WFTW Body: 

திருமணத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவை, “கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உள்ள உறவாக” வேதாகமம் உருவகப்படுத்தி கூறுகிறது (எபேசியர் 5:22,23).

இந்த எபேசு நிருபத்தில், மனைவியர்கள் தங்கள் சொந்த புருஷர்களுக்கு கீழ்படிய வேண்டுமென புத்தி சொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏனென்றால், புருஷனானவன் தன் மனைவிக்கு தலையாய் இருக்கும்படியே தேவனால் நியமிக்கப்பட்டுள்ளான், எனவும் கூறுகிறது. அதுபோலவே மனைவியானவள் தங்கள் புருஷர்களுக்கு “எல்லாவற்றிலும்” கீழ்ப்படிய வேண்டும் எனக்கூறிவிட்டு, “சபை கிறிஸ்துவுக்கு கீழ்ப்பட்டிருக்கிறது போல” என மேற்கோள்காட்டி கூறுவதைப் பாருங்கள். இன்று, தங்கள் சொந்த புருஷர்களுக்கு இத்தனை சீரான கீழ்ப்படிதல் நம் நாட்களில் வாழும் பெண்களுக்கு சாத்தியமாய் தோன்றுவதில்லை! ஆனால், இவைகளை தேவனே கட்டளையிட்டுள்ளார் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். ஒரு நல்ல குடும்பத்திற்கு தேவன் நிலைநிறுத்திய இந்த கட்டளைக்கு எந்த வீடு இணங்க மறுக்கிறதோ, அங்கு கண்டிப்பாக தீய விளைவுகள் ஏதாகிலும் ஒரு ரூபத்தில் வந்து சேரும்! ஆகவே ஒரு விசுவாசியான கிறிஸ்தவ பெண், திருமண வாழ்விற்கு தேவன் நியமித்த கட்டளைகளுக்கு கீழ்ப்படிய மனதில்லாதவளாயிருந்தால், அது போன்றவர்கள் திருமணம் செய்யவே கூடாது! இவள், திருமணம் செய்து விட்டு தேவனுடைய கட்டளைக்கு தொடர்ச்சியான கீழ்ப்படியாமைக்குள் வாழ்வதைவிட, திருமணம் செய்யாதிருப்பதே இவளுக்கு நலம்!

மனைவியின் கீழ்ப்படிதலை வைத்து, ஒரு புருஷனானவன், தன் மனைவியிடம் என்ன வேண்டுமானாலும் கூறி அவளை கீழ்ப்படிய வைப்பதற்கு, தனக்கு தேவன் “லைசன்ஸ்(License)” கொடுத்து விட்டதாக எண்ணாதிருக்கக்கடவன்! ஏனெனில், இந்த வசனம் தொடர்ந்து கூறுகையில் “கிறிஸ்து சபையை நேசித்து, அதற்காகத் தம்மையே ஒப்புக் கொடுத்தது போல” கணவனும் தன் மனைவியை நேசிக்க வேண்டும் என புத்திகூறுகிறது. இந்த வசனம் தெளிவாக கூறும் செய்தி என்னவெனில், கணவன் சுயநலமற்ற தியாக அன்பையே தன் மனைவியிடம் காட்ட வேண்டும் எனவும், பொருட்களை வாங்கித் தந்தல்ல, மாறாக, தன் மனைவியரின் நலனுக்கென “தங்களையே தந்து” ஒப்புக்கொடுக்க வேண்டும் என போதிக்கிறது! கிறிஸ்து, சபையை மாறாத அன்பினால் நேசிப்பது போல் கணவனும் தன் மனைவியை மாறாத அன்பினால் நேசித்திட வேண்டும். பதிலுக்கு அவன் அன்புகூரப்படாவிட்டாலும், அவளை மாறாத அன்புடன் நேசிக்க வேண்டும்! கிறிஸ்துவின் அன்பை சற்று தியானித்துப் பாருங்கள். தன் சீஷர்களின் பாதங்களை கழுவுவதற்கும், அவர்களுக்காக மரிப்பதற்கும், கிறிஸ்துவின் அன்பு நடத்திச் சென்றது! மேலும் இதே அதிகாரத்தில், கணவன் தன் சொந்த சரீரத்தை நேசிப்பது போலவே தன் மனைவியையும் பாரமரித்து பாதுகாக்க வேண்டும் எனவும் வாசிக்கிறோம். இதுபோன்ற வேத வாக்கியங்களின் கட்டளைகளுக்கு ஒருவன் கீழ்ப்படிந்து நடக்க மனதில்லையென்றால், அதுபோன்றவன் திருமணம் செய்யாதிருப்பதே அவனுக்கு நலம்!

நாம் எபேசிய நிருபத்தில் கண்ட சத்தியங்கள் அனைத்தும் “ஒவ்வொரு கிறிஸ்தவ கணவனும் மனைவியும், கிறிஸ்துவையும் அவரது சபையையும் கிறிஸ்தவ கணவனும் மனைவியும், கிறிஸ்துவையும் அவரது சபையையும் காட்டும் விதமாய் பிரதிபலித்திட வேண்டும்" என்ற அவரது நோக்கத்தையே நமக்கு வெளிப்படுத்துகிறது. தம்பதியரின் இசைவான குடும்ப வாழ்க்கை “மேற்கண்ட தெய்வீக உறவின் வசீகரத்தையே” வெளிப்படுத்துவதாய் இருக்க வேண்டும்.

எபேசியர் 5:18-ம் வசனத்தில், நாம் பரிசுத்தாவியினால் நிறைந்திருக்க வேண்டுமென்ற கட்டளை தரப்பட்டிருக்கிறது. இந்த வசனத்தை தொடர்ந்துதான், கணவன்-மனைவி உறவைக் குறித்து வாசிக்கிறோம். இதில் நாம் விளங்கி கொள்வது என்னவென்றால், “நம் குடும்பத்தில் கிறிஸ்துவைப் போன்ற சுபாவ பழக்கங்களை” நாம் பெற்றுக் கொள்ளும் பொருட்டே ஆவியானவரின் நிறைவு நமக்கு வழங்கப்படுகிறது. மேலும் நம் திருமண வாழ்வில், தேவனை மகிமைப்படுத்தி வாழவே, நாம் ஆவியினால் நிரப்பப்பட வேண்டியது அவசியமாகும்!

தனக்கு ஒரு வாழ்க்கைத் துணையை தேடுவதற்கு முன்பாக, ஒவ்வொரு கிறிஸ்தவனும் “மேலே குறிப்பிடப்பட்டது போன்ற ஒரு நல்ல குடும்பத்தைக் கட்ட வேண்டும் என்ற விருப்பம் தனக்குள் இருக்கிறதா?” என்ற கேள்வியை தனக்குள் கேட்டுப் பார்க்க வேண்டும். இதுபோன்ற வாஞ்சைகூட இல்லாத ஒருவன், தன் திருமணத்திற்கு தேவனுடைய வழிநடத்துதலை எங்ஙனம் எதிர்பார்த்திட முடியும்? மாறாக, உங்கள் திருமண வாழ்வின் நோக்கம்: மெய்யாகவே வேத வாக்கியங்களின்படி இருக்குமென்றால், உங்களைக் குறித்த தேவனுடைய பரிபூரண சித்தத்திற்குள் அவர் நடத்துவது மாத்திரமல்லாமல்... அதுபோன்ற ஒரு நல்ல இல்லம் கட்டப்படுவதற்கு தேவையான பெலனையும் அளிப்பார்!