WFTW Body: 

1 சாமுவேல் 30-ம் அதிகாரத்தில், சில சுவாரஸ்யமான காரியங்களைப் பார்க்கிறோம். தாவீது தான் ஒரு இக்கட்டான சூழலில் இருப்பதைக் காண்கிறார். தாவீதும் அவருடைய மனுஷரும் யுத்தத்திற்குச் சென்றிருந்த வேளையில், அமலேக்கியர் வந்து, அவருடைய ஜனங்கள் தங்கியிருந்த பட்டணத்தை அழித்து, அவர்களுடைய குடும்பத்தினரை சிறைபிடித்துச் சென்று விட்டனர். நிலைமை எவ்வளவு அதிகமாக மோசமாக இருந்ததென்றால், அந்த மனுஷரெல்லாம் அழுது புலம்பினதோடு தங்களுடைய பிரச்சினைகளுக்கு தாவீதைக் குறை கூறத் தொடங்கினர். அவர்கள் தாவீதைக் கல்லெறிந்து கொல்ல விரும்பினர் (1 சாமுவேல் 30:6). அதன்பிறகு அந்த அழகிய வார்த்தைகளை நாம் வாசிக்கிறோம்: "தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக் கொண்டான் (தன்னைப் பெலப்படுத்திக் கொண்டான்)" (1 சாமுவேல் 30:6). நம்முடைய நண்பர்களே நமக்கெதிராகத் திரும்பும்போது, நாம் பின்பற்றுவதற்கு எவ்வளவு அற்புதமான முன்மாதிரியாக இது அமைந்துள்ளது.

தாவீது தேவனைத் தேடிய போது, கர்த்தர் அவர்களைப் பின்தொடர்ந்து போகும்படி சொன்னார். அவன் சகலத்தையும் திருப்பிக் கொள்வான் என்றும் உறுதியளித்தார் (1 சாமுவேல் 30:8). ஆனால் தாவீதுக்கோ தான் அமலேக்கியரை எந்தத் திசையில் சென்று கண்டுபிடிக்க வேண்டுமெனத் தெரியவில்லை. தேவன் அவனை எப்படி நடத்திச் சென்றார் என்பதைப் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. மரித்துக் கொண்டிருந்த, முன்பின் தெரியாத ஒருவனுக்குக் காண்பித்த தயவுள்ள செயலின் மூலமாகத் தேவன் வழிநடத்தினார். தாவீதும், அவருடைய மனுஷரும் வனாந்தரத்திலே உணர்வற்று (coma), பாதி மரித்த நிலையில் கிடந்த ஓர் எகிப்தியனைக் கண்டனர். அவர்கள் அவன் மேல் அக்கறை கொண்டு, அவன் உண்ணவும், குடிக்கவும் கொடுத்தனர். அவன் தெம்பானவுடன், அவன் வியாதியாய் இருந்தபடியால், அந்த அமலேக்கியர் அவனை அந்த வனாந்தரத்திலேயே கைவிட்டுவிட்டுப் போனதை அறிந்து கொண்டனர் (1 சாமுவேல் 30:11-13). பிறகு அவன்தான் தாவீதை அமலேக்கியரிடத்திற்கு நடத்திச் சென்றான். இது நாம் முன்பின் அறியாத ஒருவரிடத்தில் இரக்கத்தைக் காண்பிக்கும்போது, தேவன் எப்படியாக நமக்குப் பலன் அளிக்கிறார் என்பதைக் கற்றுக்கொடுக்கிறது. அப்படியே தாவீது அமலேக்கியரை கண்டுபிடித்து அவர்களை முறியடித்தான். அதன் பின்பு, “தாவீது அமலேக்கியர் கொள்ளையாடின எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான்" என மூன்று முறை எழுதப்பட்டுள்ளது (1 சாமுவேல் 30:18-20). - இது சாத்தான் நம்மிடமிருந்து கொள்ளையடித்த யாவற்றையும் இயேசு திருப்பிப் பெற்றுக் கொண்டு வந்ததைச் சித்தரிக்கும் ஓர் அழகிய சித்திரமாகும்!

தாவீது யுத்தத்தை முடித்துக் கொண்டு பாளையத்திற்குத் திரும்பிய போது, தாவீதுடன் யுத்தத்திற்குப் போக முடியாமல் விடாய்த்துப் போன 200 பேர் பாளையத்திலே இருந்தனர். அவர்கள் அங்கேயே தங்கி தாவீதின் பொருட்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். தாவீதுடன் இருந்த பொல்லாத மனுஷர்களில் சிலர், யுத்தத்திற்கு வராத 200 பேருக்கும் கொள்ளையுடைமைகளில் பங்கைத் தரக் கூடாது என்றனர். ஆனால் நாம் இங்கே தாவீதின் பரந்த இருதயத்தைப் பார்க்கிறோம். யாரெல்லாம் யுத்தத்திற்குச் சென்று சண்டையிட்டார்களோ, அவர்களுக்கு கொள்ளையுடைமையில் என்ன பங்கு கிடைக்கிறதோ, அதே அளவு சண்டையிடச் செல்லாமல், வீட்டிலேயே தங்கிப் பொருட்களைக் கவனித்துக் கொண்டவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று சொன்னான். அந்நாள் முதல் இது இஸ்ரவேலிலே ஒரு பிரமாணமாக மாறியது

தாவீது (சுமார் 13 வருடங்கள்), எதிர்கொண்ட அவ்விதமான எல்லா கஷ்டங்கள் மற்றும் பாடுகளின் மூலமாகத்தான், முடிவில் அவன் தேவ மனிதனாகவும், வெற்றிகரமான ராஜாவுமானான். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவன் இந்த வார்த்தைகளை எழுதினான்: “ஓ தேவனே, நீர் என்னைச் சோதித்தீர். வெள்ளியைப் புடமிடுகிறதுபோல என்னைப் புடமிட்டீர். வலைகளில் சிக்கிக்கொள்ள அனுமதித்தீர். என் இடுப்புகளின்மேல் கனமும் வருத்தமுமான பாரத்தை ஏற்ற அனுமதித்தீர். மனுஷரை என் தலையின்மேல் ஏறிப்போக அனுமதித்தீர். எரிகிற அக்கினியையும் பிறகு குளிர்ந்த தண்ணீரையும் கடந்துவரச் செய்தீர். ஆகிலும் முடிவில், நீர் என்னை ஆவிக்குரிய சம்பூரணமும் அபிஷேகமும் நிறைந்த இடத்திற்குக் கொண்டுவந்துவிட்டீர். அங்கே என்னுடைய பாத்திரம் அநேக ஜனத்தை ஆசீர்வதிக்கும் ஆசீர்வாதத்தால் நிரம்பி வழிகிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் (சங்கீதம் 66:10-13 வசனங்களின் விளக்கவுரை).