பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்ட பிறகு இயேசு கற்பித்த முதல் காரியம் என்னவெனில், தேவன் பேசும் வார்த்தைகளை நாம் பெற்றுக்கொள்ளாவிட்டால் நம்மால் வாழ முடியாது என்பதேயாகும். நாம் தேவனுக்கு ஊழியம் செய்வதால் மட்டுமே தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றி அவருடைய இருதயத்தை திருப்திப்படுத்த முடியாது. அநேக கிறிஸ்தவர்கள், “நான் கர்த்தருக்காக இதைச் செய்கிறேன்”, “நான் கர்த்தருக்காக அதைச் செய்கிறேன்”, “நான் ஓர் அனாதை இல்லத்தை நடத்துகிறேன்", “நான் ஒரு வேதாகமப் பள்ளியை நடத்தி, ஜனங்களுக்கு உதவுகிறேன்”, “தேவையில் இருப்பவர்களுக்கு நான் பணம் கொடுக்கிறேன்”, “நான் இங்கே சென்று, அதைச் செய்கிறேன்” என்று சொல்வதில் திருப்தி அடைகிறார்கள். அவர்கள் எப்போதும் கர்த்தருக்காக தாங்கள் என்ன செய்கிறார்கள் என்றே நினைத்துக் கொண்டிருப்பார்கள். நான் அதை உதாசீனப்படுத்துவதில்லை. “நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக” என்று 1கொரிந்தியர் 15:58-இல் கூறப்பட்டுள்ளபடி, கர்த்தர் வரும் வரை நாம் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும். என் வாழ்வின் இறுதி வரை, கிறிஸ்து வரும் வரை, “கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிற” காரியத்தைச் செய்ய விரும்புகிறேன். கர்த்தருக்கு ஊழியம் செய்வதை நான் ஒருபோதும் நிறுத்த விரும்பவில்லை. ஆகையால், நான் அதை உதாசீனப்படுத்துவதில்லை.
நாம் ஊழியம் செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன், ஆனால் ஊழியத்தை விட தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொள்வது மிக முக்கியம் என்று நான் கூறுவேன். “மனுஷன் தேவனுக்கு ஊழியம் செய்வதினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்”. இயேசு அபிஷேகம் பெற்ற பிறகு, அவர் முதன்முதலாகப் பேசிய வார்த்தைகள் இவைகள், எனவே இது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்க வேண்டும். இயேசு கற்பித்த எல்லாவற்றிலும், முதல் காரியம் இதுதான்: ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள். வேதம் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஜீவனூட்டுவதாக இருக்க வேண்டும்.
ஆதி நாட்களில், இன்று நம்மிடம் இருப்பது போல் ஜனங்களிடம் வேதப்புத்தகம் இல்லை. வேதப்புத்தகத்தை நாம் வைத்திருப்பது நமக்குக் கிடைத்த மாபெரும் பாக்கியம். நாம் ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், நாம் ஒவ்வொரு நாளும் வேதத்தைப் படிக்க வேண்டும். வேதப்புத்தகம் இல்லாதிருந்த ஆதி நாட்களில், அவர்கள் அப்போஸ்தலரிடமிருந்து கேட்டவற்றை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு நினைவூட்டுவதன்மூலமாக, இன்னும் தேவ வார்த்தையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. ஒரு கிறிஸ்தவன், தன் விசுவாசத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு, தன்னிடத்தில் வேதப்புத்தகம் இல்லாமல் சிறையில் அமர்ந்திருப்பினும், தன் முன்னே திறக்கப்பட்ட வேதப்புத்தகம் இல்லாதிருந்தாலும், சிறையில் இல்லாத நாட்களில் அவன் வேதத்தை கருத்தாய்ப் படித்திருக்கிறபடியால், இன்று சிறையில் தினமும் தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொள்ள முடியும். அதனால்தான் தேவனுடைய வார்த்தையை வாசித்து தியானிப்பது மிகவும் முக்கியம். ஏனென்றால், நமக்குத் தேவைப்படும் தருணத்தில், பரிசுத்த ஆவியின் மூலம் தேவன் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை நமக்குத் தருவார்; அது நம் பிரச்சினைக்குத் தீர்வாக இருக்கும். அதுவே நம் தேவைக்கான பதிலாகவும், நாம் உரிமைகோரக்கூடிய வாக்குத்தத்தமாகவும் இருக்கும்.
இது லூக்கா 10:38-42-இல் உள்ள ஒரு கதையில் விளக்கப்பட்டிருக்கிறது. அங்கே இயேசு மரியாள் மற்றும் மார்த்தாளின் வீட்டிற்குச் சென்றதைப் பற்றி வாசிக்கிறோம். மார்த்தாள் அவரை வீட்டிற்குள் ஏற்றுக்கொண்டு, அவருக்கு உணவு சமைக்கச் சென்றாள், அவளுடைய சகோதரி மரியாளோ இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவருடைய வார்த்தையைக் கேட்டாள். “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று நாம் முன்பு படித்ததை இப்போது நினைவில் கொள்ளுங்கள். உணவு மற்றும் இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருப்பது–என்ற இரண்டு தேர்ந்தெடுப்புகள் இங்கே இருக்கின்றன. உணவு முக்கியமா? ஆம், அது முக்கியம். ஆனால் அதைவிட முக்கியமானது, தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தையைப் பெற்றுக்கொள்வதுதான். இந்த இரண்டு சகோதரிகளைப் பற்றிய காரியத்தில் இது மிகவும் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது.
மார்த்தாள் உணவு சமைக்கும்படி கவனச்சிதறல் அடைந்தாள். யாருக்காக? தனக்காக அல்ல. அவள் மிக மிக சுயநலமற்றவளாயிருந்தாள். பசியோடிருந்த 13 புருஷருக்கு (இயேசுவும் அவருடைய பன்னிரண்டு சீஷர்களும்) உணவு சமைப்பதற்கு எவ்வளவு உழைப்பு தேவை என்று தெரியுமா? அவள் தனக்காக அல்ல, கர்த்தருக்காக கடினமாக உழைத்து சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தாள். கர்த்தருக்கு உணவு சமைப்பதற்கென்று, அவள் சந்தைக்குச் சென்று, தன் பணத்தைச் செலவு செய்து, பொருட்களை வாங்கி வந்தாள். அவள் தன்னுடைய நேரத்தையும், பணத்தையும், பெலனையும் செலவு செய்து, கர்த்தருக்காக வேலை செய்யும்படி அவற்றைத் தியாகம் செய்து கொண்டிருந்தாள். ஒருவேளை நீங்களும் அப்படி இருக்கலாம். ஒருவேளை நீங்கள் நேரத்தையும், பணத்தையும், பெலனையும் தியாகம் செய்து கர்த்தருக்காகப் பல காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். நல்லது. மார்த்தாள் நினைத்திருப்பதைப் போல நீங்கள் நினைக்கலாம்: “சரி, நான் இதையெல்லாம் செய்துவிட்டு, கர்த்தருக்கு முன்பாக வரும்போது, அவர், ‘நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, நீ ஒரு பெரிய காரியத்தை செய்தாய்!’ என்று சொல்லுவார்” என்று நினைக்கலாம். ஆனால் அவள் கேட்டது அதுவல்ல. அவள் இயேசுவினிடத்தில் வந்தபோது, அவள் தன் சகோதரி மரியாள் மீது உள்ளத்தில் எரிச்சலடைந்தாள். எப்போதெல்லாம் ஒரு மனிதன் தனது இதயத்தில் இளைப்பாறுதல் அற்று இருப்பானோ, அப்பொழுதெல்லாம் ஏதோ தவறு இருப்பதாக அர்த்தம். அவள் இளைப்பாறுதலில் இல்லை. “ஏன் மரியாள் வந்து எனக்கு உதவி செய்யவில்லை?” என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தாள். இயேசுவோ அவளைக் கண்டிக்கிறார். அவர் கூறுகிறார், “மார்த்தாளே, உணவு மிக முக்கியமான காரியம் அல்ல, என் வார்த்தையைக் கேட்பதுதான் மிகவும் முக்கியமானது, அதைத்தான் மரியாள் தேர்ந்தெடுத்தாள், அது அவளிடத்திலிருந்து எடுக்கப்பட மாட்டாது” (லூக்கா 10:42). “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரம் பிழைப்பதில்லை” என்று இயேசு கூறியதின் அர்த்தம் என்னவென்று உங்களுக்குப் புரிகிறதா? மார்த்தாளினிடத்திலிருந்து இயேசு முதலில் எதை விரும்பினார்? அந்த பிரயாசம் மிகுந்த ஊழியத்தையா? இயேசு உங்களிடத்திலிருந்து எதை விரும்புகிறார்? ஊழியம் நல்லதுதான். மரியாள் இயேசுவின் பாதத்தில் பரிமள தைலத்தை ஊற்றி அவருக்கு ஊழியம் செய்ததைக்குறித்து நாம் பின்னர் வாசிக்கிறோம்; ஆகவே, ஊழியம் முக்கியமானது என்பதை நாம் அறிவோம். ஆனால் முதலானதும், மிக முக்கியமானதுமான காரியம் தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொள்வதாகும். அதைத்தான் இயேசு கற்பித்தார்.
தேவையானது ஒன்றே என்ற இந்தப் பாடத்தை நாம் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். 25 காரியங்கள் அல்ல. ஒவ்வொரு நாளும் இயேசுவின் பாதத்தில் உட்காரவும், எல்லா நேரத்திலும் அவ்வித மனப்பான்மையைக் கொண்டிருக்கவும், அவர் தனிப்பட்ட முறையில் நமக்குச் சொல்வதைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும் என்று லூக்கா 10:42 நமக்குக் கூறுகிறது.
மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு புத்தாண்டு உங்களுக்கு அமைவதாக.