WFTW Body: 

ஆகஸ்ட் 1993 -ல் ஒரு நாள் நான் இரயில் தண்டவாளத்தைக் கடக்கும் போது என் இரு சக்கரவாகனத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டேன். அப்போது தேவன் என் உயிரைக் காப்பாற்றினார். இரயில்வே-தடுப்புக்கதவை இயக்குபவர் ஒரு புதியவராக இருந்த படியால், நான் அதைக் கடக்கும் முன் இரண்டாவது தடுப்புக்கதவைக் கீழே இறக்கி விட்டார்; அதனால், அது என் மார்பில் மோதி என்னை இடித்துக் கீழே விழ வைத்தது. சிறிது நேரம் சுயநினைவின்றி, இரயில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்தேன் - எவ்வளவு நேரம் விழுந்து கிடந்தேன் என்று தெரியவில்லை. யாரோ ஒருவர் இரயில் வருவதற்குள் என்னைத் தூக்கி எடுத்து விட்டார். நான் இப்போது மரித்தோரிலிருந்து மீண்டு வந்தவனாக உணர்கிறேன் (ஏனெனில் என்னுடைய இந்த சம்பவத்தில் மரணம் கூட நேர்ந்திருக்கலாம்).

என் வாழ்நாள் முழுவதும் நான் தேவனுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை நினைவூட்டும் ஒரு புதிய நினைவூட்டலாக இது எனக்கு இருந்தது. என் நேரத்தையோ, சக்தியையோ, பணத்தையோ நான் விரும்பியபடி செலவிட முடியாது. எனக்கு பிடித்ததை என்னால் படிக்க முடியாது. நான் விரும்பியதை என்னால் பேச முடியாது. தேவனை மகிமைப்படுத்துவது எது என்பதை வைத்தே அவையெல்லாம் தீர்மானிக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது. அத்தகைய வாழ்க்கை வாழ்வதற்கு சிரமமாக இருக்காது (அது சிரமமானது என்று சாத்தான் நம்மை நம்ப வைப்பான்), ஆனால் மனிதன் வாழக்கூடிய வாழ்க்கையிலே மிகவும் மகிமையான ஒரு வாழ்க்கை இருக்குமானால் அது இப்படிப்பட்ட வாழ்க்கையே ஆகும் - ஏனென்றால் நம் ஆண்டவர் அப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார். உங்களுக்கும் சாலைகளில் மரணத்துக்கேதுவான விபத்துகளைச் சந்தித்த அனுபவங்கள் இருக்கலாம். ஆனால் உங்களைத் தக்க சமயத்தில் தேவ தூதர்கள் பாதுகாத்தார்கள். ஆகவே, என்னைப்போலவே நீங்களும் தேவனுக்கு கடமைப்பட்டவர்களாயிருக்கிறீர்கள். எனவே நம்முடைய உயிரைக் காப்பாற்றியதற்காக தேவனைத் துதியுங்கள். மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவர்களை போலவே நாமும் வாழ்வோமாக.

விபத்துக்குப் பிறகு சுளுக்கிய என் கை மற்றும் தோள்பட்டை, விபத்து நடந்த 3 வாரங்களில், 95% இயல்பு நிலைக்குத் திரும்பியது. இது ஒரு அதிசயம், அதற்காக நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். அந்த 3 வாரங்களில் நான் கற்றுக்கொண்ட விஷயங்களில் ஒன்று என்னவென்றால், வாழ்க்கையின் அனுதின காரியங்களை மிக சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அந்த 3 வாரங்களில், என் கைகளை உயர்த்தி தேவனைத் துதிக்கக்கூட என்னால் முடியவில்லை. இரு கைகளை உயர்த்தி தேவனைத் துதிக்கும் சிலாக்கியத்திற்காக, 54 ஆண்டுகளில் முதன்முறையாக தேவனுக்கு நன்றி தெரிவித்தேன். அதுவரை அந்த செயலை மிக சாதாரணமாகவே எடுத்திருந்தேன். இந்த உணர்வானது, கண்கள், காதுகள் மற்றும் நாக்கு போன்ற என் சரீரத்தின் மற்ற உறுப்புகளைப் பயன்படுத்தும் போதும் என்னை நன்றியுடன் இருக்க வைத்தது.

எல்லாவற்றிற்காகவும் தேவனுக்கு நன்றி சொல்ல நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மீனின் வயிற்றில் இருந்த யோனாவின் ஜெபம் மிகவும் அறிவுறுத்துகிறதாய் இருக்கிறது. (யோனா 2). அது ஒரு நெருக்கமான இடமாக இருந்தாலும், மீனின் வயிற்றில் இருந்த அமிலங்கள் அவன் மீது விழுந்தாலும், யோனா தன்னை அங்கே இருக்க அனுமதித்ததற்காக தேவனுக்கு நன்றி கூறினான். அவன் தேவனுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தபோதுதான், யோனாவை கரையில் கக்கும்படி கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார் (யோனா 2:9,10 -ஐ கவனமாகப் படியுங்கள்).

எனவே உங்கள் வீட்டைக் குறித்தோ அல்லது உணவைக் குறித்தோ அல்லது சூழ்நிலையைக் குறித்தோ குறைகூறாதீர்கள். நன்றியறிதல் உள்ளவர்களாய் இருங்கள். பரந்த உலகத்திற்குச் சென்று, வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதைக் கண்டறியும் வரை, பல பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கும் தங்கள் வீட்டிற்கும் நன்றியுடன் இருப்பதில்லை. யோனா விடுவிக்கப்பட்டதைப் போல - நன்றியுணர்வு உள்ள ஆவியானது பல சிறைகளில் இருந்து உங்களை விடுவிக்க முடியும்.