WFTW Body: 

23ம் சங்கீதம் மேய்ப்பனின் சங்கீதம். கர்த்தர் நம்முடைய மேய்ப்பராக இருக்கும்போது, ​​நமக்கு ஒன்றும் குறைவு படாது (வசனம் 1). அவர் நம்மை மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய் விடுகிறார். அவர் நம்முடைய ஆத்துமாவை தேற்றி, நீதியின் பாதைகளில் நடத்துகிறார். கர்த்தருக்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியே அடிக்கடி சிந்திக்கிறோம். ஆனால் இங்கே, கர்த்தர் நமக்கு என்ன செய்கிறார் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முதலில் அவர் நம்மில் ஒரு கிரியையைச் செய்ய நாம் அவரை அனுமதிப்பதால் மட்டுமே நாம் அவருக்கு பயனுள்ளவர்களாக இருக்க முடியும். அவர் நம்முடனே இருக்கிறபடியால் எந்த பொல்லாப்புக்கும் நாம் பயப்படோம். அவர் நமக்காக ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, நம் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறார். பின்னர் நம்முடைய பாத்திரங்கள் நிரம்பி வழியத் தொடங்கி, நித்திய வீட்டை நாம் அடையும் வரை நன்மையும் கிருபையும் எல்லா இடங்களிலும் நம்மைப் பின்தொடரும்.

34ம் சங்கீதம் கர்த்தரை நீதிமான்களின் துணையாளர் என்று விவரிக்கிறது. தாவீது, அபிமெலெக் என்னும் ராஜாவிற்கு முன்பாக பைத்தியம் பிடித்தவனைப் போல நடித்ததின் மூலமாய் தேவன் தன்னை மரணத்தினின்று விடுவித்தபோது இந்த சங்கீதத்தை எழுதினார். எனவே, “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன். இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டார். கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்". (வசனங்கள் 1, 6, 8) என்று அவர் கூறுகிறார். “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்" (வசனம் 7) என்பதை தாவீது உணர்ந்திருந்தார். "கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது" என்பதையும் “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” என்பதையும் அவர் கண்டார் (வசனங்கள் 15, 18). மேலும், "நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்” (வசனம் 19) என்று தாவீது தன்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறார். நீங்கள் நீதிமானாய் இருந்தால் உங்களுக்குப் பிரச்சினைகளே இருக்காது என்று ஒருபோதும் கற்பனை செய்ய வேண்டாம். உங்களுக்கு அநேகப் பிரச்சினைகள் இருக்கும், “ஆனால் கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று உன்னை விடுவிப்பார்” (வசனம் 19). பிறகு, மேசியாவைக் குறித்து இன்னுமொரு தீர்க்கதரிசனம் உள்ளது: “அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை” (வசனம் 20 ) - இது சிலுவையில் நிறைவேறியது.

66ம் சங்கீதத்தில், தன்னை ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட இடத்திற்குள் அழைத்து வந்ததற்காக தாவீது தேவனைத் துதிக்கிறார். ஆனால் இது பல சோதனைகள் மூலமாகவே வந்தடைந்த இடம். தேவன் தாவீதை செழிப்பான ஆவிக்குரிய ஆசீர்வாதத்திற்குக் கொண்டு வருவதற்கு முன்பாக, நோயையும், தீயையும், தண்ணீரையும், மனுஷர் தலையின்மேல் ஏறிப்போகிறதையும் கடந்துபோகச் செய்தார் என்பதை 10 முதல் 12 வசனங்களில் நாம் வாசிக்கிறோம். இங்கு "செழிப்பான இடம்" என்று மொழிபெயர்க்கப்பட்ட சொல், வேதாகமத்தில் வேறு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது - அது சங்கீதம் 23:5ல் காணப்படுகிறது - அங்கே அந்த சொல் "நிரம்பி வழிதல்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, சோதனையும் துன்பமுமே நிரம்பி வழிகிற ஆசீர்வாதம் நிறைந்த வாழ்க்கையைப் பெறுவதற்கான வழியாகும். 18வது வசனம் மற்றொரு முக்கியமான வசனம்: “என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்”. ஜெபம் என்பது தேவனோடு தொலைபேசியில் உரையாடுவதைப் போன்றது. ஆனால், நாம் அறிக்கை செய்யாத பாவத்தை இருதயத்தில் கொண்டிருப்போமானால், தேவன் நம்முடைய ஜெபங்களைக் கேட்க தொலைபேசியை எடுக்க கூட மாட்டார்.

91ம் சங்கீதம் "உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவனுடைய" ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் பறைசாற்றுகிறது. நமக்கு அந்த மறைவிடம் இயேசுவின் காயமடைந்த பக்கமாகும். "சர்வ வல்லவரின் நிழலில்" தங்குவது என்பது தேவன் நமக்கு முன் செல்கிறார் என்பதையும் நாம் அவருடைய நிழலில் நடந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் குறிக்கிறது. (வசனம் 1). முழு உலகிலும் பாதுகாப்பான இடம் தேவனின் பரிபூரண சித்தத்தின் மையத்தில் இருப்பதாகும். சாத்தான் (வேடன்), பாவம் (கொள்ளை நோய்) ஆகிய நம்முடைய இரு எதிரிகளிடமிருந்தும் நம்மை தப்புவிப்பதாகத் தேவன் வாக்களித்திருக்கிறார் (வசனம் 3). அவர் நம்மை வெளிப்படையான பாவங்களிலிருந்தும் (பகலின் ஆபத்துகளிலிருந்தும்) தந்திரமாய் நம்மை வஞ்சிக்கிற பாவங்களிலிருந்தும் (இரவின் ஆபத்துகளிலிருந்தும்) நம்மை இரட்சிப்பார் (வசனம் 5,6). நம்மைச் சுற்றியுள்ள 11,000 கிறிஸ்தவர்கள் வெற்றியுள்ள வாழ்க்கையை விசுவாசியாவிட்டாலும், அவர் நம்மைப் பாவத்தில் விழுவதிலிருந்து காப்பார் (வசனம் 7). நாம் பல துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம், ஆனால் அவை அனைத்திலும், எந்த தீமையும் நமக்கு ஒருபோதும் ஏற்படாது (வசனம் 10). அவருடைய சித்தத்திற்குள்ளாக நாம் இருக்கும் வரை, நம்மைக் காத்துக்கொள்ள அவர் தேவதூதர்களை நியமித்துள்ளார். சாத்தான்(சிங்கமும் பாம்பும்) எப்போதும் நம் காலின்கீழே நசுக்கப்படும் (வசனம் 13). தேவன் நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளித்து நம்மை உயர்த்தி, நமக்கு நியமிக்கப்பட்ட பணியை முடிக்கும் வரை நாம் ஜீவனோடிருக்கும் படி நீடித்த நாட்களைக் கொடுப்பார் (வசனம் 15,16).