WFTW Body: 

நம் ஜீவியத்தின் பலதரப்பட்ட விஷயங்களைக் குறித்து நாம் ஒவ்வொரு நாளும் தீர்மானங்களை எடுக்கிறோம். நம் பணத்தை எவ்வாறு செலவழிக்கப் போகிறோம்? நம் ஓய்வு நேரத்தை எவ்வாறு கழிக்கப் போகிறோம்? பிறரிடமோ அல்லது பிறரைப்பற்றியோ எப்படிப் பேசுவது? ஒரு குறிப்பிட்ட கடிதத்தை எவ்வாறு எழுதுவது? பிறருடைய நடத்தைக்கு எவ்வாறு எதிர்செயலாற்றுவது? வேத வார்த்தையைப் படிப்பதற்கும், ஜெபம் செய்வதற்கும், சபைக்கு ஊழியம் செய்வதற்கும் எவ்வளவு நேரம் செலவிடுவது? இதுபோன்ற அநேக கேள்விகளுக்கு ஒவ்வொரு நாளும் நாம் தீர்மானங்களை எடுக்கிறோம். காலை துவங்கி இரவுவரை நம்மைச் சுற்றியுள்ள ஜனங்களின் நடத்தைக்கு ஒருசில விதமாக நாம் எதிர்செயலாற்றவும் செய்கிறோம். நாம் உணராமலேயே ஒவ்வொரு நாளிலும் குறைந்தபட்சம் நூறு தீர்மானங்களையாவது எடுக்கிறோம் - அந்த ஒவ்வொரு தீர்மானங்களிலும் நம்மைப் பிரியப்படுத்தவோ அல்லது தேவனைப் பிரியப்படுத்தவோ தீர்மானிக்கிறோம்.

நம்முடைய அநேக செயல்கள் மனமறிந்து செய்கிற தீர்மானங்களின் விளைவாக இருப்பதில்லை. மனமறியாமல் செய்தாலும் கூட, நம்மைப் பிரியப்படுத்துவதற்கோ அல்லது தேவனை மகிமைப்படுத்துவதற்கோ ஆகிய இவ்விரண்டில் ஒன்றைத் தான் நாம் செய்கிறோம். நாம் மனமறியாமல் செய்கிற செயல்கள், மனமறிந்து எவ்விதமாக தீர்மானங்களை எடுக்கிறோம் என்பதை பொருத்துதான் உள்ளது. இறுதியாக, இப்படிப்பட்ட தீர்மானங்களின் மொத்த கூட்டுத்தொகையே, நாம் ஆவிக்குரியவர்களாய் மாறுவோமா அல்லது மாம்சத்திற்குரியவர்களாய் மாறுவோமா என்பதை நிர்ணயம் செய்கிறது.

நாம் முதல் முறை மனந்திரும்பியதிலிருந்து தீர்மானித்த லட்சக்கணக்கான தீர்மானங்களைச் சிந்தித்துப்பாருங்கள். ஒவ்வொரு நாளும் பலமுறை தொடர்ச்சியாக மனமறிந்து தங்களுடைய சுய சித்தத்தை வெறுத்து, தேவனுடைய சித்தத்தைச் செய்யத் தெரிந்துகொண்டவர்கள் ஆவிக்குரியவர்களாய் மாறியுள்ளனர். மறுபக்கத்தில், தங்களுடைய பாவ மன்னிப்பில் மாத்திரமே சந்தோஷமாயிருந்து, அநேக சமயங்களில் தங்களையே பிரியப்படுத்தத் தெரிந்துகொண்டவர்கள் மாம்சத்திற்குரியவர்களாவே இருக்கிறார்கள். அவரவர் எடுக்கும் தீர்மானங்களே இறுதியில் அவர் எத்தகையவராய் மாறுவர் என்பதை நிர்ணயம் செய்கிறது

கடந்த ஆண்டுகளில் வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளில் நீங்கள் எடுத்த ஆயிரக்கணக்கான தீர்மானங்களின் மூலம் எவ்வளவாக தாழ்மையாகவும் பரிசுத்தமாகவும் அன்பாகவும் இருக்க நீங்கள் தெரிந்துக்கொண்டீர்களோ அவ்வளவாகவே தாழ்மையாகவும் பரிசுத்தமாகவும் அன்பாகவும் இன்று இருக்கிறீர்கள். மனந்திரும்பி பத்து வருடங்களான இரண்டு சகோதரர்களின் (ஒரே நாளில் மனந்திரும்பி கிறிஸ்துவுக்குள்ளானவர்கள்) ஆவிக்குரிய நிலைமையைக் கவனித்துப் பாருங்கள். ஒருவர் இப்பொழுது ஆவிக்குரிய பகுத்தறிவை உடையவராய் முதிர்ந்த சகோதரனாக இருக்கிறார். அவரிடம் சபையில் அதிக பொறுப்புகளைத் தேவனால் கொடுக்க முடிகிறது. மற்றொருவர் பகுத்தறிவு இல்லாமல் இன்னும் குழந்தையைப் போல இருக்கிறார். சபையிலுள்ள மற்றவர்களே அவருக்குத் தொடர்ச்சியாகப் போதித்து அவரைத் தொடர்ச்சியாக உற்சாகப்படுத்த வேண்டியிருக்கிறது. இவ்விருவருக்கு இடையிலான இவ்வளவு பெரிய வித்தியாசத்திற்குக் காரணம் என்ன? தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் கடந்த பத்து வருடங்களில், ஒவ்வொரு நாளும் எடுத்த சிறு தீர்மானங்களே காரணமாகும்.

இன்னும் பத்து வருடங்கள் அவர்கள் அதே வழியில் தொடர்ந்து சென்றால், அவர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் இன்னும் அதிகமாகத் தெரியும். ஒரு 2000-வாட் பல்பு வெளியிடும் ஒளிக்கும், ஒரு 5-வாட் பல்பு வெளியிடும் ஒளிக்கும் உள்ள வித்தியாசம் போல் அவர்களின் மகிமையின் அளவு நித்தியத்தில் வித்தியாசமாய் இருக்கும். ஒரு நட்சத்திரத்தின் மகிமைக்கும் இன்னொரு நட்சத்திரத்தின் மகிமைக்கும் வித்தியாசம் இருக்கும் (1கொரி. 15:41). எனவே பெலவீன சித்தம் (Weak-Willed) உடையவர்களாய் இருக்க வேண்டாம். எல்லா நேரங்களிலும் தேவனைப் பிரியப்படுத்த உங்களுடைய சித்தத்தைப் பயிற்சி செய்யுங்கள். உங்களுடைய கடந்தகால வாழ்க்கையில், இந்நாள் வரைக்கும் நீங்கள் எவ்வளவுதான் தோல்வியுற்றிருந்தாலும், இனிமேல் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இருக்கத் தீர்மானித்தால், நித்தியத்தில் உங்களுக்கு எந்த வருத்தமும் இருக்காது. அத்தகைய ஒழுக்கத்தோடும் முழு இருதயத்தோடும் வாழ்வதில் எந்த ஆர்வமுமில்லாத விசுவாசிகளை உங்களைச் சுற்றிலும் போதுமான அளவு காண்பீர்கள். அவர்களை நியாயந்தீர்க்கவும் வேண்டாம், பரிசேயராக இருந்து அவர்களை அற்பமாகவும் எண்ண வேண்டாம். உங்களுடைய சொந்த அலுவலை மாத்திரம் பாருங்கள், மற்றவர்களுடைய விவகாரங்களில் தலையிட வேண்டாம். வித்தியாசமுள்ளவர்களாக இருங்கள். இயேசு மாத்திரமே உங்களுக்கு முன்மாதிரியாக இருக்கட்டும். கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக உங்களுடைய வாழ்க்கையைப் பற்றி கணக்கு ஒப்புவிக்க வேண்டிய அந்த நாளை அடிக்கடி எண்ணிக் கொள்ளுங்கள்.