WFTW Body: 

தேவனுடைய வீட்டை வேறுபடுத்துகிற பிரத்யேகமான காரியம் தன்னைத்தானே நியாயந்தீர்ப்பதாகும் (1பேதுரு 4:17) - தன்னைத்தானே நியாயந்தீர்ப்பது என்பது தேவனுடைய முகத்திற்கு முன்பாக வாழ்வதின் விளைவாக உண்டாவதாகும். ஏசாயா, யோபு, யோவான் ஆகிய எல்லாருமே தேவனைக் கண்ட மாத்திரத்தில், தங்களது ஒன்றுமில்லாமையையும், பாவத்தையும் பார்த்தார்கள் (ஏசாயா 6:5; யோபு 42:5,6; வெளி 1:17 காண்க).

ஆதாமும் ஏவாளும் தேவனுடைய பரிசுத்தத்தை மீறினபடியால், ஏதேனிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின்பு தேவன் அந்த ஜீவ விருட்சத்திற்கு முன்பாகச் சுடரொளிப் பட்டயம் ஏந்திய கேருபீன்களைக் காவல் வைத்தார். இந்த ஜீவ விருட்சமானது, இயேசு நமக்குக் கொடுக்க வந்த நித்திய ஜீவனைக் (திவ்விய சுபாவத்தைக்) குறிக்கிறது. நாம் திவ்விய சுபாவத்தில் பங்குபெறுவதற்கு முன்பாக, நம்முடைய சுய-ஜீவனை அழிக்கின்ற சிலுவையை அந்தப் பட்டயம் அடையாளப்படுத்துகிறது. இந்தப் பட்டயமானது இயேசுவின் மீதுதான் முதலாவது விழுந்தது என்பது உண்மைதான். ஆனால் அவருடன் நாமும் சிலுவையில் அறையப்பட்டோம் (கலாத்தியர் 2:20). மேலும் "கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்" (கலாத்தியர் 5:24).

ஒரு சபையிலுள்ள மூப்பர்களும் இந்த கேருபீன்களைப் போலவே பட்டயத்தைச் சுழற்ற வேண்டும். மாம்சத்தை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பதுதான் திவ்விய சுபாவத்தில் பங்கு பெறுவதற்கான ஒரே வழி என்பதை அவர்கள் பிரகடனப்படுத்த வேண்டும். அந்த பட்டயத்தின் வழியாகத்தான் தேவனுடைய ஐக்கியத்தைப் பெற முடியும். இப்பட்டயத்தைச் சரியாகச் சுழற்றாத காரணத்தினால்தான், இன்று பெரும்பாலான சபைகள் ஒத்த வேஷக்காரர்களால் நிறைந்து, கிறிஸ்துவின் சரீரத்தின் வெளிப்பாடாக இருப்பதை விட்டுவிட்டனர்.

இஸ்ரவேல் ஜனங்கள், மோவாபியரின் குமாரத்திகளுடன் வேசித்தனம் செய்யத் தொடங்கியதைக் குறித்து எண்ணாகமம் 25:1ல் வாசிக்கிறோம். இஸ்ரவேலரில் ஒருவன் மோவாபிய ஸ்திரீ ஒருவளைத் தனது கூடாரத்துக்குள் கொண்டுவந்தான் (எண்ணாகமம் 25:6). ஆனால் பினெகாஸ் என்னும் ஓர் ஆசாரியனால் இஸ்ரவேல் தேசம் முழுமையும் அழிவிலிருந்து காக்கப்பட்டது. அவன் அவ்வளவாய் தேவனுடைய மகிமைக்காய் பக்தி வைராக்கியம் கொண்டபடியால், உடனடியாக ஒரு ஈட்டியை எடுத்து, அக்கூடாரத்தினுள் நுழைந்து, அவ்விருவரையும் ஊடுருவக் குத்திக் கொன்று போட்டான் (எண்ணாகமம் 25:7,8). பின்னர் தேவன் வாதையை நிறுத்தினார் (எண்ணாகமம் 25:8). ஆனால் அதற்கு முன்னரே 24,000 பேர் கொல்லப்பட்டு விட்டனர். வாதையானது இஸ்ரவேலர் அனைவரையும் அழித்துப் போடும் அளவிற்கு வெகு வேகமாக பரவிக் கொண்டிருந்தது. ஆனால் "பட்டயத்தைச் சுழற்றிய ஒரு கேருபீனால்" அது அந்நாளிலே தடுக்கப்பட்டது.

ஒவ்வொரு சபையும் இப்படிப்பட்ட ஒரு பட்டயத்தைச் சுழற்றும் கேருபீனைப் பெற்றிருப்பதின் மேன்மையை உங்களால் உணர முடிகின்றதா?

பட்டயத்தைப் பயன்படுத்தத் தெரிந்த போதிய பினெகாஸ்கள் இன்று சபையிலே இல்லையென்பதால், கிறிஸ்தவ வட்டாரத்திலே வாதை வெகு வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. அநேக மூப்பர்களும், பிரசங்கிகளும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவர்களாய், "மீதியானியரைச் சிநேகிக்கும்படி" நம்மைத் தொடர்ச்சியாய் ஏவுகிறார்கள். நாம் சபையிலே பட்டயத்தை ஏன் பயன்படுத்தக் கூடாது என்பதற்குப் பிசாசானவன் நூற்றுக்கணக்கான வாதங்களை (arguments) அடுக்கிக் கொண்டே போவான். அத்துடன் தன்னுடைய வாதங்களை உறுதிப் படுத்துவதற்காக, இயேசுவிடத்தில் சொன்னது போலவே, நம்மிடத்திலும் வேத வசனங்களைக் கூடச் சுட்டிக்காட்டுவான்.

பட்டயத்தைப் பயன்படுத்தின பினெகாஸ், தனக்கென என்ன இலாபத்தைச் சம்பாதித்தான்? ஒன்றுமில்லை. அதற்குப் பதிலாக அவனுக்கு ஏற்பட்ட இழப்புதான் ஏராளம். குறிப்பாக தான் தயவும், சாந்தமும் உள்ளவன் என்ற புகழ்ச்சியைக் கூட அவன் இழக்க நேரிட்டது!! அது மட்டுமல்லாமல், அவனால் கொல்லப்பட்ட அந்த மனிதனின் உறவினர், நண்பர்களின் வசைமொழிக்கும், கோபத்துக்கும் ஆளாகியிருப்பான். ஆனால் தேவனுடைய மகிமையும், கனமுமே பினெகாஸை அப்படிச் செய்யும்படி ஊக்கப்படுத்தியது. "பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்தான்" (எண்ணாகமம் 25:11) என்று சொல்லி, பினெகாஸின் ஊழியத்தின்மீது தேவன் தமது அங்கீகாரத்தின் முத்திரையைப் பதித்தார். கடைசியில் (கடைசி பகுப்பாய்வில்), தேவனுடைய அங்கீகாரத்தின் முத்திரையைப் பெறுவது மாத்திரமே காரியமாகும். கர்த்தர் தொடர்ந்து, "அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்தபடியால், அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன்" (எண்ணாகமம் 25:12,13) என்று பினெகாஸைக் குறித்துச் சொன்னார். இன்று அநேக சபைகளிலே தேவனுடைய பட்டயத்தைப் பயன்படுத்தாமல், மனுஷீகமான முறையிலே சமாதானத்தைத் தேடுவதால், அவையெல்லாம் சமாதானமின்றிக் காணப்படுகின்றன. அதன் விளைவாக வாக்குவாதங்களும், சண்டைகளும்தான் உண்டாகின்றன. நம்முடைய சுய ஜீவனானது பட்டயத்தைக் கொண்டு கொல்லப்படுவதின் மூலமாகவே, வீட்டிலும் சபையிலும் கிறிஸ்துவின் சமாதானம் வாங்கப்படுகின்றது.

சபையின் தலைமைத்துவத்தில் இருப்பவர்களிடத்திலே தேவ நாமத்தின் மகிமையைக் குறித்ததான பக்தி வைராக்கியம் கொழுந்து விட்டு எரிந்தால்தான், சபையானது தொடர்ந்து பரிசுத்தத்திலே பாதுகாக்கப்படும். தாங்கள் தயவும், சாந்தமும் உடையவர்கள் என்ற புகழ்ச்சியைப் பெறுவதையெல்லாம் அவர்கள் மறந்துவிட வேண்டும். தேவ நாமத்தின் மகிமையைக் குறித்த கரிசனை மாத்திரமே அவர்கள் உள்ளத்தில் இருக்க வேண்டும்.

தேவ நாமத்தின் மகிமைக்காக இயேசு கொண்டிருந்த தீராத வாஞ்சைதான், அவரை தேவாலயத்திலிருந்த காசுக்காரரையும், புறா விற்கிறவர்களையும் விரட்டியடிக்கச் செய்தது. தேவனுடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் அவரைப் பட்சித்தது (யோவான் 2:17). கிறிஸ்து-போன்றவர் என்று அர்த்தப்படுத்துவதில் இது பெரும் பங்கு வகிக்கின்றது. ஆனால், தன்னை பிரபலமற்றவராகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறவராகவும் இது மாற்றிவிடுமென்றால் கிறிஸ்து-போல இருப்பதில் ஆர்வம் காட்டுபவர் யார்?