WFTW Body: 

ஆவிக்குரிய பகுத்தறிதலின் முக்கியத்துவம்

கடைசி காலத்தை நாம் நெருங்க நெருங்க, சபையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியை அதிகமதிகமாயிருக்கும். வஞ்சிக்கிற ஆவிகளும் உலகில் அதிகமதிகமாக கிரியை செய்யும். ஆகவே, நீங்கள் வஞ்சிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டுமானால், கீழ்க்காணும் காரியங்களைப் பற்றி நீங்கள் கவனமாயிருக்கவேண்டும்:
(1) உணர்ச்சிவசப்படுதலால் நடந்தேறும் போலிகள், (2) ஒருகோடிக்குச் செல்லுதல், (3) பரிசேயத்தனம், மற்றும் (4) மதபேத மனப்பான்மை
ஆவியானவர் எங்கே கிரியை செய்கிறாரோ, அங்கே சத்துருவானவன் எப்பொழுதுமே கிரியை செய்வான். ஆகவே, நீங்கள் காண்கிற, கேட்கிற எல்லாவற்றையும் அப்படியே விழுங்கிவிடாதீர்கள். ஆவிக்குரிய பகுத்தறிவு உடையவர்களாயிருங்கள்.

பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதல் நிகழும்போது அதனுடன் சத்தமும் உணர்ச்சிப் பெருக்கும் காணப்பட முடியும்; அது ஒரு சிலருக்கு தங்கள் மனுஷீகமான தடைகளிலிருந்தும் மனுஷருக்கு பயப்படும் பயத்திலிருந்தும் விடுபட உதவிசெய்யத்தான் செய்கிறது. நாம் நம்முடைய உணர்ச்சிப்பெருக்கைக் குறைத்து மதிப்பிடுவதில்லை, ஏனெனில், அது தேவன் நமது ஆள்த்துவத்தில் கொடுத்த ஒரு பகுதியாகும். ஆனால் அதே சமயத்தில், அதை நாம் அதிகமாக மதிப்பிடவும் கூடாது; ஏனெனில் தேவன் நமது உணர்ச்சிப்பெருக்கையல்ல, இருதயத்தையே பார்க்கிறார். நீங்கள் ஜெபிக்கும்போது உங்கள் சத்தத்தை உயர்த்தி ஜெபிப்பது நல்லது, ஏனென்றால், உங்களைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றிய உங்கள் உணர்வைக் குறைக்க அது உதவும். அது, நீங்கள் ஜெபிக்கும்போது உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தவும் உங்களைச் சுற்றியிருப்பவர்களால் கவனம் சிதறாமலிருப்பதற்காகவும் கண்களை மூடிக்கொண்டு ஜெபிப்பதற்கு ஒப்பாகும். இப்படிப்பட்ட உத்திகள் உங்கள் ஜெபங்களை அதிக ஆவிக்குரியவைகளாக மாற்றாது, ஆனால், அவை உங்கள் சுற்றுச் சூழலின் தாக்கத்திலிருந்து நீங்கள் விடுபட உதவி செய்யும். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையானது, கூச்சலிடுவதினால் வெளிப்படுவதில்லை; மாறாக, ஒரு பரிசுத்த வாழ்வின் மூலமாகவும், சபையில் ஒரு வல்லமையான ஊழியத்தின் மூலமாகவும், உங்களது வேலைஸ்தலத்தில் ஆண்டவருக்கென்று ஒரு வெட்கப்படாத சாட்சியாக இருப்பதின் மூலமாகவுமே வெளிப்படுகிறது.

மனுஷனுடைய ஆத்துமாவில் ஒரு மிகப்பெரிய வல்லமை அடங்கியிருக்கிறது (அறிவுசார்ந்த வல்லமை, உணர்ச்சிகளின் வல்லமை மற்றும் சித்தத்தின் வல்லமை). அநேகர், (யோகாசனத்தில் செய்வதைப்போல) அந்த வல்லமையை வெளிக்கொணர்ந்து பயன்படுத்தி, அதை ஆவியின் வல்லமை என்று எண்ணிக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட வல்லமையினால் நீங்கள் வஞ்சிக்கப்பட்டுவிடக் கூடாது. பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதுமே கிறிஸ்துவை மகிமைப் படுத்துவார் - மனுஷர்களையோ அனுபவங்களையோ அல்ல. ஆகவே போலிகளை இனங்கண்டுகொள்ள அது ஒரு நிச்சயமான வழியாகும்.

ஒழுங்குள்ள ஜீவியம்

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் ஒழுங்குநிறைந்த ஆவியையே கொடுத்திருக்கிறார்.” (2தீமோத்தேயு 1:7). பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்விலுள்ள எல்லா பயத்தையும் கோழைத்தனத்தையும் அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக பலத்தையும் அன்பையும் ஒழுங்கையும் கொடுப்பார்.

ஒழுங்கு (கட்டுப்பாடு) இல்லாமல், ஒருவரும் மெய்யான ஆவிக்குரியவராக மாற முடியாது. ஆவியின் கனி இச்சையடக்கம் (சுய-கட்டுப்பாடு) என்று கலாத்தியர் 5:23 கூறுகிறது. ஓர் ஒழுங்கற்ற ஜீவியமானது ஒழுகும் ஒரு பாத்திரத்திற்கு ஒப்பாயிருக்கிறது. எத்தனை முறை அதை நிரப்பினாலும், அது மறுபடியும் வெறுமையாகிவிடும். அது திரும்பத்திரும்ப நிரப்பப்பட வேண்டும். அதிகமதிகமாய் ஒழுங்கு நிறைந்து காணப்படவேண்டுமென்று நீங்கள் நாடவேண்டிய பகுதிகள் இதோ:
(1) உங்கள் சரீரத்தை நீங்கள் பயன்படுத்தும் விதம், (2) உங்கள் நேரத்தை நீங்கள் செலவிடும் விதம், மற்றும் (3) உங்கள் பணத்தை நீங்கள் செலவிடும் விதம்.

நாம் ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழிக்கவேண்டும் என்று ரோமர் 8:13 கூறுகிறது. இந்த சரீரத்தின் செய்கைகள், நாம் நம் இருதயத்திலிருந்து செய்பவையல்ல. ஏனென்றால், அப்படிப்பட்ட செய்கைகள் மனப்பூர்வமான பாவங்களாகும். இவையெல்லாம் நாம் நம் சரீரத்தை ஒழுங்கற்று இருக்கும்படி அனுமதிப்பதால் அதிலிருந்து புறப்படும் செய்கைகளாகும் - உதாரணமாக, அளவுக்கதிகமாக சாப்பிடுவது, அளவுக்கதிகமாக தூங்குவது, சோம்பேறித்தனம் அல்லது அதிகப்படியான பேச்சு போன்ற செய்கைகள். பரிசுத்த ஆவியானவர், குறிப்பாக நம்முடைய நாவைக் கட்டுப்படுத்துவதற்கு நமக்கு உதவி செய்ய விரும்புகிறார்.

நமது நேரத்தை நாம் பிரயோஜனப் படுத்திக்கொள்ளவேண்டும் என்று எபேசியர் 5:16 கூறுகிறது. நீங்கள் ஒழுங்கு நிறைந்தவராயிருப்பீர்களென்றால், விரயமாகும் எவ்வளவோ நேரத்தை நீங்கள் மிச்சப்படுத்தி, வேதவாக்கியங்களைப் படிக்க அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். நீங்கள் சற்று இளைப்பாறவோ அல்லது விளையாட்டுக்கள் விளையாடவோ கூடாது என்று நான் கூறவில்லை. நீங்கள் ஒரு சந்நியாசியாக (துறவியாக) மாறிவிடக் கூடாது. ஏனென்றால், அது உங்களை அடிமைத்தனத்துக்குள் கொண்டுவந்துவிடும். ஆனால், சீஷர்கள் “ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு” மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவைத்ததைப் போல, உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தின் “மீதியான துணிக்கைகளைச்” சேர்த்துவைக்கப் பாருங்கள். (யோவான் 6:12). உங்கள் நேரத்தை பிரயோஜனப் படுத்திக்கொள்ளும்படிக்கு ஒழுங்கு நிறைந்தவராயிருங்கள், ஆனால் ஒருகோடிக்குச் சென்று அதைப்பற்றி வெறிகொண்டவராய் இராதீர்கள்! இளைப்பாறுதலாயிருங்கள்.

லூக்கா 16:11 -இல், பண விஷயத்தில் உண்மையில்லாதிருப்பவர்களுக்கு மெய்யான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை தேவன் கொடுக்கமாட்டார் என்று இயேசு கூறினார். பண விஷயத்தில் நீதியாயிருப்பதே முதல் படியாகும் - ஏமாற்றாமலிருப்பது, எல்லாக் கடன்களையும் செலுத்தித் தீர்ப்பது, போன்றவை. உண்மையாயிருப்பது அடுத்த படியாகும் - பணவிரயம், ஆடம்பர ஜீவியம், ஒன்றுக்கும் உதவாத சொகுசுகள், தேவையற்ற செலவினங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதே உண்மையாயிருப்பதாகும். பரிசுத்த ஆவியானவர் தங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த அனுமதிப்பவர்களே, கிறிஸ்தவ வாழ்க்கையில் தேவனுடைய மிகச் சிறந்தவற்றைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.