WFTW Body: 

யோசேப்பு கர்த்தருக்குப் பயந்த மனுஷனாயிருந்ததின் நிமித்தம், சாத்தானால் அவன் மிகவும் வெறுக்கப்பட்டான் என்று ஆதியாகமம் 37-ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். எப்படியாகிலும் யோசேப்பை ஒழித்துக்கட்டும்படி அவனுடைய மூத்த சகோதரர்களைச் சாத்தான் தூண்டிவிட்டான். ஆனால் தேவனோ, யோசேப்பின் ஜீவனை அவர்கள் எடுத்துவிட முடியாதபடி காத்துக்கொண்டார். இருப்பினும், அவர்கள் அவனை இஸ்மவேல் வியாபாரிகளிடம் விற்றுவிட முடிந்தது. ஆனால், இந்த வியாபாரிகள் யோசேப்பை எங்குக் கொண்டுசென்றார்கள் தெரியுமா? எகிப்திற்கே தான்! இது தேவனுடைய திட்டத்தினுடைய முதற்படியின் நிறைவேறுதல் ஆகும்! எகிப்தில் யோசேப்பு, போத்திபாரால் விலைக்கு வாங்கப்பட்டான். இதுவும் தேவன் நியமித்த ஏற்பாடே ஆகும். போத்திபாரின் மனைவியோ ஒரு பொல்லாத பெண்மணி. அவள் யோசேப்பின் சௌந்தரியத்தில் கண்போட்டு, மறுபடியும் மறுபடியும் அவனைத் தன் ஆசை வலையில் வீழ்த்த முயற்சித்தாள். கடைசியில் அவளது முயற்சி தோல்வியடைந்ததால், யோசேப்பின்மீது பொய்யாய்க் குற்றம் சாட்டி, அவனைச் சிறையில் அடைக்கும்படி செய்தாள். சிறையில் யோசேப்பு யாரைச் சந்தித்தான் என்று எண்ணுகிறீர்கள்? பார்வோனின் பானபாத்திரக்காரன்! இவ்வாறு பானபாத்திரக்காரனும் ஒரே நேரத்தில் சிறைக்கு வரும்படி செய்து, யோசேப்பு அவனைச் சந்திக்கும்படியாய் தேவன் ஏற்பாடு செய்திருந்தார். இது தேவனுடைய திட்டத்தின் இரண்டாம்படி ஆகும். தேவனுடைய மூன்றாவது படியானது, பார்வோனின் பானபாத்திரக்காரன் யோசேப்பை இரண்டு வருடங்கள் மறந்து போகும்படி அனுமதித்ததே ஆகும். “ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான். இரண்டு வருஷம் சென்றபின்பு, பார்வோன் ஒரு சொப்பனம் கண்டான்… அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் பார்வோனை நோக்கி…” (ஆதியாகமம் 40:23; ஆதியாகமம் 41:1,9). அதுவே, தேவனுடைய கால அட்டவணைப்படி யோசேப்பு சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்படவேண்டிய நேரமாயிருந்தது. “கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது. ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான்” என்று சங்கீதம் 105:19,20 கூறுகிறது. யோசேப்பு 30 வயதானபோது, தேவனுடைய வேளை வந்தது. ஆகவே, தேவன் பார்வோனுக்கு ஒரு சொப்பனத்தைக் கொடுத்தார். “யோசேப்பு சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லுகிறவன்” என்பதை பானபாத்திரக்காரனுக்கு தேவன் நினைப்பூட்டினார். இப்படித்தான் யோசேப்பு பார்வோனுக்கு முன்பாய் வரவழைக்கப்பட்டு, எகிப்தின் இரண்டாவது அதிபதியாக மாறினான்! யோசேப்பின் வாழ்க்கையில் தேவனுடைய நேரப்படி நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் எத்தனை பூரணமானவைகளாயிருந்திருக்கின்றன! தேவன் ஒழுங்குசெய்தவிதமாக, நாம் செய்யும்படியாய் ஒருக்காலும் சிந்தித்துக்கூட இருக்கமாட்டோம்! யோசேப்பின் வாழ்க்கையைத் திட்டமிட வல்லமை நமக்கிருந்தால், அவனுக்கு எந்தத் தீங்கும் செய்யவிடாமல் ஜனங்களைத் தடுத்திருப்போம். ஆனால், தேவன் அவன் வாழ்க்கையில் காரியங்களை நிகழ்த்திய விதம் மேலானது! சிந்தனைக்கெட்டாத அற்புதம் என்னவெனில், மனுஷர் நமக்குச் செய்திடும் தீமையானது நம்மைக்குறித்த தேவனுடைய தீர்மானம் நிறைவேறுவதற்காய்த் திருப்பப்படுவதுதான்! அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாய் நடக்கும்படி, சாத்தானின் சதி மேஜையை அவனுக்கு விரோதமாகவே திருப்புவதில் தேவன் பேரானந்தம் கொள்கிறார்!

இஸ்ரவேலர்கள் அடிமைகளாக இருந்தபோதிலும், அவர்கள் நிமித்தம் பார்வோன் கலக்கமடைந்தான் என்று யாத்திராகமம் 1-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அவர்கள் ஏராளமாய்ப் பெருகி, தனக்கு எதிராக முரட்டாட்டம் செய்து, முடிவில் தனக்கு அடிமையாக வேலை செய்வதை நிறுத்திவிடுவார்களோ என்றெண்ணிப் பயந்தான். ஆகவே, இஸ்ரவேலருக்குப் பிறக்கும் எல்லா ஆண் பிள்ளைகளும் உடனடியாகக் கொல்லப்பட வேண்டும் என்று ஓர் உத்தரவைப் பிறப்பித்தான். அந்தச் சதித் திட்டம் பிசாசிடமிருந்தே தோன்றியது. மனித வரலாற்றில், யூதர்களைக் கொல்ல சாத்தான் பல முறை வகைதேடினான். அது போன்ற அவனது முயற்சிகளில் இதுவே முதலானதாகும். எல்லா ஆண் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டும் என்ற கட்டளையை பார்வோன் அறிவித்ததால், மோசேயின் தாய் அவனை ஒரு சிறிய நாணற்பெட்டியில் வைத்து, தேவனிடத்தில் ஜெபித்து, ஆற்றில் மிதக்கவிட்டு அனுப்பினாள். அத்தகைய கொடிதான கட்டளை பிறப்பிக்கப்படாதிருந்தால், அவள் ஒருபோதும் அப்படிப்பட்ட செயலைச் செய்திருக்க மாட்டாள். ஆனால், அவள் அப்படிச் செய்ததால் தான், மோசே பார்வோனின் குமாரத்தியால் எடுத்துச் செல்லப்பட்டு, அவன் பார்வோனின் அரண்மனையில் வளர்ந்தான். ஆம், அந்த இடம் தான் மோசே தன் வாழ்க்கையின் முதல் 40 ஆண்டுகளுக்குப் பயிற்சி பெற வேண்டும் என்று தேவன் விரும்பிய இடமாயிருந்தது. பார்வோன் அக் கொடிய கட்டளையைப் பிறப்பிக்காதிருந்தால் அது ஒருபோதும் நடந்திருக்காது; மோசே மற்றொரு அடிமையாகவே வளர்ந்து வந்திருப்பான். சாத்தான் நடப்பிக்கிற காரியங்களின் மூலம் எப்படி தேவனுடைய நோக்கங்கள் நிறைவேறுகின்றன என்பதை உங்களால் காணமுடிகிறதா?

எஸ்தர் புத்தகத்தில், தேவன் எவ்வாறு யூதகோத்திரம் முழுவதும் வெட்டுண்டு போகாதபடி காத்துக்கொண்டார் என்று வாசிக்கிறோம். எவ்வாறு? “ஒரு ராத்திரியில் ராஜாவால் தூங்க முடியவில்லை” அவ்வளவுதான்! - இந்தச் சிறிய சம்பவம், தேவன் தன் திட்டத்தை நிறைவேற்றுவதற்கேதுவாய் இருந்ததைக் காண்பது நமக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆமானும் அவன் மனைவியும் யூதர்களை அழிப்பதற்கு முன்னோட்டச் செயலாக, மொர்தெகாயை மறுநாள் காலையில் தூக்குமரத்தில் தூக்கிலிடுவதற்கு ராஜாவிடம் அனுமதி கேட்கும்படியாக அன்று இரவு சதித்திட்டம் போட்டார்கள். ஆனால் இவர்கள் பொல்லாத திட்டம் தீட்டிய அதே வேளையில், தேவனும் மொர்தெகாய்க்காகத் தீவிரமாய் செயல்பட்டுக் கொண்டிருந்தார். “இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை” (சங்கீதம் 121:4). ஆம், ராஜாவை அன்று ராத்திரி தேவன் தூங்கவிடவில்லை, “அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.” (எஸ்தர் 6:1). அதிகாலை விடியும் வரை பல மணி நேரங்கள் ராஜா தனது தேசத்தின் சரித்திரத்தைக் கேட்டுக்கொண்டிருந்தான். அப்போது, “ராஜா ஒரு சமயம் கொலை செய்யப்படுவதிலிருந்து மொர்தெகாய் அவரைக் காப்பாற்றினான்” என்று எழுதப்பட்டிருந்ததைக் கேட்டான். அப்போது ராஜா தன் ஊழியர்களைப் பார்த்து, “இச்செயலுக்காக மொர்தெகாய்க்கு என்ன கனம் செய்யப்பட்டது?” என்று கேட்டான். அதற்கு அவர்கள் “ஒன்றும் செய்யப்படவில்லை!” என்று பதிலுரைத்தனர். இங்குத் தேவன் காலம் தவறாமல் நிகழ்த்தும் அவரது கிரியையின் பூரணம் மீண்டும் விளங்குகிறது. பாருங்கள்! சரியாய் இந்த நேரத்தில்தான் மொர்தெகாயைத் தூக்கிலிட ஆமான் அனுமதி கேட்குமாறு ராஜாவுக்கு முன் வந்து நின்றான். ஆமான், தான் கேட்க வந்ததை வாயெடுக்கு முன்பாக, ராஜா ஆமானிடம், “ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்பட வேண்டும்?” என்று கேட்டான். தன் அதிகாரத் தகுதியைக் குறித்த பெருமையில் மிதந்த ஆமான், தன்னைத்தவிர ராஜா யாரைக் கனம்பண்ண முடியும் என்று எண்ணிக்கொண்டு, “அம்மனிதனுக்கு ராஜ தர்பாருடன், ராஜமரியாதை அளிக்கப்பட வேண்டும்!” என்று ஆலோசனை கூறினான். ராஜா உடனே, “நீ சொன்னபடியே சீக்கிரமாய் மொர்தெகாய்க்கு செய்!” என்று கட்டளையிட்டான். நம் தேவன் எவ்வளவு அற்புதமாய் சதி மேஜையைச் சாத்தான் மேலேயே கவிழும்படி செய்கிறார்! கடைசியாக மொர்தெகாய்க்கு செய்த அதே தூக்கு மரத்தில் இந்தப் பொல்லாத ஆமான் தூக்கிலிடப்பட்டான். வேதம் சொல்லுவது போல் “(பிறனுக்குப்) படுகுழியை வெட்டுகிறவன், தானே அதில் விழுவான்; (பிறன்மீது) கல்லைப் புரட்டுகிறவன் மேல் அந்தக்கல் (தன்னையே நொறுக்கும்படி) திரும்ப விழும்” (நீதிமொழிகள் 26:27) என்பதாய் முடிந்தது!! இங்கு நாம் கண்ட ஆமான், நமக்கு விரோதமாய் எப்போதும் தீங்கு செய்யத் திட்டம் தீட்டும் சாத்தானையே சித்தரிக்கிறான். தேவன் அவனைத் தடுப்பதே இல்லை. ஏனெனில் அச்சதி மேஜையைச் சாத்தான்மீதே கவிழ வைப்பதற்கு அவர் மிக மேன்மையான திட்டம் வைத்திருப்பார்! நமக்காகத் தோண்டுகிற அதே குழியில் தானே பிசாசு கடைசியாக விழுவான். ஒரு மொழிபெயர்ப்பின்படி, செப்பனியா 3:17-ம் வசனம், “தேவன் அன்பின் மிகுதியால் அமைதியாய் அமர்ந்து நமக்காக எப்போதும் திட்டம் தீட்டுகிறார்” என்றே கூறுகிறது. ஆமானும் அவன் மனைவியும் தனக்கு விரோதமாய் சதித்திட்டம் தீட்டியிருப்பதை அறியாமல் மொர்தெகாய் சமாதானமாய் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், தேவனும் மொர்தெகாயைக் காக்கும்படி திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார். எனவே, மொர்தெகாய்க்கு அச் சதித்திட்டம் முன்கூட்டியே தெரிந்திருந்தாலுமே கூட “இப்போதும்” அவனால் சமாதானமாய்த் தூங்கிட முடியும்! ஏன் முடியாது? தேவன் அவன் பட்சத்திலிருந்தால், யார் அவனுக்கெதிராய் நின்றிட முடியும்?

இதற்கு மிகப்பெரிய உதாரணத்தை நாம் கல்வாரியில் காணமுடியும். சாத்தான், அங்கே இயேசுவின் சத்துருக்கள் அவரைப் பிடித்து சிலுவையில் அறையச் செய்தான். ஆனால், அந்தச் சிலுவையே சாத்தான் தோற்கடிக்கப்பட்ட இடமாக மாறியது!! எப்போதும் போலவே, சாத்தானின் திட்டம் அவன்மீதே திரும்பியது. இயேசுவுக்கென்று, சாத்தானின் சதி மேஜையைத் தேவன் அவன்மீதே திருப்பினார். அவருக்கு முன்பாக மனத்தாழ்மையுடனும் சுத்த மனசாட்சியுடனும் வாழ்ந்தால், அவர் நமக்கும் அவ்வாறே செய்வார். நமக்குத் தீங்கு விளைவிக்கப் பிசாசும் அவனுடைய முகவர்களும் எதைச் செய்தாலும் அதை அவர்கள் மீதே திருப்பி, நம் வாழ்விற்கான தம்முடைய நோக்கங்களைத் தேவன் நிறைவேற்றுவார்.