WFTW Body: 

தேவன் உங்களுக்காகச் செய்த அனைத்தையும் கருத்தில் கொண்டு அவருக்கு நீங்கள் கொடுக்கும் சரியான பதில் என்ன? உங்கள் நன்றியுணர்வை வார்த்தைகளால் மட்டும் பேசினால் போதாது. ரோமர் 12 (முழு அதிகாரமும்) அந்தக் கேள்விக்குச் சரியான பதிலாய் அமைந்திருக்கிறது. “தேவனுடைய இரக்கங்களை” முன்னிட்டு, நீங்கள் செய்யத்தக்கது இதுவே:

1. முதலாவதாக, உங்கள் சரீரத்தை தேவனுக்கு ஜீவபலியாக ஒப்புக்கொடுங்கள் (ரோமர் 12:1). ‘பலி’ என்ற வார்த்தை, உங்கள் சரீரத்தை தேவனிடம் ஒப்புக்கொடுக்க நீங்கள் ஏதேனும் விலைக்கிரயம் செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது. ஒன்றை நீங்கள் பலியிட்டே ஆகவேண்டும் - அது, உங்கள் சரீரத்தை, அதாவது உங்கள் கண்கள், கைகள், நாவு, உணர்வுகள், விருப்பங்கள், மேலும் பலவற்றை - சுய இச்சைக்குக்குட்படுத்தும் பலம் கொண்ட சுய-சித்தமேயாகும்.

2. உங்கள் மனம் புதிதாகும்படி ஒப்புக்கொடுங்கள் (ரோமர் 12:2) - அதாவது ஜனங்களையும் சூழ்நிலைகளையும் தேவன் பார்க்கிற விதமாக பார்ப்பதேயாகும். இங்கு தான் நீங்கள் உங்களைச் சுத்திகரிக்க வேண்டும். ஸ்திரீகளைப் பார்க்கும் விதத்தில் உள்ள அசுத்தத்திலிருந்தும், உங்களுக்குத் தீங்கிழைத்தவர்கள்மேலுள்ள கசப்பிலிருந்தும், உங்களுக்குப் பிடித்தவர்கள் மற்றும் பிடிக்காதவர்கள்மேல் காட்டும் பாரபட்சத்திலிருந்தும், சூழ்நிலைகள் அல்லது எதிர்காலத்தைப் பார்க்கும் விதத்தில் உண்டாகும் அவிசுவாசம், கவலை மற்றும் பயத்திலிருந்தும் உங்களைச் சுத்திகரிக்க வேண்டும். எப்பொழுதுமே “இப்படிப்பட்ட சூழ்நிலையையோ அல்லது இப்படிப்பட்டவர்களையோ தேவன் எவ்வாறு பார்க்கிறார்?” என்று உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். அப்படி தேவன் காணும் விதத்திற்கு அப்பாற்பட்ட மற்ற அனைத்து வழிகளிலிருந்தும் உங்களைச் சுத்திகரித்துக்கொள்ளுங்கள்.

3. உங்களைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாதிருங்கள் (ரோமர் 12:3). உங்களுடைய விசுவாசத்தின் அளவு தான் உங்கள் ஆவிக்குரிய தன்மையின் உண்மையான அளவுகோலேயல்லாமல், உங்களது ஞானத்தின் அளவோ அல்லது வைராக்கியத்தின் அளவோ அல்ல.

4. தேவன் உங்களுக்கு என்ன வரங்கள் மற்றும் தாலந்துகளை அருளியிருக்கிறாரோ அவற்றைக் கொண்டு, கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்ட, உங்கள் ஊழியத்தை நிறைவேற்றுங்கள் (ரோமர் 12:4-8). ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்ட மனுஷனைப்போல், உங்கள் தாலந்தை பூமியில் (அதாவது உலகப்பிரகாரமான காரியத்தில்) புதைக்காதிருங்கள். கர்த்தருக்கு ஊழியஞ்செய்வதில் வைராக்கியமாயிருங்கள் (ரோமர் 12:11). மேலும், ஜெபத்திலே (அதாவது, ஆண்டவர் பேசுவதைக் கேட்பதிலும் அவரோடு பேசுவதிலும்) தரித்திருங்கள் (ரோமர் 12:12).

5. தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள் (ரோமர் 12:9). நன்மையைப் பற்றிக்கொண்டிருந்தால், நீங்கள் தீமையை மிகவும் எளிதாக வெறுக்க அது உதவியாயிருக்கும்.

6. எல்லாச் சகோதரர்களையும் அன்புகூர்ந்து, கனம்பண்ணுங்கள் - ஏனெனில், அவர்கள் இயேசுவின் இளைய சகோதரர்களாயிருக்கிறார்கள். (ரோமர் 12:9,10). அவர்களுக்கு நன்மை செய்யுங்கள் (ரோமர் 12:13). அவர்களில் யாருக்காவது சந்தோஷமான காரியங்கள் நடந்தால், அவர்களுடன் சேர்ந்து சந்தோஷப்படுங்கள்; துயரத்தில் இருக்கிறவர்களுடனே சேர்ந்து துயரப்படுங்கள் (ரோமர் 12:15). எல்லாரிடமும் - குறிப்பாக, கிறிஸ்துவின் சரீரத்தில் ஏழைகளிடத்திலும், குறைவான வரங்களைப் பெற்றவர்களிடத்திலும் - தாழ்மையான அணுகுமுறையைக் கொண்டிருங்கள் (ரோமர் 12:16).

7. எல்லா மனுஷரையும் - குறிப்பாக, உங்களுக்குத் தீங்கிழைக்கிறவர்களை - நேசித்து, ஆசீர்வதியுங்கள் (ரோமர் 12:14,17-21). உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். உங்களிடம் மோசமாக நடந்துகொண்டவர்களை ஒருபோதும் பழிவாங்கவோ அல்லது அவர்களுக்கு மோசம் வர வாஞ்சிக்கவோ செய்யாதிருங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; அவ்விதமாக, தீமையை நன்மையினாலே வெல்லுங்கள். தீமையை அதிகத் தீமையினாலே வெல்ல முயற்சிக்கிறவர்களால் இந்த முழு உலகமும் நிரம்பியிருக்கிறது. ஆனால், தீமை ஒருக்காலும் தீமையை வெல்லமுடியாது. நன்மையே தீமையை வெல்லமுடியும், ஏனெனில் தீமையைவிட நன்மையே மிகவும் வலிமையானது. இதைத்தான் இயேசு கல்வாரியில் நிரூபித்துக்காட்டினார். உங்கள் பாதையில் தேவன் அனுமதிக்கும் உபத்திரவங்களில் பொறுமையாய் நிலைத்திருங்கள்; அப்படி வடிவமைக்கப்பட்ட உபத்திரவங்களெல்லாம் உங்களை அதிகமாய் இயேசுவைப்போல் மாற்றக்கூடியவை என்கிற நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள் (ரோமர் 12:12).

இவ்வழிகளில் தான், தேவன் நமக்காகச் செய்த அனைத்திற்காகவும், நம்மை மீண்டும் மீண்டும் மன்னித்து நம்மேல் காட்டின அவருடைய இரக்கத்தின் ஐஸ்வரியத்திற்காகவும், நாம் மெய்யாகவே அவருக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம் என்பதை அவருக்கு நிரூபிக்கிறோம்.