WFTW Body: 

தேவன், சாத்தானையும் நம்முடைய இச்சைகளையும் நாம் நம்முடைய சொந்த பெலத்தினால் மேற்கொள்ள முடியும் என்று ஒருக்காலும் கற்பனை செய்து கொள்ளாதபடிக்கு, அவைகள் நமக்கு மிகவும் கடினமாயிருக்கும்படி அனுமதித்திருக்கிறார். தேவனுடைய வல்லமையை நாடும்படிக்கு நாம் நிர்ப்பந்திக்கப்படுகிறோம். கானான் தேசத்தில் குடியிருந்த இராட்சதர்களுடைய உருவத்தைக் கண்டபோது, இஸ்ரவேல் புத்திரராகிய வேவுகாரர்கள் தங்களை வெட்டுக்கிளிகளைப்போல் கண்டார்கள். ஆனாலும், யோசுவாவும் காலேபும் தேவனுடைய வல்லமையை நம்பி, தேசத்திற்குள் நுழைந்து, அந்த இராட்சதர்களைக் கொன்றார்கள். நம்முடைய எல்லா இச்சைகளையும் மேற்கொள்ள அப்படிப்பட்ட ஆவி நமக்குத் தேவை. ஆகையால், “தேவனுடைய வல்லமையினால், சாத்தனையும் என் எல்லா இச்சைகளையும் என்னால் மேற்கொள்ள முடியும், நான் மேற்கொள்வேன்” என்று விசுவாசமாய் அறிக்கை செய்துகொண்டே இருங்கள்.

ஒவ்வொரு சோதனையிலும், இரண்டு வழிகள் உங்களுக்கு முன்பாகத் திறக்கப்பட்டிருக்கும் - (i) இன்பத்தின் வழி மற்றும் (ii) இன்பத்திற்காக ஏங்கும் மாம்சத்திற்கு அவற்றை மறுக்கிற, பாடுகளின் வழி. இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட வழி “மாம்சத்திலே பாடுபடுகிற” வழி (1பேதுரு 4:1). நீங்கள் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டும், பாடுபட்டுக் கொண்டும் இருந்தால், முடிவிலே நீங்கள் பாவம் செய்வதை விட மரித்துவிடவுமே வாஞ்சையுள்ளவராவீர்கள். அப்பொழுது நீங்கள் “இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுவீர்கள்” (எபிரேயர் 12:4).

ஒரு தடகள வீரன், எத்தனையோ பகுதிகளில் தன்னைத்தானே ஒழுக்கப்படுத்திக்கொள்வான். அவ்விதமாகவே, நீங்களும் கூட சாத்தானையும் உங்கள் இச்சைகளையும் மேற்கொண்டு, இந்தப் பரலோக ஓட்டத்தின் முடிவில் வெற்றிபெற வேண்டுமென்றால், உங்கள் சரீரப்பிரகாரமான விருப்பங்களை நீங்கள் கண்டிப்பாக ஒழுக்கப்படுத்தியாக வேண்டும். “மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்தி, அது விரும்புகிறதை அல்லாமல், அது என்ன செய்ய வேண்டுமோ அதையே செய்ய வைப்பேன்” (1கொரிந்தியர் 9:27 - லிவிங் மொழிபெயர்ப்பு), என்று பவுல் கூறுகிறார்.

மனதில் ஒரு சிந்தனையாகவே சோதனை நமக்கு வருகிறது. அதை நாம் உடனே எதிர்க்க வேண்டும். ஆனால், ஜெயத்தை நாடிச்செல்லத் துவங்கும் ஆரம்பகட்டத்தில், சோதனையை எதிர்ப்பதில் நாம் பொதுவாக உடனடியாக வெற்றியடைகிறதில்லை; நாம் சில வினாடிகளாவது அந்த சிந்தனைக்கு இடங்கொடுத்து விடுகிறோம். பல ஆண்டுகளாக நாம் பழக்கப்பட்டிருக்கிற வாழ்க்கை முறையே இதற்குக் காரணம். வெற்றிகரமாக சோதனையை எதிர்ப்பதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் அந்த ஆரம்பத் தாமதத்தை பூச்சியத்திற்குக் கொண்டுவரும் வரை நாம் போராடிக்கொண்டேயிருக்க வேண்டும்! எங்கே பாவம் செய்தோமோ அங்கே உடனே நாம் அறிக்கை செய்து, துக்கித்து, மனந்திரும்ப வேண்டும்.

பேதுரு கடலில் அமிழ்ந்துபோகத் துவங்குகையில் எப்படி உதவிக்காகக் கதறினானோ (மத்தேயு 14:30), அதைப்போல் நாமும் சோதனையின் அழுத்தமும், அதற்கு இணங்கிவிடுவோமோ என்ற பயமும் நம்மில் அதிகமாய்க் காண்கிற வேளையில், உதவிக்காக உடனே நாம் கதற வேண்டும். இதுவே, ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடைய கிருபாசனத்தண்டையிலே ஓடிவந்து சேருவது என்பதன் அர்த்தமாகும். நீங்கள் 'பாவத்திலிருந்து ஓடுவதும்', 'பாவத்திற்கு விரோதமாகப் போராடுவதுமே’, தேவனுக்கு, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பாவத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளீர்கள் என்பதற்கான நிரூபணமாகும். அப்பொழுது தேவனும் வல்லமையாக உங்களுக்கு உதவி செய்வார்.