WFTW Body: 

முழு வேதாகமத்திலும், “மெல்கிசேதேக்கு” மூன்று வசனங்களில் மாத்திரமே தோன்றுவதைக் காண்கிறோம். அப்படியிருந்தும், நம் ஆண்டவரோ மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்றே அழைக்கப்படுகிறார் (ஆதியாகமம் 14:18-20). அப்படி என்ன அதிசயமான செயலை இந்த மெல்கிசேதேக்கு செய்துவிட்டார்? மெல்கிசேதேக்கு ஆபிரகாமை சந்தித்து, அவனுடைய தேவைகள் என்னவென்று கூட தெரியாமலே அந்த மூன்று தேவைகளையும் பூர்த்தி செய்து விட்டார்! அது எப்படியெனில், எதைச் செய்யும்படி தேவன் சொன்னாரோ அதை இந்த மெல்கிசேதேக்கு செய்தார், அவ்வளவுதான்!

இந்த மெல்கிசேதேக்கு செய்த முதல் உதவி என்ன தெரியுமா? ஆம், “கொஞ்சம் உணவைத்தான்” இவர் ஆபிரகாமுக்கு கொண்டு சென்றார். இந்த மெல்கிசேதேக்கு அத்தனை 'உணர்வுள்ளவராய்' இருந்தார்! ஆவிக்குரியவர்களாய் இருந்தால், துறவிகளைப்போல்தான் இருக்க வேண்டும், “சாப்பாடு என்ன வேண்டியிருக்கிறது!" என்று எண்ணும் இன்றைய “வரையறை மீறிய - ஆவிக்குரியவர்களைப் போல்" மெல்கிசேதேக்கு நடந்து கொள்ளவில்லை. அவர் ஆபிரகாமைப் பார்த்து “உபவாசித்து ஜெபியும்!” எனக்கூறாமல் ஒரு நல்ல உணவையே கொண்டுவந்து கொடுத்தார்!

பல வருடங்களுக்குப் பின்பு ஒரு சமயம் எலியா களைத்துப்போய் மனம் சோர்ந்திருந்தபோதும், இதே செயலைத்தான் அன்று தேவன் செய்தார். அவனிடம் ஒரு தூதனை அனுப்பினார்... "ஒரு புத்திமதி பிரசங்கத்தைச் சொல்வதற்கல்ல”.... தெம்பூட்டும் உணவைத் தருவதற்கே அனுப்பினார்! (1இராஜாக்கள் 19:5-8).

இது, நாம் யாவருமே பின்பற்றக்கூடிய ஒரு நல்ல உதாரணமாய் இருக்கிறதல்லவா?! ஆம், களைத்து சோர்வுடன் இருக்கும் சகோதரன் அல்லது சகோதரிக்கு, உணவு எடுத்துச்செல்லும் நல்ல செயல்! ஒரு விசுவாசி மனச்சோர்வும், அதைரியமும் அடைந்திருக்கும் வேளையில், அவனுக்கு இப்போது உடனடி தேவை “ஒரு புத்திமதி” அல்ல. புத்துணர்ச்சியூட்டும் ஒரு நல்ல உணவே தேவையாய் இருக்கக்கூடும்! ஏனெனில் அந்த சகோதரன் அல்லது சகோதரி, ஆவியையும் ஆத்துமாவையும் மாத்திரமல்ல... ஒரு சரீரத்தையும் உடையவர்களாய் இருக்கிறார்கள்! இதை நாம் மறந்துவிடவே கூடாது.

மெல்கிசேதேக்கு அவனுக்கு உணவு கொடுத்தபிறகு, 'ஆவிக்குரிய பிரகாரமாயும்' ஆபிரகாமுக்கு உதவி செய்தார். அதுகூட, ஒரு பிரசங்கத்தின் மூலமாய் அல்ல... ஆபிரகாம் அடைந்த ஜெயத்திற்காக, "வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம், ஆபிரகாமுக்கு உண்டாவதாக! உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம்!" (ஆதியாகமம் 14:19,20) என இரண்டே வாக்கியங்களில் தேவனைத் துதித்த துதியில், ஆபிரகாம் தனக்குத் தேவையான ஆவிக்குரிய உதவியைப் பெற்றுவிட்டார்!

ஆபிரகாமுக்கும் அவனுடைய ஊழியர்களுக்கும் உணவளித்துப் பரிமாற மெல்கிசேதேக்கு சுமார் 2 மணிநேரங்கள் செலவழித்திருக்கக் கூடும்.... ஆனால், அதன்பிறகு அவர் தேவனைத் துதிப்பதற்கோ 15 வினாடிகள் மாத்திரமே எடுத்துக்கொண்டார்! இருப்பினும், மெல்கிசேதேக்கு வெளிப்படுத்திய சுருக்கமான தேவஸ்துதி, இரண்டு முக்கிய காரியங்களை ஆபிரகாம் உணரும்படி செய்துவிட்டது!

ஆபிரகாம் உணர்வடைந்த முதல் பகுதி யாதெனில், வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுக்கே தான் சொந்தம்! என்பதுதான். இந்த உணர்வே, அப்போதுதான் ஆபிரகாம் கைப்பற்றி வந்த சோதோமிய ராஜாவின் பொக்கிஷங்களை “இச்சிப்பதிலிருந்து” அவனை விடுதலையாக்கிற்று! சோதோம் ஓர் ஐசுவர்யமுள்ள நகரமாயும், அதன் பொக்கிஷங்கள் விலையேறப் பெற்றதாயும் இருந்த போதிலும், அவைகளைத் தேவன் சொந்தமாகக் கொண்டுள்ள வானத்திற்கும் பூமிக்கும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது.... அவையாவும், மதிப்பேதுமில்லாத குப்பையாகவே ஆபிரகாமுக்கு, இப்போது தோன்றியது! இந்த ஆபிரகாம் யாருக்குச் சொந்தமானவன்? என்பதை அவன் தெளிவாய் காண்பதற்கு இந்த மெல்கிசேதேக்கு பேருதவி செய்துவிட்டார்!

இங்கு, மெல்கிசேதேக்கின் “ஞானத்தை” சற்று கவனியுங்கள். அவர், ஆபிரகாமைப் பார்த்து “ஆபிரகாமே, நீ பொருளாசை வலையில் விழப்போகிறாய் என்பதை தேவன் எனக்குச் சொல்லிவிட்டார்! இதோ, உன்னை நான் எச்சரிக்கும்படி அவரிடமிருந்து வந்திருக்கிறேன்!” என்று கூறவேயில்லை. ஆனால் இன்றோ, தங்களைத் தாங்களே “தீர்க்கதரிசிகளாய்” நியமனம் செய்து கொண்டு, தங்கள் வாயிலிருந்து புறப்படும் சொந்த வார்த்தைகளை “இதோ, கர்த்தர் சொல்லுகிறார்!” எனத் துணிந்து கூறுகிறார்களே?! அவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். இதுபோன்ற தீர்க்கதரிசிகள்தான், கள்ளத்தீர்க்கதரிசிகள்! தன் முன் குவிக்கப்பட்டிருந்த செல்வத்தின்மீது ஆபிரகாம் வைத்திருந்த கவனத்தை, இந்த மெல்கிசேதேக்கு திசை திருப்பி தேவனைப் பார்க்கும்படி செய்துவிட்டாரே! ஆம், இப்போது ஆபிரகாமுடைய கண்களுக்குப் “பூமியின் ஜொலிப்புகள், சாம்பல் போன்ற மங்கலாய் மாறிவிட்டது!" இதுவே, நாம் ஜனங்களுக்குச் செய்திட வேண்டிய ஆவிக்குரிய உதவியாகும்.

இனி, ஆபிரகாம் உணர்வடைந்த இரண்டாவது பகுதி யாதெனில், அந்த ராஜாக்களைத் தானும், தன்னிடமிருந்த 318 வேலைக்காரர்களும் அல்ல... தேவனே அவர்களைத் தோற்கடித்தார் என்பதை ஆபிரகாமால் இப்போது தெளிவாகக் காணமுடிந்தது. ஆபிரகாம் பெற்ற இந்த வெளிப்பாடு “ஆபிரகாமின் பெருமையிலிருந்து” அவனை இரட்சித்தது! “தன்னுடைய ஜெயம்” என்ற ஈர்ப்பில் ஆழ்ந்திருந்த ஆபிரகாமின் கண்ணோட்டத்தைத் தேவனிடத்தில் திரும்பச்செய்வதிலும் இந்த மெல்கிசேதேக்கு வெற்றி பெற்றார்!

இன்று யாரை நாம் முதல்தரமான பிரசங்கியாய் குறிப்பிடலாம்? யார் நம்மைக் குறித்தும், நம்முடைய கிரியைகளைக் குறித்தும் கொண்ட ஈர்ப்பிலிருந்து நம்மை விடுவித்து, தேவனிடத்தில் திரும்பும் படி திசைதிருப்புகிறார்களோ, அவர்களே முதல்தரமான பிரசங்கி என நாம் கூறலாம்.

இந்த மெல்கிசேதேக்கின் ஊழியத்தில், நம் மனதைக் கொள்ளை கொள்ளும் காட்சியை இப்போது நாம் பார்க்கிறோம். ஆம், ஆபிரகாமை இந்த மெல்கிசேதேக்கு ஆசீர்வதித்துவிட்டு... மறைந்துவிட்டார்! அவரைக் குறித்து, நாம் மீண்டும் வேதாகமத்தில் எங்குமே காணமுடியவில்லை. பின்பாக அவருடைய பெயர், கிறிஸ்துவைக் குறிப்பிடும் ஒரு மாதிரியாக மாத்திரமே கூறப்படுவதை காண்கிறோம்.

'அந்த நாள்' காலையில், மெல்கிசேதேக்கு தன் கூடாரத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, தேவன் அவரை சந்தித்து... அன்றைய நாளில் அவர் என்ன செய்ய வேண்டுமென்பதைக் கூறியிருப்பார். அவருக்கு ஆபிரகாம் யாரென்று தெரியாது... ஆனால் அவரோ, தேவனை அறிந்திருந்தார்! அது ஒன்றே அவருக்குப் போதுமானதாயிருந்தது! அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை மாத்திரம் தேவன் அவருக்குக்கூறி, அநேகருக்கு அவரை தேவன் ஆசீர்வாதமாய் மாற்றிவிட்டார்.

இவ்வாறு, மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியர்களாய் அழைக்கப்பட்டிருக்கும் நம்முடைய ஊழியத்தின் மகத்துவத்தைப் பாருங்கள்! ஆம், நாம் ஜனங்களை ஆவிக்குரிய பிரகாரமாகவும், சரீரப் பிரகாரமாகவும் ஆசீர்வதித்திட வேண்டும்.... பின்பு அந்த ஆசீர்வாதத்தைப் பெற்ற ஜனங்கள் நமக்கு நன்றி கூற வருவதற்கு முன்பாகவே மறைந்துவிட வேண்டும்!

“ஓ, எத்தனை மகத்துவமான தேவமனிதன்!” என ஜனங்கள் உங்களைக் குறித்து எண்ண விரும்புகிறீர்களா? அல்லது, “ஆ, இந்த ஊழியனின் தேவன் மெய்யாகவே மகத்துவமானவர்!” என்று ஜனங்கள் எண்ணிட விரும்புகிறீர்களா? இங்குதான் மார்க்க ரீதியான ஊழியத்திற்கும், ஆவிக்குரிய ரீதியான ஊழியத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் காண்கிறோம்! இங்குதான், ஆரோனின் ஆசாரியத்துவத்திற்கும், மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவத்திற்கும் உள்ள வித்தியாசம் பொதிந்து கிடக்கிறது! இந்த ஆரோன், தன் ஆசாரித்துவ உடையில் ஜனங்களுக்கு முன்பாக அடிக்கடி தோன்றி, அவர்களின் 'கனத்தைப்’ பெற்றுக்கொண்டவன்! ஆனால், மெல்கிசேதேக்கோ ஜனங்களுக்கு ஊழியம் செய்துவிட்டு... மறைந்துவிட்டார்!

இந்த மெல்கிசேதேக்கின் மாதிரியின்படியே, இயேசுவும் இந்த பூமியில் ஊழியம் செய்தார். வாழ்க்கையின் போராட்டத்தில் தடுமாறிய ஜனங்களின் ஆவிக்குரிய தேவைகளையும், சரீரப்பிரகாரமான தேவைகளையும் சந்திக்கிறவராகவே இயேசுவும் சுற்றித்திரிந்தார்! தமது சுகமாக்கும் நிகழ்ச்சியை யாரும் விளம்பரப்படுத்த அவர் ஒருபோதும் விரும்பியதில்லை! தம்மை “சுகமளிக்கும் ஊழியன்” என பகிரங்கப்படுத்த நாடியதுமில்லை! ஒரு ராஜாவாய் மாறிட விரும்பியதுமில்லை! பிறருக்காகவே ஊழியம் செய்ய வந்து.... பிறருக்காகவே தம் ஜீவனைக் கொடுத்துவிட்டார்! புகழின் உச்சாணிக்கு ஏறிட அவர் விரும்பியதேயில்லை! தாம் உயிர்த்தெழுந்தவுடன், ஏரோதிற்கோ அல்லது பிலாத்துவுக்கோ அல்லது அன்னாவுக்கோ அல்லது காய்பாவிற்கோ முன்பாகத் தோன்றி “இப்போதாவது, நான் தேவனுடைய குமாரன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்!" என நிரூபிக்க அவர் விரும்பியதுமில்லை! பரிசேயர்கள், சதுசேயர்களில் ஒருவருக்காவது “தம் உயிர்த்தெழுந்த கோலத்தை” காண்பிக்கவுமில்லை.... ஏனெனில் தம்மை மனுஷர்களுக்கு முன்பாக நியாயப்படுத்திட அவர் கடுகளவும் விரும்பவேயில்லை! மனுஷர்களின் அபிப்பிராயம் அனைத்தும் “குப்பைத்தொட்டிக்கு சமம்” என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்!

இந்த மெல்கிசேதேக்கைப் போல், ஒவ்வொரு நாளும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தேவனிடமிருந்து அறிந்து கொள்ள, தேவனைக் கவனித்துக் கேட்பவர்களாய் நாம் வாழத் தொடங்கிவிட்டால், அது எத்தனை பரவசமானது! என்பதை சற்றே எண்ணிப்பாருங்கள். இந்த வழியே, இந்த பூமியில் நாம் வாழ்வதற்குரிய மிகவும் பயனுள்ள வழியாகும்!

நம்முடன் தொடர்புகொள்பவர்களும், இப்படியே சரீரப் பிரகாரமாயும், ஆவிக்குரியபிரகாரமாயும் ஆசீர்வதிக்கப்படும்படி இயேசுவின் அதே வாழ்க்கையை வாழும்படி நாமும் அழைக்கப்பட்டிருக்கிறோமல்லவா? ஆம், நாம் அனைவரும் “மெல்கிசேதேக்கின்” ஆசாரித்துவ முறைமையின்படியான ஆசாரியர்களாய் இருப்பதற்கே அழைக்கப்பட்டிருக்கிறோம்!