WFTW Body: 

"நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்" என்று எபேசியர் 1:3-ல் பார்க்கிறோம். இந்த ஆசீர்வாதங்கள் பொருளாதாரத்தைச் சார்ந்ததாயிராமல், ஆவிக்குரியவையாக இருப்பதைக் கவனியுங்கள். பழைய உடன்படிக்கையின்கீழ் வாழ்ந்த இஸ்ரவேலருக்கு பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் மாத்திரந்தான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது. உபாகமம் 28-ல் நாம் அதைப் பார்க்கலாம். இயேசு கொண்டுவந்த கிருபையை, மோசே கொண்டுவந்த நியாயப்பிரமாணத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இதுதான். எபேசியரில் காணப்படும் வசனத்திற்கு நிகரான ஒரு வசனம் பழைய உடன்படிக்கையில் காணக் கிடைக்குமானால், அது "மோசேக்குள் எங்களைச் சகலவித பொருளாதார ஆசீர்வாதத்தினாலும் ஆசீர்வதித்த சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு (பிதா என்றல்ல) ஸ்தோத்திரம்" என்பதாகத்தான் இருக்கும். ஆகவே இந்நாட்களிலும் சரீர சுகத்தையும், பொருளாதார ஆசீர்வாதத்தையும் பிரதானமாய்த் தேடுகிற விசுவாசிகள் அனைவரும், உண்மையிலேயே, பழைய உடன்படிக்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த "விசுவாசிகளெல்லாம்" இஸ்ரவேலரேயன்றி, கிறிஸ்தவர்களல்லர். அவர்கள் மோசேயைப் பின்பற்றுகிறவர்கள்; கிறிஸ்துவையல்ல.

அப்படியானால், தேவன் இன்று விசுவாசிகளைப் பொருளாதார ரீதியில் ஆசீர்வதிப்பதில்லை என்று பொருள்படுத்தலாமா? முடியாது. அவர் ஆசீர்வதிக்கிறார்; ஆனால் ஒரு வித்தியாசமான வழியில் அதைச் செய்கிறார். அவர்கள் முதலில் அவருடைய ராஜ்ஜியத்தையும், நீதியையும் தேடும்போது, அவர்களுடைய பூமிக்குரிய தேவைகளெல்லாம் சந்திக்கப்படுகிறது. பழைய உடன்படிக்கையில் இருந்த ஜனங்கள் தங்களுக்கு அநேகப் பிள்ளைகள், திரளான ஆஸ்தி, நிறைய பணம், பகைவர்மீது வெற்றி, பூமியில் கனம் பதவி முதலிய பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் வேண்டும் என்று அவற்றை மட்டுமே தேடி, திரளாகப் பெற்றுக் கொண்டனர். ஆனால் புதிய உடன்படிக்கையின் கீழ் உள்ள நாம், ஆவிக்குரிய பிள்ளைகள், ஆவிக்குரிய செல்வம், ஆவிக்குரிய கனம், ஆவிக்குரிய வெற்றிகள் (இந்த வெற்றிகள் யாவும் சாத்தான் மீதும், மாம்சத்தின் மீதும்தான்; பிலிஸ்தியர் மீதும், சக மனுஷர் மீதும் அல்ல) முதலிய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையே நாடுகிறோம். இப்பூமியில் நாம் தேவ சித்தத்தைச் செய்வதற்கு வேண்டிய சுகமும், பணமும் நமக்குக் கூடக்கொடுக்கப்படும். எந்த அளவிற்கு நமக்குப் பணம் இருந்தால், அது நம்மைப் பாழ்ப்படுத்தாது என்று தேவன் நினைக்கிறாரோ, அந்த அளவிற்கு மட்டுமே அவர் நமக்குப் பணத்தைக் கொடுப்பார். பழைய உடன்படிக்கையிலே, தேவன் சில ஜனங்களை பன்மடங்கு கோடீஸ்வரர்களாக மாற்றினார். ஆனால் இன்றோ அது போன்ற காரியங்களெல்லாம் நம்மை மேலானவற்றைத் தேடுவதிலிருந்து தடுத்து நிறுத்தி, நம்மை அழித்துவிடும் என்பதற்காக அவர் அப்படிச் செய்வதில்லை.

"ஆவிக்குரிய ஆசீர்வாதம்" என்று எபேசியர் 1:3-ல் சொல்லப்படுவதை, "பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதம்" என்று மொழிபெயர்க்கலாம். தேவன், பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதம் ஒவ்வொன்றையும் கிறிஸ்துவுக்குள் ஏற்கனவே நமக்குத் தந்துவிட்டார். நாம் வெறுமனே இயேசுவின் நாமத்தில் அவற்றையெல்லாம் சொந்தங்கொண்டாட வேண்டியதுதான். சாலையோரத்தில் ஒரு பிச்சைக்காரி உட்கார்ந்து பிச்சை எடுப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அச்சமயத்தில் அவ்வழியே சென்ற ஒரு பணக்கார இளவரசன், அவளை மணமுடிக்கத் தீர்மானித்து, அவளுடைய வங்கிக்கணக்கில் மில்லியன்கணக்கான ரூபாயைப் போடுகிறான். அந்தக் கணக்கிலிருந்து அவள் எப்பொழுது வேண்டுமானாலும் விடுதலையாகப் பணம் எடுத்துக் கொள்ளலாம். எவ்வளவு அதிர்ஷ்டசாலியான பெண் அவள்! ஒரு சமயத்தில் சில நாணயங்களுடன்கூடிய ஒரு ஓட்டை டப்பாதான் அவளுடைய கரங்களில் இருந்தது. ஆனால் இப்பொழுதோ அவள் ஆடம்பரமான ஆடைகளை அணிந்து அமர்க்களமான நாகரீகத்துடன் வாழ்கிறாள். இளவரசனின் கையொப்பமிட்ட பல காசோலைகள் அவளிடத்தில் இருக்கிறபடியால், அவள் எவ்வளவு பெரிய தொகையையும் வங்கியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆவிக்குரிய ரீதியில் சொல்வோமானால், நம்மைக் குறித்த சித்திரமும் இதுதான்.

நாம் இப்போது பரலோக வங்கிக்குச் சென்று பரிசுத்த ஆவியின் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் உரிமையுடன் எடுத்துக் கொள்ள முடியும். ஏனெனில் கிறிஸ்துவின் நாமத்தில் அவையாவும் நம்முடையவை ஆகும். நாம் கிறிஸ்துவுடன் திருமண பந்தத்திலே நிலைத்திருந்து, "ஆண்டவரே, இப்பூமியிலே நான் என் வாழ்நாள் முழுவதும் உமக்கு மணவாட்டியாக உண்மையுடன் நடந்து கொள்ள விரும்புகிறேன்" என்று நம்மால் சொல்லக் கூடுமானால், பரத்திலுள்ள அத்தனையும் நம்முடையதுதான். பிறகு பரிசுத்த ஆவியின் ஒவ்வொரு ஆசீர்வாதமும் நம்முடையதுதான். நான் ஒன்றிற்கும் பாத்திரவானல்ல என்றெல்லாம் தேவனிடம் சொல்லி அவரை நம்ப வைக்க முயற்சிக்க வேண்டாம். ஏனெனில் நாம் இவற்றையெல்லாம் பெற்றுக் கொள்வதற்குப் பாத்திரவான்கள் அல்ல. அந்தப் பிச்சைக்காரி அவ்வளவு செல்வத்தையும் இலவசமாய் பெறுவதற்கு தான் பாத்திரவான் என்று சொல்வதாக உங்களால் கற்பனை செய்ய முடியுமா? இல்லவே இல்லை. தேவனுடைய இரக்கத்தினாலும், கிருபையினாலுமே நாம் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ளுகிறோம். கிறிஸ்துவுக்குள் நமக்கு எல்லாமே இலவசமாக அருளப்பட்டிருக்கிறபடியால்தான், நம்மால் பரலோகத்தில் உள்ள ஒவ்வொன்றையும் எடுத்துக் கொள்ள முடிகிறது. உபவாசத்தினாலும் ஜெபத்தினாலும், நம்மால் அவற்றையெல்லாம் சம்பாதிக்க முடியாது. அநேகர் இந்த வழிகளிலெல்லாம் பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களைச் சம்பாதித்துக் கொள்ள முயற்சிப்பதினால்தான், அவர்களால் ஒன்றையும் பெற இயலாமற் போய்விடுகிறது. நம்மால் அந்த வழிகளெல்லாம் அதைப் பெற்றுக் கொள்ள முடியாது. கிறிஸ்துவினால் உண்டாகும் தகுதியினால் மட்டுமே நாம் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஒரு சமயம் நான் பூமிக்குரிய தேவை ஒன்றிற்காக ஜெபித்துக் கொண்டிருந்த வேளையில், ஆண்டவர் எனக்கு இப்பாடத்தைக் கற்றுக் கொடுத்ததை இப்போது நினைவு கூருகிறேன். நான் ஆண்டவரிடம் "ஆண்டவரே, நான் பல ஆண்டுகளாக உமக்கு ஊழியம் செய்கிறேன். ஆதலால் எனக்கு இதைச் செய்யும்" என்றேன். அப்பொழுது ஆண்டவர், "இல்லை, நீ உன்னுடைய நாமத்திலே வந்தால், நான் உனக்குச் செய்ய மாட்டேன்" என்றார். அன்றைக்குத்தான், இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பது என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டேன். தற்போதுதான் மனந்திரும்பிய ஒரு புது விசுவாசியானாலும், 1959-ஆம் ஆண்டே இரட்சிக்கப்பட்ட நானாக இருந்தாலும், இருவரும் ஒரேயொரு அடிப்படையில்தான் தேவனிடத்திற்கு வர முடியும் என்பதையும் அன்றைக்குத்தான் உணர்ந்து கொண்டேன். அது கிறிஸ்துவினால் நமக்கு கிடைக்கும் தகுதியாகும். புதிதாக மனந்திரும்பியவர் இயேசு கிறிஸ்துவின் கையொப்பமிட்ட காசோலையுடன் பரலோக வங்கிக்கு வர வேண்டும். நானும் அவர்களைப் போலவே, இயேசு கிறிஸ்துவின் கையொப்பமிட்ட காசோலையுடன்தான் பரலோக வங்கிக்கு வர முடியும். நான் அநேக வருடங்களாக தேவனுக்கு உண்மையுள்ளவனாக இருக்கிறேன் என்ற நினைப்பில், என்னுடைய கையொப்பத்துடன் கூடிய காசோலையைக் கையில் பிடித்துக் கொண்டு பரலோக வங்கிக்குள் நுழைந்தால், அந்த வங்கி அதை நிராகரித்துவிடும். நம்முடைய அநேக விண்ணப்பங்கள் பதிலளிக்கப்படாததற்கு இதுதான் காரணமாகும். நாம் இயேசுவின் நாமத்தில் போவதில்லை. நாம் நம்முடைய நாமத்தில் போய்க்கொண்டிருக்கிறோம். நாம் பல தியாகங்களைச் செய்திருக்கிறபடியால், அவர் நமக்குப் பதில்தர வேண்டுமென நினைக்கிறோம். ஒருவேளை நாம் 70 வருடங்களாக உண்மை உள்ளவர்களாக வாழ்ந்திருந்தாலும், ஆண்டவருக்கு முன்பாக வரும்போது, ஒரு புதிய விசுவாசி எந்த அடிப்படையில் வருவாரோ, அந்த அடிப்படையில்தான் நாமும் வர வேண்டும். அது இயேசுவின் நாமம் ஆகும். அன்று அவர் தந்த இந்த வெளிப்பாட்டிற்காக நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். ஏனென்றால், அதன்பிறகு நான் என்னுடைய பெயரில் கையொப்பமிட்ட காசோலையை ஒருபோதும் தேவனிடத்தில் கொண்டு சென்றது கிடையாது. நான் அப்படியாக சோதிக்கப்படும் போதெல்லாம், "அக்காசோலையைப் பணமாக்க முடியாது. நான் இயேசுவின் நாமத்தில், அவரால் உண்டாகும் தகுதியினால் மட்டுமே செல்லட்டும்" என்று சொல்லுகின்றேன். எனவே உன்னதங்களிலே கிறிஸ்துவுக்குள் உள்ள பரிசுத்த ஆவியின் சகல ஆசீர்வாதங்களும் நம்முடையவைகளே.