WFTW Body: 

தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் (ஆபிரகாம்) அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்” (ரோமர் 4:20,21).

நம்முடைய இயலாத (சாத்தியமற்ற) சூழ்நிலைகளின் மத்தியில் தேவனை நம்பும்பொழுது, நாம் அவருக்கு அதிகமான மகிமையைச் செலுத்துகிறோம். தேவனால் கையாள முடியாத பிரச்சனை எதுவுமில்லை என்பதை நாம் அறிவோம். எவ்விடத்திலும் சாத்தான் உருவாக்கும் ஒவ்வொரு பிரச்சனையையும் அவரால் தீர்க்க முடியும். ஜனாதிபதியின் இருதயம் கூட அவருடைய கையிலே உள்ளது, அதனை அவர் நமக்கு சாதகமாக மாற்ற முடியும் (நீதிமொழிகள் 21:1).

ஆகவே, என்ன நடந்தாலும் சரி, நாம் எப்போதும் தேவனையே நம்பி, 'தேவன் சாத்தானை நம்முடைய கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்' என்ற நம்முடைய விசுவாசத்தை அறிக்கை செய்ய வேண்டும். அப்பொழுது சாத்தான் என்ன செய்தாலும் சரி, நாம் அவன்மீது ஜெயங்கொள்வோம். இது என்னுடைய சொந்த வாழ்க்கையில் மறுபடியும் மறுபடியும் நடந்திருப்பதைக் கண்டிருக்கிறேன்.

தேவன் இப்பூமியிலே நமக்கு ஒரு ஆவிக்குரிய கல்வியை கொடுக்க விரும்புகிறதால், எப்படி பள்ளிக்கூடத்தில் மேல் வகுப்புகளுக்கு முன்னேறி செல்லும்போது நம்முடைய கணித பாடத்தின் கணக்குகள் அதிக கடினமாக மாறிக்கொண்டே போகுமோ, அப்படியே காலம் செல்ல செல்ல நம்முடைய பிரச்சனைகள் இன்னும் அதிக கடினமாக மாறிக்கொண்டே போகும் என்று நாம் எதிர்பார்த்து இருக்க வேண்டும். ஆனால் கணிதப் பாடத்தின் ஒரு கடினமான கணக்கின் சவாலைத் தவிர்த்துவிட வேண்டும் என்பதற்காக நாம் பின்னோக்கி கீழ் வகுப்பிற்கு ஒருபோதும் செல்ல விரும்புவதில்லை! அதுபோலவே, நாம் கிருபையில் வளருகையில் கடுமையான சூழ்நிலைகளை சந்திக்க தேவன் அனுமதிக்கும்போது நாம் ஆச்சரியப்படக் கூடாது. இவ்வாறு நாம் ஒரு வலிமையான, தைரியமான, அதிக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவராக மாறுவோம்.

எதைக் குறித்தும் நம்முடைய இருதயம் (மனசாட்சி) நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்காதபடிக்கு எல்லா நேரங்களிலும் ஜாக்கிரதையாக இருங்கள். அப்பொழுது மாத்திரமே நாம் தைரியமாக தேவனுக்கு முன்பாக வந்து நம்முடைய பிரச்சனைகளைத் தீர்க்கும்படி அவரிடம் கேட்க முடியும் (1யோவான் 3:21,22). நாம் சந்திக்கும் எந்தவொரு பிரச்சனைக்கும் தேவனிடம் தீர்வு கேட்பது தான், சோதனையில் தேவனிடம் ஞானத்தைக் கேட்பதாகும் (யாக்கோபு 1:1-7). ஒவ்வொரு பிரச்சனைக்கும் தேவன் ஒரு தீர்வை வைத்திருப்பதால், நாம் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ண வேண்டும் என்று யாக்கோபு கூறுகிறார். ஏனென்றால், தேவன் நம்முடைய பிரச்சனையை தீர்த்துக்கொண்டிருக்கையில், அவரோடு ஒரு புதிய அனுபவத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

"இயேசு ஆச்சரியப்பட்டார்" என்ற வாசகத்தை வேதாகமத்தில் (KJV மொழிபெயர்ப்பு வேதாகமத்தில்) இரண்டு முறை மாத்திரமே வாசிக்கிறோம் - ஒரு முறை அவர் விசுவாசத்தைக் கண்டதும் ஆச்சரியப்பட்டார், மற்றொரு முறை அவிசுவாசத்தைக் கண்டதும் ஆச்சரியப்பட்டார். "ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்; அப்பொழுது (அநேக மைல்கள் தொலைவிலிருக்கிற) தன் வேலைக்காரன் சொஸ்தமாவான்" என்று ரோம நூற்றுக்கு அதிபதி கூறியபோது, அவனுடைய விசுவாசத்தைக் கண்டு இயேசு ஆச்சரியப்பட்டார் (மத்தேயு 8:8,10). பிறகு இயேசு தாம் வளர்ந்த ஊருக்கு வந்தபோது, அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. அவர்களுடைய அவிசுவாசத்தைக் கண்டு இயேசு ஆச்சரியப்பட்டார் (மாற்கு 6:6). "இயேசு தன்னுடைய வீட்டுக்குள் பிரவேசிக்கக்கூட அவன் பாத்திரன் அல்ல" என்று கர்த்தரிடம் சொல்லுமளவுக்கு அந்த நூற்றுக்கு அதிபதி மிகவும் தாழ்மையுள்ளவராக இருந்தார்.

ஒருமுறை ஒரு கானானிய ஸ்திரீ (அநேக மைல்கள் தொலைவிலிருக்கிற) தன் மகளை சுகப்படுத்தும்படி கர்த்தரிடம் கேட்டாள். உன் விசுவாசம் பெரியது (மத்தேயு 15:28) என்று இயேசு மெச்சிக்கொண்ட இன்னொரு நபர் இவர். "பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல" என்ற விளக்கப்படத்தை இயேசு பயன்படுத்தியபோது, மனத்தாங்கல் அடையாமல், "மேஜையின் கீழே இருக்கும் நாய்" என்கிற தன்னுடைய ஸ்தானத்தை எல்லா தாழ்மையோடும் அவள் உடனடியாக ஏற்றுக்கொண்டாள். இந்த இரண்டு சம்பவங்களிலும், பொதுவான ஒரு காரியத்தை நாம் காண்கிறோம்: தாழ்மைக்கும் விசுவாசத்திற்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. நாம் எவ்வளவுக்கு அதிகமாக தாழ்மையுடன் இருக்கிறோமோ அவ்வளவுக்கு குறைவாக சுயத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்போம். நம்முடைய சொந்த திறமைகளைக் குறித்தும் சாதனைகளைக் குறித்தும் நாம் எவ்வளவுக்கு குறைவாக நினைக்கிறோமோ அவ்வளவுக்கு அதிகமாக நாம் விசுவாசம் வைத்திருப்போம். நாம் எவ்வளவுக்கு அதிகமாக பெருமையுடன் இருக்கிறோமோ அவ்வளவுக்கு குறைவாக நாம் விசுவாசம் வைத்திருப்போம். கர்த்தருக்கு முன்பாக நிற்க நாம் தகுதியற்றவர்கள் என்பதை நாம் எப்போதும் உணர வேண்டும். தேவனுடைய மகத்தான கிருபையினிமித்தமே நம்மை அவருக்கு முன்பாக நிற்க அனுமதிக்கிறார். அதை நாம் ஒருபோதும் சாதகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆகவே, உங்கள் முழு இருதயத்தோடும் தாழ்மையை நாடுங்கள்.