WFTW Body: 

உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே. வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்" (நீதிமொழிகள் 6:25-26).

இது முழு வேதாகமத்திலும் மத்தேயு 5:28-க்கு மிகவும் பொருத்தமான வசனமாகும். "ஒரு ஸ்திரீயை உன் இருதயத்தில் இச்சியாதே" என்று மத்தேயு 5:28 கூறுகிறது. இந்த வசனத்திற்கு நீதிமொழிகள் 6:25-ஐ விட மிகவும் அதிகமாகப் பொருந்துகிற வேறொரு வசனம் முழு வேதாகமத்திலும் இல்லை. இது புதிய உடன்படிக்கைக்கு முன்னோடியான நிழலாக இருக்கிறது. விபசாரம் இருதயத்திலே தான் ஆரம்பிக்கிறது என்று ஞானமானது எச்சரிக்கிறது. அது எதிர் பாலினத்தவரின் அழகை வெறுமனே ரசிப்பதிலிருந்தே தொடங்குகிறது. அழகை ரசிப்பதில் தவறொன்றும் இல்லை என்று சில கிறிஸ்தவர்கள் போதிக்கிறபடியால் இதை நான் வலியுறுத்திக் கூறுகிறேன். அவர்கள் அப்படிக் கூறுவதற்குக் காரணம், அவர்கள் இருதயத்தில் தேவபயம் இல்லாதிருப்பதுதான். “உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே” என்று தேவனுடைய வார்த்தை தெளிவாகக் கூறுகிறது.

உங்களுக்கு சரீர அழகைப் பற்றிய ஒரு தவறான புரிதல் இருக்கிறதா? சரீர அழகு என்பது வெற்றும் வீணுமான ஒன்று என்று நீதிமொழிகள் 31:30 கூறுகிறது. வாலிபர்களே, இதை உங்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்: சரீர அழகு வெற்றும் வீணும் பயனற்றதுமான ஒன்று என்பதை உங்கள் மனதில் எப்பொழுதும் வைத்துக்கொள்ளாவிட்டால், ஒருநாள் அதன் மூலம் வஞ்சிக்கப்படுவீர்கள். தவறான நபரைத் திருமணம் செய்துகொண்டு, மீதமுள்ள உங்கள் வாழ்நாளெல்லாம் அதனால் வேதனைப்படுவீர்கள். “நான் இச்சிக்கவில்லை, அழகை மட்டும் ரசிக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டு கண்களைத் திருப்பிப் பார்க்காதீர்கள். அது ஒரு மிக மோசமான வஞ்சனை, தேவன் அதைப் பார்க்கிறார்! அப்படிப்பட்ட அநேகரை ஊழியத்திற்கு தேவன் அழைத்திருக்கக் கூடும். ஆனால் அவர் அவர்களை ஓரமாக வைத்துவிட்டு, “நீ அந்த ஊழியத்தைப் பெற முடியாது. நான் ஊழியத்தை உனக்குத் தரமுடியும், ஆனால் நீ உன் கண்களை வைத்து விளையாடினாய்; விசுவாசி என்று சொல்லிக்கொண்டாய், புதிதும் ஜீவனுமான மார்க்கத்தைப் பற்றிப் பேசினாய், ஆனால் இந்த விஷயத்தில் முழு இருதயத்தோடு இல்லாதிருந்தாய்!" என்று கூறுகிறார். ‘உன் இருதயத்திலே கூட அவள் அழகை இச்சியாதே!’ இது விபசாரத்தைப் பற்றி பேசவில்லை. ஒரு ஸ்திரீயின் சரீர அழகை ரசிப்பதைப் பற்றியே இது பேசுகிறது! அதை ரசிக்காதே என்று கூறுகிறது. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால் அதுவே ஞானம். எச்சரிக்கையாயிருங்கள்.

அது தொடர்ந்து கூறுகிறது: “அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.” தேவனுடைய வார்த்தை மிகவும் நடைமுறைப் பூர்வமானது. ஒரு வாலிபனைக் கவர்ந்து பிடித்துக்கொள்ளக் கூடிய ஏதோ ஒன்று ஒரு ஸ்திரீயின் கண்களில் இருக்கிறது என்று இங்கே கூறுகிறது. அதனால்தான் இன்றைய நாட்களில் பெண் பிள்ளைகள் தங்கள் கண்ணிமைகளை இன்னும் கவர்ச்சியாகக் காட்டும்படி ஆடம்பரமான வர்ணங்களைத் தடவிக்கொள்ள பிசாசு கற்றுக்கொடுத்திருக்கிறான். ஒருவேளை நீங்கள் உங்கள் சபையில் நல்ல சாட்சி வேண்டும் என்று விரும்பி, மிருகத்தின் முத்திரையை வெளிப்படையாக அல்லாமல் இரகசியமாக கையில் தரித்துக்கொள்ள விரும்புபவர்களில் ஒருவராக இருந்தால், கண்களிலும் உதடுகளிலும் எங்கும் தடவிக்கொள்வதற்கு ஏற்ற நிறமில்லாத மை வகைகளும் இருக்கும் என்று நினைக்கிறேன், அவற்றைப் பூசிக்கொண்டு உங்களைக் கவர்ச்சியாகக் காட்டிக்கொள்ள முடியும். "அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே" என்று இங்கே கூறுகிறது.

2இராஜாக்கள் 9:30-இல் உள்ள ஒரு வசனத்தை உங்களுக்கு காட்ட விரும்புகிறேன். அது மை பூசிய முகத்தைக் (கண்களைக்) கொண்ட ஒரு பெண்ணப் பற்றிப் பேசுகிறது. அது யேசபேல். வெளிப்படுத்தின விசேஷம் 2-இலும் அவளைப் பற்றி வாசிக்கிறோம். தியத்தீராவிலுள்ள சபையில் ஒரு யேசபேல் அமர்ந்திருக்கிறாள். 2இராஜாக்கள் 9 இவ்வாறு கூறுகிறது: "யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்து..." (2இராஜாக்கள் 9:30). கிறிஸ்துவுக்கு பல நூறு வருஷங்களுக்கு முன்பே மஸ்காரா பயன்பாட்டில் இருந்தது என்று உங்களுக்கு தெரியுமா? இது 20-ஆம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பு அல்ல. அந்தத் தயாரிப்பை ஆரம்பித்தவள் யேசபேல்தான். அவள் தன் கண்களுக்கு மையிட்டு, தலையை சிங்காரித்துக்கொண்டாள். மீதமுள்ள முகத்திற்கும் சாயம் பூசியிருப்பாள் என்று நான் நம்புகிறேன். அவள் ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்தாள். 33ம் வசனத்தில் யெகூ: "அவளைக் கீழே தள்ளிவிடுங்கள்!" என்றான். அவர்கள் அவளைத் தள்ளிவிட்டு கொன்றுபோட்டார்கள். சாயம் பூசிய முகம் அவனைக் கவரவில்லை, அது உங்களையும் கவரக்கூடாது. யெகூ தேவபயமுள்ளவன் கூட அல்ல, ஆயினும் அவளுடைய கவர்ச்சியையெல்லாம் எதிர்த்து நிற்க அவனால் முடிந்தது. சாயம் பூசிய முகங்களைப் பற்றியும் குறிப்பாக கண்ணிமைகளைப் பற்றியும் எச்சரிக்கையாயிருங்கள்.

சாலொமோன் எச்சரிப்பதைப் போலவே, குறிப்பாக எதிர் பாலினத்தாரோடுள்ள உறவில் கவனமாயிருக்கும்படி வாலிபர்களை எச்சரிப்பதில் நான் ஒருபோதும் சலிப்படைவதில்லை. தேவனுடைய வார்த்தைக்கு நடுங்கி அதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டால், உங்கள் வாழ்க்கையை அழித்து நாசமாக்கும் சாத்தானின் கருவியாக இருக்கக்கூடிய அந்த ஸ்திரீயிடமிருந்து அது உங்களை காத்துக்கொள்ளும்! உங்கள் வாழ்க்கையை அழிப்பதில் அவன் வெற்றி பெறாவிட்டாலும், ஒரு தேவனுடைய மனிதனாக அவருக்கு ஆவிக்குரிய விதத்தில் பயன்படுவதை மட்டுமாவது அழிக்க முயற்சிப்பான்! இரட்சிக்கப்பட்டவர்களாயிருந்தும் ஸ்திரீகளிடத்தில் விளையாட்டுத்தனமாக வாழ்ந்து, தேவன் தர விரும்பியிருந்த முழு ஊழியத்தையுமே இழந்துவிட்டவர்கள் இருக்கிறார்கள்! இதை நாம் ஜாக்கிரதையாக எடுத்துக்கொள்ளவேண்டும். “என் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன” என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்வது போதாது. நித்தியத்தில் நிற்கும்போது, தேவன் உங்களுக்காக ஒரு ஊழியத்தை வைத்திருந்தார் என்றும், எதிர் பாலினத்தாரோடுள்ள உறவில் கவனமாயிராது போனதால் அதை இழந்துவிட்டீர்கள் என்றும் கண்டுபிடிப்பதை எண்ணிப் பாருங்கள். நித்தியத்தில் நின்று, ஏதோ ஒரு அற்பமான பெண்ணோடு சிறிய அற்பமான சுகத்திற்காக, நித்தியம் முழுவதையும் மகிமையுள்ளதாக்கியிருக்கக்கூடிய ஒரு ஊழியத்தை இழந்துவிட்டீர்கள் என்று கண்டுபிடிப்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்த பூமியில் அவ்வளவு மூடனாயிருந்ததால் அதை இழந்துவிட்டீர்கள். அந்த நாளில் ஏராளமானோருடைய இருதயங்களில் எவ்வளவு பெரிய வருத்தம் இருக்கும் என்பதை சிந்தியுங்கள்.

குறிப்பாக நீங்கள் இளமையாயிருக்கும்போது, எச்சரிக்கையாயிருங்கள்.