உத்தமமானவர்களுக்கு இயேசு பிரதிபலன் அளிப்பது உண்மை தான் (வெளி 22:12). அவரிடமிருந்து ஒரு நாள், “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே” என்னும் வார்த்தைகளைக் கேட்பதற்காய் “அவரைப் பிரியப்படுத்தி” ஜீவிக்கும் ஜீவியமே நமது இறுதி நோக்கமாயிருத்தல் வேண்டும் என்பதும் உண்மை தான்! (2கொரிந்தியர் 5:9). ஆனால் சுயத்தை மையமாகக் கொண்டு, பரலோக பிரதிபலனைப் பெறுவதற்காக செய்யப்படும் தியாகத்தையும், ஊழியத்தையும் குறித்து இயேசுவே நம்மை எச்சரித்திருக்கிறார்!
ஆஸ்திகள்மீது தன் மனதை வைத்து, அதை விட்டுவிட முடியாமல் துக்கத்தோடு திரும்பிச் சென்ற பணக்கார வாலிபனோடு ஒப்பிட்டு தன்னை ‘உயர்வாய்' கருதிய பேதுரு இயேசுவிடம், “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேள்வி கேட்டான் (மத்தேயு 19:27). அதற்கு இயேசு வேலையாட்களைப்பற்றிய உவமானத்தோடு பேதுருவுக்குப் பதில் கூறினார் (மத்தேயு 20:1-16). கூலியை (Reward) எதிர்நோக்கி வேலை செய்தவர்கள் கடைசியாகவும், கூலியைப் பற்றியே எண்ணம் இல்லாதவர்களாய் வேலை செய்தவர்கள் (முந்தினவர்கள் வேலைசெய்த அளவைவிட குறைவாய் வேலை செய்திருந்தாலும்கூட) முதன்மையாகவும் வந்தார்கள் என்பதை அந்த உவமையில் நாம் காண்கிறோம்!
அளவிற்கும் (Quantity), தரத்திற்கும் (Quality) உள்ள வித்தியாசம் போலவே, செத்த கிரியைகளுக்கும், ஜீவனுள்ள கிரியைகளுக்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! மற்ற விசுவாசிகளைவிட உயர்வான பலனைப் பெற நம்பி கிரியை செய்து, கிறிஸ்துவின் மணவாட்டியான சபையில் ஓர் உயர்ந்த ஸ்தானத்தைத் தேடுகிறவர்களின் கிரியைகள் கடைசி நாளில் செத்த கிரியைகளாகவே வெளிப்படும்!
நம் சிந்தை வாழ்வைத் தூய்மைப்படுத்தி, மற்றவர்களுக்கு நன்மை செய்து, மனைவியை நேசித்து அல்லது புருஷர்களுக்கு கீழ்ப்படிந்து இப்படியாக எல்லா கிரியைகளையும், ‘பின் ஒருநாள் உயர்த்தப்படுவோம்' என்ற எண்ணத்தோடு செய்வோமென்றால், இன்னமும் நம் ஜீவியத்தின் நடுவில் “சுயம்” ஆளுகை செய்வதை அறிவோமாக! இவ்வாறு சுயத்தை மையமாகக் கொண்டு செய்யப்படும் எல்லா “நல்ல கிரியைகளும்” செத்த கிரியைகளே!
கடைசிநாளில், மகிமையின் கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள், தேவனுடைய பாதத்தில் வணக்கமாய் விழுந்து, “கர்த்தாவே, நீர் ஒருவரே மகிமை, கனம் வல்லமைக்குப் பாத்திரர்” (வெளி 4:10) என சொல்லக் கூடியவர்களாய் இருப்பார்கள். தேவனைப் பிரியப்படுத்தி அவருக்கே மகிமை செலுத்துகிற நோக்கமே அல்லாமல், வேறு நோக்கங்களிலிருந்து (Motives) நம்மை நாமே சுத்திகரித்துக்கொண்டால் ஒழிய, ஒருக்காலும் செத்த கிரியைகளுக்கு நாம் நீங்கலாகி இருக்க முடியாது. நாம் செய்த எல்லா நற்கிரியைகளையும் நம்முடைய ஞாபகத்திரையில் எழுதி வைத்திருப்போமென்றால், அவையாவும் செத்த கிரியைகளாய் மாறிவிடும் என்பது நிச்சயம்!
கடைசிநாளில் நியாயத்தீர்ப்பைப் பற்றிய இரண்டு காட்சிகளை இயேசு வெளிப்படுத்தினார். ஒன்று, பூலோகத்தில் தாங்கள் செய்த எல்லா நல்ல கிரியைகளையும் பட்டியல் செய்து, “கர்த்தாவே உம்முடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோமே.... உம்முடைய நாமத்தினாலே அற்புதங்கள் செய்தோமே.....” என்று கூறியவர்கள் (மத்தேயு 7:22,23). இவர்களை தேவன் “ஒருக்காலும் உங்களை அறியேன்” என்றே புறக்கணித்தார்! இன்னொரு காட்சி, பூலோகத்தில் இவர்கள் செய்த நற்கிரியைகள் தேவனால் அவர்களுக்கு நினைவுபடுத்தப்பட்டு.... இவர்களோ, ஆச்சரியத்தில் ஆழ்ந்து போய், “தேவனே எப்பொழுது இவைகளையெல்லாம் செய்தோம்?” என்று வினாவிய நீதிமான்களின் கூட்டம் (மத்தேயு 25:34-40). பிரதிபலனை எதிர்நோக்கி இவர்கள் கிரியை செய்யாததால், தாங்கள் செய்த கிரியைகளை அப்படியே மறந்துவிட்டார்கள்! இங்குதான் நாம் செத்த கிரியைகளுக்கும், ஜீவனுள்ள கிரியைகளுக்கும் உள்ள பெரும் வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறது! இந்த இரு கூட்டத்தாரில் இப்பொழுது “நான் எந்தப் பிரிவைச் சேர்ந்தவனென்று?” உங்களையே நீங்கள் கேட்டுப் பாருங்கள்!