எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   வாலிபர் சீஷர்கள்
WFTW Body: 

பவுல் ஒரு சிறைச்சாலையில் இருந்தபொழுது பிலிப்பு பட்டணத்தாருக்குச் சந்தோஷத்தைக் குறித்து இவ்வளவு அதிகமாக எழுதினார் என்பதைப் பார்க்கும்பொழுது சவாலாய் இருக்கிறது. நம்முடைய சூழ்நிலைகளெல்லாம் சௌகரியமாய் இருக்கும்பொழுது சந்தோஷத்தைக் குறித்து பிரசங்கிப்பது ஒரு காரியம். ஆனால் நம்முடைய சூழ்நிலைகள் கடினமாக இருக்கும்பொழுது அதைக் குறித்து எழுதுவதென்பது முற்றிலும் வேறொரு காரியம். ஒரு கிறிஸ்தவனுக்கு எல்லா சூழ்நிலைகளிலும் சந்தோஷத்தோடு இருப்பது சாத்தியம் என பிலிப்பியர் 1:4 மற்றும் பிலிப்பியர் 4:4 -ல் உள்ள பவுலின் வார்த்தைகள் நமக்குப் போதிக்கிறது. அதுதான் கிறிஸ்துவினுடைய சிந்தையும் மனப்பான்மையும் ஆகும்.

“உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது” என்று பிலிப்பியர் 1:5,6,7-ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். நீங்கள் ஒரு பிரசங்கியாராக இருந்து, தேவனுடைய ஜனங்களுக்கென்று ஒரு தீர்க்கதரிசன வார்த்தையைக் கொண்டிருக்க விரும்பினால், எல்லா நேரங்களிலும் உங்களுடைய இருதயத்தில் இரண்டு காரியங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையையும் தேவனுடைய ஜனங்களையும் உங்களுடைய இருதயத்தில் கொண்டிருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையை மாத்திரமே உங்களுடைய இருதயத்தில் கொண்டிருந்து, அவருடைய ஜனங்கள் மீது உங்களுக்கு அன்பு இல்லை என்றால், தேவன் அவர்களுக்காக ஒரு வார்த்தையையும் உங்களிடம் கொடுக்க மாட்டார். அதேபோல, தேவனுடைய ஜனங்களை நீங்கள் நேசித்து, தேவனுடைய வார்த்தையால் உங்களுடைய இருதயம் நிரப்பப்படவில்லை என்றால், தேவன் அவர்களுக்காக ஒரு வார்த்தையையும் உங்களிடம் கொடுக்க மாட்டார். ஆரோன் இஸ்ரவேல் புத்திரரின் 12 கோத்திரங்களின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கொண்டிருந்ததுபோல, பவுலும் விசுவாசிகளை தன் இருதயத்தில் சுமந்தார். ஒரு மனிதனாக, பவுலால் உலகிலுள்ள ஒவ்வொரு விசுவாசியையும் தன் இருதயத்தில் சுமக்க கூடாமல் இருக்கலாம். தேவன் யாரையெல்லாம் அவருடைய பொறுப்பிலே கொடுத்திருந்தாரோ அவர்களை மாத்திரமே பவுல் சுமந்தார். நம்முடைய இருதயத்திலே தேவனுடைய வார்த்தையையும், நாம் கவனித்துக்கொள்ளும்படியாக நம்முடைய பொறுப்பிலே அவர் கொடுத்திருக்கும் தேவனுடைய ஜனங்களையும் கொண்டிருக்கும்போது, நாம் பேசுகிற ஒரு வாக்கியம்கூட அவர்களை ஆசீர்வதிக்கும்.

ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாதீர்கள் என்று பிலிப்பியர் 2:3-ல் பவுல் அவர்களுக்கு புத்திசொல்லுகிறார். அதைத் தொடர்ந்து, "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே (மனப்பான்மையே) உங்களிலும் இருக்கக்கடவது" என்று பிலிப்பியர் 2:5-ல் பவுல் கூறுகிறார். இந்த ஒரே வசனத்தை வைத்து, உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் வாழ்ந்திட முடியும். நீங்கள் மறுரூபமாகுவதற்கு வேதாகமத்திலுள்ள வேறு எந்த வசனமும் உங்களுக்குத் தேவையில்லை. "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தை இந்த சூழ்நிலையிலே எனக்கு இருக்கிறதா?" என்று ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தை அந்த சூழ்நிலையிலே எனக்கு இருந்ததா?" என்ற இந்த கேள்வியின் மூலமாக உங்களுடைய கடந்தகால செயல்களை நியாயந்தீர்த்துக்கொள்ளுங்கள்.

கிறிஸ்துவுடன் ஒப்பிடும்போது, பூமியிலுள்ள அனைத்தும் (மனுஷீக சுய-நீதியும் உட்பட) உண்மையிலேயே நஷ்டமென்றும் குப்பையென்றும் பிலிப்பியர் 3:11-ல் பவுல் கூறினார். நீங்களும் அதை அப்படியே பார்த்திருக்கிறீர்களா? கிறிஸ்துவுடன் ஒப்பிடும்போது, உலகிலுள்ள அனைத்து பணமும் குப்பையென்று நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? கிறிஸ்துவுடன் ஒப்பிடும்போது, மனிதனுடைய எல்லா கனமும் குப்பையென்று நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? கிறிஸ்துவுடன் ஒப்பிடும்போது, பூமிக்குரிய எல்லா சௌகரியமும் குப்பையென்று நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? தேவனுடைய சித்தத்தைச் செய்வதும், நீங்கள் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிற இடத்தில் இருப்பதும், கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக வளருவதும், தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் ஊழியத்தை நிறைவேற்றுவதுமாகிய இவைகள் மாத்திரமே நித்தியத்தின் கண்ணோட்டத்தில் பொருட்டானவைகள். இதனை தொடர்ந்து, தனது வாழ்க்கையின் பெரிதான ஏக்கத்தைப் பற்றி பவுல் பேசுகிறார். அது ஒரு பிரபலமான பிரசங்கியாராக மாறுவதோ அல்லது புகழ் பெற்றவராக மாறுவதோ அல்ல. அதெல்லாம் அவருக்குக் குப்பையே. கிறிஸ்துவையும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அதிகமாக அறிந்துகொள்வதே அவருடைய தீராத வாஞ்சையாக இருந்தது (பிலிப்பியர் 3:10).

"நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல் இருக்க வேண்டும்" (பிலிப்பியர் 4:6) என்று இன்னுமொரு சவாலான காரியத்தைப் பவுல் சொல்கிறார். அது ஏறுவதற்கான இன்னுமொரு மலை-உச்சி ஆகும். கவலை நம் அனைவருக்கும் மிக எளிதாக வருகிறது. மாத இறுதி வரை உங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்களிடம் போதுமான பணம் இல்லாதபோது கவலை வருகிறது. உங்களுடைய பிள்ளைகள் பள்ளியிலிருந்து திரும்பி வருவதற்குத் தாமதமாகும்போது, நீங்கள் கவலைப்படத் தொடங்குகிறீர்கள். வாலிபராக இருக்கும் நீங்கள், வயது அதிகமாகுகிறதே என்றும், திருமணத்திற்கான வாய்ப்புகளும் எதுவும் இல்லையென்றும் கவலைப்படலாம். அநேக காரியங்கள் நமக்குக் கவலையை ஏற்படுத்துகின்றன. பூமியில் இந்த மலை-உச்சியை நாம் அடையக் கூடாமல் போகலாம். ஆனால் அந்த பூரணத்தை (மலை-உச்சியை) நோக்கிச் செல்ல வேண்டும். தேவன் மீதுள்ள நம்முடைய விசுவாசமும் நம்பிக்கையும் வளர வேண்டும். எப்பொழுதெல்லாம் எதைக் குறித்தாவது கவலைப்படும்போது, ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினால் அதைக் கர்த்தரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

மேன்மையானவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள் என்று பிலிப்பு பட்டணத்தாருக்கு பவுல் புத்தி சொல்லுகிறார் (பிலிப்பியர் 4:8). தேவன் தம்முடைய ஞானத்தில் அவருக்குக் கொடுக்க தீர்மானித்தவைகள் குறைவாக இருந்தாலும் பரிபூரணமாக இருந்தாலும், அவருடைய வாழ்க்கையில் மனரம்மியமாயிருக்க இரகசியத்தை கற்றுக்கொண்டதாக பவுல் நமக்குக் கூறுகிறார் (பிலிப்பியர் 4:11,12). இது உண்மையிலேயே ஒரு இரகசியம்தான் - ஏனென்றால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இதனை கற்றுக்கொள்ளவில்லை. "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலிப்பியர் 4:13) என்கிற இந்த வெற்றிகரமான அறிவிப்பை பவுல் அளிக்கிறார். கிறிஸ்து நம்மை பெலப்படுத்துகையில், நாம் எப்பொழுதும் சந்தோஷமாகவும் ஒன்றுக்கும் கவலைப்படாமலும் இருக்க முடியும்.