WFTW Body: 

இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படியாக கிதியோனை தேவன் எழுப்பினார் என்று நியாயாதிபதிகள் 6-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். "கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்" (நியாயாதிபதிகள் 6:34). பரிசுத்த ஆவியானவர் கிதியோன் அணிந்திருந்த ஆடைகளைப் போல அவன் மேல் வந்தார். பின்னர் கிதியோன் பெலனடைந்து அதிகாரம் பெற்றவனாய் எக்காளம் ஊதி போருக்குச் சென்றான், கர்த்தர் அவனுக்கு வெற்றியைக் அருளினார். ஆனால் கிதியோனோ கர்த்தருக்கு உண்மையுள்ளவனாய் நிலைத்திருக்கவில்லை. பழைய உடன்படிக்கையின் கீழ் மற்றும் இன்றும், நன்றாய் ஆரம்பித்த பலரின் வருந்தத்தக்கக் கதை இதுவே. கிதியோன் தங்களை ஆள வேண்டும் என்று இஸ்ரவேலர் விரும்பினர், அவனோ, “இல்லை, நான் உங்களை ஆளமாட்டேன், என் குமாரனும் உங்களை ஆளமாட்டான். கர்த்தரே உங்களை ஆளுவாராக”(நியாயாதிபதிகள் 8:22, 23) என்றான். அது மிகவும் ஆவிக்குரியகாரியம்போல் தெரிகிறது. ஆனால் அவன் தனது அடுத்த வாக்கியத்தில் சொன்னதைக் கேளுங்கள், “தயவுசெய்து நீங்கள் அனைவரும் உங்கள் கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்” என்றான் (நியாயாதிபதிகள் 8:24). எனவே இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்களுடைய கடுக்கன்களைக் கொடுத்தார்கள், கிதியோன் 1700 சேக்கல்கள் (சுமார் 20 கிலோகிராம்) தங்கத்தையும், வேறு பல ஆபரணங்களையும், விலையுயர்ந்த ஆடைகளையும் சேகரித்தான் (நியாயாதிபதிகள் 8:26). கிதியோன் ஒரே நாளில் கோடீஸ்வரனானான் - பல போதகர்கள் தங்கள் மந்தையிலிருந்து தசமபாகங்களையும் காணிக்கைகளையும் சேகரித்து அனைத்தையும் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று கோடீஸ்வரர்களாக மாறுகிறார்கள்!. இஸ்ரவேலர் வணங்கிய விக்கிரகமாக மாறிய ஒரு ஏபோத்தை தயாரிக்க கிதியோன் அந்த தங்கத்தில் சிலவற்றைப் பயன்படுத்தினான் (நியாயாதிபதிகள் 8:27). அவ்வாறு, இந்த பெரிய மனிதன் பின்மாற்றமடைந்தான். ஒரு மனிதன் தனது வாழ்க்கையை முடிக்கும் விதம் தான் முக்கியமானது, அதைத் தொடங்கும் விதம் அல்ல. ஒவ்வொரு பந்தயத்திலும் நன்றாக ஓடி முடித்தவர்களுக்கே பரிசு கொடுப்பார்கள், நன்றாக ஆரம்பித்தவர்களுக்கு அல்ல (1கொரிந்தியர் 9:24). "தங்கள் வாழ்க்கையை எவ்வாறு முடித்தார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள" நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம் (எபிரெயர் 13:7). தனது ஆரம்ப நாட்களில் தேவனால் பெரிதும் பயன்படுத்தப்பட்ட பல போதகர்கள், கிதியோனைப் போலவே பின்மாற்றமடைந்து, பணம் மற்றும் சொத்துக்களுக்குப் பின் சென்று தங்களது வாழ்க்கையை முடித்தனர்! அபிஷேகம் இழந்து, அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக தங்கம் மற்றும் கடுக்கன்களை சேகரிக்க தங்கள் கடைசி நாட்களைக் கழிக்கிறார்கள்! நன்றாக ஆரம்பித்த உங்களுக்கு நான் சொல்கிறேன்: கிதியோனிடமிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் உங்களுக்கும் இது நிகழும். நீங்கள் தேவனுக்கும் பணத்திற்கும் ஊழியஞ்செய்ய முடியாது.

நியாயாதிபதிகள் 13-ல், சிம்சோன் ஒரு வலிமைமிக்க இரட்சகன் என்பதைக் காண்கிறோம், ஆனால் அவன் தனது சொந்த இச்சைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் அடிமையாக இருந்தான். 1கொரிந்தியர் 9:27-ல், “நான் என் உடலை ஒடுக்கி கீழ்ப்படித்திக்கொள்ளாவிட்டால், மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கிற நானே ஆகாதவனாய்ப் போக முடியும்” என்று பவுல் கூறுகிறார். வேறொரு மொழிபெயர்ப்பில்(Living Bible) அந்த வசனம், “என் உடல் என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்யவைக்க வேண்டும், அது விரும்புகிறதை அல்ல” என்று இருக்கிறது. அதாவது, நம் உடல் என்ன சாப்பிட வேண்டுமோ அதையே உண்ண வேண்டும், அது சாப்பிட விரும்புவதை அல்ல; தூங்க வேண்டிய அளவுக்கே தூங்க வேண்டும், அதன் விருப்பத்திற்கேற்ப அல்ல. எதைப் பார்க்க வேண்டுமோ அதை மட்டுமே பார்க்கவும், அவை பார்க்க விரும்புகிறவற்றை பார்க்காமலும், நம் கண்களை நாம் கட்டுப்படுத்த வேண்டும். எதைப் பேச வேண்டுமோ அதை மட்டுமே பேசவும், அவை பேச விரும்புகிறவற்றை பேசாமலும், நம் நாவை நாம் கட்டுப்படுத்த வேண்டும். நாம் அற்புதமான செய்திகளைப் பிரசங்கிக்கலாம், ஆனால் நம்முடைய சரீரப்பிரகாரமான இச்சைகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், இறுதி நாளில் கர்த்தரால் வெளியேற்றப்படுவோம். நம்முடைய சரீரப்பிரகாரமான இச்சைகளை நாம் ஒழுங்குப்படுத்துவதைப் பொறுத்ததே அநேக காரியங்கள் உள்ளது. அநேகம் பேர்களை ஆசீர்வதிக்கும் அருமையான ஊழியத்தைக்கொண்ட சிம்சோனின் கதையிலிருந்து நமக்குக் கிடைக்கும் செய்தியே அது. ஆனால் கடைசியில் அவனே தகுதியற்றவனானான். பல பெரிய போதகர்கள் அழகான பெண்களுக்கு இரையாகிபோனார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்யும் வரங்களின் கிரியைகளினாலும், பரந்து விரிந்த அவர்களின் அமைப்புக்களினாலும் ஈர்க்கப்பட வேண்டாம்!! ஒரு சாதாரண விசுவாசி ஓர் பாவத்தில் விழுவதை பார்க்கிலும் ஒரு தலைவன் அதே பாவத்தில் விழுவது மிகவும் தீவிரமான விஷயம். யாருக்கு அதிகமாக கொடுக்கப்பட்டதோ, அவர்களிடமிருந்தே அதிகமாய் எதிர்பார்க்கவும்படுகிறது. எதிர் பாலினத்துடனான உங்கள் உறவில் நீங்கள் உண்மையுள்ளவராக இல்லாமல், ஒரு மூப்பராகவோ அல்லது தலைவராகவோ இருக்க முயற்சிப்பதன் மூலம் தேவனின் நாமத்தை அவமதிக்க வேண்டாம். பாவத்திலே தரித்திருக்கும்போது, நீங்கள் பரிசுத்தமான தேவமனிதன் என்று காட்டி ஜனங்களை முட்டாளாக்க வேண்டாம். நீங்கள் தொடர்ந்து அப்படி வாழ்ந்தால், தேவன் ஒரு நாள் உங்களை வெளியரங்கப்படுத்துவர். உங்கள் பாவத்தை புத்திசாலித்தனமாய் மறைக்க முடியும் என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் நீங்கள் தேவனுக்கு முன்பாக போதுமான புத்திசாலி அல்ல. இதுவரை நீங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டதைவிட அதிகமாக அவர் உங்களை பகிரங்கப்படுத்துவார்.

நியாயாதிபதிகள் 16-ல், சிம்சோன் எவ்வாறு தன் வல்லமையை இழந்தான் மற்றும் அவனது கண்கள் எவ்வாறு குருடாக்கப்பட்டன என்பதைப் படிக்கிறோம். போதகர்கள் பெண்களைப் பின்தொடரும்போதும், இதுதான் நடக்கும்: அவர்கள் தங்கள் ஆவிக்குரிய தரிசனத்தை இழக்கிறார்கள். அவர்களால் இனி தெளிவாக பார்க்க இயலாது. அவர்கள் இன்னும் தங்கள் உபதேசங்களில் சுவிசேஷர்களாயும், சரளமாய் பிரசங்கிக்கவும் கூடும். ஆனால் அவர்களின் ஆவிக்குரிய தரிசனம் போயிருக்கும். சிம்சோன் அடிமையானான். ஆனால், அவன் தனது வாழ்க்கையின் முடிவில் தான் செய்த பாவத்தை ஒப்புக்கொள்ளும் அளவுக்கு உணர்வுள்ளவனாயிருந்தபடியால் தேவனுக்கு ஸ்தோத்திரம். அவன் மனந்திரும்பி கடைசியில் பல பெலிஸ்தர்களை அவனது மரணத்தில் அழித்தான் (நியாயாதிபதிகள் 16: 23-31). நியாயாதிபதிகள் 13-16-ல் உள்ள சிம்சோனின் கதை, இரண்டு சிங்கங்களின் கதையாகும் - ஒன்று அவனது வெளிப்புறத்தில், மற்றொன்று அவனது இதயத்தின் உள்புறத்தில். அவனால் வெளிப்புற சிங்கத்தை வெல்ல முடிந்தது, ஆனால் உள்ளிருக்கும் சிங்கத்தை வெல்ல முடியவில்லை. எந்தவொரு வெளிப்புற சிங்கத்தையும் விட பாலியல் இச்சையின் சிங்கம் மிகவும் வலிமையானது, மேலும் அதிகம் பயப்பட வேண்டியது என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது. ஒரு காட்டில் ஒரு சிங்கம் உங்களை நோக்கி ஓடிவருவதைக் கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் திரும்பி ஓடுவீர்கள். இச்சை எனும் சிங்கம் உங்களிடம் வருவதைக் காணும்போது நீங்கள் அவ்வாறு செய்கிறீர்களா? "வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்" என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது (1கொரிந்தியர் 6:18). அதை மேற்கொள்ள இதுதான் ஒரே வழி - இதுபோன்ற சோதனையின் அருகே செல்ல வேண்டாம். உங்களை சோதிக்கும் ஒரு பெண்ணின் அருகில் செல்ல வேண்டாம். பசியிலிருக்கும் சிங்கங்களைத் தவிர்ப்பதைப்போல மயக்கிப்பேசும் பெண்களையும் தவிருங்கள். சிம்சோன் பழைய உடன்படிக்கையின் கீழ் வாழ்ந்தான். ஆகவே, இன்று ஒழுக்கக்கேட்டில் விழுந்ததற்கு சிம்சோனின் உதாரணத்தை காட்டி சாக்குப்போக்கு சொல்ல முடியாது. சிம்சோனுக்கு புதிய ஏற்பாடு கிடையாது, அவன் கல்வாரி சிலுவைக்கு முன்பே வாழ்ந்தான், நமக்கு இன்று இயேசுவில் இருப்பதைப் போல அவனுக்கு எந்த உதாரணமும் இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் பெற்றிருக்கும் வண்ணமாக பரிசுத்த ஆவியானவரை உள்வசிக்கும் உதவியாளராக அவன் பெற முடியவில்லை. பிதாவோடு ஐக்கியப்பட மகா பரிசுத்த ஸ்தலத்திற்கான வழி அந்நாட்களில் திறக்கப்படவுமில்லை. தெய்வபக்தியான ஐக்கியத்தின் ஆசீர்வாதத்தையும் சிம்சோன் பெற்றிருக்கவில்லை. இவை அனைத்தையும் இன்று நாம் பெற்றுருக்கிறோம். எனவே பாவத்தில் வாழ்வதற்கு நமக்கு எந்தவிதமான சாக்குப்போக்கும் சொல்வதற்கு இல்லை.