WFTW Body: 

மற்ற மதங்களையும் அவைகளின் விக்கிரகங்களையும் பெயர் குறிப்பிட்டு, அவற்றுக்கு விரோதமாய்ப் பேசாதபடி நாம் கவனமாயிருக்க வேண்டும். அவைகளை வேடிக்கையாய்ப் பேசுவதும் கூடாது. அப்படிப்பட்டவைகளைக் குறித்து இயேசு ஒருபோதும் பேசியதில்லை. மெய்யான தேவனை அறிந்திருப்பதாகக் கூறிக்கொண்டவர்களுடைய மாய்மாலத்தைக் குறித்தே இயேசு பெரும்பாலும் பேசினார்.

அப்போஸ்தலன் பவுலின் மாதிரியை கவனித்துப் பாருங்கள்: அவர் எபேசுவில் இருந்தபோது, சத்தியத்தை சமரசமின்றிப் பிரசங்கித்தபடியால் நகரத்தில் ஒரு பெரிய கலவரம் ஏற்பட்டது. கடைசியாக பட்டணத்து சம்பிரதியானவன் ஜனங்களை அழைத்து, “இந்த மனுஷன் உங்கள் தேவியைத் தூஷிக்கவில்லை” என எடுத்துக் கூறினான் (அப்போஸ்தலர் 19:37). பவுல் கிறிஸ்துவையே பிரசங்கித்தார். எபேசு பட்டணத்து ஜனங்கள் ஆராதித்துக் கொண்டிருந்த பொய்யான தேவர்களை அவர் இழிவாய்ப் பேசவில்லை. அவருடைய செய்தி நேர்மறையான ஒன்றாகவே இருந்தது. ஆம், அது “உங்கள் பாவங்களிலிருந்து கிறிஸ்து உங்களை இரட்சிப்பார்” என்ற செய்தியேயாகும். அது அவர்களுடைய பொய்யான தேவர்களையும், அவர்களுடைய விக்கிரகங்களையும் குறை கூறும் ஓர் எதிர்மறையான செய்தியாயிருக்கவில்லை. அப்படி அவர் செய்தது, திவ்விய ஞானமாயிருந்தது. ஒரு நபர் கிறிஸ்துவினிடத்தில் வந்த பிறகு, அந்த நபரை அவர்களுடைய விக்கிரகங்களிலிருந்து விடுவிக்கும் பணியை ஆண்டவரே செய்து விடுவார்.

இந்த ஞானத்தையே நாம் எல்லோரும் பெற்றிருக்கவேண்டும். நாம் யாதொரு மதத்தையோ, அல்லது அதன் நம்பிக்கைகளையோ, அல்லது அதன் பழக்கங்களையோ குறைகூறக் கூடாது. அது நம்முடைய செய்தி அல்ல. நாம் கிறிஸ்துவை மாத்திரமே பிரசங்கிக்க வேண்டும்: நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, இன்று பரலோகில் உயிருடன் இருக்கும், இந்த உலகை நியாயந்தீர்ப்பதற்கு சீக்கிரமாய்த் திரும்ப வரப்போகும் இயேசு கிறிஸ்துவையே பிரசங்கிக்கவேண்டும். அதுவே நம்முடைய செய்தி .ஒவ்வொருவரையும் அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து திரும்பி, கிறிஸ்துவைத் தங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளும்படி நாம் அழைக்கிறோம். ஆனால், இதைச் செய்வதற்கு நாம் ஒருவரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவைகளையே நாம் சிறு பிள்ளைகளுக்கும் கூட பிரசங்கிக்க வேண்டும். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்படி நாம் அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும், அவர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது. ஒவ்வொருவருக்கும் தேவன் சுயாதீனம் கொடுக்கிறார். நாமும் ஜனங்களுக்கு சுயாதீனம் தரவேண்டும். ஜனங்கள் மெய்யாகவே கிறிஸ்துவைத் தங்கள் ஜீவியத்தில் ஏற்றுக்கொள்ளும் போது, பரிசுத்தாவியானவர் அவர்களுடைய பாவங்களை அவர்களுக்கு உணர்த்துவிக்கிறபடியால் அவர்கள் ஜீவியத்திலுள்ள மற்ற பொய்யானவைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துவிடும்.

நம்முடைய அழைப்போ, கிறிஸ்துவே இந்த உலகத்திற்கு ஒரே இரட்சகர் என அறிவிப்பதேயாகும். மேலும் பாவத்திற்கு எதிராகவும் நாம் பேசவேண்டும். முதலாவது நம்மையே நாம் நியாயந்தீர்த்து, நம் மத்தியில் காணப்படும் மாய்மாலத்தை வெளியரங்கமாக்க வேண்டும். அநேக வைராக்கியமுள்ள ஆனால் ஞானமில்லாத சகோதரர்களும் சகோதரிகளும், சில சமயங்களில் பிற மதங்களைத் தங்கள் பேச்சிலும், தங்கள் ஜெபங்களிலும் தேவையில்லாமல் பெயர் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் குறித்து கவனமாயிருக்கும்படி நாம் அவர்களை எச்சரிக்க வேண்டும். எந்தவொரு குறிப்பிட்ட மதத்தின் பெயரையும் சொல்லாமல் “கிறிஸ்தவரல்லாதவர்கள்” என பேசுவதே நல்லது. இந்த உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி அல்லாமல் அதை இரட்சிக்கும்படிக்கே தேவன் தம்முடைய குமாரனை இந்த உலகத்திற்குள் அனுப்பினார் (யோவான் 3:17). நம்முடைய அழைப்போ இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுவதுதான். ஆகவே, நாம் எப்போதும் பிறரை இரட்சிப்பதற்கே நாடவேண்டும், அவர்களை ஆக்கினைக்குட்படுத்த அல்ல!