WFTW Body: 

ஆபகூக் புத்தகம் என்பது கேள்விகளைக் கொண்டிருந்த ஒரு மனிதன், சந்தேகத்திலிருந்து நிச்சயத்தை நோக்கி பயணத்தை மேற்கொண்ட ஒரு கதையாகும். அவர், "கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே!" (ஆபகூக் 1:2) என்று சந்தேகத்துடன் ஆரம்பிக்கிறார். ஆனால், "ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்." (ஆபகூக் 3:19) என்று நிச்சயத்துடன் முடிக்கிறார்.

ஆபகூக் கர்த்தரைக் கண்டபொழுது, அவருடைய உள்ளம் துதியினால் நிறைந்தது: "கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருக்கக்கடவது." (ஆபகூக் 2:20). அவருடைய விசுவாச மனப்போராட்டம், விசுவாசத்தின் ஜெயமாய் முடிந்தது. "ஆண்டவரே, உம்முடைய மகத்துவத்துக்கு முன்பாக நான் மௌனமாயிருக்கிறேன்; எனக்கு இனி கேள்விகளே இல்லை" என்று கூறுகிறார். யோபு கர்த்தருடைய மகிமையைக் கண்டபொழுது, அவரும் "இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்" (யோபு 42:5; 40:4) என்று கூறினார். யோபு கர்த்தரைக் கண்டபொழுது அவருக்குக் கேள்விகளே இல்லாமற்போயிற்று. தேவன் உங்களுடைய 10,000 கேள்விகளுக்கும் பதிலளிக்கமாட்டார், ஏனென்றால், அவர் அவைகளுக்குப் பதிலளித்தால், அதற்குப் பிறகு உங்களுக்கு மேலும் 10,000 கேள்விகள் பிறக்கும். (யோபுவின் விஷயத்திலும் ஆபகூக்கின் விஷயத்திலும் நடந்ததைப் போல) கர்த்தரைக் காண்பதே பதிலாகும். கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார். நீங்கள் அவரைப் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருப்பீர்களென்றால், உங்கள் மாம்சம் அவருக்கு முன்பாக மௌனமாயிருக்கும்; கேட்பதற்கு உங்களுக்குக் கேள்விகளே இருக்காது!

ஆபகூக் தேவனைக் கண்டபொழுது, ஒரு விசுவாசமுள்ள வாழ்க்கையை வாழ்வதின் பலனைக் கண்டார். தேவனை மையமாகக் கொண்ட வாழ்க்கையானது ஒரு ஜெய வாழ்க்கை. தீய ஜனங்களைத் தண்டிக்கத் தேவன் ஒன்றுமே செய்யவில்லை என்று நினைத்திருந்த ஆபகூக், இப்பொழுதோ, தேவன் தம்முடைய கோபத்தின் மத்தியிலும் இரக்கமாயிருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறார் (ஆபகூக் 3:2). தம் ஜனங்களைத் தேவன் கைவிட்டுவிட்டார் என்று எண்ணியிருந்த அவர், இப்பொழுது துதிப்பாடலைப் பாடுகிறார். "கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; பரிசுத்தராகிய தேவனை நான் காணும்பொழுது, அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது. என்ன அற்புதமான தேவன் அவர்! அவர் தம்முடைய ஆச்சரியமான வல்லமையில் மகிழுகிறார். அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணுகிறார்; உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காகவுமே நீர் புறப்பட்டீர். துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்" (ஆபகூக் 3:2-13) என்று கூறுகிறார்.

ஆபகூக் இப்பொழுது பாபிலோனியரையல்ல தேவனையே முதலாவது பார்த்தார். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் எங்கும் எல்லா நேரத்திலும் தேவனைத் தரிசிப்பார்கள் (மத்தேயு 5:8). இதுவரை இருந்த பிரச்சனை என்னவென்றால், துஷ்ட பாபிலோனியர் செழிப்படைவதையே ஆபகூக் பார்த்துக்கொண்டுவந்தார். இப்பொழுதோ, தேவனே எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி ஆளுகிறார் என்பதைக் கண்டார். "துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவன்" என்ற பெயர் சாத்தானுக்குப் பொருந்தும். அவன் சிலுவையிலே இயேசுவால் நசுக்கப்பட்டான். ஆபகூக் தேவனை மகிமையும் மேன்மையும் பொருந்தினவராய்க் கண்டபோது அவரது எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிட்டது. அவர் தேவனைக் கண்டபோது தனக்குள்ளே நடுங்கி, "எங்களை ஆக்கிரமிக்கிற ஜனங்களைப் பேரழிவினால் தாக்கும்படி வரப்போகிற அந்த நாளுக்காக நான் மவுனமாய்க் காத்திருப்பேன்." (ஆபகூக் 3:16) என்றார். உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும்போது, அதைக் குறித்து மனிதனிடத்திலல்ல, தேவனிடத்தில் பேசுங்கள். ஆபகூக்கிற்கும் நமக்கும் தேவனுடைய முடிவான வார்த்தையாயிருப்பது, "காத்திரு!" என்பதே. ஆபகூக் தேவனுக்குக் காத்திருந்து அவருக்குச் செவிகொடுத்தபோது, அவருடைய குறைசொல்லுதல் ஒரு பாடலாய் மாறிவிட்டது. நம்மைப்பொருத்த விஷயத்திலும் இது உண்மையாயிருக்கும். காத்திருப்பதே நம் எல்லாருக்கும் ஒரு மிகக் கடினமான செயலாகும்.

ஆபகூக்கின் அற்புதமான துதிப்பாடலானது, பழைய ஏற்பாடு முழுவதிலும் உள்ள மிக அழகான விசுவாசப் பாடல்களில் ஒன்றாகும். இங்கே அவர் ஒரு புது உடன்படிக்கை பரிசுத்தவானைப் போலப் பாடுகிறார்: "அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்." (ஆபகூக் 3:17, 18). யோபுவைப் போல, அவருடைய தொழில் பாழாகலாம், அவர் எல்லாவற்றையும் இழந்திருக்கலாம். ஆனாலும், தன்னுடைய சந்தோஷத்தை அவர் பூமியிலுள்ள எதிலும் அல்லாமல், தேவனிடத்திலேயே கண்டுகொண்டதால், அவர் இன்னமும் களிகூருவார். நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே பொய்த்துப் போனாலும், நாம் இன்னமும் நம்முடைய இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவோம். உள்ளான விசுவாச ஜெயத்தின் புறம்பான வெளிப்பாடு தான் ஒரு துதிப்பாடல். "அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள்." (சங்கீதம் 106:12). ஆபகூக் தொடர்ந்து கூறுகிறார்: "ஆண்டவராகிய கர்த்தர் என்பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்." (ஆபகூக் 3:19). ஆரம்பத்தில் அநேக சந்தேகங்களையும் பயங்களையும் கொண்டிருந்த இந்தத் தீர்க்கதரிசி இப்பொழுது, கர்த்தர் தன்னை எல்லா உயர்ந்த மலைபோன்ற சந்தேகங்களையும் கடந்துவரச் செய்து, தங்கள் கால்களை எந்தக் கன்மலைப் பிளவிலும் சிக்கவிடாத மான்களைப் போல அந்த சந்தேக மலைகளின்மீது தன் கால்களையும் அவர் உறுதியாக்குவார் என்று கூறுகிறார். ஆபகூக் இந்த அதிகாரத்தின் முடிவில் சுவாரசியமான ஒரு சிறு குறிப்பைச் சேர்த்திருக்கிறார்: "இது நெகிநோத் என்னும் (நரம்பு) வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்." (ஆபகூக் 3:19). அவர் கூறுவதென்னவென்றால், "எல்லாவற்றையும் இழந்தாலும் இந்தப் பாடலை சோகமான ஒரு புலம்பலாகப் பாடாதீர்கள்! இதற்கு ஒரு மகிழ்ச்சியான இசையமைத்து அநேக இசைக்கருவிகளோடும் பாடுங்கள்!" என்கிறார். நம் முழு இருதயத்தோடும் கர்த்தரைத் துதிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பாட்டுகளை ஒருபோதும் மங்கிய, சலிப்பான விதத்தில் பாடாதீர்கள். இந்த அண்ட சராசரத்தில் என்ன நடந்தாலும் கர்த்தர் சிங்காசனத்திலிருக்கிறார், இயேசு வெற்றி சிறந்தவராயிருக்கிறார். ஆகவே, நாம் நம் தொனியை உயர்த்தி, தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற எல்லா இசைக்கருவிகளையும் இசைத்து, அவரைத் துதித்து அவருடைய நாமத்தை உயர்த்துவோம். ஆமென்.