WFTW Body: 

லூக்கா 2:40,52 ல், இயேசு தனது குழந்தைப் பருவத்திலிருந்தே ஞானத்தில் வளர்ந்தார் என்று வாசிக்கிறோம். தனது இளமையினிமித்தம், வாலிபர்கள் புத்தியீனமான காரியங்களைச் செய்வார்கள் என்றாலும், இயேசு தனது இளமையில் ஒருபோதும் புத்தியீனமான எதையும் செய்யவில்லை. இயேசுவை நம்முடைய முன்மாதிரியாக வைப்போமெனில், நம்முடைய இளமை பருவத்தில் பல புத்தியீனமான செயல்களைச் செய்வதிலிருந்து நாம் இரட்சிக்கப்படுவோம். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். ஆவிக்குரிய மரணத்திலிருந்து இரட்சிக்கப்படும்படி இயேசு ஜெபித்தார் - மேலும் அவர் "தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டார்" (எபி 5:7- KJV). இயேசுவை நேசித்ததுபோலவே தேவன் நம்மையும் நேசிக்கிறார். ஆகவே, இயேசுவைப் போலவே நாமும் தேவனுக்கு பயப்படுவோமெனில் நம்முடைய ஜெபங்களும் கேட்கப்படும்.

ஆதியாகமம் 22:12 -ல், தனது ஏகசுதனை பலியிடத் தயாரானபோது "நீ தேவனுக்கு பயப்படுகிறவன் என்று இப்போழுது அறிந்திருக்கிறேன்" என்று தேவன் ஆபிரகாமைக்குறித்து நற்சாட்சிக் கொடுத்தார். அன்றையதினம் மலையுச்சியிலே ஆபிரகாம் அவனாகவே தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். ஆபிரகாம் தனியாக இருந்தபோது ஒரு இரவில் தேவன் அவனோடு பேசியிருந்தார் (ஆதி 22:1,2). தேவன் அவனிடம் பேசியிருந்ததை வேறு யாரும் அறியவில்லை. மேலும் தனிமையிலே ஆபிரகாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். தனிமையில் செய்யும் காரியங்களில்தான் (என்ன செய்கிறோம் என்பது வேறு யாருக்கும் தெரியாதபோது) நாம் தேவனுக்குப் பயப்படுகிறோமா அல்லது இல்லையா என்பதைக் கண்டுபிடிப்போம்.

யோபு தேவனுக்குப் பயந்தவன் என்று தேவன் சாத்தானிடம் நற்சாட்சிக் (யோபு 1:8) கொடுத்தார். தேவன் நம்மைப் பற்றியும் சாத்தானிடம் பெருமையாக கூறினால் நல்லது - ஏனெனில் சாத்தான் இன்றும் உலகம் முழுவதும் சுற்றித்திரிந்தும், நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் முழுமையாய் அறிந்திருக்கிறான். ஒரு பெண்ணை தன் கண்களால் ஒருபோதும் காமத்துடன் பார்ப்பதில்லை என்று யோபு உடன்படிக்கை செய்திருந்தான் (யோபு 31:1). நியாயப்பிரமாணம் வழங்கப்படுவதற்கு முன்பும், புதிய உடன்படிக்கை நிறுவப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பேயும் வாழ்ந்த ஒருவர், வேதாகமம் இல்லாமல், பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், ஊக்குவிக்கவோ அல்லது சவாலிடவோ மற்ற சகோதரர்கள் இல்லாத ஒருவர், அத்தகைய முடிவை எடுக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது! நியாயத்தீர்ப்பு நாளில் யோபு எழுந்து, இந்த தலைமுறையை அதன் காமத்திற்காகவும், அதன் பாவத்திற்காகவும் குற்றம் சாட்டுவான்.

ஒரு அந்நிய தேசத்தில் தேவனுக்கு உண்மையாக இருந்த 18 வயது இளைஞனான யோசேப்பை ஒரு உதாரணமாக எண்ணுங்கள். அவன் தேவபயம் என்ற ஆயுதத்தை ஏந்தியிருந்தான் - அதுவே அவனை சாத்தானின் கன்னியிலிருந்து பாதுகாத்தது. (a) தராதரங்கள் இல்லாத ஒழுக்கக்கேடான சமூகத்தின் மத்தியில் வாழ்ந்து வந்தாலும்; (b) நாளுக்கு நாள் ஒரு பெண்ணால் சோதிக்கப்பட்டாலும்; (c) நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்த பெற்றோர், அவன் இறந்துவிட்டதாக நினைத்தாலும்; (d) அவனை ஊக்குவிக்க அவனிடம் ஒரு வேதாகமமோ அல்லது தெய்வபக்திக்கேதுவான புத்தகமோ இல்லாமலும்; (e) பரிசுத்த ஆவியின் வல்லமையை அவன் பெறாமலும்; (f) ஐக்கியப்பட எந்த விசுவாசிகளும் இல்லாமலும்; (g) அவன் போக எந்த ஆவிக்குரிய கூட்டங்களும் அவனுக்கு இல்லை என்றாலும் கூட, ஒரு 18 வயது நிரம்பிய வாலிபன் தேவனுக்கு உண்மையாய் இருக்க முடியும் என்பதை யோசேப்பின் உதாரணம் நமக்குக் காட்டுகிறது. ஆனால், வீட்டில் கழித்த தனது வாழ்க்கையின் முதல் 17 ஆண்டுக்காலங்களில், தனது தந்தை யாக்கோபினால் நாட்டப்பட்ட தேவபயத்தைப் பெற்றிருந்தான். இன்றும், பாவத்திற்குத் விலகியிருக்க எந்தவொரு இளைஞனுக்கும் தேவனுக்கு பயப்படுகிற பயம் போதுமானது.

பாலியல் காமம் மற்றும் விபச்சாரம் என்ற கொடூரமான பாவத்திலிருந்து நம்மைத் தடுக்க தேவபயம் மட்டுமே போதுமானது என்பதை யோபு மற்றும் யோசேப்பின் எடுத்துக்காட்டுகள் நமக்குக் காட்டுகின்றன. தேவனுக்குப் பயப்படுவது ஞானத்தின் ஆரம்பம் (ABC).

கடைசி நாட்கள் நோவாவின் நாட்களைப் போலவே இருக்குமெனில் (மத்தேயு 24 ல் இயேசு சொன்னது போல), இந்த பொல்லாத காலத்தில், பாவத்திற்கும் அநீதிக்கும் எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்து, தேவனுக்கு உண்மையும் தூய்மையுமாய் இருக்கக்கூடிய நோவாவைப் போன்ற மனிதர்களை இக்கடைசிநாட்களில் தேவன் கொண்டிருக்க வேண்டும்.

நாம் முழுமையாய் தூய்மையடையும் வரை, பாலியல் பகுதியில் தொடர்ந்து போராட வேண்டும். ஒரு பெண்ணுடன் நாம் பேசும் விதத்தில் கூட தூய்மையில்லாமல் இருக்கக்கூடும். இந்த பகுதியில் இயேசு இருந்ததைப் போல தூய்மையில் நாமும் முன்னேற வேண்டும். இயேசு ஒரு முறை ஒரு ஸ்திரீயுடன் பேசுகிறதைக் கண்ட சீஷர்கள் ஆச்சரியப்பட்டார்கள் என்று எழுதப்பட்டுள்ளது (யோவான் 4:27). அதுவே அவருடைய நற்சாட்சி.