WFTW Body: 

"தேவன் 'அங்கே' யாக்கோபை ஆசீர்வதித்தார்!” என்று ஆதியாகமம் 32:29 - ல் வாசிக்கிறோம். பெனியேலில் யாக்கோபைத் தேவன் ஏன் ஆசீர்வதித்தார் என்பதற்கான உன்னதமான நான்கு காரணங்கள் உண்டு:

1 அவன் தேவனோடே தனித்திருந்தான் :

யாக்கோபைத் தேவன் ஆசீர்வதித்ததற்கு முதல் பிரதான காரியமாய் நடந்த செயல் யாதெனில், “அவன் தேவனோடு தனித்திருந்தான்” (ஆதியாகமம் 32:24) என்ற ரகசியமேயாகும். ஆம், யாக்கோபு தனக்குண்டான யாவற்றையும் அக்கரைப்படுத்திவிட்டு, இப்போது தனிமையில் இருந்தான்! ஆனால், இன்றைய 20-ம் நூற்றாண்டு விசுவாசிகளோ தேவனோடு தனித்திருந்து அதிக நேரம் செலவழிப்பதை மிகுந்த கஷ்டமாய் எண்ணுகிறார்கள். அதிவேக விமானங்கள் பறக்கும் இன்றைய உலகத்தின் அவசர-ஆவி நம்மில் அநேகரைப் பற்றிக்கொண்டபடியால், ஓர் தொடர்ச்சியான அவசர-சுறுசுறுப்பிற்கு ஆளாகிவிட்டது போல் தோன்றுகிறது. ஆனால் உண்மையான பிரச்சனை, நம்முடைய இயற்கையான மனோபாவத்தையோ அல்லது நம் வாழும் இந்த அவசர யுகத்தின் கலாச்சாரத்தையோ சார்ந்தது அல்லவே அல்ல... மாறாக, தேவன் எதிர்பார்ப்பவைகளுக்கு முன்னுரிமை வழங்க நாம் தவறிவிட்டோம், அவ்வளவுதான்! “தேவையானது ஒன்றே” (லூக்கா 10:42) என ஒரு விசுவாசி இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவர் என்ன சொல்கிறார் என்பதை கவனித்துக் கேட்பதை “முதல் தேவையாக” இயேசு குறிப்பிட்டதைப் பாருங்கள். ஆனால், இயேசு குறிப்பிட்ட இந்த முன்னுரிமையை நாம் விசுவாசிக்காதபடியால் எண்ணற்ற அழிவுக்குரிய விளைவுகளையே நம் வாழ்க்கையில் சந்திக்கிறோம். எத்தனையோ வேலைகளிலும், ஊழியங்களிலும் எப்போதும் சுறுசுறுப்பாய் இருந்துவிட்டு, தேவனோடு ஜெபத்திலும் உபவாசத்திலும் தனித்திருப்பதென்றால் என்ன என்று நமக்குத் தெரியாவிட்டால்!... தேவனுடைய மெய்யான வல்லமையையும் (அனேகர் மெச்சிக்கொள்ளும் மதிப்புகுறைத்த போலியனவைகளை அல்ல) அவர் வழங்கும் ஆவிக்குரிய உன்னத ஆசீர்வாதங்களையும் நாம் ஒருக்காலும் அறிந்துக்கொள்ளவே மாட்டோம்!

2 அவன் தேவனால் நொறுக்கப்பட்டான் :

இரண்டாவதாக, யாக்கோபு முற்றிலுமாய் நொறுங்குண்டதே அவனைத் தேவன் ஆசீர்வதித்ததற்கு காரணமாயிருந்தது. பெனியேலில் ஒரு புருஷன் யாக்கோபோடு போராடினான். உண்மையில், யாக்கோபோடு தேவன் ‘இருபது ஆண்டுகளாய்' போராடிக் கொண்டு தான் இருந்தார்! ஆனால் துயரம் யாதெனில், அந்தப் போராட்டத்தில் தேவனுக்கு இணங்கிட யாக்கோபு மறுத்துவிட்டான். அவன் மிகுந்த சாமர்த்தியசாலியாகவும், ஆராய்ந்து திட்டம் தீட்டுபவனாகவும் இருந்தாலும்கூட, அவன் கையிட்டுச் செய்த அத்தனையும் தவறாகிப் போனதை அவனுக்கு காட்டுவதற்கே தேவன் மிகுந்த பிரயாசம் எடுத்தார். இத்தனை ஆண்டுகளும் யாக்கோபு பிடிவாதம் கொண்டவனாகவே ஜீவித்தான். கடைசியாக, யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கும்படி அவனைத் தேவன் தொட்டுவிட்டார்! (வசனம் 25). ஒரு மனுஷனுடைய சரீரத்தில், “அவனுடைய தொடையே” மிருந்த வலிமையான அங்கமாயிருக்கிறது. மனுஷனுக்குரிய “அந்த வலிமையைத்தான்” தேவன் தொட வேண்டியதாயிருக்கிறது!!

3 அவன் தேவன்மீது பசியாய் இருந்தான் :

மூன்றாவதாக, யாக்கோபு தேவன் மீது வாஞ்சையும் பசியுமாயிருந்த இடத்தை அடைந்தவுடன், அவனைத் தேவன் ஆசீர்வதித்துவிட்டார். “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய”. . . “உம்மைப் போகவிடேன்!”. என்றே யாக்கோபு கதறினான் (வசனம் 26). யாக்கோபிடமிருந்து இந்தக் கதறலைக் கேட்பதற்கு 20 நீண்ட வருடங்கள் தேவன் காத்திருக்க வேண்டியதாயிருந்தது (ஆதியாகமம் 32:26). தன் ஜீவகாலமெல்லாம் சொத்துரிமையை அபகரிப்பதற்கும், மனைவிகளையும், பணத்தையும், செல்வங்களையும் வாரிக்கொள்வதற்கும் தன் வருடங்களை செலவழித்த இந்த யாக்கோபு... இப்போது அவைகளையெல்லாம் அக்கரைப்படுத்தி தள்ளிவிட்டு “தேவனை மாத்திரமே” பற்றிக் கொண்டான்! இந்த அற்புத இடத்தை யாக்கோபு அடையும்படிக்கே தேவன் அவனுடைய வாழ்க்கையில் கிரியை செய்து கொண்டிருந்தார்! ஆகவே, இந்த யாக்கோபு கடைசியில் அநித்தியமான உலகப் பொருட்களின் மீது கொண்ட ஈர்ப்பிலிருந்து விடுதலையாகி. . . தேவன் ஒருவர்மீதும் அவருடைய ஆசீர்வாதத்தின் மீதும் இப்போது அவன் வாஞ்சையும் தாகமும் கொண்டிருந்ததைக் கண்ட காட்சி, தேவனுடைய இருதயத்தை சொல்லிமுடியா மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியிருக்க வேண்டும்! பெனியேலில் அவன் இருந்த அந்த ராத்திரியில், யாக்கோபு தேவனிடத்தில் “கதறி அழுது” அவருடைய ஆசீர்வாதத்திற்காக “கெஞ்சினான்” என்றே ஓசியா 12:4 எடுத்துக் கூறுகிறது. ஆ, அந்த இரவு! எத்தனை பாக்கியமான ஓர் இரவு!! இத்தனை காலமும் உலகத்தின் பொருட்களையே நாடித்தேடிய யாக்கோபிற்கு அந்த இரவு அவன் வாழ்வின் ஓர் திருப்பு முனை இரவாய் மாறிவிட்டதே!! ஆம், தேவன் அவனோடு பல ஆண்டுகளாய் இடைப்பட்டு கிரியை செய்த அவரின் கிரியைக்கு, இப்போது பலன் கிடைத்துவிட்டது!!

4 அவன் தேவனிடம் நேர்மையாய் நடந்துகொண்டான் :

கடைசியாக, யாக்கோபு தேவனிடம் நேர்மையாய் நடந்து கொள்ளும் இடத்தை அடைந்தவுடன் தேவன் அவனை ஆசீர்வதித்தார். தேவன் அவனைப் பார்த்து “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். 20 வருடங்களுக்கு முன்பாக அவனுடைய தகப்பன் இதே கேள்வியைக் கேட்ட போது “நான் உமது மூத்த மகனாகிய ஏசா” என பொய் சொன்னான் (ஆதியாகமம் 27:19). ஆனால், இப்போதோ இந்த யாக்கோபு தேவனிடம் நேர்மையாக நடந்து கொண்டான்! தன்னை மறைத்துக் கொள்ளாமல் “ஆண்டவரே, என் பெயர் யாக்கோபுதான்!” எனக் கூறிவிட்டான். யாக்கோபு என்ற பெயருக்கு அர்த்தம் “அபகரிப்பவன், ஏமாற்றுபவன், வியாபார பேரம் செய்பவன்” என்பதேயாகும். ஆம், இப்போது யாக்கோபின் வாயில் வஞ்சனை காணப்படவில்லை! ஆகவேதான் இப்போது அவனைத் தேவன் ஆசீர்வதிக்க முடிந்தது! ஆம், “தேவன் ‘அங்கே' யாக்கோபை ஆசீர்வதித்தார்!” எங்கே? அவன் நேர்மையாக நின்ற அந்த இடமேயாகும்! இனியும் யாக்கோபு பாசாங்கு செய்வதை விரும்பாமல் "ஆண்டவரே நான் ஒரு மாய்மாலக்காரன்! என் ஜீவியத்தில் மாய்மால நடிப்பும் வெட்கமும் சூழ்ந்து கொண்டது!” என்றே நேர்மையாக அறிக்கை செய்தான். தன் இருதயத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் உண்மையை அறிக்கை செய்வதற்கு, ஒரு மனிதன் ஓர் மெய்யான நொறுங்குதலை அடைந்திருக்க வேண்டும்! இன்றைய கிறிஸ்தவத் தலைவர்கள் இதுபோன்ற அறிக்கைகளை பொய்யான தாழ்மையோடு அவ்வப்போது கூறினாலும் அவ்வாறு கூறியதைக்கூட, தாங்களும் தாழ்மையுள்ளவர்கள்தான் என்ற பெருமதிப்பை அடைவதற்காகவே அப்படிச் செய்கிறார்கள். இது போன்ற அருவருக்கத்தகும் தாழ்மையின் பொய் அறிக்கைகளை இங்கு நான் குறிப்பிடவில்லை. மாறாக, மெய்யாகவே “நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும் நேர்மையைத்தான் ” இங்கு நான் குறிப்பிடுகிறேன்! அந்த நேர்மை மிகவும் விலையேறப் பெற்றதாகும்!! நம் யாவரிடத்திலுமே ஏராளமான கபடு இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக, பரிசுத்தமாகுதலை அப்பியாசப்படுத்தாமல் இருந்துகொண்டே "பரிசுத்தவான்கள் போல" பாசாங்கு செய்யும் சுபாவம்! தேவன் நம்மீது இரக்கமாய் இருக்கட்டும். இந்த சத்தியங்களை விசுவாசிக்கும் நாம், குறைந்த பட்சம் இன்றிலிருந்தாவது “உண்மையும்! நேர்மையும்! திறந்த உள்ளத்தையும்!" நாடித் தேடுவோமாக. இவ்வித கபடு இல்லாது வாழ்ந்துவிட்டால், நம்முடைய ஜீவியத்தை தேவன் அளவில்லாது ஆசீர்வதித்துவிடுவார்!