WFTW Body: 

1. நம்மை நீதிமான்களாக்கும்படி இயேசு பாவமானார்:
"நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" (2 கொரிந்தியர். 5:21). நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு கிறிஸ்து நமக்காகப் பாவமானார். இதுதான் நீதிமானாக்கப்படுதலாகும், இது தேவனுடைய இலவசமான ஈவு. இது தேவனுடைய பரிசுத்த தரத்தைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு நீதியுள்ளவர்களாக ஒருபோதும் மாற முடியாது என்பதைக் கண்டுணருகிற தாழ்மையுள்ளவர்களுக்கே உரியதாகும். "அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே" (ரோமர் 11:6) என்று வேதாகமம் சொல்கிறதைப் போலக் கிருபையினால் மாத்திரமே நாம் நீதிமானாக்கப்படுகிறோம். இயேசு நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை மாத்திரம் சுமக்கவில்லை. அவர் மெய்யாகவே பாவமானார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே பூமியிலுள்ள பரிசுத்தவான்களில் தலைசிறந்த பரிசுத்தவானுடைய நீதியைப் பார்க்கிலும் தேவனுடைய நீதி உயர்ந்திருக்கிறது (ஏசாயா 55:9). பாவமற்ற தூதர்கள்கூட தேவனுடைய முகத்தைக் காணக்கூடாமல், அவருக்கு முன்பாக தங்களுடைய முகத்தை மூடவேண்டும் (ஏசாயா 6:2,3). கிறிஸ்து மாத்திரமே பிதாவின் முகத்தை நேரடியாகப் பார்க்க முடியும். ஆகவே தேவன் நம்மை கிறிஸ்துவுக்குள் வைத்திருக்கிறார். நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறபடியால், எந்தவொரு பயமுமில்லாமல் இப்பொழுது நாம் தேவனிடதிற்கு செல்ல முடியும். கிறிஸ்துவுக்குள் நம்மை வைத்திருப்பதின் மூலமாகத் தேவன் நம்மை நீதிமானாக்கவும் செய்கிறார், கிறிஸ்துவை நீதியுள்ளவராய் ஏற்றுக்கொள்ளுகிறதைப் போலவே தேவன் நம்மை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார். நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாக மாறினபடியால், தேவனுக்கு முன்பாக நாம் பூரணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறோம். இதனால் நாம் இப்பொழுது சந்தோஷமாயிருக்க முடியும்.

2. நம்மை ஐசுவரியவான்களாக்கும்படி இயேசு தரித்திரரானார்:
"நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே" (2 கொரிந்தியர் 8:9). நம்மை ஐசுவரியவான்களாக்கும்படி (வேறு வார்த்தைகளில் சொன்னால், நம்முடைய வாழ்வில் எந்தவொரு தேவையுமில்லாமல் அல்லது எந்தவொரு குறைவுமில்லாமல் இருக்கும்படிக்கு) சிலுவையிலே இயேசு தரித்திரரானார். நாம் விரும்புகிற எல்லாவற்றையும் தருவேன் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்யாமல், நமக்குத் தேவைப்படுகிற எல்லாவற்றையும் தருவேன் (குறைவையெல்லாம் நிறைவாக்குவேன்) என்றே வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் (பிலிப்பியர் 4:19). புத்தியுள்ள பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகள் விரும்புகின்ற எல்லாவற்றையும் அல்லது கேட்கிற எல்லாவற்றையும் அவர்களுக்குக் கொடுக்காமல், தேவையானவைகளை மட்டுமே கொடுக்கிறார்கள். தேவனும் அப்படித்தான் இருக்கிறார். நியாயப்பிரமாணத்தை கீழ்ப்படிகிறவர்களுக்குப் பூமிக்குரிய செல்வத்தைக் கொடுப்பதாகப் பழைய உடன்படிக்கை வாக்குத்தத்தம் செய்திருந்தது. ஆனால் புதிய உடன்படிக்கையின் கீழ், முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடும்போது இன்னும் மேன்மையானதைக் கொடுப்பேன் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் (2 பேதுரு 1:4). இந்த பூமிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் கொடுப்பேன் என்றும் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் (மத்தேயு 6:33). நாம் ஐசுவரியவான்களாகும்படி இயேசு தரித்திரரானார். எனவே, ஒருபோதும் நம்முடைய வாழ்வில் எந்தவொரு குறைவோடும் வாழ வேண்டியதில்லை. நம்முடைய எதிர்காலத்தைக் குறித்தோ அல்லது நம் பிள்ளைகளுடைய எதிர்காலத்தை குறித்தோ நாம் பயப்பட வேண்டியதில்லை. சிலுவையிலே இயேசு நம்முடைய பூமிக்குரிய எல்லா தேவைகளையும் நம் குடும்ப அங்கத்தினர்களுடைய பூமிக்குரிய எல்லா தேவைகளையும் கிரயத்துக்கொண்டார் (வாங்கிவிட்டார்). எனவே பிரியமான சகோதரனே, சகோதரியே, உங்களுடைய எல்லா பயத்திலிருந்தும் விடுதலையாய் இருங்கள். சிலுவையிலே இயேசு உங்களுக்காக ஏற்கனவே தரித்திரரானார். இனியும் உங்களுடைய வாழ்வில் தொடர்ச்சியான நிதி பற்றாக்குறையுடன் நீங்கள் வாழவேண்டியதில்லை. உங்களுடைய எல்லா தேவைகளையும் நீங்கள் எப்போதும் பெற்றுக்கொள்ள முடியும். சுவிசேஷத்திலுள்ள உங்களுடைய பிறப்புரிமையைக் கோருங்கள்.

3. நம்மை ஆசீர்வாதமுள்ளவர்களாய் மாற்றும்படி இயேசு சாபமானார்:
கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் நமக்கு (புறஜாதிகளுக்கு) வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று (கலாத்தியர் 3:13,14). சுவிஷேசத்தின் நற்செய்தி என்னவென்றால், இயேசு நமக்காக ஏற்கனவே சாபமானபடியால் நியாயப்பிரமாணத்தின் எந்தவொரு சாபமும் இனி ஒருக்காலும் நம்மைத் தொடாது என்பதாகும். இதுவே ஒரு பெரிய நற்செய்தியாக இருக்கிறது. ஆனால் அந்த சாபத்திற்குப் பதிலாகத் தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்த அந்த ஆசீர்வாதத்தை நாமும் பெறமுடியும் என்கிறதான மேலான செய்தியும் நமக்கு உண்டு. தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆசீர்வாதத்தை ஆதியாகமம் 12:2,3 இப்படியாக விவரிக்கிறது. “நான் உன்னை ஆசீர்வதிப்பேன்... எனவே நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்... பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்”. சிலுவையிலே கிறிஸ்து நமக்காகச் சாபமாகி நமக்கு வாங்கிக்கொடுத்த (ஈண்ட) ஆசீர்வாதம் இதுவே. அவர் நம்மை ஆசீர்வதித்து, நம்முடைய வாழ்நாள் முழுவதும் பூமியிலே நாம் சந்திக்கிற ஒவ்வொரு நபருக்கும் நாம் ஆசீர்வாதமாக இருக்கும்படி விரும்புகிறார். பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதன் மூலமாக இந்த ஆசீர்வாதம் நமக்கு வருகிறது என்று இந்த வசனம் நமக்குச் சொல்கிறது. பரிசுத்த ஆவியானவரை ஒரு கிணற்றுத் தண்ணீரைப்போல நமக்குள்ளே ஊறுகிற நீரூற்றாயிருந்து நம்மை ஆசீர்வதிக்கிறார் (யோவான் 4:14) என்பதாகவும், அதன் பிறகு நதிகளின் தண்ணீரைப்போல நம்முடைய உள்ளத்திலிருந்து புரண்டோடி மற்றவர்களை ஆசீர்வதிக்கிறார் (யோவான் 7:37-39) என்பதாகவும் இயேசு விவரித்தார். இன்று பாவத்திலும், தோல்வியிலும் வாழ்ந்துகொண்டிருக்கிற கொடிய பாவிக்கும் கர்த்தருடைய வாக்குத்தத்தம் இதுவே: "நீங்கள் கடத்தகாலத்தில் சாபமாயிருந்ததுபோலவே, வருங்காலத்தில் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாயிருக்க முடியும்" (சகரியா 8:13). பூமியிலே நாம் சந்திக்கிற ஒவ்வொரு குடும்பத்திற்கும் நாம் ஆசீர்வாதமாக இருக்கவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாக இருக்கிறது.