WFTW Body: 

1கொரிந்தியர் 2:14,15-ல், “ஜென்மசுபாவமான (ஆத்தும) மனித”னையும் “ஆவிக்குரிய மனித”னையும் பற்றி வாசிக்கிறோம். ஓர் ஆத்தும கிறிஸ்தவனுக்கும் ஓர் ஆவிக்குரிய கிறிஸ்தவனுக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அங்கு கூறியிருப்பது போல, மனுஷருடைய புத்திசாலித்தனத்தால் இதைப் புரிந்துகொள்ள முடியாது: “ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.”

கண்ணும் காதும் எவ்வளவு வித்தியாசமானவைகளோ அவ்வளவாய் மனமும் ஆவியும் வித்தியாசமானவைகள். ஒருவருக்கு நல்ல கேட்கும்திறன் இருந்தும் பார்வையற்றவராக இருப்பது போலவே, ஒருவர் திறமைமிக்க புத்திசாலியாய் இருந்தும் 'செத்த' ஆவி உடையவராய் இருக்கமுடியும் - அல்லது அப்படியே நேர்மாறாகவும் இருக்கமுடியும். இந்த உலகத்தின் காரியங்களைச் செய்வதற்கு நமக்கு ஒரு நல்ல புத்தி (மனது) தேவை. ஆனால், தேவனுடைய காரியங்கள் என்று வரும்போது, நமது ஆவியின் நிலைமையே காரியம். தேவனுடைய காரியங்களைப் புரிந்துகொள்ள, பரிசுத்த ஆவியானவரிடமிருந்து நமக்கு வெளிப்பாடு தேவை; அது தாழ்மையுள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது (தாழ்மையின் ஆவியைக் கொண்ட “பாலகருக்கு” - மத்தேயு 11:25), புத்திசாலிகளுக்கு அல்ல (அவர்களும் தாழ்மையாக இருந்தாலொழிய).

ஒரு புத்திசாலி மனிதன் தாழ்மையாக இருப்பதென்பது சாத்தியமற்றது அல்ல என்றாலும் அது ஒரு கடினமான காரியமாகும். ஒரு சுயநீதி கொண்ட பரிசேயனுக்கு தான் ஒரு பாவி என்பதை ஒத்துக்கொள்வது சாத்தியமற்றது அல்ல என்றாலும் அது அவனுக்கு கடினமாயிருப்பதுபோலவே தான் இதுவும் இருக்கிறது. வேசிகளும் திருடர்களும் தாங்கள் பாவிகள் என்பதை ஒத்துக்கொள்வது எளிது. தெய்வீக வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்ளும் காரியத்திலும் இப்படித்தானிருக்கிறது: ஒரு படிப்பறிவில்லாத மனிதன் தான் புத்திசாலி இல்லை என்பதை ஒத்துக்கொள்வது எளிது - அதனால் அவன் தெய்வீக வெளிப்பாட்டை விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும். அதனால்தான் இயேசு தமது பெரும்பாலான நேரத்தை மூன்று படிப்பறிவில்லாத மீனவர்களாகிய பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோருடன் செலவிட்டார். ஏனென்றால் அவர்கள் ஆவிக்குரிய காரியங்களுக்கு மிகவும் உணர்வுள்ளவர்களாய் இருந்ததை அவர் கண்டார். இதன் காரணமாகவே பரிசேயர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது - ஏனென்றால், தங்களுடைய புத்திசாலித்தனத்தினிமித்தம் கொண்டிருந்த பெருமையானது அவர்கள் ஆவிக்குரிய ரீதியில் மதிகேடர் என்பதை ஒத்துக்கொள்வதற்குத் தடையாக இருந்தது. இது, அறிவார்ந்த மற்றும் புத்திசாலித்தனமான கல்லூரி மாணவர்களுடன் தொடர்ந்து பழகும்போது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

தேவனுக்கு முன்பாக மனுஷருடைய புத்திசாலித்தனத்திற்கு எந்தவொரு மதிப்பும் இல்லை. நம் தோலின் நிறம் தேவனுக்கு எவ்வளவு முக்கியமற்றதாயிருக்கிறதோ, அது போலவே தான் இதுவும் தேவனுக்கு ஒரு முக்கியமற்ற காரியமாயிருக்கிறது - ஏனெனில் இவை இரண்டும் மக்கள் பிறக்கும் போதே அவர்களுடனே பிறக்கின்றன. மக்கள் எதனுடன் பிறந்தாலும், தேவனுக்கு முன்பாக அவற்றால் அவர்களுக்கு எந்தவொரு அனுகூலமும் இல்லை. புத்திசாலித்தனமும், மனுஷருடைய நீதியைப் போலவே, தேவனுடைய பார்வையில் அழுக்கான கந்தையைப் போன்றது (ஏசாயா 64:6). கிறிஸ்து நமது நீதியாக மட்டுமல்ல, அவரே நம்முடைய ஞானமாகவும் இருக்கிறார் (1கொரிந்தியர் 1:30 -ஐக் காண்க).

எவ்வாறாயினும், சுய நீதியுள்ள ஒரு பரிசேயனாகவும் சிறந்த அறிவார்ந்த ஒரு புத்திசாலியாகவும் இருந்த (இரண்டுமே ஊனமுற்ற காரியங்கள்) பவுலைப் போன்ற ஒரு மனிதன், இரட்சிக்கப்பட்டது மட்டுமல்லாமல், கிறிஸ்துவின் சிறந்த அப்போஸ்தலனாகவும் ஆக முடிந்தது என்பது நம்மை உற்சாகப்படுத்துகிறது. ஆனால் பவுல் தொடர்ந்தேச்சையாய்த் தன்னைத் தாழ்த்தினார் என்பதே அதற்குக் காரணம். கொரிந்தியர்களிடம் பேசும்போது, ​​அவர் தன்னுடைய புத்திசாலித்தனத்தை சார்ந்துவிடுவாரோ என்று அவர் பயந்ததாகக் கூறுகிறார். அதனால்தான் அவர் “பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்” (1கொரிந்தியர் 2:3) என்று கூறினார். தேவனுடைய ஆவியின் வல்லமையைக் கொண்டு பிரசங்கிப்பதற்குப் பதிலாக, தன் மனதின் (ஆத்தும) வல்லமையுடன் அவர்களுக்குப் பிரசங்கித்துவிடுவாரோ என்று அவர் பயந்தார். எப்போது பேசினாலும் அந்த பயம் நம் அனைவருக்கும் இருக்க வேண்டும். அதனால்தான் பரிசுத்த ஆவியின் வல்லமைக்காக நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் - ஏனென்றால் நமக்கு இது தொடர்ந்து தேவையுள்ளதாய் இருக்கிறது.

எனவே, வேதாகம சத்தியத்தின் ஒரு புத்திசாலித்தனமான அறிவார்ந்த விளக்கத்தை, தவறுதலாக அது ஆவிக்குரியது என்று நாம் எண்ணிவிடக்கூடாது. மிகவும் உணர்ச்சிகரமான செய்தியையும் தவறுதலாக அது ஆவிக்குரிய செய்தி என்று நாம் எண்ணிவிடக்கூடாது. புத்தி மற்றும் உணர்ச்சிகள் ஆகிய இவையிரண்டும் நம் ஆத்துமாவின் பகுதிகள். இவைகள் நல்ல வேலைக்காரர்கள் ஆனால் கெட்ட எஜமானர்கள். பரிசுத்த ஆவியானவர் மட்டுமே நம் வாழ்வில் ஆண்டவராக இருக்க வேண்டும். கடைசியாக, ஆவிக்குரியவர்களாய் மாறுவதற்கான வழி நான் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிற தாழ்மை, தாழ்மை, தாழ்மை! என்னும் கிறிஸ்தவ வாழ்க்கையின் மூன்று ரகசியங்களிலேயே உள்ளது. உங்களிடம் அது இருந்தால், நீங்கள் செம்மையாயிருப்பீர்கள்.