WFTW Body: 

கிறிஸ்துவை சமநிலையாக உலகத்திற்குக் காண்பிப்பதற்காக, தேவன் நாம் பெற்றுள்ள பலவிதமான மனோபாவங்களையும், திறமைகளையும் பயன்படுத்துகின்றார். நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக கிறிஸ்துவின் சாயலை மிகச் சிறந்த வகையில் காட்ட முனைந்தால், அச்சாயலானது சிதைவுற்றதும் சமநிலையற்றதுமாகத்தான் இருக்க முடியும். ஒரு தனிப்பட்ட நபரின் ஊழியத்தின் மூலமாக விளையும் பலனானது, சமநிலையற்ற கிறிஸ்தவர்களை உருவாக்குவதாகத்தான் இருக்கும். வேறுபட்ட வலியுறுத்தல்களையும், மனோபாவங்களையும் உடைய மற்றவர்களும் சரீரத்திலே இருக்கிறார்கள் என்பதற்காக நாம் மிகுந்த நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு விசுவாசிகள் கூட்டத்திற்கு இரண்டு சகோதரர்கள் தேவனுடைய வார்த்தையைப் பகிர்ந்து கொடுக்கும் ஊழியத்தைச் செய்வதாக வைத்துக் கொள்ளலாம். அவர்களில் ஒருவர், "நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டதாக மிகவும் ஆணித்தரமாக நம்பி உங்களையே வஞ்சித்துக் கொள்ள வேண்டாம்" என்று சொல்ல, இன்னொருவரோ, "நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டதை உறுதியாய் விசுவாசியுங்கள்" என்று சொல்லுகிறார். மேலோட்டமாய்ப் பார்க்கும்போது அவர்கள் இருவரும் முரண்பட்டு நிற்பது போலத்தான் தோன்றும். ஆனால் இவ்விரு ஊழியங்களுமே ஒன்றோடொன்று இணைந்து நிறைவு உண்டாக்குகிறவையாக இருப்பதால், இருவரது வலியுறுத்துதல்களுமே அவசியமாகின்றன.

கிறிஸ்துவின் சரீரத்திலே கால்வினியக் கொள்கையைப் பின்பற்றுகிறவர்களும் (Calvinists), ஆர்மீனியக் கொள்கையைப் பின்பற்றுகிறவர்களும் (Armenians) ஒன்றிணைந்து செயல்படலாம். அந்த இரண்டு கண்ணோட்டங்களுமே வேதாகமத்தில் இருக்கிறபடியால், அவரவர் தங்களுடைய தனித்துவமான வலியுறுத்தல்களைக் கொண்டுவரலாம். சார்லஸ் சிமியோன் என்பவர் ஒருமுறை, "சத்தியமானது மத்தியிலும் இல்லை, ஒரு கோடியிலும் இல்லை, ஆனால் அது இரு கோடியிலுமே உள்ளது" என்று இதைப் பற்றிக் குறிப்பிட்டார். ஆகவே இருவேறு நிலைகளைக் காண்பிக்கிற இருவகை ஜனங்களுமே நமக்குத் தேவை.

இன்னுமாக, சபையிலே கூச்ச சுபாவமுள்ளவர்களுக்கும், கூச்சப்படாமல் 'வெளிச்செல்லும்' (outgoing) சுபாவமுள்ளவர்களுக்கும் இடமுண்டு. இந்த வித்தியாசமான குணநலன்கள் ஒன்றோடொன்று இணைந்து நிறைவு உண்டாக்குகிறவையாக இருக்க முடியும். சிலர் மிகுந்த முன்னெச்சரிக்கை உடையவர்களாக இருப்பதுண்டு; அவர்கள் ஒருபோதும் அதிக சிந்தனையின்றி ஒரு அடி கூட எடுக்க மாட்டார்கள், காரியத்தின் நன்மை தீமைகளை எல்லாம் ஆழ்ந்து எண்ணிப்பார்த்து, காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்று நீண்ட காலம் யோசித்துக் கொண்டே இருப்பார்கள். வேறு சிலரோ உற்சாக மிகுதியால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் ஆழ்ந்து ஆராயாமல், காரியத்தைச் செய்ய முனைகிறார்கள். இவ்விரு வகையினரும் (வேறு வகையினரும்) கிறிஸ்துவின் சரீரத்திலே இருப்பதால், அங்கே ஒரு சமநிலை உள்ளது. சரீரமானது தயக்கத்துடன் ஆழ்ந்து யோசிப்பவர்களை மட்டுமே கொண்டிருந்தால், முன்னேற்றம் மிகவும் மெதுவாக இருந்துவிடக்கூடும். மாறாக, சரீரமானது உற்சாகமுள்ள ஆர்வலர்களை மட்டுமே கொண்டிருந்தால், மிகவும் அதிகமான முடிக்கப்படாத திட்டங்கள் இருந்துவிடக்கூடும்.

ஒவ்வொரு மனோபாவத்திற்கும் பெலன்களும் பெலவீனங்களும் உள்ளன. பலவிதமான மனோபாவங்களைக் கொண்ட பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து கிறிஸ்தவர்களாகப் பணியாற்றும் போதுதான், கிறிஸ்துவின் சாயலை இவ்வுலகத்திற்கு மிக முழுமையாகவும், மிகத் துல்லியமாகவும் வெளிப்படுத்த முடியும். ஆகவே சரீரத்திலுள்ள ஒவ்வொருவரையும் நம்மைப் போலவே மாற்ற முயற்சிப்பதிலே நாம் நம்முடைய நேரத்தை விரயமாக்க வேண்டாம். ஒவ்வொருவரும் அவராகவே இருக்க நாம் அனுமதிக்க வேண்டும். பிறருடைய பலவீனங்களை நம்முடைய பலத்தைக் கொண்டு எப்படித் தாங்கலாம் என்பதைப் பற்றியே நமது கவனம் முழுவதையும் செலுத்த வேண்டும். அதே வண்ணமாக நம்முடைய பலவீனத்தை அவரது பலம் தாங்கும்.

இருவேறு மனோபாவங்களைக் கொண்ட பேதுருவும், யோவானும் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்டார்கள். அதன் விளைவாக அவர்கள் இருவரும் தனித்தனியாக ஊழியம் செய்ததால் உண்டாகும் மகிமையைக் காட்டிலும், ஒன்றிணைந்து ஊழியம் செய்ததன் மூலமாக அதிகமான மகிமையைத் தேவனுக்குக் கொண்டுவந்தார்கள். பவுலும், தீமோத்தேயுவும் தங்களுடைய மனோபாவங்களிலே வித்தியாசமானவர்கள் என்பது மிகப் பளிச்சென்று தெரிந்தாலும், சுவிசேஷத்திற்காகப் போராடுவதிலே மிக வலிமையான ஒரு அணியாக அமைந்தனர்.

சபையிலே அதிபுத்திசாலிகளும் உண்டு, சாதாரண அறிவுடையவர்களும் உண்டு. ஆகவே இயல்பாகவே அவர்கள் தேவனுடைய சத்தியத்தைக் கொண்டுவருகிற விதத்திலே வேறுபட்டுத்தான் இருப்பார்கள். ஆனால் இவர்கள் இருவருமே ஒருவரையொருவர் நிந்திக்கவோ குறை கூறவோ கூடாது. ஏனெனில் நாம் வாழும் இந்த உலகிலே அறிவுஜீவிகளும், பாமர மக்களும், தத்துவஞானிகளும், இல்லத்தரசிகளும், மாணவர்களும், விவசாயிகளும், மற்ற வெவ்வேறு விதமானவர்களும் கலந்து காணப்படுவதால், அவர்களுக்கெல்லாம் சுவிசேஷத்தைச் சுமந்து செல்ல இவ்விருவருமே சரீரத்திற்குச் சரிசமமாகத் தேவைப்படுகின்றனர். தேவனுக்கு அவரது பணியைச் செய்ய மேதையும், பண்டிதனுமான ஒரு பவுல் தேவைப்பட்டது போலவே, கல்லாத மீனவனான ஒரு பேதுருவும் தேவைப்பட்டார். ஒரே நற்செய்தியைப் பிரசங்கிப்பதிலே இருவரும் வெவ்வேறு பாணியைப் பின்பற்றினர். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான பணிக்களம் இருந்தது. அவர்களில் ஒருவரைக் கொண்டு தேவன் செய்து முடித்த காரியத்தை இன்னொருவரால் செய்திருக்கவே முடியாது.

ஒரு மனிதனின் மனமாற்றமானது, அவனுடைய அறிவுத் திறன்களை மாற்றி அமைப்பதுமில்லை, அவன் தன்னுடைய சமூக அந்தஸ்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்துவதுமில்லை. சுவிசேஷமானது இப்பூமியிலே உள்ள சமூகத்தின் பன்முகத்தன்மையை (பலதரப்பட்ட சமூக நிலைகளை) ஒழித்துவிடுவதில்லை. இருப்பினும் கிறிஸ்துவுக்குள் இந்த சமுதாய வேறுபாடுகளெல்லாம் அர்த்தமற்றவை. தேவனுக்கு பிலேமோன் போன்ற ஒரு செல்வந்தன் தேவைப்பட்டதைப் போலவே, பிலேமோன் வீட்டில் வேலையாளாய் இருந்த ஒநேசிமுவும் அவருக்குத் தேவைப்பட்டான். அவர்களது சமுதாய நிலைகளும், வாழ்க்கைத் தரங்களும் மாறாமலேயே இருந்தன. ஆனால் அவர்கள் இருவருமே கிறிஸ்துவின் சரீரத்திற்கு ஒரு தனித்துவமான பங்களிப்பை அளித்தனர். ஒருவர் இன்னொருவரின் பங்கை நிறைவேற்ற முடியாததாக இருந்தபடியால், அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து சுவிசேஷத்திற்காகக் கடினமாக உழைக்க முடிந்தது.

ஓர் ஆலையில் உற்பத்தியாகி வெளிவரும் ஒரே மாதிரியான மோட்டார் கார்களைப் போலவே, ஒரே மாதிரியான மக்களால் சபையானது நிரம்பி இருக்க வேண்டுமென்பது தேவனுடைய நோக்கமல்ல. சரீரத்தின் ஊழியம் என்பது, அதன் அவயவங்களின் பல்வேறு வகைகளைப் பொறுத்தது. எல்லாரும் ஒரே மாதிரியாக இருந்துவிட்டால், சரீரத்திலே ஒரு தேக்கமும், ஆவிக்குரிய மரணமும் ஏற்பட்டுவிடும்.

நம்மிடையே எழும் கருத்து வேறுபாடுகளைக் கூடத் தேவன் பயன்படுத்தி, நம்மை ஓர் ஆழமான ஐக்கியத்திற்கு நேராகவும், ஆவிக்குரிய முதிர்ச்சிக்கு நேராகவும் நடத்துகிறார். நீதிமொழிகள் 27:17-ஆம் வசனத்தை, "ஒரு நட்பான கலந்துரையாடலானது, இரும்பை இரும்பு கருக்கும் போது வெளிப்படும் தீப்பொறியைப் போலத் தூண்டிவிடுவதாக இருக்கும்" என்று Living Bible மொழிபெயர்க்கின்றது. தீப்பொறி பறக்கத்தான் செய்யும். ஆனால் இதன் மூலமாக இரு இரும்புத் துண்டுகளும் ஒன்றையொன்று கூர்மையாக்கி விடும். சில நேரங்களில், தேவன் வெவ்வேறு மனோபாவங்களை உடைய இரு நபர்களைத் தம்முடைய பணியிலே ஈடுபடுத்துகிறார். அவர்கள் சேர்ந்து பணியாற்றுகிற வேளையிலே, அவர்களுக்கு நடுவே தீப்பொறி பறக்க நேரிடலாம். அவர்களைக் கூர்மையாக்குவதற்கு தேவன் தெரிந்து கொண்ட வழி இதுவாக இருக்கக்கூடும். அவர்களில் ஒருவர் இரும்பாகவும், மற்றொருவர் களிமண்ணாகவும் இருந்தால், அவர்களுக்கிடையில் தீப்பொறியும் பறக்கப் போவதில்லை; அவர்கள் கூர்மையாக்கப்படப் போவதுமில்லை. அதற்குப் பதிலாக அந்த இரும்பின் உருவமானது அந்தக் களிமண்ணில் பதிந்து கிடக்கும். அதாவது இரும்பைப் போன்ற வலியச் சித்தம் கொண்ட நபர், களிமண்ணைப் போல பெலவீன சித்தமுடைய நபர்மீது தன்னுடைய அபிப்ராயத்தைத் திணித்துவிடுவார். ஆனால் தேவனுடைய சித்தமோ ஒருவர் தன்னுடைய கருத்துக்களை இன்னொருவர் மீது அழுத்த வேண்டும் என்பதல்ல. அதற்கு மாறாக இருவரும் ஒருவரிடத்திலிருந்து மற்றவர் கற்றுக் கொள்ள வேண்டுமென்பதாகவே உள்ளது. நமக்குள் கருத்துவேறுபாடு உண்டாகலாம். ஆனாலும் நாம் இன்னும் ஒற்றுமையாக இருந்து, ஒருவரையொருவர் நேசிக்க முடியும். சொல்லப்போனால் முன்பைவிட இப்போது நாம் ஒருவரையொருவர் ஆழமாக நேசிக்க முடியும்.