WFTW Body: 

கிறிஸ்து திரும்ப வரும்போது எப்படி இருக்கும் என்று பவுல் 1தெசலோனிக்கேயர் 4:13-18 -ல் உள்ள வசனங்களில் பேசுகிறார். “கர்த்தருக்குள் நித்திரையடைந்தவர்களைக் குறித்து நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை.” இது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களைக் குறிக்கின்றது. இயேசு மரித்து மீண்டுமாய் உயிர்த்தார்; கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களும் மீண்டுமாய் உயிர்த்தெழுந்திருப்பார்கள். கிறிஸ்து வரும்போது, நமக்கு முன் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களுக்கு முன்னதாக நாம் உயிருடன் எழுந்திருக்க முடியாது. அவர்கள் கல்லறைகளிலிருந்து எழுந்திருப்பார்கள். அதுதான் முதலாம் உயிர்த்தெழுதலாகும். அப்பொழுது கர்த்தரைச் சந்திக்கும்படி, நாமும் அவர்களுடன் எடுத்துக் கொள்ளப்படுவோம். அவிசுவாசிகள் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு எழுந்திருக்க மாட்டார்கள். அவர்கள் இரண்டாம் உயிர்த்தெழுதலில் எழுந்திருப்பார்கள்.

அவரது வருகையில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார். அப்பொழுது பரிசுத்தவான்கள் எல்லாரும் கர்த்தரைச் சந்திக்கும்படி ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். இயேசுவும் தம்முடைய வருகையைக் குறித்துத் தமது சீஷர்களிடம் பேசின சமயத்தில் இதே காரியங்களைச் சொன்னார். “இதோ இங்கே இருக்கிறார் அல்லது அங்கே இருக்கிறார் அல்லது இரகசியமாய் வந்திருக்கிறார் என்று சொல்வார்களானால், நம்ப வேண்டாம்” (மத் 24:26) என்று இயேசு சொன்னார். இன்று அநேகர் நம்பிக் கொண்டிருப்பதைப் போல, அவர் இரகசியமாய் வரப் போவதில்லை என்பதைத்தான் அவர் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் வரும் போது, அது மின்னல் கிழக்கிலிருந்து மேற்கு வரைக்கும் மின்னுவதைப் போலிருக்கும் என்று சொன்னார். எல்லாக் கண்களாலும் அவரைக் காண முடியும்.

கிறிஸ்துவின் வருகை எப்போது சம்பவிக்கும்? அதற்கும் இயேசுவே பதில் தந்திருக்கிறார்: “அந்நாட்களின் மிகுந்த உபத்திரவம் முடிந்தவுடனே” (மத் 24:29). கிறிஸ்து தம்முடைய பரிசுத்தவான்களை உபத்திரவத்திற்கு முன்பாகவே எடுத்துக் கொள்வார் என அநேகர் விசுவாசிக்கின்றனர். இப்படிப் போதிக்கின்ற ஒற்றை வசனமாகிலும் வேதத்தில் இல்லை. இது ஒரு மனுஷ போதனையாகும். தம்முடைய வருகையானது, உபத்திரவத்திற்குப் பிறகுதான் சம்பவிக்கும் என்று இயேசுதாமே சொன்னார். 1தெச 4:16,17 -ல் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுகள் யாவும், மத்தேயு 24:30,31 -ல் சொல்லப்பட்டுள்ளவற்றிற்கு மிகச் சரியாகவே உள்ளன: இயேசுதாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார். அப்பொழுது பரிசுத்தவான்கள் எல்லாரும் கர்த்தரைச் சந்திக்கும்படி ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.

“இரவில் திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வரும்” என்று 1தெசலோனிக்கேயர் 5:2 -ல் நாம் வாசிக்கிறோம். ஒரு திருடன் தான் வரப்போவதை முன் கூட்டியே தெரிவித்துவிட்டு வராமல், எதிர்பாராத விதமாகத்தான் வருவான். இப்படியாகக் கர்த்தருடைய வருகையின் போது, ஒவ்வொரு அவிசுவாசிக்கும் ஆச்சரியம் மேலோங்கி நிற்கும். ஆனால், ஒளியின் பிள்ளைகளாகிய நாமோ, கர்த்தரது வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் (1தெச 5:4). நாம் இருளில் வாழ்கிறவர்களல்ல. ஆகவே நாம் ஆவிக்குரியவிதமாய்த் தூங்குகிறவர்களாயிராமல், விழிப்புடன் இருக்கிறோம் (1தெச 5:6).

நாம் விழிப்புடன் இருக்கிறோமா, தூங்கிக்கொண்டிருக்கிறோமா என்பதை கண்டுகொள்வதெப்படி? ஒரு மனுஷன் தூங்கும் போது, அவனைச் சுற்றிலும் உண்மையாய் இருக்கின்றவைகளெல்லாம், அவனுடைய கண்களுக்குத் தெரிவதில்லை; ஆனால் உண்மையற்றவைகளாயிருக்கும் காரியங்கள்தான் (கனவில் தோன்றும் காரியங்கள்தான்) அவனைப் பொறுத்தவரை உண்மையானவைகளாய்த் தோன்றும். அது போலவே, ஒரு விசுவாசிக்கு நித்தியத்திற்கடுத்தவைகளெல்லாம் உண்மையில்லாதவைகளாகவும், இப்பூமிக்குரியவைகள் யாவும் உண்மையானவைகளாகவும் இருக்குமானால், அவன் விழித்திராமல், தூக்கத்தில் இருக்கிறான் என்றுதான் அர்த்தமாகும். பரத்தோடும், நித்தியத்தோடும் ஒப்பிடும்போது, இம்முழு உலகமும் ஒரு நிஜமில்லா கனவு போலவே உள்ளது. பரலோகக் காரியங்கள்தான் மெய்யாகவே நித்தியமான காரியங்களாகும். தூக்கத்திலிருக்கும் விசுவாசிகளுக்கு, நிச்சயமாகவே கர்த்தர் இரவில் வரும் திருடனைப் போலவேதான் வருவார். நாங்கள் அவருடைய வருகையின் நாளை எதிர்நோக்கி, ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் என பவுல் கூறுகின்றார்.

நம்மைச் சூழ்ந்துள்ள ஜனங்களெல்லாம், அனைத்துக் காரியங்களும் சமாதானமாயும், பாதுகாப்பாயும் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டிருப்பார்கள் (1தெச 5:3). ஆனால் அவர்கள்மேல் அழிவு சடிதியாய் வரும். இந்த அழிவானது, “கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறது போல” (1தெச 5:3), சடிதியாய் வருமென்று இங்கு சொல்லப்படுகிறது. இயேசு கடைசி நாட்களைக் குறித்துப் பேசும்போது இதே பதத்தைப் பயன்படுத்தினார் (மத் 24:18). ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் முன்பாக, பிரசவ சமயத்திலே, பல மணிநேரம் கடுமையான பிரவசவ வேதனையைக் கடந்து போக வேண்டுமென்று ஒவ்வொரு தாயிற்கும் நன்றாகத் தெரியும். (சாவதைப் போல மிக வேதனையாக இருந்ததென சில தாய்மார்கள் சொல்லுகின்றனர்). இவற்றையெல்லாம் தாண்டிய பின்னர்தான் ஒரு குழந்தை பிறக்கிறது. இது கிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக வரும் வேதனையான உபத்திரவ காலத்தைக் குறிக்கும் ஒரு படமாகும். பிரசவ வேதனையின்றி எந்தக் குழந்தையும் பிறப்பதில்லை. கரத்தரின் வருகையும் உபத்திரவ கால வேதனைகளுக்கு முன்பாக இருக்கப் போவதில்லை. நாம் அந்நாட்களைக் கண்டு அஞ்சப் போவதில்லை. ஆண்டவர் நம்மை அவருக்குச் சாட்சிகளாக இருக்கவும், சுவிசேஷத்திற்காக நம்முடைய ஜீவனை விடவும் அனுமதிப்பாரானால், அது ஒரு மாபெரும் கனத்திற்குரிய விஷயமாகத்தான் இருக்கும்.