WFTW Body: 

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு (எபேசியர் 2:8).

நம்முடைய பாவ மன்னிப்பையும், ஆவியின் அபிஷேகத்தையும், கிருபையினால் விசுவாசத்தின் மூலமாகவே பெற்றோம், இப்படித்தான் நம்முடைய கிறிஸ்தவ ஜீவியத்தை நாம் தொடங்கினோம். ஒருநாள் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மகிமையில் வரும்போது, நாம் அவரைச் சந்திக்கும்படி ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோமே... அதுவும், கிருபையினால் விசுவாசத்தின் மூலமாய் நிகழப்போகும் நிகழ்ச்சியே ஆகும்!! எனவே இப்பூமியில் நம்முடைய ஆரம்பமும் முடிவுமான கிறிஸ்தவ வாழ்க்கை கிருபையினால் விசுவாசத்தின் மூலமாகவே நிறைவேறுகிறது. மாத்திரமல்ல, ஆரம்பத்திற்கும் “இடையிலான வாழ்க்கையில்” நாம் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றுமே இதே அடிப்படையில் தான் நிகழ்கிறது என்பதை நாம் கற்றக்கொள்வது மிகவும் அவசியம். கிருபையினால், விசுவாசத்தின் மூலமாகவே ஒவ்வொரு தீமையையும் மேற்கொண்டு, இப்பூமியில் தேவன் முன் குறித்த நோக்கத்தை நம் வாழ்வில் நிறைவேற்ற முடியும்!! எதிர்காலங்களைத் தேவன் அறிவார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். தேவனை வியப்புறச் செய்யும்படி, நாளையோ அல்லது அடுத்த வாரமோ அல்லது அடுத்த மாதமோ அல்லது அடுத்த வருடமோ ஒன்றும் நிகழ்ந்திட முடியாது! அவருக்கு ஆரம்பத்திலிருந்து முடிவுவரை எல்லாம் தெரியும்!! இந்த உண்மை மிகப்பெரிய ஆறுதலை நமக்குத் தரவேண்டும். ஏனெனில், நீங்கள் திரளான சோதனைகளையும், பரீட்சையையும், நாளை அல்லது அடுத்த வாரம் சந்திக்கப்போகிறீர்கள் என்று தேவன் அறிந்திருந்தால், நீங்கள் அதை மேற்கொள்ளும்படியாக நிச்சயம் தன் கிருபையையும் தருவார்!

2கொரிந்தியர் 12:9-ல் “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்று கர்த்தர் பவுலிடம் கூறினார். அவர் கிருபை நம் எல்லாத் தேவைக்கும் போதுமானது என அறைகூவுகிறது. நாம் எல்லாவற்றிலும், எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகள் பெருகுவதினிமித்தம் அவரின் பூரண சித்தத்தை நிறைவேற்றும் படியாகவும், தேவன் நம்மிடத்தில் “சகலவித கிருபையையும்” பெருகச் செய்ய வல்லவராயிருக்கிறார் (2கொரிந்தியர் 9:8). ஏற்ற வேளையில் நமக்குச் சகாயம் செய்யும்படி, கிருபையானது பூரணமாய் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் (எபிரேயர் 4:16). உங்கள் தேவை எதுவாயிருந்தாலும் அதை நீங்கள் சந்திக்கும்படி கிருபையானது உங்களுக்கு உதவி அளிக்கிறது. எனவே, நாம் இந்த கிருபையைப் பெறும்படி “தைரியமாய் கிருபாசனத்தண்டை வரும்படி" அழைக்கப்படுகிறோம். இந்தக் கிருபையைப் பெறாததாலேயே கடந்த காலங்களில் நாம் தோற்கடிக்கப்பட்டிருந்தோம்! இனிவரும் நாட்களில் முற்றிலும் வித்தியாசமான அத்தியாயத்திற்குள் நாம் பிரவேசித்திட முடியும். ஆம், நம்மை நாமே தாழ்த்தி, தேவையான நேரத்தில் கிருபைக்காய் கதறும்போது தேவன் ஒருபோதும் நம்மை ஏமாந்துபோகச் செய்திடமாட்டார்!

கிருபையின் பரிபூரணத்தைப் பெறுகிறவர்கள், இயேசுகிறிஸ்து மூலமாய் வாழ்க்கையில் ஆளுகை செய்வார்கள் எனவும் வேதம் கூறுகிறது. அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே (ரோமர் 5:17), இவ்விதமாய் சகலத்தையும் ஆளுகை செய்யவேண்டும் என்பதே, தேவன் ஆதாமைக் குறித்து வைத்திருந்த அவரது சித்தமாகும். ஆதியாகமம் 1:26-ல் பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; பூமியனைத்தையும் ஆளக்கடவர்கள் என்றார். ஆகிலும், அவனுடைய வாழ்க்கையில் இச்சித்தம் நிறைவேறுவதற்கு ஆதாமின் கீழ்ப்படியாமை தடை செய்துவிட்டது. ஆனால் இப்போதோ தேவன் ஓர் புதிய சந்ததியை இப்பூமியில் எழுப்பியிருக்கிறார்! யார் இவர்கள்? ராஜாவின் கனத்திற்கொப்பாய் ஜீவித்து, இவ்வுலகை ஆளுகை செய்யும்படி இயேசுகிறிஸ்துவுக்குள் விசுவாசத்தினால் ஜீவிக்கும் தேவனுடைய புத்திரர்கள்!

நீங்கள் மாத்திரம் உங்களைத் தாழ்த்தி தேவனுடைய கிருபையைப் பெறுவீர்களென்றால், எந்தப் பாவமும் இனி உங்களை ஒருபோதும் ஆளுகை செய்யவேண்டிய தேவையே இல்லை! உங்கள் இருதயத்திற்குள் எந்தப்பயமும், பதட்டமும் இனி ஒருபோதும் பிரவேசிக்க வேண்டிய அவசியமே இல்லை!! இனியும் உங்கள் வாழ்க்கையை துக்ககரமாக்கிட ஒருவராலும் முடியாது!! உங்கள் மேல் அதிகாரியோ, அண்டை வீட்டாரோ, உறவினரோ, சத்துருக்களோ அல்லது வேறு எவருமோ உங்கள் வாழ்க்கையை துயரம் அடையச் செய்யவே முடியாது!! கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை எப்போதும் வெற்றி சிறக்கச் செய்யும் தேவனுக்கே ஸ்தோத்திரம்!! புதிய உடன்படிக்கையின் கிருபைக்குக் கீழாய் ஜீவிப்பது எத்தனை ஆச்சரியம்! அற்புதம்!! ஏறெடுத்துப் பாருங்கள்! இன்னமும் தேசம் உங்களுக்கு முன்பாகவே வைக்கப்பட்டிருக்கிறது.

வீறுகொண்டு எழுந்து அதைச் சுதந்தரியுங்கள்!