ஒரு சபையாய் நாங்கள் முதலாவது கூடிவர ஆரம்பித்த காலத்தில் எங்கள் தனிப்பட்ட ஜீவியத்திலோ அல்லது எங்கள் குடும்ப ஜீவியத்திலோ "ஒரு ஜெயவாழ்வு” உண்டு என்பதை அறியவேயில்லை! எங்களைச் சுற்றியுள்ள விசுவாசிகளை நாங்கள் நோக்கியபோது அவர்களும் இதே தோல்வியின் நிலையில்தான் இருந்தார்கள். ஆகவே, ஆவிக்குரிய உதவி பெறும் பொருட்டு யாரையும் எங்களால் அணுக முடியவில்லை! எனவே, இதற்குப் பதில் தரும்படி தேவனிடத்தில் சபையாக அடிக்கடி உபவாசித்து ஜெபித்துவந்தோம். கிட்டத்தட்ட எல்லா விடுமுறை நாட்களிலும் நாங்கள் உபவாசித்து ஜெபித்தோம். படிப்படியாக, அதுவரை நாங்கள் அறிந்திராத புதிய உடன்படிக்கையின் சத்தியங்களை தேவன் தம்முடைய வார்த்தையின் மூலமாய் எங்களுக்கு வெளிப்படுத்த ஆரம்பித்தார். இந்த சத்தியங்களையெல்லாம் நாங்கள் அறிந்துகொள்ளத் துவங்கிய உடன் எங்கள் தனிப்பட்ட ஜீவியத்திலும், எங்கள் குடும்ப ஜீவியத்திலும் அதிக அதிகமாய் விடுதலை பெற்று, படிப்படியாய் வளர்ந்து மறுரூபமடைந்தோம்!
இந்த சத்தியங்களையெல்லாம் மற்றவர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்ற பொறுப்பை நான் உணர்ந்தேன்! இவ்வாறாக, மற்ற கிறிஸ்தவர்கள் பிரசங்கிக்காத, வேதாகமத்திலிருக்கும் உத்தம சத்தியங்களை வலியுறுத்தும்படி தேவன் என்னை அழைத்திருக்கும் அழைப்பு எனக்குத் தெளிவாய் விளங்கியது. ஆகவே, என்னைச் சுற்றியுள்ள மற்றவர்கள் என்ன போதிக்கிறார்கள் என்பதை மிகுந்த அக்கறையோடு கவனித்தேன்! அதனிமித்தமாய், என்னுடைய போதக ஊழியத்தில் நான் எவைகளை வலியுறுத்த வேண்டும் என்பதற்காக அழைக்கப்பட்டேன் என்பதைக் கண்டுகொண்டேன்.
சம்பூரண சுவிசேஷம்:
சில பிரசங்கிகள் “பூரண சுவிசேஷம்” என்ற பதத்தைப் பிரசங்கிப்பதை நான் கேட்டிருக்கிறேன். அவர்களுடைய போதகத்தை, வேத வாக்கியங்களோடு நான் ஒப்பிட்டுப் பார்த்தபோது, அவர்கள் பிரசங்கித்தது பூரண சுவிசேஷமே அல்ல என்பதைக் கண்டுபிடித்தேன். எபிரெயர் நான்காம் அதிகாரத்தில் "கானானுக்குள் பிரவேசிப்பதை” (எபிரெயர் 4:2,3) சுவிசேஷம் என பரிசுத்தாவியானவர் விளக்குகிறாரேயல்லாமல், “எகிப்திலிருந்து வெளியே வருவதை” மட்டுமே சுவிசேஷம் எனக் கூறவில்லை. மேலும், தேவனுடைய ஜனங்கள் ஜெயஜீவியமாகிய “ஓய்வுநாள் - இளைப்பாறுதலுக்குள்” பிரவேசித்திட வேண்டும் எனவும் கூறுகிறது (எபிரெயர் 4:9). ஆகவே, பாவ மன்னிப்பின் செய்தி பாதி சுவிசேஷம் மாத்திரமே என்பதைக் கண்டேன்! பூரண சுவிசேஷமோ “நம் மாம்சத்திலுள்ள அரக்கர்களை சங்கரிக்கும்” பாவத்தின் மீது வெற்றி பெறுவதை உள்ளடக்கியதாயிருக்கிறது. இவ்வித ஜீவியம் படிப்படியாக எனக்கு நிஜமாய் மாறியபடியால், பூரண சுவிசேஷத்தையும் நான் பிரசங்கித்திடத் துவங்கினேன்!
மனந்திரும்புதல்:
பாவ மன்னிப்பிற்கு, கிறிஸ்துவின் மீது கொண்ட விசுவாசம் ஒன்றே போதுமானது என்று திரளான சுவிசேஷகர்கள் பிரசங்கித்து வந்ததைக் கண்டேன். ஆனால் “பாவத்திலிருந்து மனம் திரும்பும் செய்தியோ” அனேகமாய் பிரசங்கிக்கப் படவேயில்லை! அப்படியே மனம் திரும்புதலைப் பிரசங்கித்தாலும், “சுய நலமும்” “சுயம் மையம் கொண்ட ஜீவியமும்” மற்றும் “தன் சொந்த வழியில் சென்றிடும் விருப்பமும்” ஆகிய இவைகளே பாவத்தின் வேர் என பிரசங்கிக்கப்படவேயில்லை. ஆகவே, ஒவ்வொருவரும் எவைகளைவிட்டு மனம் திரும்ப வேண்டும் என விளங்கிக்கொள்ளும்படி “பாவத்தின் வேரை” தெளிவாய்ப் பிரசங்கிப்பதை என்னுடைய அழைப்பாக நான் கண்டேன்!
சீஷத்துவம்:
மனந்திரும்பிவந்த பெரும்பாலோருக்கு, கிறிஸ்துவின் சீஷர்களாகவும் மாற வேண்டும் என போதிக்கப்பட்டதேயில்லை! சீஷத்துவத்தின் நிபந்தனைகளாக இயேசு முன்வைத்த கீழ்க்கண்ட மூன்று நிபந்தனைகள் ஜனங்களுக்கு விளக்கி போதிக்கப்படவேயில்லை: 1) குடும்பத்திலுள்ள எல்லா அங்கத்தினர்களைக் காட்டிலும் இயேசுவையே மேலாக நேசித்திடவேண்டும்! 2) அனுதினமும் சிலுவையை எடுத்து தன் சுயத்திற்கு மரித்திட வேண்டும்! 3) உலகத்திலுள்ள தன் உடமைகளின் யாதொன்றின் மேலும் பிடிப்பில்லாதவர்களாய், அவை யாவற்றையும் வெறுத்திட வேண்டும் (லூக்கா 14:26-33). இவ்வாறு, என் பிரசங்கங்களில் சீஷத்துவத்தின் வலியுறுத்தலே பிரதான வலியுறுத்தலாய் கொண்டிருந்தேன்!
பரிசுத்தாவியின் அபிஷேகம்:
கிட்டத்தட்ட பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பிரசங்கித்த ஒவ்வொரு குழுவினருமே, அதற்கு பிரதான அடையாளமாய் “அந்நிய பாஷை பேசுவதையே” போதித்தார்கள். ஆனால், இவ்வாறு போதித்தவர்களில் பெரும்பாலோர் லௌகீக மனதுடையவர்களாயும், பண ஆசை கொண்டவர்களாயும் இருப்பதைக் கண்டேன். இதற்கு நேர்மாறாக, சில விசுவாசிகள் அந்நிய பாஷை பேசுவது அனைத்தும் பிசாசினால் உண்டானவைகள் என்ற முடிவை உடையவர்களாயிருந்தார்கள்! ஆனால் பரிசுத்தாவி அபிஷேகத்திற்கு “வல்லமையே” அடையாளமென இயேசு போதித்தார்! எதற்கு வல்லமை? நம் ஜீவியத்தின் மூலமாய் அவருக்கு சாட்சியாயிருப்பதற்கே அந்த வல்லமை வேண்டும்! அதுவல்லாமல், நம்முடைய 'வாயினால்' அவருக்குப் பகரும் சாட்சி மாத்திரமல்ல! (அப்போஸ்தலர் 1:8). ஆகவே, இந்த சத்தியத்தையே நான் வலியுறுத்திப் பேசினேன். அந்நிய பாஷை பேசுவதானது தேவன் சிலருக்குத் தந்திருக்கும் ஆவியின் வரங்களில் ஒன்று மாத்திரமேயாகும். இவ்வாறு சத்தியத்தின் மீது நான் கொண்டிருந்த உறுதியான நிலைப்பாட்டினிமித்தம் 'பெந்தெகோஸ்தேயினர்' நான் ஒரு 'பிரதரன்' என பட்டம் சூட்டினார்கள்! பிரதரன் குழுவினரோ, எனக்கு ‘பெந்தெகோஸ்தேகாரன்' என்று பட்டம் சூட்டினார்கள்!! இந்த இருவருடைய எதிர்கோடிக்கும் நான் செல்லாமல், நடுமையத்தில் நின்றது எனக்கு மகிழ்ச்சியூட்டுவதாகவே இருந்தது!!
(தொடரும்…)