WFTW Body: 

வெளி 18:4-ல் - தெளிவாக கூறுகிறபடி, இன்றைக்கு அநேக தேவ ஜனங்கள் பாபிலோனில் இருக்கின்றனர். அந்த வசனத்தில் தேவன் அவர்களுக்கு கூறுவது, “என் ஜனங்களே, அவளைவிட்டு வெளியே வாருங்கள்”. மந்தையை வழித்தப்பி போகும்படி நடத்துகிற அவர்களின் தலைவர்களிடத்திலும், மேய்ப்பர்களிடத்திலும் பிரச்சனை இருக்கிறது. இயேசுவின் நாட்களில் இருந்ததுபோலவே, இன்றைக்கும் அநேக தேவ ஜனங்கள் “உண்மையான மேய்ப்பர்கள் இல்லாத ஆடுகள்” போல தான் இருக்கின்றார்கள்” (மத்தேயு 9:36). ஒவ்வொரு வருடம் மூன்று முறை எருசலேம் தேவாலயத்திலும், ஒவ்வொரு வாரம் நாசரேத் ஜெபாலயத்திலும் தேவனை கனவீனப்படுத்தின எல்லாவற்றையும் இயேசுவானவர் தான் 12 முதல் 30-வது வயது வரை அந்த இடங்களுக்கெல்லாம் சென்று கண்டதை சிந்தித்து பாருங்கள். ஆகிலும் அவை யாவற்றையும் குறித்து அவர் யாதொன்றை பேசவோ அல்லது செய்யவோ இல்லை, ஏனெனில் தேவனுடைய நேரம் இன்னும் வரவில்லை. ஆகிலும் அந்த வருடங்களும், அனுபவங்களும் நாசரேத்தில் அவருடைய படிப்பினைக்கும், பின்னாட்களில் அவருடைய ஊழியத்திற்கும் பெரும் பங்கு வகித்தது.

மத்தேயு 19:27-ல் (Living மொழிபெயர்ப்பு), இயேசுவினிடத்தில் பேதுரு பேசின வார்த்தைகளில் பாபிலோனிய ஆவியின் சாராம்சத்தை கண்டிட முடியும்: “அதிலிருந்து எங்களுக்கு என்ன கிடைக்கும்?” ஆண்டவருக்கென்று அநேக காரியங்களை விட்டுவிட்டால், எப்படி அவர் நமக்கு இந்த பூமியிலும், பிறகு பரலோகத்திலும் பலன் அளிக்கக்கூடும் என்று நாமும் கூட ஆச்சரியப்படலாம். தேவபக்தியானது நமக்கு லாபம் ஈட்டும் வழியென்று நாம் சிந்திப்பதையும், நம்முடைய சிந்தையில் சுயம் மையமாக இருப்பதையும் தான் அது நிரூபிக்கிறது. சிலர் இந்த பூமியிலே தங்களுடைய பிரசங்கத்தினாலும், ஆண்டவருக்கென்று ஊழியம் செய்வதினாலும் பணத்தையும், கனத்தையும் தேடுகிறவர்களாய் இருக்கக்கூடும். மற்றவர்கள் வெகுமதியையோ அல்லது பரலோகத்தில் கிறிஸ்துவின் மணவாட்டியினடத்தில் தங்களுக்கு ஒரு இடத்தை தேடிக்கொண்டிருக்கலாம். அது எதுவாக இருந்தாலும் சரி, நமக்காக ஏதோ ஒன்றை தேடிக்கொண்டிருக்கும் வரையிலும், நமக்குள்ளாக பாபிலோனிய ஆவி இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இது நம்மை நாமே சுத்திகரிக்க வேண்டிய ஆவிக்குரிய அசுத்தம்.

கர்த்தருக்கு ஊழியம் செய்வதால் தனக்கு என்ன கிடைக்கும் என்று பேதுரு கேட்டதற்கு, இயேசு மத்தேயு 20:1-16-ல் ஒரு உவமையின் மூலம் பதில் கொடுத்தார். அங்கே அவர் இரண்டு விதமான வேலையாட்களை குறித்து பேசினார்: (1) வெகுமதிக்காக (சம்பளம்) வேலை செய்தவர்கள் - சிலர் ஒரு பணத்திற்கு (மத்தேயு 20:2) மற்றும் வேறுசிலர் “நியாயமானபடி மணிநேரத்திற்கேற்ப கூலி பெறுவதற்கு” (மத்தேயு 20:4) - ஆகிலும் இரண்டு பெரும் கூலிக்காக போனவர்கள்தான்; (2) கூலி பெறுவதற்கு வாக்குறுதி இல்லாமல் வேலைக்கு சென்றவர்கள் சிலர் (மத்தேயு 20:7). இந்த இரண்டாம் வகையான வேலையாட்கள் அதிக கூலியை பெற்றுக்கொண்டார்கள் - ஒரு மணி நேரத்திற்கு ஒரு பணம். மற்ற அனைவரும் குறைவானதை பெற்றுக்கொண்டார்கள் - முதலில் வந்தவர்கள் ஒரு மணி நேரத்திற்கு வெறும் 0.08 பணத்தை தான் பெற்றுக்கொண்டார்கள, ஏனெனில் அவர்கள் 12 மணி நேரம் வேலை செய்தது ஒரு பணத்திற்காக தான். ஆகையால் தான் அங்கு இயேசு இப்படி கூறினார், நித்தியத்திலே பிந்தினோர் அநேகர் முந்தினோராய் இருப்பார்கள் - ஏனெனில் ஆண்டவர் “ஒவ்வொரு மனிதனுடைய வேலையின் தரத்தையும், நோக்கத்தையும் சோதிப்பாரே அல்லாமல்” (1கொரிந்தியர் 3:13, 1கொரிந்தியர் 4:5), அவர்களுடைய வேலையின் அளவை அல்ல.

எருசலேமின் சந்தைவெளியிலே தங்களுக்காக பணம் சம்பாதித்தவர்களை இயேசு ஒருபோதும் துரத்தவில்லை. இல்லவேயில்லை. ஏனெனில் சந்தைவெளி பணம் சம்பாதிப்பதற்கான ஏற்ற இடம். கிறிஸ்தவர்கள் கடின உழைப்பினால் தங்களால் இயன்றமட்டும் சம்பாதிக்கவேண்டும் என்று ஜான் வெஸ்லி கூறினார். நான் அதை ஆமோதிக்கிறேன். தேவனுடைய வீட்டிலே தங்களுக்கு லாபம் கிடைக்கும்படி முயற்சித்தவர்களை தான் இயேசு துரத்தினார். இன்றைக்கும் அப்படியேதான். சபையிலே தங்களுக்கென்று கனத்தையோ, பெயரையோ, பணத்தையோ அல்லது வேறு எவ்வித லாபத்தை தேடுபவர்களை இயேசு சபையை விட்டு நீக்கி சுத்தப்படுத்தி விடுவார். சபை ஒரு ஆராதிக்கும் இடமாகத்தான் இருக்க வேண்டும். சகரியாவின் கடைசி வசனங்கள் கூறுகிறது யாதெனில், ஆண்டவர் திரும்பி வரும்போது, “கர்த்தருடைய ஆலயத்தில் பிடிமான வியாபாரிகள் இனி இருக்க மாட்டார்கள்” (சகரியா 14:21-Living மொழிபெயர்ப்பு). நாம் நம்முடைய ஆண்டவருக்கு செய்யும் ஊழியத்தில் ஒருபோதும் ஒன்றையும் நமக்காக தேடவே கூடாது.

புதிய ஏற்பாட்டில் மத்தேயு முதல் வெளிப்படுத்துதல் வரை வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளபடி, தம்மை உண்மையாகச் சேவிப்பவர்களுக்கு கர்த்தர் வெகுமதிகளைக் கொண்டிருந்தாலும், நாம் வெகுமதிக்காக வேலைசெய்திடக்கூடாது. கல்வாரியில் ஆண்டவர் நமக்காகச் செய்த காரியங்களுக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாம் வேலைசெய்கிறோம். பலனுக்காக வேலை செய்பவர்கள் எதையும் பெற்றுக்கொள்ளமாட்டார்கள்!