இந்த உலகத்தில் பிறந்தவர்களில் இயேசு ஒருவருக்குத்தான், தாம் பிறக்கப்போகிற குடும்பத்தைத் தெரிந்தெடுக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. நம்மில் எவருக்கும் அப்படிப்பட்ட வாய்ப்பு இல்லை.
ஏழ்மையான, செல்வாக்கில்லாத, பிரபலமில்லாத ஒரு தச்சுக் குடும்பத்தையே அவர் தெரிந்துகொண்டார்! “நாசேரத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமா?” (யோவான் 1:46) என்று ஜனங்கள் கேட்கிற அளவிற்கு நாகரீக முன்னேற்றமில்லாத ஓர் ஊரையே தெரிந்துகொண்டார்! யோசேப்பும் மரியாளும் ஓர் ஆட்டுக்குட்டியைத் தகனபலியாகக் கொடுக்கமுடியாத அளவிற்கு ஏழ்மையில் இருந்தார்கள்! (லூக்கா 2:22-24, லேவி 12:8 -உடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்).
இயேசுவுக்கு மாத்திரமே, தாம் எவ்வித சூழலில் பிறக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் திறனிருந்தது. அப்படி எந்த இடத்தில் பிறக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் இருந்தபோது கூட, அவரோ ஒரு மாட்டுக்கொட்டிலைத்தான் தெரிந்து கொண்டார்!
மேலும், இயேசு தமக்காகத் தெரிந்தெடுத்த வம்சாவளியைக் கவனியுங்கள். இயேசுவின் வம்சவரலாற்றில் நான்கு ஸ்திரீகளின் பெயர்கள், மத்தேயு 1:3-6 -ல் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவதாக, தாமார். அவள் தன் மாமனார் யூதாவிடத்தில் வேசித்தனம் செய்து ஒரு குமாரனைப் பெற்றாள். இரண்டாவதாக, ராகாப். அவள் எரிகோவில் ஒரு பிரபலமான வேசியாயிருந்தாள். மூன்றாவதாக, ரூத். அவள் லோத்து தன் சொந்த மகளுடன் விபச்சாரம் செய்து பெற்ற மோவாபின் வம்சாவளியைச் சேர்ந்தவள். நான்காவதாக, தாவீது விபச்சாரம் செய்த உரியாவின் மனைவியாயிருந்த பத்சேபாள்.
இப்படிப்பட்ட வெட்கம் நிறைந்த குடும்ப வரலாற்றை இயேசு ஏன் தெரிந்துகொண்டார்? தாமும் முழுமையாய், வீழ்ச்சியுற்ற ஆதாமின் சந்ததியில் வந்தவர் என்று காட்டுவதற்காகவே தான். அங்கே நாம் அவரது தாழ்மையைக் காண்கிறோம். அவர், எந்த ஒரு குடும்பப் பெருமையையும் அல்லது வம்சாவளிப் பெருமையையும் வாஞ்சிக்காதவர்.
இயேசு தம்மை மனிதனோடு முழுமையாக அடையாளப்படுத்திக் கொண்டார். மனிதர்கள் எந்த இனம், குடும்பம், வாழ்க்கைத் தரம் உடையவர்களாய் இருந்தாலும், அடிப்படையில் யாவரும் சமத்துவம் உள்ளவர்கள் என்பதை இயேசு விசுவாசித்தார்! எனவேதான், கடைநிலையான சமூகத்திலிருந்து அவர் ஒரு மனிதனாக வந்தார். அவர் எல்லாருக்கும் ஊழியம் செய்யும்படி, எல்லாருக்கும் கீழானவராக வந்தார்!! மற்றவர்களுக்குக் கீழாகத் தன்னைத் தாழ்த்துகிறவர்கள்தான், அவர்களை வீழ்ச்சியிலிருந்து உயர்த்தவும் இயலும்! அவ்விதமாகத் தான் இயேசு வந்தார்.
பரிசுத்த ஆவியானவர் நம்முடைய மனதைப் புதிதாக்கியே நம்மை மறுரூபப்படுத்துகிறார் (ரோமர் 12:2), ஏனெனில், நம்முடைய சிந்தையில்தான் மெய்யாகவே கிறிஸ்துவைப் போன்ற தாழ்மையின் விதை விதைக்கப்படுகிறது. நம்முடைய செயல்கள் மூலமாகவோ அல்லது மற்றவர்கள் முன்பான நம் நடக்கையின் மூலமாகவோ அல்ல! நாம் தனித்திருக்கிற வேளைகளில், நம்மைக் குறித்து நாம் என்ன நினைத்துக்கொள்கிறோம், மற்றவர்களோடு நம்மை நாம் ஒப்பிட்டுப் பார்ப்பதில் நாம் என்ன நினைக்கிறோம்? என்பதை வைத்தே நிச்சயித்துக் கொள்ள முடியும்.
நம்முடைய சொந்த எண்ணத்தில் நாம் உண்மையிலேயே நம்மைப்பற்றித் தாழ்மையான எண்ணம் கொண்டிருந்தால் மாத்திரமே… “மற்றவர்களை நம்மிலும் மேன்மையானவர்களாயும்” (பிலிப்பியர் 2:3), “நம்மையோ, பரிசுத்தவான்கள் எல்லாரிலும் சிறியவர்களாயும்” (எபேசியர் 3:8) எண்ண முடியும்.
இயேசு தம் பிதாவுக்கு முன்பாகத் தம்மை ஒரு வெறுமையான மனிதனாகவே பாவித்தார். ஆகவேதான் பிதாவின் மகிமை முழுமையாக அவரிடத்தில் வெளிப்பட்டது!
முப்பது வருடகாலம், இயேசு தமது பூரணமில்லாத வளர்ப்புத் தந்தைக்கும் தாய்க்கும் கீழ்ப்படிந்து நடந்தார். இந்தக் கீழ்ப்படிதலே பிதாவின் சித்தமாயிருந்தது! யோசேப்பைவிட, மரியாளை விட இயேசுவுக்கு அதிகம் தெரியும். மேலும், அவர் அவர்களைப் போல அல்லாமல், பாவமில்லாதவருமாயிருந்தார்!! ஆனாலும் அவர்களுக்கு அவர் கீழ்ப்படிந்திருந்தார்.
தன்னைவிட அறிவிலோ அல்லது ஆவிக்குரிய ரீதியிலோ குறைவாய் இருக்கும் ஒருவருக்குக் கீழ்ப்படிவது என்பது மனிதனுக்கு எளிதான காரியமல்ல. ஆனால், மெய்யான மனத்தாழ்மைக்கு இது ஒரு பொருட்டே அல்ல. ஏனென்றால், தேவனுடைய கண்களுக்கு முன் தன்னை ஒன்றுமில்லை என்று நினைக்கும் ஒருவனுக்கு, தனக்கு மேல் தேவன் வைக்கும் அதிகாரமுடைய எவருக்கும் கீழ்ப்படிவதென்பது எந்த விதத்திலும் கஷ்டமாயிராது.
இயேசு, வசீகரமில்லாத ஒரு தச்சுத்தொழிலையே தெரிந்து கொண்டார்! அவர் வெளியரங்கமாய் ஊழியத்திற்குள் பிரவேசித்தபொழுது, தம் பெயருக்கு முன்பாக ஒரு அந்தஸ்தான பட்டமும் வைத்திருக்கவில்லை. அவர் 'பாஸ்டர் (Pastor) இயேசு' வாகக் கூட இல்லை. அவர் 'ரெவரண்ட் டாக்டர்' (Reverend Doctor) இயேசுவாக இல்லவே இல்லை. தாம் யாருக்கு ஊழியம் செய்யவந்தாரோ, அந்த ஜனங்களை விட தம்மை உயர்த்துகிற மண்ணுக்குரிய யாதொரு பட்டத்தையோ, ஸ்தானத்தையோ அவர் ஒரு துளியும் விரும்பவில்லை.
இயேசு தம்மைப் பிதாவுக்கு முன்பாக வெறுமையாக்கியபடியால், பிதா தம் வாழ்க்கையில் கட்டளையிட்ட எதற்கும் சந்தோஷமாய் தம்மை ஒப்புக்கொடுத்து, அவருடைய கட்டளைகள் எல்லாவற்றுக்கும் முழு இருதயத்துடன் கீழ்ப்படியவும் முடிந்தது.
இவ்வாறு, “மரணபரியந்தமும் கீழ்படிந்தவராகித் தம்மைத் தாமே தாழ்த்தினார்” (பிலிப்பியர் 2:8).
தேவனுக்கு இவ்விதமாய் முழுமையாகக் கீழ்ப்படிவதே மெய்யான மனத்தாழ்மைக்கு தீர்க்கமான அடையாளமாய் இருக்கிறது. தாழ்மையை நிரூபிக்க இதைவிட மாசில்லா பரிசோதனை வேறு இருக்கவே முடியாது!!
கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.