WFTW Body: 

தேவனின் முகத்திற்கு முன்பாக ஒரு விசுவாசி வாழவில்லையென்றால், தன்னுடைய உண்மையான ஆவிக்குரிய நிலையைக் குறித்து அவன் அறியாமல் இருப்பது மிகவும் எளிது. வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள ஏழு சபைகளின் மூப்பர்களுக்குக் கர்த்தர் கொடுத்த கண்டிப்புகளிலிருந்து இது தெளிவாகிறது. லவோதிக்கேயா சபையின் தூதருக்கு (மூப்பருக்கு), "நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியவில்லை”, என்று அவர் கூறினார் (வெளிப்படுத்துதல் 3:17).

நம் இதயத்தில் மறைந்திருப்பதை வெளியரங்கப்படுத்துவதற்காக தேவன் வெவ்வேறு சூழ்நிலைகளை நம் வாழ்வில் அனுமதிக்கிறார். பல ஆண்டுகளாக நாம் வெவ்வேறு நபர்களுடன் அனுபவித்த கடினமான அனுபவங்களின் விளைவாகப் பல விரும்பத்தகாத நினைவுகளை நம் இதயத்தில் சேர்த்து வைத்திருக்கிறோம். அவை நம் இதயத்தின் அடிப்பகுதியில் மறைந்திருக்கின்றன - நாமோ நமது இதயங்கள் சுத்தமாக இருப்பதாகக் கற்பனைச் செய்துகொள்கிறோம். பின்னர் தேவன் சில சிறு காரியத்தை நடக்க அனுமதிக்கிறார். அது நம் இதயத்தின் அடிப்பகுதியில் கிடக்கிற அழுகிப் போனவற்றையெல்லாம் கிளறி, அவைகளையெல்லாம் நம் மனதிற்குக் கொண்டுவருகிறது. அந்த நேரத்தில்தான் நம்மை நாமே சுத்திகரித்துக்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களை மன்னித்து, அவர்களை நேசிக்க முடிவு செய்ய வேண்டும். இவற்றிலிருந்து நம் இதயத்தைச் சுத்திகரித்துக்கொள்ள இதுபோன்ற ஒரு வாய்ப்பை நாம் பயன்படுத்தாவிட்டால், கொந்தளிப்பு முடிந்தபின், அவைகள் மீண்டும் இதயத்தின் அடிப்பகுதிக்குச் சென்று அங்கேயே தங்கிவிடும். எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என்று நாம் கற்பனை செய்யக்கூடும். ஆனால் நன்றாக இல்லை. மற்றொரு சிறிய நிகழ்வு, அவை அனைத்தையும் மீண்டும் நம் மனதிற்குக் கொண்டு வரும். எனவே ஒவ்வொரு முறையும் நம் இதயத்தின் மேற்பரப்பிற்கு ஏதாவது வரும்போது, அவற்றிலிருந்து நம்மை நாமே சுத்திகரித்துக்கொள்ள வேண்டும்.

தனது இளைய சகோதரன் மீது எப்படியாகத் தவறான மனப்பான்மையைக் கொண்டிருந்தான் என்பதைக் கெட்ட குமாரனின் மூத்த சகோதரன் காரியத்தில் நாம் காண்கிறோம். ஆனால் அவன் சகோதரன் திரும்பியபின், அவனுக்காக ஒரு விருந்து செய்யப்பட்ட போதுதான், இது (தவறான மனப்பான்மை) மேற்பரப்பில் தோன்றியது. அவனது வார்த்தைகள் உண்மையா இல்லையா என்பதைச் சரிபார்க்காமல், தான் கற்பனை செய்த குற்றச்சாட்டுகளுடன் சகோதரனை எவ்வாறு குற்றஞ்சாட்டினான் என்பதைப் பார்க்கிறோம் (உதாரணமாக, "வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்டான் - லூக்கா 15:30" என்று இளைய சகோதரனைப் பற்றிக் கூறுகிறான்). ஒருவருடன் நமக்கு ஒரு நல்ல உறவு இல்லாதபோது, அவரைப் பற்றி மோசமான விஷயங்களையே நாம் எப்போதும் நம்புவோம்.

"எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது" (லூக்கா 15:31) என்று தகப்பன் மூத்த குமாரனிடம் கூறினார். தனது தகப்பன் கொடுத்ததிலே லயித்துப்போய் இருப்பதற்குப் பதிலாக, தனது சொந்த சாதனைகளிலே மூத்த சகோதரன் லயித்துப்போய் இருந்தான்: “இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தேன்” (லூக்கா 15:29). தன்னுடைய சகோதரனின் குறைபாடுகளைக்குறித்தும் அவன் லயித்துப்போய் இருந்தான்: "உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இந்த மகன்" (லூக்கா 15:30). அந்த தகப்பனைப் போலவே, "எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது" என்று தேவன் கூறுகிறார். இயேசுவில் உள்ள அனைத்தும் நம்முடையது - அவருடைய எல்லா தூய்மையும், அவருடைய எல்லா தயையும், அவருடைய எல்லா பொறுமையும், அவருடைய எல்லா மனத்தாழ்மையும், இது போன்ற அனைத்தும் நம்முடையது.

இந்த கதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இதுதான்: உங்கள் சொந்த சாதனைகளிலோ அல்லது உங்கள் சக விசுவாசிகளின் தோல்விகளிலோ லயித்துப்போய் இருக்காமல், தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தில் எப்போதும் லயித்துப்போய் இருங்கள்.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருவதே (2 பேதுரு 3:18) நமது இலக்காய் இருக்க வேண்டும். 2 கொரிந்தியர் 8:9 -ல் கிருபையின் மற்றொரு விளக்கம் உள்ளது - “நம்மை ஆசீர்வதிக்கும்படியாக, இயேசு ஐசுவரியமுள்ளவராயிருந்தும் நமது நிமித்தமாகக் கிருபையினாலே தரித்திரரானார்.” நம் வாழ்க்கையிலும் கிருபை இதைத்தான் செய்யும். தேவை நிறைந்த உலகிற்கு நாம் ஒரு ஆசீர்வாதமாக இருக்கக்கூடுமானால், நாம் சிறியவர்களாகவும், அங்கீகரிக்கப் படாதவர்களாகவும், மற்றவர்களால் வெறுக்கப் படுபவர்களாகவும், மற்றவர்களின் பார்வையில் தரித்திரர்களாகவும் இருக்க தயாராக இருப்போம். இயேசு தம் பிதாவிடமிருந்து கிருபையைப் பெற்றபடியால், அவர் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்தார் (அப்போஸ்தலர் 10:38). இதைத் தான் கிருபை உங்களுக்கும் செய்ய முடியும் - உங்களை மற்றவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக ஆக்கும்.

இயேசு ஒரு கடினமான சூழ்நிலையைச் சந்தித்தபோது, “பிதாவே இந்த வேளையினின்று என்னை இரட்சியும்” என்று அவர் ஜெபிக்கவில்லை, மாறாக "பிதாவே உமது நாமத்தை மகிமைப்படுத்தும்" என்று ஜெபித்தார் (யோவான் 12:27,28). இப்படித்தான் நீங்களும் கடினமான சூழ்நிலைகளில் ஜெபிக்க வேண்டும். இலகுவான வாழ்க்கையைத் தேடாமல், நீங்கள் எவ்வளவு விலைக்கிரயம் செலுத்தவேண்டியதாயினும், தேவனை மகிமைப்படுத்தும் ஒரு வாழ்க்கையையே தேடவேண்டும். தேவன் நமக்கு அனுமதித்த கடினமான நபர்களையோ அல்லது கடினமான சூழ்நிலைகளையோ மாற்றும்படி தேவனிடம் கேட்க வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உங்களை மாற்றும்படி அவரிடம் கேளுங்கள். அப்படியாகத் தொடர்ந்து ஜெபிப்பவர்கள் கிருபையிலே வளர்ந்து, கடந்த கால தோல்விகள் இருப்பினும், மெய்யான பரிசுத்தவான்களாய் இருப்பார்கள். "என் கிருபை உனக்குப் போதும்" (2 கொரிந்தியர் 12:9) என்ற வாக்குத்தத்தத்தை நினைத்துப் பாருங்கள். நீங்கள் செய்ய வேண்டிய ஒவ்வொரு பணிக்கும் தேவனுடைய கிருபை போதுமானது. நீங்கள் எந்த காலத்திலும் சந்திக்கக் கூடிய ஒவ்வொரு சோதனைக்கும் பிரச்சினைக்கும் இந்த கிருபை போதுமானது.