இயேசுவின் பார்வையில், எல்லாக் கட்டளைகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதில் ஒரு முன்னுரிமை வரிசை இருந்தது. ஒரு சில கட்டளைகள் மற்ற கட்டளைகளைக் காட்டிலும் முக்கியமானவை. உதாரணத்திற்கு, சில வகையான ஆகாரத்தைப் புசிக்கக் கூடாது என்ற சில கட்டளைகள் லேவியராகமம் 11-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட கட்டளைகள் ‘கொலை செய்யாதிருப்பாயாக’, ‘விபச்சாரம் செய்யாதிருப்பாயாக’ போன்ற கட்டளைகளின் அளவுக்கு முக்கியமானவை அல்ல. ஆயினும் அவைகளும் கட்டளைகளேயாகும். அவைதான், பழைய ஏற்பாட்டின் அந்த ‘சிறிய கட்டளைகளையும் நான் கைக்கொள்வேன்’ என்று தீர்மானித்த தானியேலை தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மனுஷனாய் மாற்றியது.
“தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணினான்” என்று தானியேல் 1:8 கூறுகிறது. ஒருவேளை, மேஜையின் மீது பன்றியின் மாமிசமோ அல்லது லேவியராகமம் 11 -இல் தேவன் தடைசெய்த பறவைகளோ இருந்திருக்கக் கூடும். இப்படிப்பட்ட ஆகாரத்தை தேவன் ஏன் தடைசெய்தார் என்று தானியேல் விளக்கம் சொல்ல முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் “இவைகள் எல்லாம் மோசேயினுடைய கட்டளைகளில் ஒரு பகுதியாயிருக்கின்றன; பத்து கட்டளைகளில் இந்தக் கட்டளைகள் இல்லாதிருந்தாலும் நான் அவற்றைக் கைக்கொள்வேன்” என்று தீர்மானித்தான். ‘இந்த ஆகாரத்தைப் புசித்து, என்னைத் தீட்டுப்படுத்த மாட்டேன்’ என்று தீர்மானித்த படியால், தேவன் அவனை கனப்படுத்தி, பாபிலோனில் ஒரு பெரிய சாட்சியாக மாற்றினார். தம்முடைய கட்டளைகள் யாவற்றையும் கைக்கொள்ள விருப்பமுடைய ஒரு மனிதனாக தானியேலை தேவன் கண்டார்.
தேவன் காலாகாலமாக இப்படித்தான் செய்கிறார். தாங்கள் விரும்பும் கட்டளைகளை மட்டும் தேர்ந்தெடுத்து கைக்கொள்பவர்களை அல்லாமல், தம்முடைய கட்டளைகள் யாவற்றையும் கைக்கொள்பவர்களையும், இயேசு கற்பித்த அனைத்தையும் செய்பவர்களையும் மட்டுமே தேவன் எப்போதும் தேடிக் கொண்டிருக்கிறார். மத்தேயு 5:19 -இல் இயேசு “இந்தக் கட்டளைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்” என்று கூறினார். இயேசு இங்கே கட்டளைகளில் சிறிதொன்றையாகிலும் மீறுகிறவன் நரகத்திற்குச் செல்வான் என்று சொல்லவில்லை; ஆனால் பரலோகத்தின் அங்கீகாரம் மற்றும் மதிப்புகளின் அடிப்படையில் அவன் மிகவும் சிறியவனாக இருப்பான் என்பதை உணர்த்தினார். பூமியில் சிறியவனாய் இருப்பது முற்றிலும் முக்கியமற்றது. அது ஒரு பொருட்டே அல்ல. ஆனால் பரலோக ராஜ்யத்தில் சிறியவனாய் இருப்பதென்றால், சர்வவல்லமையுள்ள தேவன் உன்னைப் பற்றி பெரிதாக நினைக்கவில்லை என்று அர்த்தம். நான் அந்த வகையில் இருக்க விரும்பவில்லை! இந்த உலகம் என்னைப் பற்றி பெரிதாய் நினைக்காவிட்டாலும் எனக்குக் கவலையில்லை; ஆனால் தேவன் என்னைக் குறித்து நல்ல அபிப்பிராயம் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
காபிரியேல் தூதன் யோவான்ஸ்நானனைப் பற்றி அவனது தகப்பன் சகரியாவிடம் “உன்னுடைய மகனாகிய யோவான் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான்” என்று கூறினார். நாம் தேவனுடைய பார்வையில் பெரியவர்களாக இருப்பதை இச்சித்து வாஞ்சிப்பது நல்லது. தேவனுடைய பார்வையில் சிறியவனாய் இருக்க நான் விரும்பவில்லை. தேவனுக்கு முன்பாக நல்ல அபிப்பிராயம் இல்லாத மனுஷனாய் நான் இருக்க விரும்பவில்லை. ஆனாலும் நாம் இங்கே ஒரு சில ஜனங்கள் பரலோக ராஜ்யத்தில் சிறியவன் என்னப்படுவார்கள் என்று வாசிக்கிறோம். அவர்கள் பெரிய கட்டளைகளைக் கைக்கொள்ளாததினால் அல்ல; சிறிய கட்டளைகளை அவர்கள் அற்பமாய் எண்ணினதினால் தான் அவர்கள் அப்படி இருப்பார்கள்.
இத்தகைய மனப்பான்மை அநேக கிறிஸ்தவர்களிடம் இன்றும் இருப்பதை நான் காண்கிறேன். அவர்கள் தாங்கள் ‘புதிய உடன்படிக்கைக் கிறிஸ்தவர்கள்’ என்று கூறுகிறார்கள்; ஆனால் ஒரு சில சிறிய புதிய உடன்படிக்கைக் கட்டளைகளை எடுத்து “இது முக்கியம் அல்ல, இதற்கு நான் கீழ்ப்படியத் தேவையில்லை” என்று கூறுகிறார்கள். அவர்கள் தேவன்மீது வைத்திருக்கும் விசுவாசத்தை நான் சந்தேகிக்கவில்லை. நரகத்திற்குப் போவார்களா அல்லது பரலோகத்துக்குப் போவார்களா என்று நியாயந்தீர்க்கவில்லை. அது என்னுடைய வேலை அல்ல. தேவனே அதற்கு நியாயாதிபதி. ஆனால் நான் நிச்சயமாய் தேவன் சொன்னதை விசுவாசிக்கிறேன்: இயேசு கற்பித்த சிறிய கட்டளைகளை (இயேசு பரிசுத்த ஆவியானவர் மூலமாய், அப்போஸ்தலர் மூலமாய் நிருபங்களில் கற்பித்த காரியங்களை) மீறுகிறவன் பரலோக ராஜ்யத்தில் சிறியவனாய் இருப்பான். அதற்கு எதிர்மறையாக, பரலோக ராஜ்ஜியத்தில் யார் பெரியவனாய் இருப்பான்? சிறிய கட்டளையை கைக்கொண்டு மற்றவர்களுக்கும் கற்பிக்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பெரியவனாக இருப்பான் என்று மத்தேயு 5:19 -இல் கூறியிருப்பதைவிடத் தெளிவாகக் கூற முடியாது. அது மிகவும் தெளிவாயிருக்கிறது.
புதிய உடன்படிக்கையிலுள்ள மிகச்சிறிய கட்டளைகளைக் குறித்து உன்னுடைய மனப்பான்மை எப்படியிருக்கிறது என்பதே, நீ தேவனுடைய ராஜ்யத்தில் எங்கே நிற்கிறாய் என்பதைக் காட்டுகிறது. “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” என்று இயேசு கூறினார். அது தான் நாம் அவர் மீது வைத்திருக்கும் அன்பின் அடையாளமாகும். “நான் ஆண்டவரை நேசிக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டு, ஒருவரும் அவருடைய கட்டளைகளை உதாசீனப்படுத்த முடியாது. இயேசு கற்பித்த சிறு கட்டளைகளை எந்த அளவுக்கு நீ மீறுகிறாயோ, அந்த அளவு குறைவாக நீ அவரை நேசிப்பாய். ஒருவேளை நீ பெரிய கட்டளைகளைக் கைக்கொள்ளலாம். ஆனால் சிறு கட்டளைகளின்மீது உன் மனப்பான்மை என்னவாக இருக்கிறது என்பதை வைத்தே நீ தேவனுடைய ராஜ்யத்தில் எங்கே இருக்கிறாய் என்று தீர்மானிக்கப் படுகிறது.