WFTW Body: 

ஆவியில் நிறைந்து வாழும் ஜீவியத்தின் நான்கு குணாதிசயங்களை அப்போஸ்தலனாகிய பவுலின் ஜீவியத்திலிருந்து நாம் பார்ப்போம்.

1.பூரண மனரம்மியம்: ஆவியில் நிறைந்த வாழ்க்கை என்பது முதலாவது முழுமையான திருப்திகொண்ட வாழ்க்கையாகும். பிலிப்பியர் 4:11-ல், பவுல் “நான் எந்த நிலைமையில் இருந்தாலும் மனரம்மியமாய் இருக்க கற்றுக்கொண்டேன்” என்று கூறினார். இதுபோன்ற மனரம்மியம் தன்னோடுகூட எப்போதும் நிறைவான சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொண்டுவரும். ஆகவே பவுல் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் குறித்து அதே அதிகாரத்தில் 4 மற்றும் 7-ம் வசனங்களில் குறிப்பிட்டார். தேவன் தங்களோடு இடைபடும் எல்லா சூழ்நிலைகளிலும் பூரண திருப்தி கொண்டவர்கள் மாத்திரமே தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்திட முடியும். மேலும் தங்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் ஒவ்வொன்றையும் தங்களுடைய நன்மைக்காகவே கிரியை செய்திடும் தேவனுடைய சர்வ வல்லமையை விசுவாசிப்பவர்கள் மாத்திரமே (ரோமர் 8:28), எந்த சூழ்நிலைகளிலும் மனதிருப்தியாய் இருப்பார்கள். இவர்கள் மாத்திரமே ஆபகூக் போல தங்கள் தோட்டத்தில் விளைச்சல் இல்லாது போனாலும், தங்கள் ஆட்டு மந்தை மரித்துப்போனாலும், அல்லது அதிகமான பொருளாதார நஷ்டம் ஏற்பட்டாலும், இன்னும் இது போன்ற எந்த சூழ்நிலையானாலும் ஆண்டவரை ஸ்தோத்தரிப்பார்கள் (ஆபகூக் 3:17, 18). பரிசுத்த ஆவியினால் நிறைந்த வாழ்வின் விளைவு, கர்த்தரைத் துதிக்கும் ஸ்தோத்திரத்தினால் வழிந்தோடும் என எபேசியர் 5:18-20 வசனங்கள் கூறுகிறது. சிறைச்சாலையில் தன்னுடைய கால்கள் தொழுமரத்தில் கட்டப்பட்டு இருந்தபோது கூட அப்போஸ்தலனாகிய பவுல் தேவனை முழுமனதாய் துதித்திட முடிந்தது (அப்போஸ்தலர் 16:25). அந்த சூழ்நிலையிலும் அவர் யாதொன்றைக் குறித்த குறைசொல்லுதலும் இல்லாமல் பூரண திருப்தி கொண்டவராகவே இருந்தார். இது ஆவியில் நிறைந்த வாழ்வின் முதல் அடையாளங்களில் ஒன்று. ஒரு கிறிஸ்தவனிடத்தில் முறுமுறுப்பு காணப்பட்டால், அவன், வனாந்திரத்தில் தேவனுக்கு முன்பாய் முறுமுறுத்த இஸ்ரவேலர்களைப்போல், இன்னும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இடமாகிய ஜெயஜீவியத்திற்குள் பிரவேசிக்கவில்லை என்பதையே காண்பிக்கிறது.

2.பரிசுத்தத்தில் வளர்ச்சி: இரண்டாவதாக, ஆவியில் நிறைந்த வாழ்வு என்பது , பரிசுத்தத்தில் வளர்கிற வாழ்க்கையாய் இருக்கிறது. ஒரு மனிதன் தன் ஜீவியத்தில் எந்த அளவிற்கு பரிசுத்தத்தில் வளர்ந்து வருகிறானோ அந்த அளவிற்கு தேவனுடைய அப்பழுக்கற்ற பரிசுத்தத்தைக்குறித்து உணர்வுள்ளவனாய் இருப்பான். இவ்விரண்டும் ஒன்றோடொன்று இணைந்தே செல்லும். ஒருவனிடத்தில் உண்மையாகவே முன் சொல்லப்பட்ட காரியம் இருக்கிறதா என்பதற்கான பரிசோதனையாய் பின் சொல்லப்பட்ட காரியம் இருக்கிறது. தான் மனந்திரும்பி வாழ்ந்த 25-ந்து ஆண்டுகளுக்கு பிறகு “அப்போஸ்த்தலர்கள் யாவரிலும் நான் சிறியவன்” என பவுல் கூறினார் (1 கொரிந்தியர் 15:9). அங்கிருந்து 5-து வருடங்கள் கழித்து, “பரிசுத்தவான்கள் எல்லாரிலும் சிறியவனாகிய நான்” என அவர் கூறினார் (எபேசியர் 3:8). இன்னும் ஒரு வருடம் கழித்து “பாவிகளில் நான் பிரதான பாவியாயிருக்கிறேன் (கவனியுங்கள், இருந்தேன் என்று அல்ல, இருக்கிறேன்) ” என அவர் கூறினார் (1 தீமோத்தேயு 1:15). அவ்வித அறிக்கைகளில், பரிசுத்தத்தில் அவருடைய வளர்ச்சியை உங்களால் காணமுடிகிறதா?. எந்த அளவிற்கு தேவனோடு பவுல் இசைந்து நடந்தாரோ அந்த அளவிற்கு தன் மாம்சத்திலுள்ள கறைகளையும், துன்மார்க்கத்தையும் உணர்ந்தவராய் இருந்தார். தன் மாம்சத்தில் நன்மை ஏதும் வாசமாயில்லை என்பதையும் நன்கு உணர்ந்தவராய் இருந்தார். (ரோமர் 7:18). ஆவியில் நிறைந்ததோர் மனுஷன் தான் பரிசுத்தத்தில் வளருவது போன்ற தோற்றத்தை பிறருக்கு காண்பித்திட முயற்சிக்காமல் மெய்யாகவே பரிசுத்தத்தில் வளருகிறவனாய் இருப்பான். தான் பெற்ற அனுபவங்கள் தன்னை பரிசுத்தப்படுத்தியதாக சாட்சி கொடுத்திட மாட்டான். பரிசுத்தமாகுதலின் உபதேசத்தை நன்கு விளங்கிக்கொண்டபடியால் தன்னை ஒரு பரிசுத்தவானாக நிரூபித்திட முயற்சிக்கவும் மாட்டான். மெய்யாகவே தன் ஜீவியத்தில் பரிசுத்தத்தை அடைந்தவனிடம் ஜனங்கள் தாங்களாகவே அவனிடத்தில் வந்து அவன் பெற்ற பரிசுத்த வாழ்வின் ரகசியத்தை கேட்டு அறிந்துகொள்வார்கள். J.B.பிலிப்ஸ் அளித்த வேதாகம மொழிபெயர்ப்பின்படி “அவன் பெற்ற பரிசுத்தத்தில் நடைமுறைக்கு ஒவ்வாத மாயம் இருப்பதில்லை” (எபேசியர் 4:24).

3.சிலுவையில் அறையப்பட்ட வாழ்க்கை: மூன்றாவதாக, சிலுவையில் அறையப்பட்டு வாழும் வாழ்க்கையே ஆவியில் நிறைந்து வாழும் ஜீவியமாயிருக்கிறது. “கிறிஸ்துவுடனேகூட நான் சிலுவையில் அறையப்பட்டேன்” (கலாத்தியர் 2:20) என்று பவுல் கூறுகிறார். கடந்த இரண்டு அத்தியாயத்தில் சிலுவை என்பதின் அர்த்தத்தை நாம் ஏற்கனவே பார்த்தோம். சிலுவையின் பாதையே ஆவியின் நிறைவான பாதையாகும். இயேசுவை சிலுவைக்கு நடத்திச் சென்றதைப் போலவே, நம்மையும் ஆவியானவர் சிலுவை நோக்கியே எப்பொழுதும் நடத்திச் செல்வார். ஆவியும், சிலுவையும் பிரிக்க முடியாததொன்றாகவே எப்பொழுதும் செயல்படுகிறது. பெலஹீனத்திற்கும், அவமானத்திற்கும், மரணத்திற்குமே சிலுவை அடையாளமாயிருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் தன் ஜீவியத்தில் அவ்விதமே பயமும், கலக்கமும், வருத்தங்களும், கண்ணீர்களும் கொண்டவராய் இருந்தார் (2 கொரிந்தியர் 1:8; 4:8; 6:10; 7:5). ஒரு பைத்தியத்தைப்போலவும், மதிமயங்கியவனைப்போலவுமே பவுல் கருதப்பட்டார். அநேக சமயங்களில் குப்பையைப்போலவும், துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவும் அவர் நடத்தப்பட்டார் (1 கொரிந்தியர் 4:13). இப்படி நடத்தப்படுவது என்பது ஆவியினால் நிறைந்த வாழ்க்கைக்கு பொருத்தமற்றது என்று அல்ல. மாறாக, ஆவியில் நிறைந்து வாழும் மனிதனோ தேவன் தன்னை மேலும் மேலும் சிறுமைப்படும் வாழ்க்கைக்குள் நடத்தி முடிவில் தன் சுய வாழ்க்கைக்கு அவர் மரணத்தை கொண்டுவருவதையே காண்பான்.

4.தொடர்ச்சியான விரிவாக்கம்: நான்காவதாக, ஓர் தொடர்ச்சியான அதிக அளவு சம்பூரண வாழ்க்கையை நாடும் நாட்டமே ஆவியில் நிறைந்து வாழும் ஜீவியமாகும். தான் மனந்திரும்பி முப்பது ஆண்டுகளுக்கு பிறகும், தன் ஜீவியத்தின் முடிவை நெருங்கிய அந்த வேளையிலும் “இன்னமும் ஆசையாய்த் தொடருகிறேன்” என்றே பவுல் கூறினார் (பிலிப்பியர் 3:14). அவர் இன்னமும் அடைந்திடவில்லை. தன் ஜீவியத்தில் தேவனுடைய ஆவியின் அதிகமான நிறைவையே இன்னமும் பவுல் வாஞ்சித்தார். ஆகவேதான் அந்த இலக்கை எப்படியும் அடைந்துவிடும்படி தன் ஆவிக்குரிய ஒவ்வொரு தசைநார்களையும் பயிற்றுவித்தார். “நான் முற்றிலும் தேறினவன் அல்ல” என பிலிப்பியர் 3:12-ல் பவுல் கூறினார். ஆனால் 15-ஆம் வசனத்திலோ “நம்மில் தேறினவர்கள் (முழுமையாக) யாவரும் இந்த சிந்தையாயிருக்கக்கடவோம்” என நேருக்கு மாறாய் கூறுவது போல் காண்கிறோம். ஆவியில் நிறைந்து வாழும் வாழ்க்கை இவ்வித எதிர்மறை அர்த்தம்கொண்டதாகவே எப்போதும் இருக்கிறது, “தேறினேன் ஆனால் இன்னமும் தேறவில்லை என்பதின் நேரடிப்பொருள் என்னவெனில், நிறைந்திருக்கிறேன், ஆனால் இன்னும் அதிகமாய் நிறைந்திடவே வாஞ்சிக்கிறேன் என்பதுதான். ஆவியில் நிறைந்த நிலை என்பது ஒரே இடத்தில் தேங்கி இருப்பது அல்ல. நிறைந்திருப்பதில் இன்னும் அதிகதிகமான அளவுகள் இருக்கிறது. வேதம் குறிப்பிடும்போது, “பரிசுத்த ஆவியானவர் நம்மை மகிமையின்மேல் மகிமை அடையும்படி நடத்துகிறார்” என்றே கூறுகிறது (2 கொரிந்தியர் 3:18) - அல்லது வேறு விதமாக கூறினால், நிறைந்திருப்பதில் ஒரு அளவில் இருந்து அடுத்த அளவிற்கு நடத்துகிறார். ஒரு கப்பில் தண்ணீர் நிறைந்திருக்கலாம், அதே போல் ஒரு பக்கெட்டிலும், அதே போல் ஒரு குளத்திலும் அதே போல் ஒரு ஆற்றிலும் தண்ணீர் நிறைந்திருக்க முடியும். ஆனால், ஒரு கப் நிறைந்திருப்பதற்கும், ஒரு ஆறு நிறைந்திருப்பதற்கும் இடையில்தான் எத்தனை பெரிய வித்தியாசம் இருக்கிறது.

இவ்வாறு பரிசுத்தாவியானவர் நாம் பெற்றுக்கொள்ளும் அளவை நாளுக்குநாள் அதிகரித்திடவே வாஞ்சை கொண்டிருக்கிறார். அப்பொழுது தான் நம்மை அவர் அதிக அளவில் நிறைத்திடவும் முடியும். இங்கு தான் சிலுவை நமக்கு தேவையாய் இருக்கிறது. நாம் சிலுவையின் பாதையை தவிர்த்துவிட்டால் நம் வாழ்க்கை ஒருபோதும் விசாலமடையாது. நம் ஜீவியத்தில் சிலுவையைத் தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்பவர்களாய் இருந்தால் நம்முடைய இருதயமாகிய கப், பக்கெட்டாகவும்... பக்கெட், குளமாகவும்.... குளம், ஆறாகவும்… ஆறு அநேக ஆறுகளாய் மாறுவதை கண்டிடமுடியும். ஒவ்வொரு சமயமும் நம் கொள்ளளவு அதிகரிக்கும்போது, நாம் மறுபடியும் நிரப்பப்படவேண்டுவது அவசியமாய் இருக்கிறது. இவ்வாறாகவே, ஆண்டவர் இயேசு நமக்களித்த “என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் (பரிசுத்த ஆவியின் நிறைவு) ஓடும்” (யோவான் 7:38, 39 - Living Bible மொழிபெயர்ப்பு). என்ற வாக்குத்தத்தம் நம்மில் நிறைவேறும்.