதாண்டு கிறிஸ்தவ சேவையின் இறுதியிலே, தான் இன்னும் அதை அடையவில்லை என்றும், தன்னுடைய வாழ்விலே தேவனுடைய நோக்கம் முற்றிலும் நிறைவேறுவதற்காக அதிகமாய்ப் பிரயாசப்பட வேண்டியதாயிருந்தால், அந்த நோக்கமானது எவ்வளவு விஸ்தாரமானதாய் இருக்க வேண்டும்.

இந்த வேத பகுதியில், பவுல் இன்னும் முன்னோக்கிப் போகின்றார். தேவனுடைய நோக்கத்தைப் புரிந்துகொண்டு அதை நிறைவேற்றுவதற்கான இந்த உயர்ந்த இலட்சியத்துடன் ஒப்பிடும்போது, இவ்வுலகம் விலையேறப்பற்றதாகக் (மேன்மையாகக்) கருதுகின்ற அனைத்துமே பிரயோஜனமற்ற குப்பையாகவே அவருக்கு இருந்தது. இந்தப் பந்தயப் பொருளைப் பெறுவதற்காக இவ்வுலகிலுள்ள எல்லாவற்றையும் விட்டு விட்டாலும் தகும் என அவர் முடிவு பண்ணினார் (பிலிப்பியர் 3:14). இன்று நம்மைச் சுற்றியிருக்கிற கிறிஸ்தவர்கள், இவ்வுலகச் சொத்துக்களை இச்சிப்பதையும், உலகப் பொருட்களோடு ஒட்டிக் கொள்வதையும், தங்களுடைய ஜீவியத்திலே தேவனுடைய காரியங்களைவிட இவ்வுலகப் பொருட்களுக்கே முன்னுரிமை அளிப்பதையும் காணும் போது, அவர்கள் பின்பற்றும் கிறிஸ்தவமானது பவுலின் கிறிஸ்தவத்திலிருந்து வெகு தூரம் சென்றுவிட்டதாகவே முடிவு செய்ய வேண்டியுள்ளது.

இரட்சிப்பை வெறுமனே எரிநரகத்திலிருந்து காப்பாற்றும் ஒரு இன்ஷ்யூரன்சு பாலிசி போல நினைப்பது ஆவிக்குரிய குழந்தைப் பருவத்தின் அடையாளமாகும். நாம் ஆவிக்குரிய முதிர்ச்சி அடையும் போதுதான், நித்திய காலமாய் தேவன் நமக்கென்று திட்டம் பண்ணின பாதையில்தான் நாம் ஒவ்வொருவரும் தினந்தோறும் நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் தேவன் நம்மை இரட்சித்திருக்கிறார் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும் (எபேசியர் 2:10). அந்தப் பாதையைத்தான், பவுல் தன்னுடைய ஜீவியத்தைப் பற்றிய தேவனுடைய நோக்கம் என்று அழைக்கிறார். அவருடைய கிருபையைப் பெற்றதில் நாம் திருப்தியடைந்து, நம்மைப் பற்றிய அவருடைய சித்தம் முழுமையுமாய் நம்முடைய ஜீவியத்திலே நிறைவேற ஒப்புக்கொடாதவர்களாக இருந்தோமென்றால், எவ்வளவு முழுமையான சுவிசேஷமையமான உபதேசத்திலிருந்தாலும், தேவனுக்காக நிலையான மதிப்பு வாய்ந்த எதையுமே செய்யாதவர்களாக நம்முடைய வாழ்க்கையைக் கழித்துவிடுவோம். நிச்சயமாகவே, பிசாசின் தந்திரமானது ஜனங்களை இயேசு கிறிஸ்துவிலுள்ள தேவக் கிருபையைக் காணக் கூடாத குருடராக்கி, அவர்கள் இந்த இரட்சிப்பை அடைய முடியாமல் போகப் பண்ணுவதே ஆகும் (2 கொரிந்தியர் 4:4). ஒருவேளை அவன் அதிலே தோற்றுவிட்டால், அவனுடைய அடுத்த நோக்கம், அந்தப் புதிய விசுவாசி தனக்கென்று தேவன் ஒரு நிச்சயமான திட்டம் வைத்திருக்கிறார் என்பதைக் காணக் கூடாதபடித் தடுக்கவே முயற்சிக்கிறான். இந்த இரண்டாவது விஷயத்தில் அவன் பெருமளவு வெற்றி கண்டுவிட்டான். தங்கள் வாழ்க்கையில் எடுக்கும் பெரிய தீர்மானங்களில் கூட, தேவசித்தம் என்னவாயிருக்கும் என்று கண்டுகொள்ளத் துளியளவும் ஆர்வம் இல்லாத ஆயிரக்கணக்கான மெய் விசுவாசிகள் உண்டு.

கிறிஸ்தவ ஜீவியம் என்பது நாம் தொடர்ச்சியாய்ப் பின்தொடர வேண்டிய ஒரு காரியமாகும் என பிலிப்பியரில் உள்ள இந்த வேத பகுதி நன்றாகச் சித்தரித்துக் காண்பிக்கிறது. இப்பூமியில் நாம் பலவிதமான விஷயங்களில் ஆவிக்குரிய முதிர்ச்சி அடைந்திருந்தாலும், அவையெல்லாம் அவருடைய நோக்கத்தை ஆசையாய் பின்பற்ற வேண்டும் என்பதை ஒருபோதும் நமக்கு அவசியமற்றதாகப் பண்ண முடியாது. அநேக விசுவாசிகள் இப்பாடத்தைக் கற்றுக் கொள்ள விரும்பாமல் நிராகரித்து விட்டபடியால், அவர்களுக்கு உயிரூட்டமுள்ள சாட்சியம் இல்லை. அவர்களுடைய சாட்சியெல்லாம் வெகு காலத்திற்கு முன்பாக ஒரு பாக்கியமான நாளில் ஏதோ ஒரு சுவிசேஷக் கூட்டத்தில் கையை உயர்த்தியதன் மூலமோ அல்லது தீர்மான அட்டையில் கையெழுத்திட்டதின் மூலமோ தாங்கள் பெற்றுக் கொண்ட ஓர் அனுபவமாகவே இருக்கின்றது. அது ஓர் அற்புதமான அனுபவந்தான் என்றாலும், அதன் பிறகு அன்றிலிருந்து இன்று வரை வேறொன்றுமே அவர்கள் வாழ்க்கையில் நிகழவில்லையே! இரட்சிக்கப்பட்ட பின்னர் நிர்விசாரமாய் வாழும் மனிதனின் நிலைமையை, நீதிமொழிகள் 24:30-34ல் உள்ள வசனங்கள் வீணாய்ப் போன ஒரு தோட்டத்தின் உதாரணம் மூலமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. ஒரு தோட்டமானது களை, முட்செடி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால், அது தொடர்ச்சியாய் களை எடுக்கப்பட்டு, பராமரிக்கப்பட வேண்டியதைப் போலவே, மனுஷனுடைய ஆத்துமாவும் கவனிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.