WFTW Body: 

இயேசு இப்பூவுலகிலே ஒரு மனிதனாக எவ்விதமாய் வாழ்ந்தார் என்பதைக் காண்பிக்கக் கூடிய ஒரு வசனம் இதோ: "நீர் நீதியை விரும்பி அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்" (எபிரேயர் 1:9).

இயேசு பூமியில் வாழ்ந்தபோது, மனிதர்களாகிய நம்முடைய எல்லா வரம்புகளையும் கொண்டு வாழ்ந்தார். எனவே அவர் அபிஷேகம் பண்ணப்பட அவசியமாயிருந்தது. பிதாவாகிய தேவனுக்கு அபிஷேகம் தேவையில்லை. இயேசுவுக்கும், பரலோகத்தில் இருந்தபோது, அபிஷேகம் தேவைப்படவில்லை. ஆனால் அவர் பூமியில் இருந்தபோது, நமக்கு முன்மாதிரியாக இருக்கும்படிக்கு, அபிஷேகிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. தேவன் ஏன் இயேசுவை, அவருடைய தோழரைப் பார்க்கிலும் ஆனந்தத் தைலத்தினால் (சந்தோஷத்தினால்) அபிஷேகம் பண்ணினார் என்ற காரணத்தை இந்த வசனம் நமக்குச் சொல்கின்றது. அதற்கு ஒரேயொரு பிரதான காரணம் என்னவெனில், அவர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்ததுதான். அவர் பரிசுத்தத்தை விரும்பி, பாவத்தை வெறுத்தார்.

நீதியைச் செய்வதற்கும், நீதியை விரும்புவதற்கும் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது. தன் தகப்பனுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற விருப்பம் இல்லாமலேயே ஒரு பிள்ளையால் கீழ்ப்படிந்து விட முடியும். இயேசு வெறுமனே நீதியைச் செய்யவில்லை; அவர் நீதியை விரும்பினார். அதே போல அவர் பாவத்தைத் தவிர்க்கவில்லை; அவர் அதை வெறுத்தார்.

இந்நாட்களில், பாலியல் பாவத்தின் மூலமாக ஜனங்கள் பெறும் கொடிய நோய்களில் ஒன்று எய்ட்ஸ் நோயாகும். ஆகவே எய்ட்ஸ் வந்துவிடும் எனப் பயந்து, அநேகர் வேசித்தனம் செய்வதில்லை. அவர்கள் பாலியல் பாவத்தை வெறுக்கவில்லை. ஆனால் எய்ட்ஸ் வந்துவிடும் என அஞ்சுகிறார்கள். அதைப் போலவே அநேகர் திருடுகிற குற்றத்தைச் செய்வதில்லை. மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தினால்தான், அவர்கள் அதைச் செய்வதில்லையே அன்றி திருடுவதை வெறுப்பதினாலல்ல. இப்படியே நீங்கள் எந்தப் பாவத்தை வேண்டுமானாலும், அதை வெறுக்காமலேயே தவிர்த்துவிட முடியும்.

ஆனால் நீங்கள் ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகிக்கப்பட விரும்பினால், நீங்கள் நீதியை விரும்பி, பாவத்தை வெறுக்க வேண்டும். இந்தக் காரணத்திற்காகத்தான், இயேசு மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகிக்கப்பட்டதாக இங்குச் சொல்லப்படுகிறது.

தேவனிடத்தில் பாரபட்சம் கிடையாது. ஒரு நல்ல தகப்பன் தன்னுடைய மற்ற பிள்ளைகளை விட மூத்த மகனை மாத்திரம் அதிக பட்சமாய் நடத்த மாட்டான் - அவனிடம் பாரபட்சமே இருக்காது. அவன் மூத்த மகனுக்கு என்ன செய்கிறானோ, அதையெல்லாம் மற்ற பிள்ளைகளுக்கும் செய்வான். பிதாவாகிய தேவனும் இவ்விதமாகத்தான் இருக்கிறார். இயேசு அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவர் என்று அழைக்கப்படுகிறார். மறுபடியும் பிறந்த நாமனைவரும் அவரது இளைய சகோதரர்களாய் இருக்கின்றோம். இயேசு மூத்த குமாரனாய் இருக்கிறார். தேவன் பாரபட்சம் இல்லாதவராக இருப்பதால், தம்முடைய மூத்த குமாரனாகிய இயேசுவுக்கு என்ன செய்தாரோ, அதையே நமக்கும் செய்வார். இயேசு நிறைவேற்றிய அதே நிபந்தனைகளை நானும் நிறைவேற்றினால், தேவன் இயேசுவுக்கு என்ன செய்தாரோ அதையே எனக்கும் செய்வார். கிறிஸ்துவின் மானிடத்தன்மையை அறிந்து கொள்வதின் மூலமாக நாம் கண்டுபிடிக்கும் மிகப்பெரிய சத்தியங்களில் இதுவும் ஒன்றாகும்.

“இயேசு தேவனுடைய குமாரனாக இருந்த காரணத்திற்காக ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகிக்கப்பட்டார்” என்பதாக இங்கு எழுதப்பட்டிருந்தால், அது நமக்கு எவ்விதத்திலும் ஓர் ஊக்கமளிக்கிறதாகவோ, சவாலாகவோ இருந்திருக்க முடியாது. ஆனால், “அவர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்தபடியால், ஆனந்தத் தைலத்தால் அபிஷேகிக்கப்பட்டார்” என்று எழுதியிருக்கிறபடியால், நாம் நீதியை விரும்பி, பாவத்தை வெறுத்தால், அதைப் போலவே நாமும் அபிஷேகிக்கப்பட முடியும் என்ற நம்பிக்கையை இது நமக்குத் தருகின்றது. ஆகவே, "கர்த்தாவே நீர் உம்முடைய பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு என்னுள்ளத்திலே கிரியை செய்து, நான் நீதியைச் செய்கிறவனாய் மாத்திரம் இல்லாமல், அதை விரும்புகிறவனாகவும் என்னை மாற்றும்; நான் பாவத்தைத் தவிர்க்கிறவனாக மாத்திரம் இல்லாமல் அதை வெறுக்கிறவனாகவும் மாற்றும்" என்று நாம் ஜெபிக்க வேண்டும்.

நாம் எவ்வளவு அதிகமாய் நீதியை விரும்பி, பாவத்தை வெறுக்கிறோமோ, அவ்வளவு அதிகமாய் பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தினால் நிரப்பப்படுவோம். நீதியும், பரிசுத்த ஆவியின் சந்தோஷமுமாய் இருக்கிற தேவனுடைய ராஜ்ஜியமானது நம்முடைய இருதயங்களுக்குள் வந்து நம்மை நிரப்பிவிடும் (ரோமர் 14:17). அப்பொழுது "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்" (பிலிப்பியர் 4:4) என்று சொல்லுகிற கற்பனைக்குக் கீழ்ப்படிவது நமக்குச் சாத்தியமாகும்.