WFTW Body: 

தேவனை ஆராதிப்பது நமது பரலோகத் தகப்பனுடன் மிக நெருக்கமானதோர் உறவிற்கு நம்மைக் கொண்டுவரும் ஒன்றாக இருக்கிறது; மேலும் ஆராதனை என்பது வெறும் வார்த்தைகளைப் பேசுவதையும் அல்லது தேவனிடம் வார்த்தைகளைக் கூறுவதையும் விட மேலானது. 90-சதவீதத்திற்கும் அதிகமான விசுவாசிகளுக்கு இருக்கும் ஒரு தவறான புரிதலை நான் தெளிவுபடுத்துகிறேன். இன்று பல சபைகளில் ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பதம் இருக்கிறது, அது “ஆராதனைக் கூடுகை” என்று அழைக்கப்படுகிறது. கரிஸ்மாடிக் அல்லது பிற பெந்தேகோஸ்தே சபைகளில், அவர்கள் அதை “துதி மற்றும் ஆராதனை” நேரம் என்று அழைக்கிறார்கள். நீங்கள் முற்றிலும் வேதத்தையும் வேதவாக்கியங்களையும் சார்ந்தவராக இருக்க விரும்பினால், அது முற்றிலும் தவறான ஒரு பதம்; அவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் அங்கு செய்வது ஆராதனை அல்ல. அவர்கள் அங்கே பாடும் பாடல்களின் வார்த்தைகளை நீங்கள் கேட்டால், அது துதியும் நன்றிசெலுத்துதலும் தான் என்பது விளங்கும். அது ஆராதனையே அல்ல. நீங்கள் என்னை நம்பவில்லை என்றால், ஓர் ஒத்தவாக்கிய அகராதியை (concordance) எடுத்து புதிய ஏற்பாடு முழுவதிலும் இருக்கும் ‘ஆராதனை’ என்ற வார்த்தையைப் பாருங்கள். பழைய ஏற்பாட்டில், அவர்கள் தேவனுக்குத் தங்கள் ஆராதனையை வெளிப்படுத்தக் கூடிய ஒரே முறைமையாக அது இருந்தது: கைகளைத் தட்டி, இசைக்கருவிகளை இசைத்து, பாடல்கள் பாடி தேவனுக்குத் தங்கள் ஆராதனையை வெளிப்படுத்தினார்கள். ஆனால் புதிய உடன்படிக்கையில், இயேசு சமாரிய ஸ்திரீயிடம், “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்” (யோவான் 4:23-24) என்று கூறினார்.

இயேசு “வரப்போகும்” ஒரு காலத்தைக் குறித்துப் பேசினார். அவர் பெந்தெகொஸ்தே நாளைக் குறித்து அப்படிக் கூறினார்; அது அப்பொழுது இன்னும் வந்திருக்கவில்லை. யோவான் 4:23-இல் அவர் அது “இப்பொழுதே வந்திருக்கிறது” என்றும் கூறினார். அதன் அர்த்தம், அது அவருக்குள்ளாக ஏற்கனவே நிறைவேறியிருந்தது என்பதாகும். ஏனெனில், புதிய உடன்படிக்கையில் இயேசு அநேக சகோதரர்களுக்கு முதற்பேறானவராயிருக்கிறார். புதிய உடன்படிக்கையை நமக்காகத் திறந்தவர் அவர். எனவே ஒரு வகையில், அவர் முதலானவரும் நமக்குத் தலைவராகவும் இருக்கிறார். ஆகவே, இறுதியாக, பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொண்டுவந்த ஒரு மனிதன் பூமியில் வாழ்ந்த அந்தக் காலம் வந்தது. அவர் இயேசுவே. அதற்கு முன் யாரும் தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவில்லை.

மனிதன் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் உடையவனாக இருக்கிறான் என்று 1தெசலோனிக்கேயர் 5:23 நமக்குக் கூறுகிறது. மேலும், இயேசு இங்கு ‘ஆவி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன்மூலம், ​​பழைய ஏற்பாட்டு ஆராதனைகள் அனைத்தும் அதுவரை சரீரத்திலும் ஆத்துமாவிலும் மட்டுமே இருந்தன என்று அவர் கூறுகிறார். அதாவது, அவர்கள் கைகளை உயர்த்தி, கைகளைத் தட்டி, தங்கள் கரங்களால் தேவனை ஆராதித்தார்கள்; தங்கள் மனம், அறிவு, உணர்வுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆத்துமாவில் தேவனை ஆராதித்தார்கள்; நீங்கள் கூட்டத்தில் துதி மற்றும் நன்றிப் பாடல்களைப் பாடும்போது உங்களுக்கு ஏற்படுவது போலவே அவர்கள் சந்தோஷம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான உணர்வுகளையும் அனுபவித்தார்கள். அந்த அளவுக்குத் தான்—ஆத்துமாவிலும் சரீரத்திலும்—ஆராதனை இருந்தது. ஆனால் அவர், “பரிசுத்த ஆவியானவர் என்னில் வாசம்பண்ணுவது போல உங்களில் வாசமாயிருக்க ஆரம்பித்திருக்கிறபடியால், நீங்கள் இன்னும் ஆழமான ஆராதனைக்கு இப்பொழுது வந்துவிட்டீர்கள்” என்றே கூறினார். இயேசு இங்கு கூறியது, “உங்களால் சரீரத்திலும் ஆத்துமாவிலும் மட்டுமின்றி, ஆவியிலும் உண்மையிலும் ஆராதிக்க முடியும்” என்பதே.

இன்று நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் இன்னும் கைதட்டி, கைகளை உயர்த்துகிறோம்; நாம் இன்னும் உணர்ச்சிவசப்பட்டு, நம் அறிவைப் பயன்படுத்தி தேவனைத் துதிக்கிறோம்; ஆனால், அவை அனைத்திற்கும் மேலாக, நாம் ஆவியில் ஆராதிக்க வேண்டும், அதாவது நாம் ஆத்துமாவிற்கும் ஆவிக்கும் இடையே உள்ள அந்தத் திரையை ஊடுருவி, நாம் தேவனுடன் தனியாக இருக்கும் அந்த மண்டலத்திற்குள் நுழைகிறோம். பழைய ஏற்பாட்டின் ஆசரிப்புக் கூடாரத்தில், மூன்று பகுதிகள் இருந்தன—அவை நம்முடைய சரீரம், ஆத்துமா மற்றும் ஆவிக்கு ஒப்பனையாக இருக்கின்றன. அதன் உட்பகுதி, திரையால் மூடப்பட்ட இந்த மூடிய பகுதி, தேவன் மட்டுமே வாசம் செய்த மகா பரிசுத்த ஸ்தலமாகும். வெளிப்பிராகாரத்தில் பலிகள் செலுத்தப்பட்டதால், அங்கே அவர்களுக்கு மிகுந்த உற்சாகம் இருந்தது. பரிசுத்த ஸ்தலத்தில், பல ஆசாரியர்கள் ஒருவரையொருவர் சூழ்ந்து கொண்டு தூபம் காட்டி, விளக்கில் தீபம் ஏற்றினர். ஆனால், மகா பரிசுத்த ஸ்தலத்தில் தேவன் மட்டுமே இருந்தார். ஆகவே, ஒரு மனிதன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்தபோது, ​​அவன் தேவனோடு மாத்திரமே இருந்தான். அவன் வேறு ஒருவரையும் உணரவில்லை. அங்கே அவனையும் தேவனையும் தவிர வேறு யாரும் இல்லை. அதுவே ஆவியில் ஆராதனை செய்வதாகும்; அது நீங்கள் தேவனோடு தனியாக இருப்பதாகும். அது உங்கள் அறையில் நீங்கள் செய்யக்கூடிய ஒன்றாயிருக்கிறது; அது நீங்கள் வெறும் வார்த்தைகளால் செய்யும் காரியம் அல்ல.

உண்மையான ஆராதனை செய்யும் ஒருவர் தேவனைப் பற்றிய தனது அணுகுமுறையில் என்ன கூறுகிறார் என்பதற்கான மிகச்சிறந்த உதாரணங்களில் ஒன்று சங்கீதம் 73:25-இல் காணப்படுகிறது. இதை உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து தேவனிடம் நேர்மையாகச் சொல்ல முடிந்தால், நீங்கள் ஆராதனை செய்யும் ஒருவராயிருப்பீர்கள் (worshipper). இல்லையென்றால், நீங்கள் ஆவியில் ஆராதிக்கவில்லை. அந்த வசனம், “தேவனே, பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு?” என்று கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “நான் பரலோகத்தை அடையும்போது, தங்க வீதிகளையோ அல்லது ஒரு மாளிகையையோ அல்லது கிரீடத்தையோ தேடமாட்டேன். தேவனில் மட்டுமே நான் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கப் போகிறேன். எனக்கு தேவனைத் தவிர வேறு யாரும் அல்லது எதுவும் தேவையில்லை.” அதாவது, “எனக்கு அற்புதமான சகோதர சகோதரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பரலோகத்தில் இருக்கிறார்கள், ஆனால் நீர் மாத்திரமே எனக்கு எல்லாமாக இருக்கப் போகிறீர்” என்று கூறுவதாகும். “பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.” அதாவது, “பரலோகத்தில் மட்டுமல்ல, நான் பரலோகத்திற்கு வருவதற்கு முன்பு, இந்த பூமியில், உம்மைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை. நான் முழு திருப்தியுடன் இருக்கிறேன்.” போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். ஒரு ஆராதிக்கும் மனிதனுக்கு இந்த பூமியில் உள்ள எதையும் பற்றி ஒருபோதும் குறை சொல்லுதல் இருக்காது - தேவன் தனக்காக ஏற்பாடு செய்த எல்லா சூழ்நிலைகளிலும் அவன் முழுமையாக திருப்தி அடைகிறான். தேவன் தன்னைக் கொண்டு வந்த குடும்பம், தனக்கு இருக்கும் வேலை மற்றும் தனக்குள்ள எல்லாவற்றிலும் அவன் திருப்தியாயிருக்கிறான். அவன் முழு திருப்தியுடன் இருக்கிறான். அவன் தேவனைத் தவிர வேறு எதையும் விரும்புவதில்லை. ஒரு பழைய பழமொழி சொல்வது போல், உங்கள் வாழ்க்கையில் தேவனைத் தவிர மற்ற எல்லாவற்றையும் இழந்துவிடும் நிலை வந்தால், தேவன் போதுமானதை விட அதிகமாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

ஆகையால் இதுவே மெய்யான ஆராதனை - ‘இங்கு, இந்த பூமியில் நான் தேவனைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை’ என்பதே என் இதயத்தின் மனப்பான்மை. அந்த மனப்பான்மை உங்களிடம் இல்லையென்றால், ஞாயிற்றுக்கிழமை காலை தேவனைத் துதித்து நன்றி சொல்லும்போது நீங்கள் எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டாலும், நீங்கள் ஆராதிப்பவர் அல்ல. நீங்கள் அதை ஆராதனை என்றும் துதி என்றும் அழைக்கலாம், ஆனால் நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். நீங்கள் தேவனை ஆராதிக்காதபோதும் நீங்கள் தேவனை ஆராதிப்பதாக எண்ணி கற்பனை செய்வதால் சாத்தான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். ஆனால், இயேசு யோவான் 4:23-இல், பிதா தம்மை ஆவியோடு தொழுதுகொள்ளுகிறவர்களைத் தேடுகிறார் என்று கூறினார். பிதாவுக்கு எத்தனை பெரிய ஏக்கம் இருக்கிறது!

உங்கள் பிதாவின் இதயத்தைத் திருப்திப்படுத்தவும், ஆவியில் ஆராதிப்பவராக இருக்கவும் உங்களுக்கு அந்த ஏக்கம் இருக்கிறதா? அப்படியெனில் சங்கீதம் 73:25-க்குச் சென்று, அந்த வார்த்தைகள் உங்கள் இதயத்தின் வெளிப்பாடாகும் வரை இளைப்பாற வேண்டாம்; நீங்கள் பூமியில் இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு எதையும் விரும்பாமல்—ஏன், ஊழியத்தைக் கூட விரும்பாமல்—ஜீவியுங்கள். உங்கள் சுவிசேஷ ஊழியத்திலோ அல்லது உங்கள் போதனையிலோ அல்லது உங்கள் சபைக் கட்டிடத்திலோ அல்லது எந்த ஊழியத்திலோ அல்லது உங்கள் பணத்திலோ அல்லது உங்கள் சொத்துக்களிலோ அல்லது எதிலும் உங்கள் திருப்தியைக் காணாதீர்கள். “ஆண்டவரே, எனக்கு நீர் இருக்கிறீர், நான் உம்மை மட்டுமே விரும்புகிறேன்” என்று கூறுங்கள்.