WFTW Body: 

தேவனே இந்த அண்டசராசரத்தில் எல்லாவற்றிற்கும் மேலான அதிகாரமுடையவர் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஆனால் தேவன் அந்த அதிகாரத்தில் கொஞ்சத்தை மற்றவர்களுக்குக் கொடுத்து அவர்கள் அதை தமது பட்சத்திலிருந்து கையாளும்படி செய்கிறார். சமுதாயத்தில் அரசாங்க அதிகாரிகளிடமும், வீட்டில் பெற்றோர்களிடமும், தேவனுடைய சபைகளில் கிறிஸ்தவத் தலைவர்களிடமும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்.

சிலர் கருதுவது போல, தேவனுடைய சபையானது ஒவ்வொருவரும் தேவனிடம் மாத்திரமே நேரடியாக பதில் சொல்லும் பொறுப்புடையவர்கள் என்பது போன்ற ஒரு ஜனநாயக அமைப்பு அல்ல. கிறிஸ்துவின் சரீரத்தில் கர்த்தரால் நியமிக்கப்பட்ட தலைவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு நாம் அடிபணிந்து கீழ்ப்படிய வேண்டும். இதுவே தேவனுடைய சித்தமும் வேதாகமத்தில் தெளிவாகப் போதிக்கப்பட்ட போதனையுமாகும்.

ஜனங்கள் அதிகாரிகளுக்கும், மனைவிகள் புருஷர்களுக்கும், பிள்ளைகள் பெற்றோருக்கும், வேலையாட்கள் எஜமான்களுக்கும் கீழ்ப்படிய வேண்டுமென்று தேவனுடைய வார்த்தை கட்டளையிடுவது போல, தேவனுடைய சபையிலும் கீழ்ப்படிதல் வேண்டுமென்று கட்டளையிடுகிறது.

ஸ்தல சபைகளுக்குத் தலைமைத்துவத்தைக் கொடுக்க தேவன் மூப்பர்களை நியமித்திருக்கிறார். ஒரு சபையில் மூப்பர்கள் மெய்யாகவே தேவனால் நியமிக்கப்பட்டிருக்கும்பொழுது, அவர்கள் கர்த்தருடைய பிரதிநிதிகளாயிருந்து அவர் தங்களுக்குக் கொடுத்த அளவின்படி அவருடைய அதிகாரத்தைப் பயன்படுத்துவார்கள். கர்த்தர் தாம் அனுப்பிய சீஷர்களிடம், 'உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டை பண்ணுகிறவன் என்னை அசட்டை பண்ணுகிறான்' என்றார் (லூக்கா 10:16).

'உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே' (எபிரெயர் 13:17). இதுபோன்ற கட்டளைகள் தேவனுடைய வார்த்தையில் இருக்கின்றன.

ஒரு ஐக்கியத்தில் (சபைகளில் அல்லது கிறிஸ்தவ ஊழியர்களின் குழுக்களில்) கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாக தேவன் நம்மை வைக்கிறார். அங்கே, தேவன் நமக்கு நியமித்திருக்கிற ஆவிக்குரிய தலைவர்களுக்கு அடிபணிந்து கீழ்ப்படியவும், அவர்களோடு சேர்ந்து ஒரே குழுவாகச் செயல்படவும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

தேவன் நம்மை ஒரு சபை ஐக்கியத்திலோ அல்லது கிறிஸ்தவ ஊழியர்களின் குழுவிலோ வைத்திருந்தால், தேவன் நமக்கு நியமித்திருக்கிற தலைமைத்துவத்துக்கு அடிபணிந்து கீழ்ப்படியவும், குழுவாகச் செயல்படுகிற காரியங்களில் அவர்கள் சொல்லுவதைப் பின்பற்றவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். தேவன் நம்மை அந்தக் குழுவில் தான் வைத்திருக்கிறார் என்பதை மாத்திரம் நாம் உறுதி செய்துகொள்ள வேண்டும். அதனை உறுதி செய்த பின்பு, நம் தலைவர்களுக்கு அடிபணிந்து கீழ்ப்படிய வேண்டும் என்பதை தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. இந்த ஆவிக்குரிய தாற்பரியத்தைப் புரிந்துகொண்டால், கிறிஸ்தவ ஊழியங்களிலுள்ள அநேக பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

தேவனுடைய குமாரனின் உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு சிறுவனாக, அவர் யோசேப்புக்கும் மரியாளுக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தார் என்று வாசிக்கிறோம் (லூக்கா 2:51). இயேசு பரிபூரணமானவர், யோசேப்பும் மரியாளும் பரிபூரணமானவர்கள் அல்ல. ஆனாலும் பரிபூரணமான அவர் பரிபூரணமற்ற மனிதர்களுக்குக் கீழ்ப்படிந்து அநேக வருடங்கள் வாழ்ந்தார், ஏனென்றால் அதுவே அவருக்குத் தேவனுடைய சித்தமாக இருந்தது. பிதாவின் சித்தமே இயேசுவுக்கு முடிவானதும் இறுதியானதுமாக இருந்தது. அவர் யோசேப்புக்கும் மரியாளுக்கும் கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்று அவருடைய பிதா விரும்பினால், பிதா குறிப்பிடும் காலம் வரை அவர் அதைத்தான் செய்வார்.

ஆகவே, "நான் இந்த ஐக்கியத்தில் இருக்க வேண்டுமென்பது தேவனுடைய சித்தமா?" என்கிற கேள்விதான் முக்கியமானது என்பதைத் பரிபூரணமான தேவகுமாரனின் உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்ளுகிறோம். இந்த கேள்விக்குப் பதில் "ஆம்" என்றால், தேவனால் நியமிக்கப்பட்ட தலைமைத்துவத்திற்கு அடிபணிந்து கீழ்ப்படிவது நம்முடைய கடமையாகும்.

அதிகாரத்திற்கு விரோதமாகக் கலகம் செய்தது தான் இந்த அண்டசராசரத்தில் நடந்த முதல் பாவமாகும். தேவதூதர்களுக்குத் தலைவனாயிருந்த லூசிஃபர் தன்மீதிருந்த தேவனுடைய அதிகாரத்திற்கு விரோதமாகக் கலகம் செய்தான்.

உலகத்தில் இன்று இரண்டு ஆவிகள் இயங்குகின்றன - ஒன்று: தெய்வீகமாக நியமிக்கப்பட்ட அதிகாரத்திற்கு அடிபணிந்து கீழ்ப்படிய ஜனங்களை வழிநடத்துகிற கிறிஸ்துவின் ஆவி; மற்றொன்று: அத்தகைய அதிகாரத்திற்கு விரோதமாகக் கலகம்பண்ண வழிநடத்துகிற சாத்தானின் ஆவி.

சமுதாயத்திலும், குடும்பத்திலும், தேவனுடைய சபையிலும் கலகத்தின் ஆவி இன்று சர்வ சாதாரணமான இருக்கிறது. உலகம் தேவனை விட்டு மிகவும் வேகமாக விலகிச் சென்று கொண்டிருப்பதற்கும், சாத்தானுடைய கட்டுப்பாட்டிற்குள் மேலும் அதிகமாக வந்து கொண்டிருப்பதற்கும் இது தெளிவான அறிகுறியாகும். சாத்தானுடைய இந்தக் கோட்பாட்டிற்கு எதிராக நிற்கவும், கீழ்ப்படிதல் என்னும் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றவும் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

தேவனால் நியமிக்கப்பட்ட தலைமைத்துவத்துக்கு அடிபணிந்து கீழ்ப்படிவதினால் நாம் ஒருபோதும் எதையும் இழக்க மாட்டோம். மாறாக, கலகம் பண்ணுவதினால் நாம் இழக்க வேண்டியது ஏராளம்.

தெய்வீகமாக நியமிக்கப்பட்ட தலைமைத்துவத்துக்கு அடிபணிந்து கீழ்ப்படிவதுதான், ஆவிக்குரிய முதிர்ச்சிக்கு நம்மை வழிநடத்துவதற்கான தேவனுடைய முறைமையாகும். தேவன் நம்மைக் கீழ்ப்படிய அழைக்கும் இடத்தில் கீழ்ப்படியாவிட்டால் நாம் ஆவிக்குரிய ரீதியிலே வளர்ச்சி குன்றியவர்களாக இருப்போம்.

தேவனுடைய இறையாண்மையின் நிஜத்தை அனுபவ ரீதியாக அநேக விசுவாசிகள் ஒருபோதும் கற்றுக் கொள்ளவில்லை, ஏனென்றால் ஆவிக்குரிய தலைவர்களுக்குத் தாழ்மையோடு கீழ்ப்படிவதின் விளைவாக, தங்களுடைய திட்டங்கள் தடுக்கப்படுவது என்றால் என்ன என்பதையும் தங்களுடைய திட்டங்கள் கவிழ்க்கப்படுவது என்றால் என்ன என்பதையும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கையில் ஒரு சமயத்திலாவது மற்றவர்களுக்கு அடிபணிந்திருப்பது என்றால் என்ன என்பதை அறியாதவர்கள் ஒரு ஆவிக்குரிய தலைவராகவோ அல்லது தேவனுக்குத் திறம்பட ஊழியம் செய்யவோ முடியாது.

அடிபணிந்து கீழ்ப்படிதல் என்பது அவமதிக்கிறதாகவும் ஒடுக்குகிறதாகவும் இருக்கிறது என்று பிசாசு நம்முடைய காதுகளில் கிசுகிசுக்கிறான். ஆனால் அது அப்படியல்ல. மாறாக, அது தேவன் நம்மை ஆவிக்குரிய ரீதியில் பாதுகாக்கும் வழிமுறையாகும். நமது கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில், நாம் இன்னும் தேவனுடைய வழிகளை அறியாமல் இருக்கும் போது, நாம் நம்முடைய ஆவிக்குரியத் தலைவர்களுக்கு அடிபணிந்து கீழ்ப்படிந்தால், அநேக ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றப்படுவோம், நம்முடைய இளமை வைராக்கியத்தில் மற்றவர்களை வழிதவறச் செய்வதிலிருந்தும் பாதுகாக்கப்படுவோம். கீழ்ப்படிதலில் கழித்த அந்த ஆண்டுகள், தேவன் தம்முடைய ராஜ்யத்திற்கடுத்த பிரமாணங்களை நமக்குக் கற்பிக்கும் காலங்களாக அமைந்து, அதன் மூலமாக நம்மை ஆவிக்குரிய ரீதியில் ஐசுரியவான்களாக மாற்றுகிறார், அதனால் நாம் மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய முடியும்.

கீழ்ப்படிதலின் பாதையைத் தவிர்க்கும் போது நாம் எவ்வளவாய் இழக்கிறோம்!