WFTW Body: 

நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் வரைபடத்தை நாம் வரைந்தோமென்றால், அது ஏற்றங்களும் இறக்கங்களும் கொண்டதாக இருக்கும். ஒவ்வொருவரின் அனுபவமும் அப்படியாகவே இருக்கிறது. ஆனால், ஆண்டுகள் கடந்து செல்லச் செல்ல, பொதுவான திசை ஏறுமுகமாகவே இருக்க வேண்டும். இடையிடையே சமமான தளங்களும் ஏற்றங்களும் இறக்கங்களும் கொண்டிருந்து, நாம் மெதுவாக ஏறுமுகமாய் நகர்வோம். நம்முடைய வீழ்ச்சிகள் குறைவாகும், சமமான தளங்கள் நீடிக்கும். ஏற்றங்கள் திடீரெனவும் செங்குத்தாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை, எப்பொழுதாவது அப்படி இருக்கவும் முடியும். ஆனால், ஏற்றங்கள் பொதுவாக படிப்படியாகவே இருக்கும். ஆனால், வெற்றியை விசுவாசியாதவர்களுக்கும், அதை நாடாதவர்களுக்கும் வரைபடம் இறங்குமுகமாகவே போய்க்கொண்டிருக்கும். ஏனெனில், அவர்கள் தேவனுக்கு பயப்படுவதோ அல்லது அவரது வாக்குத்தத்தங்களை நம்புவதோ இல்லை.

பாவத்தை மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு தோல்வியிலும் துக்கியுங்கள். அப்படிச் செய்வதன்மூலம் நீங்கள் மெய்யாகவே தேவனுக்கு பயப்படுகிறீர்கள் என்பதை அறிவீர்கள். நான் அடிக்கடி கூறுவதை நீங்கள் கேட்டிருக்கிறபடி, பாவத்தில் விழுவதைவிட அதில் விழுந்த பின் துக்கியாமல் இருப்பதே கொடிய காரியம். பாவத்தில் (அல்லது ஏதோ விதத்தில் தேவனை துக்கப்படுத்தும் காரியத்தில்) விழுந்த உடனே துக்கித்து மனந்திரும்ப உங்களுக்கு நான் சவால் விட்டேன் என்றால், நான் என் கடமையை செய்து விட்டேன்.

தன் தேவையினிமித்தம் எலிசாவினிடம் வந்த விதவையிடம் (2இராஜாக்கள் 4), அவளுடைய அயல்வீட்டுகாரர் எல்லாரிடத்திலும் போய் அநேகம் வெறும்பாத்திரங்களைக் கேட்டுவாங்கி அதில் எல்லாவற்றிலும் அவளது சிறு குடத்தில் உள்ள எண்ணெயை வார்த்து நிரப்பும்படி கூறப்பட்டது. அவளும் அதைச் செய்தாள். அவ்வாறு அவளது கடனை அவளால் தீர்க்கமுடிந்தது. இறுதியில், அவளது குமாரர்கள், “நிரப்புவதற்கு வேறே பாத்திரம் இல்லை”, என்று கூறினர். “அப்பொழுது எண்ணெய் நின்று போயிற்று” என்ற வார்த்தைகளை அதற்குப்பின் வாசிக்கின்றோம்.

இங்கே எண்ணெய் பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. ஆவியின் அபிஷேகத்தின் அனுபவம் (நிரம்புதல்) பெற்ற அநேகருக்கு இவ்வாறே நடக்கிறது. ஆரம்பத்தில் அவர்கள் உண்மையாகவே நிரப்பப்படுகின்றனர். பின்னர் அவர்கள் அநேகரின் வாழ்க்கையில் தேவை என்ற உணர்வு (நிரப்புவதற்கு பாத்திரங்கள்) இல்லாமல் போகும் காலம் வரும்போது அவர்கள் வாழ்க்கையின் மூலமாய் நிரம்பி வழிகின்ற ஆவி நின்றுபோகும். நம் வாழ்க்கையில் கிறிஸ்துவைப்போலல்லாத பகுதிகளை இந்த வெற்றுப்பாத்திரங்கள் குறிக்கும். ஓரளவு அல்ல, விளிம்பு வரை நிரம்பவதற்கு அநேகமனேகமான பகுதிகள் நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கின்றன.

சில பகுதிகளில் நீங்கள் பாவத்தின் மேல் ஜெயம் கொண்டிருந்தால், அது பாத்திரங்களின் கொஞ்சத்தை மட்டுமே நிரப்பியிருக்கும். கிறிஸ்துவைப்போல் இருப்பது (அல்லது திவ்விய சுபாவத்திலே பங்குபெறுவது) என்பது பாவத்தின்மேல் பெறும் வெற்றியைக்காட்டிலும் எவ்வளவோ அதிகமானது. உதாரணமாக, ஒருவர்மேல் எந்த ஒரு கசப்பும் இல்லாததற்கும், அவரை நேசிப்பதற்கும் அதிக வித்தியாசம் உண்டு. முந்தினது எதிர்மறையாகவும் (பாவத்தின் மேல் வெற்றி), பிந்தினது நேர்மறையாகவும் (திவ்விய சுபாவம்) இருக்கிறது. அதைப்போல், கோபப்படாமலிருப்பதற்கும், ஆசீர்வாதமான வார்த்தைகளைப் பேசுவதற்கும் அதிக வித்தியாசம் உண்டு. அதைப்போல் தான் இன்னும் பல பகுதிகளிலும். சில பகுதிகளில் பாவத்தின் மேல் வெற்றி பெற்றதில் நாம் திருப்தி அடைந்திருந்தால், “நிரப்புவதற்கு வேறே பாத்திரம் இல்லை” என்ற கற்பனையில் நாம் மன நிறைவுக்குள்ளாகிறோம். அப்பொழுது எண்ணெய் நின்று போய்விடும், நாமும் பின்மாற்றமடைய ஆரம்பித்துவிடுவோம்.

மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை விடுத்து, தொடர்ந்தேச்சையான மனந்திரும்புதலுக்கேதுவான வாழ்க்கையை நாம் தாமே வாழவேண்டும். நிரப்பப்படுவதற்குத் தயாராக வெற்றுப்பாத்திரங்கள் எப்போதும் நம்மில் உண்டு என்று காண்பதே நமது கடமை. அவ்வாறு மாத்திரமே நாம் நமது கடன்களைத் தீர்க்கமுடியும் (அந்த விதவையைப்போல்). ரோமர் 13:8-ல் - “ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடன்பட்டிருக்கிறீர்கள்” - என்று நமது கடனைக் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது. அப்படித்தான் நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்க முடியும். ஒவ்வொரு சூழ்நிலையும் நம்முடைய சுயத்தின் ஏதோ ஒரு பகுதியிலிருந்து நம்மை இரட்சிக்கவும் மற்றவர்களுக்கு நம்மை ஆசீர்வாதமாக மாற்றவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் சொந்த வெற்றுப்பாத்திரங்கள் முதலில் நிரப்பப்படாதிருந்தால், மற்றவர்கள் நம்மூலம் ஆசீர்வாதம் பெறமுடியாது.