(கடந்த வாரத்தின் தொடர்ச்சி...)
இரக்கமும் கிருபையும்:
ஒரு விசுவாசியாக, நான் அநேக வருடங்களாக இரக்கமும், கிருபையும் ஒன்றுதான் என எண்ணியிருந்தேன். ஆனால், இரக்கமோ பாவமன்னிப்பிற்கென்றே பிரதானமாய் குறிப்பிடப்பட்டிருப்பதையும், கிருபையோ பாவத்தையும், வாழ்க்கையின் சோதனைகளையும் மேற்கொள்ளுவதற்கு தேவன் நமக்கருளும் வல்லமையாகக் குறிப்பிடப்பட்டிருப்பதையும் ஒரு நாளில் நான் கண்டுகொண்டேன் (எபிரெயர் 4:16; ரோமர் 6:14; 2கொரிந்தியர் 12:9), இந்த கிருபையானது கிறிஸ்துவின் மூலமாகவே நமக்கு வருகிறது (யோவான் 1:17). ஆகிலும், பரிசுத்தாவியானவர் பெந்தெகோஸ்தே நாளில் இறங்கி மனுஷருக்குள் வாசம் செய்த போதுதான் இந்தக் கிருபை ஒருவனுக்குக் கிட்டுகிறது! இந்த செய்தியும் என்னுடைய பிரதான செய்திகளில் ஒன்றாய் மாறியது!!
கிறிஸ்துவின் மானிடத்தன்மை:
எல்லாக் கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவை தேவனாக ஆராதிக்கும் வேளையில், வெகுசிலர் மாத்திரமே நாம் அனைவரும் பின்பற்றக்கூடிய மாதிரியாயிருக்கும்படி அவர் மனிதனாகவும் இருந்தார் என்ற சத்தியத்தை வலியுறுத்துகிறார்கள். அவருடைய மானிடத்துவத்தை வலியுறுத்தும் ஒரு சில கூட்டத்தார், இந்த பூமியில் அவர் 'தேவனாய் இருந்தார்' என்பதை மறுதலிக்கிறார்கள். வேத வாக்கியங்களின் சமநிலைப்படி, கிறிஸ்து முழுவதும் தேவனாயிருந்தார்! எனவும், கிறிஸ்து முழுவதும் மனுஷனாய் இருந்தார்! எனவும் பிரசங்கித்திடும் கிறிஸ்தவர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். ஆனால் ஒரு மனிதனாய் இருந்து பாவத்தை ஜெயித்த கிறிஸ்துவில்தான் “தேவ பக்தியான வாழ்க்கை வாழ்வதற்குரிய இரகசியம்” இருப்பதை நான் கண்டேன் (1தீமோத்தேயு 3:16; எபிரெயர் 4:15,16). இந்த சத்தியமும் என் பிரசங்கத்தில் பிரதான பங்கு வகித்தது!
பணம்:
1975-ஆம் ஆண்டு எங்கள் ஊழியத்தைத் துவங்கியபோது இன்று நாம் எங்கு பார்த்தாலும் கேள்விப்படும் “செழிப்பின் உபதேசம்” அன்று பிரபலமாயிருக்கவில்லை! ஆகிலும் இன்று ஜனங்கள் பணத்தை நேசிப்பதுபோலவே அன்றுள்ள ஜனங்களும் பணத்தை நேசித்தார்கள். இயேசுவோ, பணத்தை நேசிப்பவர்கள் தேவனைப் பகைக்கிறார்கள் (லூக்கா 16:13) என ஆணித்தரமாய் போதித்திருக்கிறார். ஆனால் இயேசு கற்பித்த இந்தப் பிரசங்க செய்தியை, ஒரு பிரசங்கியாகிலும் பேசியதை நான் கேட்டதேயில்லை! பெரும்பாலான சபைகள் தங்கள் சபைமக்கள் தசமபாகம் கொடுக்க வேண்டும் என்ற செய்தியைத்தான் திரும்பத் திரும்ப போதித்தார்கள்! “தசம பாகம் செலுத்த வேண்டும்" என்பது 'கிறிஸ்துவிற்குள்' இப்போது அழிக்கப்பட்டு விட்ட பழைய உடன்படிக்கைப் பிரமாணத்தின் ஒரு பகுதியாகும். விடுதலை செய்யும் புதிய உடன்படிக்கையின் செய்தியான “மகிழ்ச்சியோடு கொடுப்பதையும்! அந்தரங்கத்தில் கொடுப்பதையும்! கட்டாயமில்லாமல் மனமுவந்து கொடுப்பதையும்!” நான் பிரசங்கித்தேன். நான் கண்ட மற்றொரு காரியம் என்னவெனில், இந்திய தேசம் முழுவதும் பெண்களை இழிவுபடுத்தும் “வரதட்சணை" என்ற கொடுமைக்கு விரோதமாய், இந்தியாவிலுள்ள ஒரு சபையும் ஆணித்தரமாய் எதிர்த்து பிரசங்கிக்காமால் இருந்தது தான். ஆகவே இந்தக் கொடிய தீமையையும் நான் வலிமையாய் எதிர்த்துப் பிரசங்கித்தேன், நான் நடத்திய திருமணங்களில் மணப்பெண்ணிடமும், மணமகனிடமும் "எங்களுக்குள்ளோ அல்லது எங்கள் பெற்றோர்களுக்குள்ளோ யாதொரு பணம் அல்லது வரதட்சணைப் பரிமாற்றமும் நடைபெறவில்லை” என அவர்களது கையெழுத்திட்ட சான்றிதழை நான் வழக்கமாய் பெற்றுக் கொள்வதுண்டு!
ஆத்துமாவும் ஆவியும்:
இந்தக் கருப்பொருளும் பிரசங்கிக்கப்படாத செய்திகளில் ஒன்றாகும்! பழைய ஏற்பாட்டு நாட்களில் மனுஷனுடைய ஆத்துமாவுக்கும் அவனுடைய ஆவிக்கும் இடையிலான வித்தியாசத்தைப்பற்றி யாதொரு தெளிவான வெளிப்பாடும் கொடுக்கப்படவில்லை. ஆனால், இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை புதிய ஏற்பாடு மிகத் தெளிவாக வழங்கியிருக்கிறது (எபிரெயர் 4:12). இந்தத் தெளிவான வித்தியாசத்தை இன்றைய திரளான கிறிஸ்தவர்கள் அறியாதிருக்கிறபடியால், “மனோதத்துவ ரீதியான ஜாலங்களை” தந்திரமாய் பயன்படுத்தும் பிரசங்கிகளால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள்! மேலும், பரிசுத்தாவியின் வரங்களுக்குப் போலியான “உணர்ச்சி வசப்படுத்தும்” பிரசங்கங்களாலும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள்! ஆகவே, உண்மையான ஆவிக்குரிய தன்மை என்ன என்பதையும், வெறும் ஆத்துமத்திற்குரியவை என்னவென்பதையும் தெளிவாய் வேறுபடுத்தி நான் ஜனங்களுக்குப் போதித்தேன்.
கிறிஸ்துவின் சரீரமாகிய ஸ்தல சபை:
தேவனுடைய இறுதியான நோக்கம், அவர் தம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவரையும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாகக் கட்ட விரும்புகிறார் என்பதை நான் தெளிவாய் கண்டேன். புதிய ஏற்பாட்டின் சபை ஒரு சரீரமாய் (Body) இருக்க வேண்டுமேயல்லாமல், ஒரு கூட்டமாய் (Congregation) இருந்துவிடக் கூடாது. ஒரு மானிட சரீரத்திற்கு ஒப்பாகவே, கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள ஒவ்வொரு அவயவமும் மற்றொரு அவயவத்தோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்! இவ்வாறு இணைக்கப்பட்ட ஒவ்வொரு அவயவமும் அவரவர்களுக்குரிய சிறந்த ஊழியத்தின் பங்கைப் பெற்றிருப்பார்கள். அந்த சரீரத்திற்கு கிறிஸ்து மாத்திரமே தலையாயிருப்பார்! மற்றவர்கள் அனைவரும் சமபங்கு வகிக்கும் அவயவங்களாய் திகழ்வார்கள்! இதுபோன்ற ஒரு சபையையே இந்த பூமியிலுள்ள ஒவ்வொரு ஸ்தலத்திலும் காண்பதற்கு தேவன் வாஞ்சிக்கிறார் என்பதைக் கண்டேன். ஆகவே, கிறிஸ்துவின் சரீரத்தைப் பிரதிபலிக்கும் சபைகளை உருவாக்கிக் கட்டுவதற்கு இந்த பூமியெங்கும் என்னால் முடிந்த அளவிற்கு என் ஜீவியத்தை செலவழிக்க நான் தீர்மானம் கொண்டேன்!
புதிய உடன்படிக்கை:
இந்த சத்தியங்கள் அனைத்தும், கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாகவும் உயிர்த்தெழுதலின் மூலமாகவும் தேவன் மனுஷனோடு செய்து கொண்ட புதிய உடன்படிக்கைக்குத் தொடர்புடையதாகும்! விசுவாசிகள் பழைய உடன்படிக்கையைக் காட்டிலும் புதிய உடன்படிக்கையில் மிகப்பெரிய மகத்துவமான மகிமையைக் காணும் பொருட்டு, அவர்களுடைய கண்கள் திறக்கப்பட வேண்டும்! என்பதே இன்று விசுவாசிகளிடம் உள்ள மிகப்பெரிய தேவை என்பதைக் கண்டேன். இந்த நோக்கமே என்னுடைய எல்லாப் பிரசங்கங்களிலும் முக்கிய பொருளாய் மாறியது. இந்த முக்கியத்துவமே என் ஜீவ காலமெல்லாம் தொடரும் என்பதையும் நான் நிச்சயித்திருக்கிறேன்!! மேற்கண்டவைகள் அனைத்தும், தேவன் எனக்குக் காண்பித்த பிரதான சத்தியங்களில் சிலவைகள் ஆகும். இவைகளை, என்னால் இயன்ற பிரசங்கங்கள், புத்தகங்கள், ஒளிநாடாக்கள்..... போன்றவைகள் மூலமாக என் சக விசுவாசிகளுக்கு அறிவித்திட நான் நாட்டம் கொண்டேன்! இந்த சத்தியங்களை இந்தியாவின் எல்லையெங்கும் பரவிடச் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய தீராத பாரமாயிருந்தது! ஆகிலும், தேவனோ, இந்தச் செய்திகள் இன்னும் அதிகமாய் பரவி பல நாடுகளிலுள்ள ஜனங்களுக்கும் போக வேண்டியது அவசியமாயிருக்கிறதென கண்டார்!
சகல மகிமையும் தேவன் ஒருவருக்கே உரித்தாகக் கடவது!!