WFTW Body: 

"நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.'' என வெளி 22:2 -ல் வாசிக்கிறோம். ஆதியாகமம் 2-ம் அதிகாரத்திற்கும், வெளிப்படுத்தின விசேஷம் 22-ம் அதிகாரத்திற்கும் பல ஒற்றுமைகளைக் காணமுடியும். தேவனுடைய ஜீவனே இந்த ஜீவவிருட்சமாகும். இதிலிருந்து நாம் திவ்விய சுபாவத்தில் பங்குபெற முடியும். தேவனிடத்திலிருக்கும் ஜீவனை, நித்திய ஜீவன் என வேதம் கூறுகின்றது. நித்திய ஜீவன் என்பதற்கு "என்றென்றைக்கும் இருப்பது'' என்பது பொருளாகாது. ஏனெனில் அக்கினிக்கடலில் தள்ளப்படுபவர்களும் என்றென்றைக்கும் அங்கு இருப்பார்கள் என வாசித்தோம். ஆனால் அவர்களிடத்தில் நித்திய ஜீவன் இல்லை. எனவே நித்திய ஜீவன் என்பது ஆரம்பமும் முடிவுமில்லாத ஜீவியமே ஆகும். இவ்வித ஒப்பில்லாத ஜீவியம் தேவனிடம் மாத்திரமே இருந்தது. இதையே ஜீவ விருட்சம் சுட்டிக்காட்டுகிறது. ஏதேன் தோட்டத்தில், இந்த ஜீவவிருட்சத்தைப் புசிப்பதற்குப் பதிலாக ஆதாம் தன் மதியீனத்தால் நன்மை தீமை அறியும் மரத்திற்குச்(Tree of Knowledge) சென்றான். ஆதாம் துவங்கி இன்றும் அநேகக் கிறிஸ்தவர்கள் ஜீவவிருட்சத்திற்குப் பதிலாக வேதாகம அறிவையே நாடிக்கொண்டிருப்பது வருத்தமிகு சம்பவமாகும். ஆனால் இந்த 'அறிவின் மரம்' புதிய பூமியில் காணப்படாதே! குறிப்பாக வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தை இதுகாறும் வாசித்த நீங்கள், இதன் அறிவின் மரத்தைச் சுற்றி உட்காராமல், இது வழங்கும் ஜீவியத்துக்கடுத்த ஜீவ விருட்சத்தைச் சுற்றியே வாஞ்சித்து அமர்ந்திருந்தீர்கள் என கூறிட முடியுமா? ஜீவவிருட்சத்திற்கு முன்பாக ''சுடரொளிப் பட்டயம்" இருந்ததென ஆதியாகமம் 3-ம் அதிகாரம் கூறுகிறது (ஆதியாகமம் 3:24). ஒருவன் ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டுமென்றால் இந்தப் பட்டயம் அவனின் மாம்சத்தின் மீது விழுந்து வெட்டும்! ஆனால் அறிவின் மரத்திற்கு முன்னால் எந்தப்பட்டயமும் கிடையாது!! அறிவின் மரத்திற்குச் செல்லும் ஒருவன் தன் சுயத்திற்கு மரிக்கவேண்டிய அவசியமில்லை! ஆனால் திவ்விய சுபாவத்தில் பங்குபெற வாஞ்சிக்கும் ஒருவன் தன் சரீரத்தில் இயேசுவின் மரணத்தைச் சுமக்கத்தான் வேண்டும் (2கொரிந்தியர் 4:10). சிலுவையின் வழியே ஜீவவிருட்சத்தின் வழியாகும். அன்று அந்தப்பட்டயம் இயேசுவின்மீது விழுந்து, அவர் சிலுவையிலறையப்பட்டார்! இப்போது, நாமும் அவரோடு சிலுவையிலறையப்பட்டிருக்கிறபடியால், அந்தப் பட்டயம் நம்மீதும் விழவேண்டியது அவசியமாயிருக்கிறது!! இவ்விதமே நாம் நம்முடைய அன்றாட ஜீவியத்தில் மாதந்தோறும் கனிகளைக் கொடுத்து ஜீவிக்கிறோம். இந்த ஜீவவிருட்சம் சரீர சுகத்தை வழங்கும் ஆரோக்கியத்தையும் தன்னில் கொண்டிருந்தது என வாசிக்கிறோம்.

“இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்." என வெளி 22:7-ல் வாசிக்கிறோம். இதோ, சீக்கிரமாய் வருகிறேன் என்று கர்த்தர் இங்கே சொல்லவில்லை. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இதோ இரவில் வரும் திருடனைப் போல எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென வருகிறேன் என்றே கர்த்தர் உரைக்கிறார்.

"யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக்கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.' அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும் இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடும்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.'' என வெளி 22:8,9-ல் வாசிக்கிறோம். வெளிப்படுத்தின விசேஷ சத்தியங்களை யோவான் அப்போஸ்தலனுக்குப் போதிக்கும்படி தேவன் உபயோகித்த அம்மனிதனிடம் யோவான் ஈர்க்கப்பட்டான்! இங்கே இரண்டாவது தடவையாக யோவான் அப்போஸ்தலன் தவறு செய்து இவைகளையெல்லாம் போதித்துக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தான்! அதற்கு அந்த தூதன் உரைத்த பதில் மிக அருமையானதாகும், “நீ இப்படிச் செய்யாதே. நானும் உன்னைப்போல் ஒரு ஊழியக்காரன்தான்; தேவனைத் தொழுதுகொள்” என்றான். இதுவே எந்த ஒரு உண்மையான தேவஊழியனின் அச்சடையாளமாகும். இவ்வித உண்மை ஊழியன், யாராகிலும் ஒருவர் தன்னோடு இணைய வந்தால் அந்த இணைப்பைத் துண்டித்துவிட்டு, “இவ்வாறு செய்யாதே; இயேசுவை நோக்கிப்பார்; அவருக்கே மகிமையைச் செலுத்தி அவரோடு இணைந்துகொள்” என தாமதமின்றிக் கூறிடுவான்!! பரலோகத்தில் அவர்கள் ஒரே பாடலை மட்டுமே பாடுகிறார்கள்; "நீ மட்டும் பாத்திரராயிருக்கிறீர்" என்ற புதிய பாடல். இந்தப் பாடலை தேவதூதன் நன்குக் கற்றுக் அறித்திருந்தான், எனவே தாமதமின்றி அவன் யோவானை உலுக்கி, தேவனுக்கு மட்டும் மகிமையைச் செலுத்தும்படி சுட்டிக்காட்டினான்.

“அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்." என வெளி 22:11-ல் வாசிக்கிறோம். வேதாகமத்தின் கடைசிப் பக்கத்தில் இயேசு தரும் புத்திமதி நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறதல்லவா! இயேசுவே ஒருவனைப் பார்த்து “அசுத்தமாயிரு!" என்றும், “இன்னமும் அநியாயஞ்செய்!" என்றும் கூறுவதைப் பார்த்தீர்களா! ஏன் அவ்வாறு சொன்னார்? நீங்கள் இந்தப் புத்தகத்தை வாசித்து பாவத்தின்மீது தேவன் வழங்கும் நியாயத்தீர்ப்பைக் கேட்ட பின்பும் நித்தியகாலமாய் எரிந்துகொண்டிருக்கும் அக்கினிக்கடலில் பாவம் செய்கிறவர்கள் தள்ளப்படுவார்கள் எனக் கேள்விப்பட்ட பின்பும் ... நீங்கள் இன்னமும் பொய்சொல்லிக்கொண்டு; உள்ளத்தில் கசப்புணர்ச்சி கொண்டு; பிறரை மன்னியாமலிருந்து கொண்டு; உங்கள் இச்சைகளுக்கு இடம் கொடுத்து; கற்பற்ற உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பீர்களென்றால், உங்களைப் பார்த்துதான் ஆண்டவர் கூறுகிறார், “இனி நான் உன் வழியைத் தடைசெய்யமாட்டேன். நீ தொடர்ந்து அசுத்தம்செய்!" எனக் கூறிவிட்டுவிடுவார். இவ்விதம் ஒருவனுடைய கதி இருக்குமென்றால் அது எவ்வளவு பரிதாபம்! போகட்டும், இவர்களை விட்டுத்தள்ளுங்கள் இதே வசனத்தின் இரண்டாவது பகுதி நமக்குச் சொந்தமாயிருக்கிறதே! அதை நாம் மகிழ்வுடன் ஏற்று தழுவிக்கொள்ளுவோமாக. ஆம், " நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்!" என்பதே அந்த இனிய வசனமாகும். அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நாம் பரிசுத்தத்தைப் பின்தொடரும் ஜீவியத்தில் ஓர் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது. எனவே நீங்கள் உங்கள் நீதியில் ஒருபோதும் திருப்தி அடைந்துவிடாதீர்கள், சகோதரனே, சகோதரியே, பரிசுத்தமாயிருப்பதில் தொடர்ந்து முன்னேறுங்கள்! நீதிசெய்வதில் தீவிரமாய் முன்னேறிக்கொண்டேயிருங்கள்!! தேவனுடைய பரிசுத்த வேதாகமம் தன் கடைசிப்பக்கத்தில் நமக்கும் கூறும் இந்தப் புத்திமதியை மிகுந்த ‘சீரியஸாக' நம் ஜீவியத்தில் எடுத்துக்கொள்வோமாக. இன்று நீங்கள் இந்த பூமியில் வாழும் ஜீவியத்தைப் பொறுத்தே நித்திய வாழ்க்கையும் வரையறுக்கப்படுகின்றது. இன்று நீங்கள் அசுத்தத்தில் ஜீவித்தால், அக்கினிக்கடலில் பிரவேசிக்கப்போகும் நீங்கள், நித்திய காலமாய் அசுத்தத்தில்தான் இருப்பீர்கள்! மாறாக, இன்று நீங்கள் பரிசுத்தமாய் ஜீவித்தால், நித்தியத்திலும் தொடர்ச்சியாக ஓர் மகிமையான பரிசுத்த வாழ்க்கையையே சதா வாழ்ந்து சுகிப்பீர்கள்!! மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும். (பிரசங்கி 11:3)

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்‌ கிருபை உங்கள்‌ அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்‌.” எனவெளி 22:11-ல் வாசிக்கிறோம். வேதப்புத்தகத்தின்‌ இறுதி ஆசீர்வாத வாழ்த்துரையைப்‌ பாருங்கள்‌! தேவனுடைய வார்த்தை இந்த வாழ்த்துரையோடுதான்‌ முடிவடைகிறது. இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை நம்‌ அனைவரோடுங்கூட இருந்தால்‌ மாத்திரமே, பரவசமூட்டும்‌ புதிய எருசலேமில்‌ பங்குபெறுவான்‌. இவ்விதம்‌ பல்லாண்டுகளாக பாவத்தின்‌ அடிமைச்‌ சங்கிலிக்குள்‌ சிக்குண்டிருந்த நாம்‌, இயேசுகிறிஸ்துவின்‌ கிருபையின்‌ பெலத்தினால்‌ அச்சங்கிலிகள்‌ யாவையும்‌ தறிப்புண்டுபோக முறித்து, ஓர்‌ ஒப்பற்ற பாவம்‌ செய்யா விடுதலை வாழ்க்கையை ருசித்து வாழ்கிறோம்‌. இவ்விதம்‌ இயேசுகிறிஸ்‌துவின்‌ மூலம்‌ உண்டாகும்‌ கிருபை நம் பாவங்களை மன்னிக்கிறது! தன்‌ வாழ்வில்‌ பாவத்தையும், உலகத்தையும், சாத்தானையும் ஜெயித்து வாழ கிருபையே நமக்கு உதவுகிறது! இதற்கு நேர்மாறாக, பழைய ஏற்பாட்டின்‌ கடைசி வசனம்‌ கூறுவதைப்‌ பாருங்கள்‌. அந்த வசனம்‌ கூறும்‌ வார்த்தை என்ன தெரியுமா? சாபம்‌ (Curse) “நான்‌ வந்து பூமியைச்‌ சங்காரத்தால்‌ (Curse) அழிக்காதபடிக்கு ...” என வாசிக்கிறோம்‌. இதுவே பழைய ஏற்பாட்டின்‌ கடைசி வசனம்‌ (மல்கியா 4:6). ஆனால்‌ புதிய ஏற்பாட்டின்‌ முதல்‌ பக்கத்தை திருப்பும்பொழுது, இயேசுவின்‌ பிறப்பை (இரட்சிப்பை) நம்‌ கண்கள்‌ குளிரக்‌ காண்கிறோம்‌. இவ்விதமாய்‌ துவங்கி நித்தியானந்த சுவிசேஷத்தை வழங்கிய புதிய ஏற்பாடு, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்‌ கிருபை நம்மனைவரோடும்‌ இருக்கும்படி வாஞ்சித்து முற்றுப்‌ பெறுகிறது! புதிய ஏற்பாட்டின்‌ கிருபையின்‌ கீழ்‌ இருக்கிறபடியால் பழைய ஏற்பாட்டின்‌ கடைசியில் கூறப்பட்ட சாபத்திலிருந்து முற்றிலும்‌ விடுதலையாகி, நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் தேவனுடைய ஆசீர்வாதத்தை அனுபவித்து, தேவன் தாங்கும் வாசஸ்தலத்தின் ஒரு பகுதியாக நித்திய நித்தியமாய் இருப்பது என்பது எவ்வளவு பெரிய ஆச்சரியம்‌! அல்லேலூயா! தேவனுக்கும், நம் பாவங்களுக்காய் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவருக்கும் சகல மகிமையும், துதியும், கனமும் சதாகாலமும், என்றென்றும் உண்டாவதாக!! ஆமென், ஆமென்!!