WFTW Body: 

இயேசு, இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டுமே (மத்தேயு 16:18 மற்றும் மத்தேயு 18:17-20) தேவாலயத்தைப் பற்றி பேசினார். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர் தேவாலயத்திற்கு எதிராக சாத்தான் போராடுவதைப் பற்றி பேசினார். முதல் குறிப்பில், ஆவிக்குரிய மரணத்தின் வலிமையைக் கொண்டு அசுத்த ஆவிகள் மூலமாக சாத்தான் நேரடியாக தேவாலயத்தைத் தாக்குவதைப் பற்றி இயேசு பேசினார். இரண்டாவது சந்தர்ப்பத்தில், சாத்தான் ஒரு சகோதரனை வஞ்சித்து, கைப்பற்றி, அவன் அறியாமலேயே தனது முகவராக்கி மறைமுகமாக தேவாலயத்தை சிதைக்க முயற்சிப்பதைப் பற்றி பேசினார். ஆனால் சாத்தான் எந்த முறையை பின்பற்றினாலும், சாத்தானின் கிரியைகளை கட்டவும், அவனால் பிடிபட்டவர்களை விடுவிக்கவும் தேவன் நமக்கு அதிகாரம் அளித்துள்ளார் (மத்தேயு 16:19; மத்தேயு 18:18; 2தீமோத்தேயு 2:26). இந்த அதிகாரத்தை முழு தைரியத்துடனும் சபைகளில் நாம் பயன்படுத்த வேண்டும்.

தான் கட்டும் சபை ஒரு அடையாளக்குறி கொண்டிருப்பதாக இயேசு கூறினார்: சபை பாதாளத்தின் வாசல்களை (ஆவிக்குரிய மரணத்தின் வல்லமைகள்) மேற்கொள்ளுதல். மறுபுறம், ஒரு சபையே ஆவிக்குரிய மரணத்தின் வல்லமைகளால் - அதாவது, பொறாமை, சண்டை, போட்டியிடும் ஆவி, கௌரவம், ஒழுக்கக்கேடு, பண ஆசை, உலகத்தன்மை, கசப்பு, பெருமை, ஆணவம் அல்லது பரிசேயத்தனம் போன்றவற்றால் வெல்லப்பட்டால், அது இயேசு கட்டியெழுப்பும் சபை அல்ல என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

சபையை அழிக்க சாத்தான் எப்பொழுதும் முயன்றுக் கொண்டேயிருக்கிறான். பெரும்பாலான நேரங்களில், அவன் தனது முகவர்கள் மூலம் சபைக்குள் ஊடுருவி இதைச் செய்ய முயற்சிக்கிறான். "கவனிக்கப்படாமல் சபைக்குள் பக்கவழியாய் நுழைந்த சிலரைப்” பற்றி யூதா பேசுகிறார் (யூதா 1:4). யோசுவாவை (யோசுவா 9) ஏமாற்றிய கிபியோனியர்களைப் போலவே, மூப்பர்களையும் ஏமாற்றி, சீஷர்களாக நடித்து, சபைக்குள் நுழைந்த பலரும் இன்று கவனிக்கப்படாமல் இருக்கிறார்கள். இவர்களால் எவ்வாறு மூப்பர்களை ஏமாற்ற முடிந்தது? மூப்பர்கள், அவர்களால் மிகைப்படுத்தப்பட்டதினாலோ, அவர்கள் செல்வத்தை லஞ்சமாக கொடுத்ததினாலோ அல்லது அவர்களின் உலக நிலைப்பாட்டினாலோ, அதிகமாக மோசம்போயிருக்கலாம். எல்லா பாபிலோனிய பிரிவுகளிலும், உலக நிலை அல்லது செல்வம் கொண்டவர்கள், தான் மூப்பர்களாய் இல்லையென்றாலும், தங்கள் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை மாற்ற முடியும். ஆனால் நம் மத்தியில் ஒருபோதும் அவ்வாறு நடக்கக்கூடாது. எவ்வாறாயினும் நாம் கவனமாக இல்லாவிட்டால், கிபியோனியர்கள் சபைக்குள்ளும் வருவார்கள்.

சாத்தானின் இத்தகைய தாக்குதல்களிலிருந்து நம்மைக் காக்க அவர் தொடர்ந்து நம்மைக் கண்காணிக்கிறபடியினால் நாம் தேவனைப் துதிக்கிறோம். "கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா" (சங்கீதம் 127:2). சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறதில்தான் கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதத்தைக் கட்டளையிட முடியும் (சங்கீதம் 133:1) - மற்றும் ஒரு ஐக்கியமான சபை மட்டுமே பாதாளத்தின் வாசல்களை மேற்கொள்ள முடியும். ஆகவே, அந்த ஐக்கியத்தில் நம்மைக் காக்க பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியில் வல்லமையாக செயல்படுகிறார்.

வெளிப்படுத்தின விசேஷத்தில் கொடுக்கப்பட்டுள்ள பரலோகத்தின் 7 பார்வைகளில் ஒவ்வொன்றிலும், பரலோகத்தை சுதந்தரித்தவர்கள் பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும் தொடர்ந்து உரத்த குரலில் தேவனைப் புகழ்வதைக் காண்கிறோம். எந்தவொரு புகாரும் கோரிக்கையும் இல்லாமல் தொடர்ச்சியாய் துதித்துக்கொண்டு இருப்பதே பரலோகம். இப்படிப்பட்ட சூழலைத் தான் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயங்களிலும், வீடுகளிலும், சபைகளிலும் கொண்டு வர விரும்புகிறார். சாத்தான் இந்த எல்லா இடங்களிலிருந்தும் அவ்வாறே விரட்டப்படுவான்.

பெரும்பான்மையான கிறிஸ்தவர்களை சாத்தான் முடக்கி, அவனுக்கு எதிரான ஆவிக்குரிய போராட்டத்தில் அவர்களை பயனற்றவர்களாக ஆக்கியுள்ளான். ஏனென்றால் அவர்களுடைய சகோதர சகோதரிகளுக்கு எதிராக, அவர்களது உறவினர்கள் மற்றும் அயலவர்களுக்கு எதிராக, அவர்களின் சூழ்நிலைகளுக்கு எதிராக, தேவனுக்கும் எதிராக, முறுமுறுப்பு மற்றும் புகார் கூறும் ஆவியினால் அவர்களைப் பாதிப்படையச்செய்து அதிலே அவன் வெற்றியும் கண்டிருந்தான்.

சாத்தானுக்கும் அவனுடைய ஆவிகளுக்கும் பரலோகத்தில் இடம் இல்லை என்று வெளி 12:8ல் எழுதப்பட்ட ஒரு அற்புதமான வார்த்தை உண்டு. இவ்வாறே நம் வாழ்க்கையிலும், நம் இருதயங்களிலும், நம் வீடுகளிலும், நம் சபைகளிலும் இருக்க வேண்டும். சாத்தானும் அவனது ஆவிகளும் இந்த இடங்களில் எந்த பகுதியையும் தொடக்கூடாது.

இந்த அறிவுரைகளுக்குக் கீழ்ப்படியும்போது நாம் சாத்தானை மேற்கொள்கிறோம்: தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள் (கொலோசெயர் 3:15). நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் ஸ்தோத்திரங்களை ஏறெடுக்க வேண்டும்" (1தீமோத்தேயு 2:1). நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள் (எபேசியர் 5:20). முதலில், கிறிஸ்துவின் சரீரத்திற்குள் தேவனால் அழைக்கப்பட்ட அனைவருக்காக்கவும் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று நாம் அறிவுறுத்தப்படுகிறோம். தேர்வை நாமே செய்ய விடப்பட்டிருந்தால், தேவன் அழைத்தவர்களில் பலரை - குறிப்பாக நம் குழுவைத் தவிர வேறு ஒரு குழுவைச் சேர்ந்தவர்களை நாம் அழைத்திருக்கவே மாட்டோம்!!! ஆனால், வானம் பூமியை விட உயர்ந்தது போலவே தேவனின் ஞானமும் நமது ஞானத்தைவிட உயர்ந்திருக்கிறபடியினால், அவர்களைக்குறித்து அவர் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார். நாம் ஞானமுள்ளவர்களாக இருந்தால், நம்முடைய சிந்தனையை தேவனுக்கு ஏற்ப சீரமைப்போம். கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ள நம் சகோதர சகோதரிகளுக்கு நன்றி செலுத்த நாம் கற்றுக்கொண்டதன்பின் எல்லா மனிதர்களுக்கும் நன்றி சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும், பின்னர் நம்முடைய எல்லா சூழ்நிலைகளுக்கும் நன்றி சொல்ல வேண்டும். நம்முடைய பரம தகப்பன் எல்லா மனிதர்களையும் எல்லா சூழ்நிலைகளையும் இறையாண்மையுடன் கட்டுப்படுத்துகிறார் என்பதை நாம் அறிவோம். நாம் உண்மையிலேயே இதை விசுவாசிப்போமெனில், நாம் எப்போதுமே தேவனைத் துதித்துக்கொண்டேயிருப்போம். இதனால் நம்முடைய ராஜ்யம் பூலோகத்திற்குரியதல்ல பரலோகத்திற்குரியதே என்பதை நிரூபிக்கிறோம். பின்னர் சாத்தான் நம்மீது காட்டும் வல்லமையை இழப்பான். அப்போதுதான் நாம் அவனுக்கு எதிரான ஒரு பயனுள்ள போராட்டத்தைத் தொடுக்க முடியும்.