WFTW Body: 

கிறிஸ்துவின் சரீரத்தை “ஒரு மருத்துவமனைக்கு” ஒப்பிட்டுக் கூறலாம். ஒரு மனிதன் வியாதிப்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் போது, அவனுக்கு சேவை செய்வதற்கென பல மருத்துவத்துறைகள் செயல்படுகின்றன. ஊசி மருந்தோ அல்லது இயன்முறை மருத்துவம் (physiotherapy) அல்லது அறுவை சிகிச்சையோ அவனுக்குத் தேவைப்படலாம். ஒருவேளை அவன் கண் மருத்துவரையோ அல்லது காது மருத்துவரையோ சந்திக்க வேண்டிய அவசியம் இருக்கலாம். இவ்வாறு, மருத்துவமனையில் பல்வேறு துறைகள் சேர்ந்து செயல்படுகின்றன. கண் மருத்துவர் தன்னுடைய எல்லா நேரமும் ஜனங்களுடைய கண்களையே கவனித்துக் கொண்டிருப்பாரேயல்லாமல் வேறு எதிலும் கவனம் செலுத்தமாட்டார்! அதற்குக் காரணம், சரீரத்தில் உள்ள மற்ற அவயவங்கள் அவ்வளவு முக்கியமானதல்ல என அவர் நினைக்கின்றார் என்றல்ல, மாறாக, அவருடைய திறமை "கண் மருத்துவம்” மாத்திரமே என்பதுதான்! இதைப்போலவே, கிறிஸ்துவின் சரீரத்திலும், ஒவ்வொரு விசுவாசிக்கும் வித்தியாசமான வரங்களும், அழைப்பும் இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் சமநிலையற்றவர்களாகவே இருக்கிறார்கள். இந்த பூமியில் முழு சமநிலை பெற்று நடந்த ஒரே ஒருவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மட்டுமே! அவரைத் தவிர “நம்மில் மிகச் சிறந்தவர்” என எண்ணப்படுபவர்கூட சமநிலையற்றவர்தான்!! ஆகவே, மருத்துவமனையில் அந்தந்த துறையினரோடு சேர்ந்து செயல்படுவது போல ஆண்டவருடைய மருத்துவமனையிலும் மற்ற சகோதர சகோதரிகளோடு நாம் இணைந்து செயல்படும்போதுதான் நம்மில் சமநிலையை நாம் காணமுடியும். ஆகவே ஆண்டவருடைய இந்த மருத்துவமனையில், தனித்தன்மைக்கு இடமேயில்லை.

ஓர் நல்ல மருத்துவமனையில், ஜனங்களின் பல்வேறு தேவைகளை சந்திப்பதற்கு பல துறைகளை (Departments) ஏற்படுத்தி வைத்திருப்பார்கள். அதுபோலவே ஜனங்களுக்கு ஊழியம் செய்யும்படி கிறிஸ்துவின் சரீரத்திலும் பல்வேறு ஊழியங்களும், பல்வேறு ஆவிக்குரிய வரங்களும் இருக்கிறது. ஆவியின் வரங்கள் அனைத்தையும் பெற்ற ஒரு சபையும், ஒரு குழுவும் இல்லை! ஆனால் முழு கிறிஸ்துவின் சரீரத்தையும் தொகையிடும் போது, அனைத்து வரங்களும் அதில் இருப்பதை நாம் காணமுடியும். ஆகவே, சரீரத்தில் நமக்கென்று சொந்தமான விசேஷித்த அழைப்பு என்ன என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்!

இந்த உலகம் ஆவிக்குரிய வியாதி கொண்டவர்களால் நிறைந்திருக்கிறது. இருப்பினும், இவர்களில் ஒரு நபருடைய நிலைகூட “நம்பிக்கையற்றது” என நாம் கூறிட முடியாது. ஆம், ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து சம்பூர்ண சுகத்தைப் பெற்றுவிட முடியும்! இதுவே நாம் அறிவித்துவரும் சுவிசேஷத்தின் நற்செய்தியாகும்!! மிக மோசமான பாவியும், அதிக மாறுபாடான ஜீவியமும் கொண்ட நபர்கூட, ஆண்டவருடைய மருத்துவமனையில் சுகம் பெற்றுவிட முடியும். ஓர் நல்ல மருத்துவமனை “சீரியஸான வியாதி” கொண்ட ஒரு மனிதனைக்கூட திருப்பி அனுப்பாது! தரம் குறைந்த மருத்துவமனையில் அப்படி செய்வார்கள். ஏனெனில், மோசமான நோயாளிகளைக் கையாளுவதற்குப் போதுமான உபகரணங்கள் அவர்களிடம் இருப்பதில்லை. ஆனால், ஓர் நல்ல சபையானது, இவ்வுலகில் மகா மோசமான பாவியைப் பார்த்துக்கூட அவனுடைய 'நிலைக்கு' இனி நம்பிக்கையில்லை எனக் கூறாது.

அவன் தனக்குரிய வைத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், மிக மோசமான பாவியையும் ஓர் மாபெரும் பரிசுத்தவானாய் அந்த நல்ல சபை அவனை மாற்றிவிட முடியும்! சபையை “மானிட சரீரத்திற்கும்” ஒப்பிட்டுக் கூறலாம். மானிட சரீரத்தில், ஒவ்வொரு அவயவத்திற்கும் ஓர் வேலையுண்டு, அந்தந்த அவயவங்கள் தன் தன் வேலைகளை நிறைவேற்றி முடிப்பதற்கே கவனம் கொண்டிருக்கும். அதேசமயத்தில், வேறு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் மற்ற அவயவங்களையும் இந்த அவயவம் மெச்சிக்கொள்ளும்! மதிப்புத் தரும்! அதோடு சேர்ந்து ஒத்துழைக்கவும் செய்யும்!! இதைப்போலவே, கிறிஸ்துவின் சரீரத்திலும், நாம் மற்ற ஊழியங்களோடு சேர்ந்து பணி செய்திட வேண்டும்!! ஆவியின் வரங்கள் கிறிஸ்துவின் சரீரங்களில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை பரிசுத்த ஆவியானவர் கண்களையும், காதுகளையும், கரங்களையும், கால்களையும் மாதிரியாக வைத்து விளக்கியிருப்பதை 1கொரிந்தியர் 12-ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோமே!!

என்னுடைய பிரசங்கத்தைக் கேட்கும் நீங்கள், வேதாகமத்தில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகளை நான் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதைக் கேட்டிருக்க முடியும். ஏனென்றால் “அதுவே” கர்த்தர் எனக்குத் தந்த பாரமாகும். இவ்வாறு, கர்த்தர் எந்த ஊழியத்திற்காக என்னை அழைத்தாரோ அந்த ஊழியத்தை நான் ஜாக்கிரதையாய் பற்றிக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் இந்த ஊழியத்தில் மாத்திரமே நான் ஆண்டவருக்கு பிரயோஜனமுள்ளவனாய் இருந்திட முடியும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். இதைத் தவிர நான் வேறு எதையாகிலும் செய்ய முயன்றால், ஆண்டவர் எனக்கென்று வைத்திருக்கும் திட்டத்தை நான் நிச்சயமாய் சிதைத்துவிடுவேன்! இதனிமித்தம், நான் மற்ற ஊழியங்களுக்கு எதிராளி என்பது பொருளல்ல. மாறாக, நான் மற்ற ஊழியங்களுக்கு மிகுந்த மதிப்பையே தருகிறேன்!! கைகள் செய்திடும் வேலைகளுக்கு நம் வயிறு அதிக மதிப்பைக் கொடுத்தபோதிலும், கைகள் செய்யும் அதே வேலைகளைத் தானும் செய்திட ஒருபோதும் முயற்சிப்பதில்லையே! உதாரணமாக, தட்டில் உள்ள உணவுகளைத் தானாகவே எடுத்துப் புசிக்க வயிறு ஒருபோதும் முயற்சிப்பதில்லை. மாறாக, அந்த வேலையை கைகள் செய்யும்படி அனுமதித்துவிட்டு, கை அள்ளி அனுப்பிய உணவுகளை “ஜீரணிக்கும்” தன் சொந்த வேலையை மாத்திரமே செய்யத் தொடங்குகிறது. கிறிஸ்துவின் சரீரத்திலும், நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டுமென்பதை இந்த உதாரணம் மிகவும் அருமையாகவே சித்தரிக்கிறது. இவ்வாறு “சரீரத்தில் உள்ள” பல்வேறு ஊழியங்களைப்பற்றிய இந்த சத்தியத்தை அநேக விசுவாசிகள் இன்னமும் காணவேயில்லை! அவ்விதமே, நீங்களும் இந்த சத்தியத்தைத் தொடர்ந்து காணமுடியாத நிலையில் இருந்தால், தேவன் நிறைவேற்றி முடித்திட விரும்பிய அனைத்தையும் உங்களால் ஒருக்காலும் நிறைவேற்றி முடித்துவிடவே முடியாது!! நம்மை தேவன் எதற்காக அழைத்திருக்கிறார்? என்பதில் நம் எல்லோருடைய மனமும் தெளிவாய் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்! நம்முடைய இருதயங்களில் ஆண்டவர் தந்திருக்கும் பாரமே, அவருடைய சரீரத்தில் நாம் பெற்றிருக்கும் ஊழியத்திற்குரிய ஓர் அடையாளமாகும்!! என்னைப் பொறுத்தவரையில், “அவருடைய சரீரத்தில்" என்னுடைய ஊழியம் என்ன என்பதையும், அந்த ஊழியத்தில் எவைகளை நான் வலியுறுத்த தேவன் விரும்புகிறார் என்பதையும் தெள்ளத்தெளிவாய் பல ஆண்டுகளாய் அறிந்திருக்கிறேன்! இந்தத் தெளிவு' என் ஜீவியத்தில் மாபெரும் இளைப்பாறுதலையும், விடுதலையையும் தந்திருக்கிறது. யார் என்ன வேண்டுமானாலும் கூறி என்னை “சமநிலையற்றவன்" எனப் புறக்கணித்தாலும் நான் பெற்ற ஊழியத்திலிருந்து ஒருவரும் என்னை அசைத்திடவே முடியாது! கிறிஸ்துவின் சரீரத்தில் வித்தியாசமான ஊழியங்களைப் பெற்றவர்களோடு ஐக்கியம் கொண்டு சேர்ந்து ஊழியம் செய்யும்போதுதான் “உங்கள் சமநிலையை நீங்கள் கண்டடைய முடியும்!! இவ்வாறு மற்றவர்களைச் சார்ந்து கொள்ளும்படி செய்வதே தேவன் நம்மைத் தாழ்மைப்படுத்துவதற்குரிய வழியாய் இருக்கிறது! கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக!! நாம் எல்லோருமே, நம் ஜீவியத்தின் சில பகுதிகளில் வலிமை கொண்டவர்களாயும் சில பகுதிகளிலும் பெலவீனமுடையவர்களாயும் இருக்கிறோம். எப்படியெனில், ஒரு மாணவன் ஆங்கிலத்தில் சிறந்தவனாய் விளங்கி, கணக்குப் பாடத்தில் பெலவீனமாய் இருப்பதைப் போல!! ஆனால் நாம் எதில் பெலவீனமாய் இருக்கிறோம் என்பதை அறிந்தவர்களாய், அந்தப் பகுதியில் நம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ளுகிறவர்களாயும் இருக்க வேண்டும். உங்கள் சபை சுவிசேஷ ஊழியத்தை வலியுறுத்துவதில் பெலனுடையதாய் இருந்து கொண்டு, பரிசுத்தத்தை வலியுறுத்துவதில் பெலவீனமாய் இருந்தால், இவ்வித நிலையில் உங்கள் சபை எந்த ஊழியத்திற்குத் தன்னை அதிகமாய் ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதை நீங்களே அறிந்துகொள்ள முடியுமே!