WFTW Body: 

நமது பூமிக்குரிய பயணத்தை முடிப்பதற்கு முன், நாம் படித்துத் தேற வேண்டிய ஆவிக்குரிய பாடங்களில் ஒன்று தான் வியாதி. நமது முன்னோடியான இயேசுவும் கூட இந்த ஆவிக்குரிய படிப்பில் தேர்ச்சி பெற்றார். இப்போது பாரபட்சமற்ற மனப்பான்மையோடு நாம் வேதவாக்கியங்களைப் பார்ப்போம்:

அவர் மனுஷர்களால் அவமதிக்கப்பட்டும், நிராகரிக்கப்பட்டும், வியாதி என்றால் என்ன என்பதை முற்றும் அறிந்தவரும், பாடனுபவித்த ஒரு மனிதருமாய் இருந்தார்” என்று ஏசாயா 53:3 (ஹோல்மேன்(Holman) கிறிஸ்தவ மொழிபெயர்ப்பு) கூறுகிறது.

இந்த பூமி சபிக்கப்பட்டதினிமித்தம் மனுஷருக்கு வியாதி வருகிறது. இதன் விளைவாக, நாம் வியர்வை சிந்துகிறோம்; பூமி முளைப்பிக்கும் முள்ளும் குருக்கும் நமக்குக் காயத்தை ஏற்படுத்துகிறது (ஆதியாகமம் 3:17-19). பாவத்தால் சபிக்கப்பட்ட இந்த பூமிக்கு இயேசு வந்தபோது, அவரது சரீரமும் வியர்வை சிந்தியது, முட்களால் காயப்பட்டது. சில சமயங்களில் அவர் வியாதிப்படவும் நேர்ந்தது. இயேசு “வியாதியை சகஜமாய் அறிந்திருந்தார்” என்று வேதம் கூறுகிறது. (ஏசாயா 53:3 – விரிவாக்க பைபிள் - எழுத்தின்படியான மொழிபெயர்ப்பு). (*கீழே உள்ள குறிப்பைப் பார்க்கவும்).

நாம் சரீரப்பிரகாரமாக அனுபவிக்கும் அனைத்தையும் தாம் உணர்ந்து கொள்ளும்படிக்கு, இயேசு வியாதியையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. இத்தகைய பாடுகள் அவருடைய பூமிக்குரிய கல்வியின் ஒரு பகுதியாக இருந்தது (எபிரெயர் 5:8). நாம் கடுமையாக சோதிக்கப்படும்போது, இயேசுவும் நம்மைப் போலவே எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டார் என்பதை அறிந்து கொள்வது (எபிரெயர் 4:15) நமக்கு எவ்வளவு ஆறுதல் அளிக்கிறதோ, அதே போல, நாம் வியாதிப்பட்டிருக்கும்போது, இயேசுவும் வியாதிப்பட்டார் என்ற இந்த உண்மையை அறிந்து கொள்வது நமக்கு ஒரு பெரிய ஆறுதலாக இருக்கிறது.

எனவே, நமது ஆவிக்குரிய கல்வியின் ஒரு பகுதியாக “வியாதியை சகஜமாய் அறிந்திருக்கவும்” தேவன் நம்மை அனுமதிக்கிறார். மேலும், நாம் வியாதிப்பட்டிருக்கும்போது, நம்முடைய தேவன் “அவர் ஜெயங்கொண்டதைப் போல நாமும் ஜெயங்கொள்ளவே” விரும்புகிறார். தன்னைக் குறித்து எந்த விதமான சுயபச்சாதாபமும், சுய இரக்கமும் தேடாமல், யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஒருபோதும் முறுமுறுக்காமல், மனச்சோர்வு இல்லாமல், எல்லா நேரங்களிலும் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்து, தேவனுக்கு ஆராதனை செய்து, நன்றி செலுத்தி, ஜெயங்கொள்ள வேண்டும் (வெளி 3:21). பூமியில் நாம் வாழும் நாட்கள் முழுவதும் அப்படி வாழ்வோமாக. அதற்கு, அவரது கிருபை போதுமானதாயிருக்கிறது.

சில நேரங்களில் இயேசுவும் வியாதிப்பட்டார் என்கிற உண்மை, வியாதி எப்போதும் பாவத்தால் ஏற்படுவதில்லை என்பதை உறுதியாக நிரூபிக்கிறது. ஏனென்றால், இயேசு பாவமற்றவராயிருந்தார். நம்முடைய சோதனை வேளைகளில் மட்டும் அல்லாமல், நாம் வியாதிப்படும் போதும், உணர்ந்து உதவி செய்யக்கூடிய அற்புதமான முன்னோடியான இயேசுகிறிஸ்து நமக்கு இருக்கிற படியால், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

பவுலும் அவருடைய உடன்-ஊழியர்களான தீமோத்தேயும், எப்பாப்பிரோதீத்துவும், துரோப்பீமும் பூமியில் தங்கள் ஆவிக்குரிய கல்வியில் இந்த “வியாதி” என்னும் பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்றனர். ( 2கொரிந்தியர் 12:7-9; 1தீமோத்தேயு 5:23; பிலிப்பியர் 2:27; 2தீமோத்தேயு 4:20).

கலாத்தியா பகுதிகளில் பவுலைக் கொண்டு சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அங்கே தம்முடைய சபைகளை ஸ்தாபிக்க வேண்டும் என்று தேவன் விரும்பினபடியால், ஒருமுறை அவர் பவுலை கலாத்தியா பகுதிகளில் வியாதிப்படச் செய்து, அங்கே தரித்திருக்கும்படி செய்தார். பவுல் ஆரம்பத்தில் கலாத்தியா வழியாக ஆசியா மைனருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் கலாத்தியாவிலிருந்து விலகிச் செல்லாதபடிக்கு “பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டார்” (அப்போஸ்தலர் 16:6) என்று நாம் வாசிக்கிறோம். ஆவியானவர் பவுலைத் தடைபண்ணியது ஏதோ இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு தரிசனத்தின் மூலமாக அல்ல. மாறாக, கலாத்தியாவில் பவுலை வியாதிப்பட அனுமதித்து அதினிமித்தமாக அவர் பிரயாணம் பண்ணக் கூடாதபடி செய்தார். கலாத்திய கிறிஸ்தவர்களுக்குப் பவுல் எழுதிய நிருபத்தில் இதை நாம் தெளிவாகக் காண்கிறோம். முதலாந்தரம் அவர் கலாத்தியாவில் அவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க நின்றதற்கு, தான் வியாதியினால் பெலவீனப்பட்டிருந்ததே காரணம் என்று அவர் கூறுகிறார் (கலாத்தியர் 4:14,15)!

தேவன் நம்மை சில சமயங்களில் வியாதிப்பட அனுமதிப்பதற்கான மற்றொரு காரணம், வியாதிப்பட்டிருக்கும் மற்றவர்களிடம் நாம் இன்னும் அதிகமாய் இரக்கம் காட்ட வேண்டும் என்பதாகும். இல்லாவிட்டால், உலகில் அநேகர் என்னென்ன சூழ்நிலைகளைக் கடந்து செல்கிறார்கள் என்பது பற்றி நமக்கு எதுவும் தெரியாது.

ஆனால், தேவன் தம்முடைய இரக்கத்தினால் நம்மை குணப்படுத்தவும் செய்கிறார் (பிலிப்பியர் 2:25-27). தேவன் இயேசுவை அக்கறையுடன் கவனித்துக்கொண்டதைப் போலவே, நம்மையும் அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். எனவே நாம் வியாதிப்பட்டிருக்கும்போது தேவன் நம்மை சுகமாக்கும்படி அவரிடம் கேட்கலாம்.

ஆனால், நாம் பாவத்திலிருந்து முழு விடுதலையை உரிமைகோர முடிவதைப் போல, நோயிலிருந்து முழு விடுதலையை உரிமைகோர முடியாது.

ஆவி, ஆத்துமா, சரீரம் என்னும் நம் முழு ஆள்த்துவத்தின் மீட்புக்காக இயேசு மரித்தாரா? ஆம், அது நிச்சயமான உண்மையே.

ஆனால், நாம் நம்முடைய வாழ்வில் யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும்; மாயையும் வஞ்சனையுமான வேறோர் உலகில் வாழக்கூடாது.

கிறிஸ்துவினுடைய மீட்பின் பலன், மறுபடியும் பிறந்தவரின் ஆவியில் மட்டுமே இப்போதே தொடங்கியிருக்கிறது. நம்முடைய ஆவியில், நாம் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டு, ஒரு புதிய சிருஷ்டியாக அவரில் உருவாக்கப்பட்டிருக்கிறோம் (எபேசியர் 2:1-6; 2கொரிந்தியர் 5:17).

ஆனால் நமது ஆத்துமாவும் (மனம், உணர்ச்சி மற்றும் சித்தம்) சரீரமும் இன்னும் புதியதாக உருவாக்கப்படவில்லை. இந்த இரண்டு பகுதிகளிலும், சிலுவையில் இயேசு கிறிஸ்து செய்த கிரியையின் முழு பலனையும் நாம் இன்னமும் அனுபவிக்கவில்லை. நம்முடைய மதிப்பீடுகளை, உலகின் கண்ணோட்டத்திலிருந்து, தேவனுடைய கண்ணோட்டத்திற்கு மாற்ற நாம் பரிசுத்த ஆவியானவரை அனுமதித்தால், நம்முடைய மனது மெதுவாகவும், படிப்படியாகவும் புதிதாகிறதினால் மறுரூபமாக முடியும் (ரோமர் 12:2).

இருப்பினும், இயேசு கிறிஸ்து திரும்பி வரும்போது தான் நமது சரீரம் முழுமையாக மறுரூபமடையும் (பிலிப்பியர் 3:21 இதை மிகவும் தெளிவாகக் கூறுகிறது). இயேசு கிறிஸ்து திரும்பி வரும்போது, நமது சரீரம் எந்த வியாதியும், மரணமும் இல்லாமல், முழுமையான உயிர்த்தெழுதலின் வாழ்க்கையை அனுபவிக்கும். ஆனால் தேவன் இப்போதும்கூட, தம்முடைய இரக்கத்தினால், சிலவேளைகளில் நம் சரீரத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சுகமாக்கும் வல்லமையினால் இனிவரும் உலகத்தின் பெலன்களில் கொஞ்சத்தை ருசிபார்க்க அனுமதிக்கிறார் (எபிரெயர் 6:5). இப்படித்தான் பல விசுவாசிகள் தங்கள் வியாதிகளிலிருந்து இயற்கைக்கு அப்பாற்பட்ட சுகமாக்குதலை அனுபவித்திருக்கிறார்கள். இதனால் தான் தேவன், சபையாகிய கிறிஸ்துவின் சரீரத்தில் சிலருக்கு குணமாக்கும் வரங்களையும், அற்புதங்களைச் செய்யும் வரங்களையும் கொடுத்திருக்கிறார்.

ஆனால், சரீரத்தைக் குணப்படுத்துவது முற்றிலும் தேவனுடைய சர்வ ஆளுகையின் விருப்பத்திற்கு உட்பட்டதாயிருக்கிறது. இன்னார் இன்னார் குணமடைய வேண்டும் என்று நாம் அவரிடம் கட்டளையிட முடியாது. மனந்திரும்புதல், விசுவாசத்தினால் அறிக்கை செய்தல், கிறிஸ்து நமக்காக மரித்தார் என்பதில் வைக்கும் விசுவாசம் ஆகியவற்றின் மூலம் நமது பாவங்கள் அனைத்திற்கும், முழுமையான மன்னிப்பை உடனடியாகக் கோருவதைப் போலவே, இங்கேயே ஓர் உரிமையாக நாம் விரும்பும் போதெல்லாம் சரீர சுகமடைதல் வேண்டுமென்று கோர முடியாது.

குணமடைவதை நாம் ஓர் உரிமையாகக் கோர முடியாது என்பதற்கும், நாம் இரட்சிக்கப்படும்போது நம் சரீரத்தில் உள்ள சாபத்தின் தாக்கம் நீங்கிவிடாது என்பதற்கும் தெளிவான சான்று என்னவென்றால், மனுஷர் எவ்வளவு தான் ஜெபித்தாலும், சுகமாக்குதலை உரிமைகோரினாலும், எல்லா விசுவாசிகளும் இறுதியாக மரித்துவிடுகிறார்கள் என்பதுதான்! வியர்வை, உடல் சோர்வு மற்றும் தூக்கம் ஆகியவற்றைப் போலவே, வியாதியும் மரணமும் பூமியின்மீதான சாபத்தின் விளைவுகளேயாகும். இவை அனைத்தும் கிறிஸ்து திரும்பி வரும்வரை நம் சரீரங்களை பாதிக்கும். நம்முடைய ஆவி ஏற்கனவே சாபத்திலிருந்து மீட்கப்பட்டிருந்தாலும் (கலாத்தியர் 3:13,14), நமது சரீரமானது மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிற படியினால், பூமியின் மண்ணின்மீது இருக்கும் சாபத்தினால் இன்னமும் பாதிக்கப்படுகிறது.

ஏசாயா 53:5 -இல், “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” என்று கூறப்பட்டிருக்கிறதே?’ என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம். அந்த வசனத்திற்கு நம்முடைய சொந்த விளக்கத்தை வழங்காமல், புதிய ஏற்பாட்டில் இந்த வசனத்திற்கு பரிசுத்த ஆவியானவரே கொடுக்கும் விளக்கத்தைப் பார்ப்போம்:

1பேதுரு 2:24 -இல், “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” என்று நாம் வாசிக்கிறோம்.

இங்கே, “குணமாகுதல்” என்பது “பாவத்திலிருந்து குணமாகுதலையும்”, இதன் விளைவாக நாம் “ஆரோக்கியமாய்ப் பிழைத்திருப்பது” என்பது நாம் பெற்றுக்கொள்ளும் “நீதியையும்” குறிக்கிறது என்று இந்த வசனத்தில் தெள்ளத் தெளிவாய் நம்மால் காணமுடிகிறது. பாவம் செய்யாத இயேசுவை நாம் பின்பற்ற வேண்டும் என்று கூறும் வேத பகுதியில் இந்த வசனம் இருப்பது இதை இன்னும் அதிகமாய் நிரூபிக்கிறது.

ஏசாயா 53:4 -இல், “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்” என்று கூறப்பட்டிருக்கிறதே?’ என்று நீங்கள் கேட்கலாம். இந்த வசனம் மத்தேயு 8:16,17 -இல், “அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்; அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது” என்று மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.

மீண்டுமாய், இந்தத் தீர்க்கதரிசனம் இயேசுவின் ஊழியத்தின் தொடக்கத்தில் அங்கேயே நிறைவேறியது என்பது இந்தப் பகுதியிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அநேகர் கூறுவது போல், இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது இயேசு சிலுவையில் மரித்தபோது அல்ல. இயேசு வியாதிப்பட்டவர்களை சொஸ்தமாக்கியபோது, இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது. இயேசு சிலுவையில் நம்முடைய எல்லா நோய்களையும் நீக்கி விட்டார் என்பது வாக்குத்தத்தம் அல்ல.

நாம் வியாதிப்பட்டிருக்கும்போது என்ன செய்யவேண்டும்? பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றுவோம். அவர் தனது “மாம்சத்தில் கொடுக்கப்பட்டிருந்த முள்”ளிலிருந்து குணமடையும்படி ஜெபித்தார். ஆனால், ‘உன்னுடைய முள் அகற்றப்படமாட்டாது; அதற்குப் பதிலாக என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்’ என்று தேவன் கூறியதை இறுதியாக பவுல் கேட்டு உணர்ந்தார் (2கொரிந்தியர் 12:7-9). எப்பாப்பிரோதீத்துவின் விஷயத்தில், பவுல் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருந்தார்; தேவன் இரக்கம்பாராட்டி அவரை முழுமையாகக் குணமாக்கினார் (பிலிப்பியர் 2:27). ஆனால், துரோப்பீமுவின் விஷயத்தில், பவுல் ஜெபித்தும் அவர் குணமடையவில்லை (2தீமோத்தேயு 4:20). தீமோத்தேயுவின் விஷயத்தில், பவுல் அவருக்காகப் பல முறை ஜெபித்திருக்க வேண்டும். ஆனால் தீமோத்தேயு தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். எனவே பவுல் இறுதியாக அவரிடம் கொஞ்சம் திராட்சரசத்தை மருந்தாக எடுத்துக் கொள்ளும்படி கூறினார் (1தீமோத்தேயு 5:23).

ஆகவே, ஒவ்வொரு வியாதிலிருந்தும் குணமடையும்படி நாம் எப்போதும் ஜெபிக்க வேண்டும். நாம் சுகமடைவது தேவனுடைய சித்தம் அல்லவென்றால், அவர் நமக்குக் கிருபையை அருளும்படி ஜெபிக்க வேண்டும். இந்த இரண்டில் (குணமடைதல் அல்லது கிருபை) எதை அவர் முடிவு செய்கிறாரோ அதுவே நமக்கு மேன்மையானது.

இதுவே வேதாகமத்தின் சமநிலையான போதனையாகும். நாம் சத்தியத்தை நேசிப்போமானால், ஒவ்வொரு கிறிஸ்தவக் குழுவிலும், குணமாக்குதலைக் குறித்த எவ்வித கொள்கைகளை அவர்கள் விசுவாசித்தாலும், வியாதிப்படும் விசுவாசிகள் அவர்கள் மத்தியில் இருப்பதை நாம் கவனிப்போம். ஆனால் அநேகர் தவறான முற்கோள் எண்ணம் (prejudice) கொண்டிருப்பதால், இந்த உண்மைக்குத் தங்கள் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.

கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

*குறிப்பு: ஏசாயா 53:3 -இல் பெரும்பாலான ஆங்கில மொழிபெயர்ப்புகளில் “துக்கம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தையான “கோலி” என்ற வார்த்தை உண்மையில் “நோய்” அல்லது “வியாதி” என்று பொருள்படும். அதே வார்த்தை உபாகமம் 7:15; உபாகமம் 28:61 மற்றும் ஏசாயா 1:5 ஆகிய வசனங்களில் “நோய்”/“பிணி”/“வியாதி” என்று சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்களால் ஒருவேளை இயேசு எப்போதாவது வியாதிப்பட்டிருப்பார் என்று நம்ப முடியவில்லை. எனவே, அவர்கள் ஏசாயா 53:3 -இல் உள்ள வார்த்தையை துல்லியமாக மொழிபெயர்க்கவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் சொந்த இறையியலைப் பயன்படுத்தி இந்த எபிரெய வார்த்தையை “துக்கங்கள்” என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்!! மேலே மேற்கோள் காட்டப்பட்ட ஹோல்மேன் கிறிஸ்தவ மொழிபெயர்ப்பும், விரிவாக்க பைபிளும் மட்டுமே இந்த எபிரெய வார்த்தையின் சரியான மொழிபெயர்ப்பை “நோய்” என்று கொடுக்கத் துணிந்திருக்கின்றன. “கோலி” என்ற எபிரெய வார்த்தையின் அர்த்தம் “நோய்” என்பதற்கு மிகத் தெளிவான சான்று அடுத்த வசனத்தில் (ஏசாயா 53:4) அதே வார்த்தை எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது காணப்படுகிறது. இங்கே எபிரெய மொழியில் இது “துக்கங்கள்” என்று தான் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வசனம் புதிய ஏற்பாட்டில் மத்தேயு 8:17 -இல் மேற்கோள் காட்டப்படும்போது, அங்கு “அஸ்தனேயா” (கிரேக்கம்), அதாவது, “நோய்கள்”/“வியாதிகள்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.