WFTW Body: 

விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் (எபிரெயர் 12:1,2) என்று புதிய வருடம் தொடங்குகையில் நாம் தீர்மானம் செய்வோமாக. நாம் அசைவற்று நிற்காமல், அவரை நோக்கிப் பார்த்து ஓடுகிறோம். விசுவாசத்தின் ஓட்டம் என்பது நீங்கள் அசைவற்று நிற்கக்கூடிய ஒன்றல்ல. நேரம் குறைவாக இருக்கிறபடியால் நீங்கள் ஓட வேண்டும். நீங்கள் கீழே விழுந்தாலும், எழுந்திருந்து, ஓட்டத்தைத் தொடர்ந்து ஓடுங்கள். ஓட்டப்பந்தயங்களில் கீழே விழுந்த அநேக வீரர்கள், அங்கிருந்து எழுந்திருந்து, ஓட்டத்தைத் தொடர்ந்து ஓடி, முதலிடத்தையே பிடித்துள்ளனர். ஆகவே, கர்த்தரோடு நீங்கள் நடக்கும்போது, சில சமயங்களில் கீழே விழுந்தால் சோர்ந்துபோகாதீர்கள். அங்கேயே கீழே கிடக்காமல், அவ்விடத்திலிருந்து எழுந்திருந்து, உங்கள் பாவத்தை அறிக்கை செய்து, ஓட்டத்தைத் தொடர்ந்து ஓடுங்கள்.

தேவன் உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் நீங்கள் பிறப்பதற்கு முன்பாகவே திட்டமிட்டுள்ளார். சங்கீதம் 139:16-18 (லிவிங் வேதாகம மொழிபெயர்ப்பு) இவ்வாறு கூறுகிறது: “கர்த்தாவே, நான் பிறப்பதற்கு முன்பாகவே உமது கண்கள் என்னைக் கண்டது. நான் சுவாசிக்கத் தொடங்குவதற்கு முன்பாகவே என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டுள்ளீர். ஒவ்வொரு நாளும் உமது புஸ்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்த்தாவே, என்னைக் குறித்து நீர் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டே இருக்கிறீர் என்பதை நான் உணரும்போது அவைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள். உமது சிந்தனைகள் என்னுடைய பக்கமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை திரும்புகின்றன என்பதை என்னால் கணக்கிடக் கூட முடியாது. நான் காலையில் விழிக்கும்போது நீர் இன்னும் என்னைக் குறித்தே சிந்தித்துக்கொண்டு இருக்கிறீர்.

தேவன் தம்முடைய மனதில் உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளுக்காகவும் ஒரு திட்டத்தை உண்டாக்கியுள்ளார். உங்களுக்கு ஒரு வளமான ஆவிக்குரிய கல்வியை இந்த புதிய வருடத்தில் வழங்குவதற்கென்று, உங்களுக்காகச் சோதனைகளைத் திட்டமிட்டுள்ளார். இந்த வருடத்தில் நீங்கள் செய்யும் தவறுகளை அவர் எவ்வாறு நம்முடைய நன்மைக்கு ஏதுவாக மாற்றுவார் என்பதையும் அவர் அங்கு எழுதியுள்ளார். இந்த வருடத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர் திட்டமிட்டுள்ளார். உங்கள் முழு இருதயத்தோடு அந்தத் திட்டத்தைக் கண்டுபிடிக்க நாடித் தேடுங்கள்.

இயேசு பூமியில் வாழ்ந்த போது, அவரிடத்தில் பரலோக ஜீவனை ஜனங்கள் கண்டார்கள். அவருடைய மனதுருக்கம், அவர் மற்றவர்களிடம் கொண்டிருந்த கரிசனை, அவருடைய தூய்மை, அவருடைய தன்னலமற்ற அன்பு, அவருடைய தாழ்மை, இவை அனைத்துமே தேவனுடைய ஜீவனின் வெளிப்பாடுகள். தேவனுடைய ஜீவனையும் பரலோகத்தின் சூழலையும் நம்முடைய இருதயங்களில் கொண்டுவருவதற்காகவே பரிசுத்த ஆவியானவர் இப்போது வந்திருக்கிறார். இந்த பரலோக ஜீவனை உலகிற்கு வெளிக்காட்டுவதற்காகவே தேவனால் நாம் பூமியிலே வைக்கப்பட்டிருக்கிறோம். உங்கள் வீட்டிலும் உங்கள் சபையிலும், பரலோகத்தின் சந்தோஷம், சமாதானம், அன்பு, தூய்மை, நன்மை ஆகியவற்றின் முன் ருசியை நீங்கள் இந்த வருடத்திலே கொண்டிருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.

இயேசு இப்பூமியிலே பரலோக ஜீவனை வாழ்ந்தார். நீங்கள் அவரை நோக்கிப்பார்த்து (அவர்மீது உங்கள் கண்களைப் பதிய வைத்து), அவரைப் பின்பற்றுவீர்களானால், பூமியின்மேல் வானம் (பரலோகம்) இருக்கும் நாட்களைப் போல இந்த வருடத்தின் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு இருக்கும். இப்பூமியில் வாழ்ந்த மனிதர்களில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்த மனிதர் இயேசு. தம்முடைய வாழ்க்கை பாதை சுலபமாக இருப்பதின் மூலமாக அவருக்குச் சந்தோஷம் வராமல், பிதாவின் சித்தத்தைச் செய்வதின் மூலமாகவே அவருக்குச் சந்தோஷம் வந்தது. பிதாவின் பரிபூரணமான அன்பை அவர் அறிந்திருந்தபடியால், பிதா தம்முடைய வாழ்க்கை பாதையில் அனுப்பிய அனைத்திற்கும் மகிழ்ச்சியுடன் அடிபணிந்தார். இதுவே அவருடைய வாழ்க்கையின் இரகசியமாகும். தேவன் அன்பிலே பரிபூரணமானவர் என்றும், அவருடைய திட்டங்கள் அனைத்தும் நம்முடைய நன்மைக்காகவே இருக்கிறது என்றும் நம்புவதே விசுவாசத்தைக் கொண்டிருப்பதாகும்.

“கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” என்று சங்கீதம் 16:8 கூறுகிறது. இயேசு இப்படித்தான் வாழ்ந்தார் (அப்போஸ்தலர் 2:25). அவர் எப்போதும் தம்முடைய பிதாவின் சமூகத்திலே வாழ்ந்தபடியால் ஒருபோதும் அசைக்கப்படவில்லை. இதனால் அவர் எப்பொழுதும் பரிபூரண ஆனந்தம் உடையவராகவும் இருந்தார் (சங்கீதம் 16:11). நாமும் கூட இப்படித்தான் வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். பிதா தம்மிடத்தில் குறைந்தபட்சமாக என்ன எதிர்பார்க்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பதில் இயேசு விருப்பம் காட்டாமல், அவர் தமது பிதாவிற்காகச் செய்யக்கூடிய அதிகபட்சத்தைக் கண்டுபிடித்தார்.

"கர்த்தர் என்னுடைய ஒரு பூமிக்குரிய வாழ்க்கையிலிருந்து இந்த வருடத்திலே பெற்றுக்கொள்ளக்கூடிய அதிகபட்சம் என்ன?" என்பதே நம்முடைய மனப்பான்மையாகவும் இருக்க வேண்டும். நம்முடைய சுய சித்தத்தை ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக வெறுத்து, தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவதின் மூலமாகவே உண்மையான ஆவிக்குரிய தன்மை வருகிறது. இவ்விதமாக ஒவ்வொரு நாளும் பிதாவின் சித்தத்திற்குத் தொடர்ச்சியாகக் கீழ்ப்படிதலே இயேசுவைப் பிதாவிற்கு மிகவும் பிரியமானவராக இருக்கும்படி இயலச் செய்தது. நாமும் கூட இந்த புதிய வருடத்தின் ஒவ்வொரு நாளிலும் இந்த வழியைத் தெரிந்தெடுத்தால், தேவனுக்குப் பிரியமானவர்களாக இருக்க முடியும்.

தேவன் உங்களுடைய பாத்திரம் நிரம்பி வழிந்தோடும் விதமாய் உங்கள் தலையை எண்ணெயால் அபிஷேகித்து, நீங்கள் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார். எலிசாவின் நாட்களில், தேவன் ஒரு ஏழை விதவையின் பாத்திரத்தை எண்ணெயால் நிரப்பியபோது, அவள் அதை அவளுடைய அயல்வீட்டுக்காரர்களின் பாத்திரங்களில் வார்த்தாள் (2 இராஜாக்கள் 4:1-7). இந்த வருடத்தில் உங்களுடைய வாழ்க்கை பாதையில் நீங்கள் சந்திக்கப் போகிற ஒவ்வொரு நபரையும் ஆசீர்வதிக்க, தேவைக்கும் அதிகமான வல்லமையும் ஆசீர்வாதமும் தேவனுடைய அபிஷேகத்தில் உள்ளது. இந்த விதவை செய்ததைப் போலவே இந்த வருடம் உங்கள் அயல்வீட்டுக்காரர்களை நீங்கள் ஆசீர்வதிக்க முடியும். எனவே மற்றவர்களுடைய வாழ்க்கைக்குள் வார்த்துக் கொண்டே இருங்கள். எவன் மற்றவர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறானோ, தேவன்தாமே அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சுவார் (நீதிமொழிகள் 11:25).

அப்போஸ்தலனாகிய யோவான் ஆவிக்குள்ளான போதுதான், கர்த்தருடைய சத்தத்தை எக்காளச் சத்தம் போன்ற பெரிதான சத்தமாகக் கேட்டான் (வெளிப்படுத்துதல் 1:10). இந்த வருடத்திலே ஒவ்வொரு நாளும் நீங்கள் ஆவிக்குள்ளாக வாழ்வீர்களானால், உங்களை வழிநடத்தவும் உங்களை ஊக்குவிக்கவும் கர்த்தருடைய சத்தத்தை நீங்களும் கூட ஒவ்வொரு நாளும் தெளிவாகக் கேட்பீர்கள். எனவே, பாவத்துக்கு உணர்வுள்ளவர்களாய் இருப்பதின் மூலமாகவும், தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதின் மூலமாகவும் உங்களை ஒவ்வொரு நாளும் ஆவிக்குள்ளாக வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த புதிய வருடத்தில் கர்த்தர் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக.