WFTW Body: 

"எங்கள் ஐக்கியம் பிதாவோடு இருக்கிறது'' என 1யோவான் 1:3-ல் அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார். ஆம், மெய்யான ஐக்கியம், சிலுவையிலுள்ள இரண்டு குறுக்கு மரங்களைப் போலவே, இரு திசை கொண்டதாகும். சிலுவையின் மூலமாகவே நாம் தேவனோடும், ஒருவரோடொருவரும் ஐக்கியப்படுகிறோம். கிறிஸ்துவுக்கும் நமக்கும் நடுவேதான் சிலுவை இருக்கிறது, அந்த சிலுவையில்தான் இயேசு மரித்தார். இவ்வாறாகவே, நம்முடைய ஆண்டவரோடு நாம் ஐக்கியம் பெற்றிருக்கிறோம். அவ்வாறு சிலுவை இல்லாமல், வேறு எந்த விதத்திலும் நாம் தேவனோடு ஐக்கியம் கொள்ள முடியாது! ஏனெனில் நமக்குள், நாமாக நல்லவர்களாய் மாறிட முடியாது. அவ்வாறாகவே நமக்கும் விசுவாசிகளுக்கும் இடையில் சிலுவை இருக்க வேண்டும். அந்த சிலுவையில் நாம் ஒவ்வொருவரும் நம் சுயத்திற்காக மரிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஐக்கியம் விரும்புகிறவர்கள் இதைத்தான் செய்ய வேண்டும்! 'சிலுவையில் ஏற்படும் இந்த மரணம் இல்லாமல்' செங்குத்தான உன்னத திசையிலும், குறுக்கு வசமான ஒருவருக்கொருவர் திசையிலும் ஐக்கியம் ஏற்படுவது கூடாத காரியமாகும்! ஆகவே, "சிலுவையே'' ஜீவனுக்கும் ஐக்கியத்திற்குமுரிய இரகசியமாகும். சிலுவை இல்லாமல் 'ஜீவன்' இல்லை! அதுபோலவே, சிலுவை இல்லாமல் 'ஐக்கியமும்' இல்லை! நித்திய காலத்திற்கு முன்பே 'சிலுவை' தேவனுடைய மனதில் பதிந்திருந்தது. உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என வாசிக்கிறோம் (வெளி 13:8). தேவன் ஆரம்ப துவக்கமிருந்தே முடிவுவரை அறிந்திருக்கிறார். ஆகவே, திரித்துவமானவர், நித்திய காலம் முதலாய், திரித்துவத்தின் இரண்டாவது ஆள்த்துவம் கொண்டவர், இந்த பூமிக்கு ஓர் மனிதனாய் வந்து, மனுஷருடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்படுவார் என்பதை அறிந்து வைத்திருந்தார்! அது, ஆதாம் பாவம் செய்த பிறகு தேவன் எடுத்த தீர்மானம் அல்ல, அது நித்தியமாய் முன்னறியப்பட்டிருந்தது! ஆதாம் பாவம் செய்தபோது, ஜீவ விருட்சத்திற்கு முன்பாக ஓர் பட்டயத்தை வைத்தார். அந்த பட்டயம், இயேசுவின் மீது விழுந்து அவரை வெட்டியது. இப்போது அந்த பட்டயம், நம் ஆதாமின் ஜீவன் மீதும் விழ வேண்டும். இவ்வாறாக, நம்முடைய நிலையை “கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்பட்ட நிலையாக” நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் (கலாத்தியர் 2:20). நாம் ஜீவ விருட்சத்தில் பங்கடைந்து தேவனோடும், ஒருவரோடொருவரும் ஐக்கியம் கொண்டிருக்க இந்த நிலைக்கே நாம் வந்திருக்க வேண்டும்!

யோவான் கூறும்போது, ஐக்கியமே 'சந்தோஷத்தின் நிறைவாய்' முற்றுப் பெறும் எனக் கூறினார் (1யோவான் 1:4). கிறிஸ்தவ ஜீவியத்தில் சந்தோஷம்' மிகப்பெரிய பங்காய் இருக்கிறது. ஏனெனில் 'சந்தோஷமே பரலோகத்தின் சுவாச மண்டலம்! பரலோகத்தில் யாதொரு சோகமும் இருப்பதில்லை. அங்குள்ள தூதர்கள் ஒருபோதும் அதைரியம் அடைந்ததில்லை. அவர்கள் அனைவரும் ஜீவனின் நிறைவும்! சந்தோஷத்தின் நிறைவும்! கொண்டிருக்கிறார்கள். நாம் தேவனோடு ஐக்கியம் கொண்டிருந்தால் 'அதே சந்தோஷத்தை' நாமும் பெற்றுக்கொள்ள முடியும். பரலோக சூழலை, நம் இருதயங்களில் வைத்திடவே பரிசுத்தாவியானவர் வந்தார். 'நிறைவான சந்தோஷம்' அந்த பரலோக சூழலில் ஒரு பங்காகும்! உங்கள் முழுஜீவியத்தையும் தேவனுக்கு கொடுத்து விட்டால், நீங்கள் துயரமும், கவலையும், மனச்சோர்வும், நீண்ட முகமும் கொண்டவர்களாய் மாறி விடுவீர்கள் என, சாத்தான் உங்களிடம் கூறுவான். அவன் கூறியவைகள், துரதிருஷ்டவசமாய் சில கிறிஸ்தவர்களிடம் உண்மையாகவே இருக்கிறது. ஏனெனில், அவர்கள் தங்கள் தோற்றத்தில் இவ்வாறாகவே சோர்வடைந்த கிறிஸ்தவர்களாய் காட்டிக் கொள்கிறார்கள். ஒரு நீண்ட சோகமான கிறிஸ்தவன், யாரோ சிலரைப் பார்த்து "நீங்கள் இந்த கிறிஸ்துவை உங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொள்ள விருப்பம் உண்டா?" எனக் கேட்டார். அந்த நபர், அந்த கிறிஸ்தவனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்து விட்டு "இல்லை! என் வாழ்க்கையில் ஏற்கெனவே அநேக பிரச்சனைகள் உண்டு!" எனக் கூறி, சென்று விட்டார். ஆச்சரியம் மிகுந்த நம் ஆண்டவருக்கு, மகிழ்ச்சியற்ற ஒரு சாட்சி வேதனைக்குரியதேயாகும். உங்கள் ஜீவியமும் உங்கள் இல்லமும் "கர்த்தருக்குள் சந்தோஷத்தை" பிரகாசிக்கவில்லையென்றால், உங்கள் ஜீவியத்தில் ஏதோ தவறு ஏற்பட்டுள்ளது என்றே அர்த்தமாகும். உங்கள் ஜீவியத்தின் எங்கோ ஓரிடத்தில் " தேவனுடைய சித்தத்தை தொலைத்து விட்டீர்கள்!

யோவான் தொடர்ந்து கூறுகையில் இந்த ஜீவனையும், ஐக்கியத்தையும், சந்தோஷத்தையும் நீங்கள் விரும்பினால், நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முதலாவது காரியம் என்னவென்றால் "தேவன் ஒளியாயிருக்கிறார் என்றும், அவருக்குள் இருள் சிறிதேனும் இல்லை என்றும் " நீங்கள் அறிய வேண்டும் (1யோவான் 1:5). அதாவது, பொய் சொல்லுவதற்கு பூஜ்ஜியம், அசுத்த வாழ்க்கைக்கு பூஜ்ஜியம், பகைக்கு பூஜ்ஜியம், பெருமைக்கு பூஜ்ஜியம் போன்றவைகளேயாகும்! இவ்வாறு ஒருபோதும் பொய் சொல்லாத, ஒருவரையும் பகைக்காத, ஒருவர் மீதும் பொறாமைப்படாத, ஒருபோதும் பெருமை அடையாத, ஒரு ஒப்பற்ற ஜீவியத்தை நீங்கள் வாஞ்சிக்கிறீர்களா? இப்படிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் தெரிந்து கொண்டால் நீங்கள் ஒருபோதும் சோர்வாகவோ அல்லது அதைரியப்பட்டோ இருக்க மாட்டீர்கள்! நீங்களோ, கர்த்தருக்குள் இடைவிடாத சந்தோஷத்தையே அனுபவிப்பீர்கள். பாவத்தால் சபிக்கப்பட்ட இந்த பூமியில், இப்படி ஒரு ஜீவியம் செய்வது சாத்தியம்தானா? நிச்சயம் சாத்தியமே! "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்!" என்றே பிலிப்பியர் 4:4 நமக்கு கட்டளையிடுகிறது. இந்த கட்டளை, இங்கு பூமியிலுள்ள ஜனங்களுக்கு எழுதப்பட்டதே அல்லாமல், பரலோக வாசிகளுக்கு எழுதப்பட்டதல்ல! நீங்கள் யோவானைப் போல பத்மு தீவிலே உபத்திரவமடைந்தாலும் அல்லது உங்கள் வீட்டில் சுகமாய் அமர்ந்திருந்தாலும்.... உங்கள் சந்தோஷம் இந்த பூமியில் நிறைவாய் இருக்க முடியும். நீங்கள் தேவனுடைய ஒளியில் எப்போதும் நடந்து வர தீர்மானம் கொண்டிருந்தால், உங்கள் சந்தோஷம் ஒருபோதும் சூழ்நிலைகளை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

அப்படியில்லாமல், நாம் தேவனோடு ஐக்கியம் கொண்டிருப்பதாக கூறிக்கொண்டு, இருளிலே நடந்தால், நாம் சத்தியத்தைக் கையாளவில்லை என்பதே உண்மையாகும். இன்று அநேக கிறிஸ்தவர்கள், தாங்கள் தேவனோடு ஐக்கியம் கொண்டிருக்கிறோம் என கூறிக்கொண்டு, தொடர்ந்து பாவத்தில் நடக்கிறார்கள். நீங்கள் அவர்களுடைய முகத்தைப் பார்த்தாலே 'கர்த்தருக்குள்ளான சந்தோஷம்' அவருடைய முகத்தில் காண முடியாது. அவர்களுடைய நடையில் 'ஒரு துள்ளுதல்' இருப்பதில்லை! அவர்களின் உதடுகளில் பாடல் இருப்பதில்லை! அவர்களுடைய கண்களில் 'மின்னும் பிரகாசம்' இருப்பதில்லை! அவர்களோ, தேவனோடு கொண்டிருந்த ஐக்கியத்தின் சந்தோஷத்தைப் பெற்றிட தவறி விட்டார்கள். நாம் விசுவாசிகளாயிருந்து, வயது செல்லச் செல்ல, நாம் தேவனோடு நடப்பவர்களாயிருந்தால், நம் சந்தோஷமும் அதிகமாகிக் கொண்டே போகும்!