WFTW Body: 

பழைய ஏற்பாட்டில், "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" என்று நியாயப்பிரமாணம் கூறியது. இது யாத்திராகமம் 21, லேவியராகமம் 24 மற்றும் உபாகமம் 19-இல் தேவன் கொடுத்த ஒரு பிரமாணமாகும். தேவன் அங்கு கூறுவது, ‘யாராவது உன்னுடைய கண்ணைப் பிடுங்கினால், நீ அவனுடைய கண்ணைப் பிடுங்க வேண்டும்’ என்பதல்ல. மாறாக, ‘ஒருவன் உன்னுடைய ஒரு கண்ணை மட்டும் எடுத்தால், நீ அவனுடைய இரண்டு கண்களையும் எடுக்காதே’ என்பது தான் அதன் பொருள். விஷயம் என்னவென்றால், நீங்கள் குற்றவாளியை மன்னித்து, அவனுடைய கண்கள் ஒன்றையும் எடுக்காமல் அவனை விட்டு விடலாம். அதுவே சிறந்த வழியாக இருக்கும். தேவன், "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" என்று கூறியதன் மூலம் தண்டனையை மட்டுப்படுத்தினார்.

ஆனால் இயேசுவோ அந்தத் தரத்தை உயர்த்தி, "தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ" (மத்தேயு 5:39-41) என்று கூறுகிறார். ரோம வீரர்கள் சில சமயங்களில் தங்கள் அடிமைகளாக இருந்த யூத மக்களை தங்கள் பொருட்களையும் இராணுவ உபகரணங்களையும் ஒரு மைல் தூரம் எடுத்துச் செல்லக் கட்டாயப்படுத்துவார்கள். யூதர்கள் அடிமைகளாக இருந்தபடியால் அவர்கள் அதைச் செய்ய வேண்டியிருந்தது. இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் அந்த மனிதனுடன் இரண்டு மைல் தூரம் செல்ல வேண்டும் என்றும், அதைப் பற்றி அவனுடன் சண்டையிடக்கூடாது என்றும், நம்மிடம் கேட்பவருக்குக் கொடுக்க வேண்டும் என்றும், நம்மிடம் கடன் வாங்க விரும்புபவரைத் தவிர்க்கக்கூடாது என்றும் இயேசு நமக்குக் கூறுகிறார்.

இந்த வார்த்தைகளை அவற்றின் பின்னால் இருக்கும் ஆவியின்படி நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இயேசு என்ன பொருள்படுத்தினார் என்பதை நாம் சரியாகப் பார்க்க வேண்டும். அவர் நம்மைக் கதவு மிதியடிகளைப் போல இருக்கச் சொன்னாரா? மக்கள் விரும்பியதையெல்லாம் செய்ய நாம் அனுமதிக்க வேண்டுமா? அப்படி இருக்க முடியாது. நீங்கள் வேதத்தை சரியாகப் புரிந்துகொள்ளாத போதெல்லாம், இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பாருங்கள் - ஏனென்றால் அவரே மாம்சமாக வந்த வார்த்தையானவர். பழைய ஏற்பாட்டில், நியாயப்பிரமாணத்தின் ஒவ்வொரு குறிப்பையும் விளக்க, அதை ஆராய்ந்து எழுதும் வேதபாரகர்கள் இருந்தார்கள். புதிய ஏற்பாட்டில், இயேசுவைப் பார்க்க வேண்டிய அளவுக்கு வசனங்களை நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் இப்போது அவருடைய முன்மாதிரி நமக்கு இருக்கிறது.

"ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு" என்று இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன? இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு சற்று முன்பு விசாரணையில் பிரதான ஆசாரியர்கள் முன் நின்றபோது, ​​கன்னத்தில் அறையப்பட்டார், ஆனால் அப்போது அவர் மறு கன்னத்தை திருப்பிக் காட்டவில்லை என்பதை நாம் காண்கிறோம். அவர் யோவான் 18:23-இல், "நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்டார். அவர்கள் அதற்கு பதிலளிக்கவில்லை (அவர்கள் அவரை மீண்டும் அறைந்திருக்கலாம், அவரும் பதிலுக்குப் போராடவில்லை). அவர்கள் அவரை அறைந்தபோது, ​​அவர் தம்முடைய மறு கன்னத்தையும் அறையக் கொடுக்கவில்லை. எனவே, கிறிஸ்து சொல்வதன் ஆவியை நாம் புரிந்துகொள்வதில் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் இயேசுவே அவர் பிரசங்கித்ததைச் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்ட வேண்டியிருக்கும்.

இங்கு நாம் காண்கிற கோட்பாடு என்னவென்றால்: “நான் பழிவாங்க விரும்பவில்லை; எனக்கு செய்யப்பட்டதற்கு நான் யாரிடமும் பழிவாங்க முயற்சிக்கவில்லை. யாராவது என்னைப் பிசாசு என்று அழைத்தால், நான் அந்த நபரை பிசாசு என்று அழைக்கப் போவதில்லை. என்னை யாராவது அறைந்தால், நான் திருப்பி அறைய மாட்டேன். நான் அமைதியாக உட்கார்ந்து, மற்றவர்கள் என்னை ஏமாற்றுவதிலிருந்து தேவன் காப்பாற்றுவார் என்று தேவன் மீது நம்பிக்கை வைப்பதையே நான் விரும்புகிறேன்.

யாராவது உன் சட்டையை எடுத்துக்கொள்ளும்படி வழக்கு மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால், உன் மேலங்கியையும் கொடு என்று அவர் கூறியதன் அர்த்தம் என்ன? உதாரணமாக, ஒருவர் அநியாயமாக ஒரு பொய்யைச் சொல்லி, உங்கள் சொந்த சொத்தை தன்னுடையது என்று கூறி உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் - ஒருவேளை அவர் நீதிமன்றத்தில் சில பொய்யான ஆவணங்களைப் பெற்று உங்கள் வீட்டை உங்களிடமிருந்து பறிக்க விரும்பினால் - நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் அவரிடம் உங்கள் வீட்டை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி அதோடு உங்களுடைய மற்றொரு வீட்டையும் அவருக்குக் கொடுத்திட வேண்டுமா? அது தான் இந்த வசனத்தின் அர்த்தமா?

இயேசு கூறியது அதுவல்ல. நாம் ஆவியைப் புரிந்து கொள்ள வேண்டும். யாராவது உங்களை ஒரு மைல் தூரம் வர வற்புறுத்தினால், அவருடன் இரண்டு மைல் தூரம் செல்லுங்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், யாராவது உங்களை ஏதாவது செய்ய கட்டாயப்படுத்தினால், இன்னும் அதிகமாகச் செய்யுங்கள். நீங்கள் அதன் ஆவியைப் புரிந்து கொள்ள வேண்டும். ‘உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே’ என்றும் இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார். உங்களிடத்தில் கடன் வாங்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறாரா? இந்தியாவில், நீங்கள் ஒருவருக்கு ஒரு முறை பணம் கொடுத்துவிட்டு, ‘எவருக்கும் இவர் தாராளமாகக் கொடுத்துக்கொண்டே இருப்பவர்’ என்ற நற்பெயரைப் பெற்றால், நீங்கள் சிறிது காலத்திற்குள் திவாலாகிவிடுவீர்கள்!

இந்த வார்த்தைகளின் பின்னால் இருக்கும் ஆவியை நீங்கள் புரிந்து கொள்ளாமல், கண்மூடித்தனமாக வார்த்தையை அப்படியே எடுத்துக் கொண்டால், நீங்கள் அநேக சிக்கல்களில் மாட்டிக் கொள்வீர்கள். கண் பிடுங்கப்பட்ட ஒரு குருடனைப் போலவோ அல்லது கை துண்டிக்கப்பட்ட ஒருவனைப் போலவோ நாம் இருக்க வேண்டும் என்று அவர் நமக்குக் கற்பித்தது போல, பாவத்தைப் குறித்து தீவிரமான மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்று இயேசு நமக்குக் கற்பிக்கிறார். இந்த விஷயங்களையெல்லாம் இப்படிப்பட்ட ஆவியோடு தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்: “பழிவாங்க முயற்சி செய்யாதீர்கள், மற்றவர் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருங்கள், அதோடு உங்களுடைய சுயத்திற்கு மரிக்கத் தயாராக இருங்கள்; ஆனால் அதற்காக உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அர்த்தமல்ல.”

பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்த ஒரு சகோதரன், ஒருமுறை ஒரு சபைக் கூட்டத்தில் சாட்சி கூறினார். அவர் தெருவில் வாகனம் ஓட்டும்போது, ​​சில சமயங்களில் இரவில் யாரோ ஒருவர் எதிர் திசையில் ஒரு காரில் பிரகாசமான முகப்பு விளக்குகளுடன் தன்னை நோக்கி வருவதைப் பார்ப்பார், அது அவரது கண்களை குருடாக்கும். எதிர் திசையில் இன்னொரு கார் வரும்போது அவர்கள் தங்கள் விளக்குகளின் பிரகாசத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த மக்கள் அவ்வாறு செய்வதில்லை. அவர்கள் வாகனத்தின் விளக்குகள் இவருடைய கண்களைக் குருடாக்கியதால், இவரும் தன்னுடைய பேருந்தின் முகப்பு விளக்குகளையும் இன்னும் அதிகப் பிரகாசத்தில் அவர்களை நோக்கிப் பிரகாசிக்கச் செய்து, எதிரே வரும் ஓட்டுநரைக் குருடாக்கி, அவருக்குப் பாடம் கற்பிக்க விரும்பினார். திடீரென்று அந்த சகோதரன் தான் ஒரு கிறிஸ்தவன் என்பதையும், அதனால் பழிவாங்கக் கூடாது என்பதையும் உணர்ந்து, அதைச் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தார். அந்தச் சகோதரன் பழிவாங்குவது என்றால் என்ன என்பதைக் குறித்து பெற்றுக்கொண்ட வெளிப்பாட்டைக் கவனியுங்கள்: தான் காயப்படுத்திய அதே வழியில் இன்னொருவரைக் காயப்படுத்துவது பழிவாங்குதலாகும்!

இயேசு கற்பித்த கோட்பாட்டை நான் புரிந்து கொண்டிருப்பேனானால், சாலையில் வாகனம் ஓட்டும்போது யாரோ ஒருவர் தனது முகப்பு விளக்குகளின் பிரகாசத்தை அதிகரிக்கச் செய்து என் கண்களைக் கூசச்செய்யும் போது கூட, அந்தக் கோட்பாட்டை அத்தருணத்தில் எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கண்டுபிடிப்பேன். இந்தச் சூழ்நிலை வேதாகமத்தில் எங்கும் எழுதப்படாமல் இருக்கலாம், ஆனால் நான் கோட்பாட்டைப் புரிந்துகொண்டால், என் நேரம், பணம், பெலன் ஆகியவை முதன்மையாக கர்த்தருக்குச் சொந்தமானவை என்பதை உணர்ந்து, விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பேன். நான் மனிதர்களின் அடிமை அல்ல, போகிறவர்கள் வருகிறவர்களெல்லாம் என்னைத் தங்களுடைய அடிமையாக மாற்ற நான் அனுமதிக்கப் போவதில்லை. நான் முதன்மையாக ஆண்டவரின் அடிமை, நான் மனிதர்களின் அடிமையாக இருக்கப் போவதில்லை.

எனவே நான் இதை மனதில் வைத்திருந்தால், இந்தக் கோட்பாடுகளை நான் புரிந்துகொள்வேன்: “நான் ஒருபோதும் பழிவாங்க விரும்பவில்லை, அந்த நபரை அவர் என்னை நடத்தும் விதத்தில் நான் ஒருபோதும் நடத்த விரும்பவில்லை, மேலும் அவர் என்னிடம் பேசிய விதத்தில் நான் அவரிடம் பதிலளிக்க விரும்பவில்லை. நான் விட்டுக்கொடுக்க விரும்புகிறேன், நான் இரக்கமாய் இருக்க விரும்புகிறேன், என் உரிமைகளை விட்டுக்கொடுக்க விரும்புகிறேன்.